Skip to main content

எப்படி வாசிப்பது (1)



இன்று புத்தக தினம். நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள். இதை ஒட்டி வாசிப்பு குறித்த எனது சில நம்பிக்கைகள், கருத்துக்கள், பார்வைகளை எட்டாக சுருக்கி கீழே தருகிறேன்.
1)   பரிந்துரை பட்டியல்களை பின்பற்றாதீர்கள். புத்தகத் தேர்வு ஒரு நண்பனை, காதலியை தேர்வதைப் போன்றது. அது ஒரு உறவு. உங்கள் சிந்தனையை, மொழியை, தோரணையை மாற்றப் போகிற உறவாடல். உங்கள் உள்ளுணர்வு, நம்பிக்கைகள், தனிப்பட்ட தேடல் ஆகியவை ஒட்டி ஒரு நூலை தேர்ந்தெடுங்கள். யாருமே பொருட்படுத்தாத ஒரு நூல் கூட உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். உ.தா., தமிழ் இலக்கிய உலகில் யாரும் ருத்ரனை பொருட்படுத்தி படிக்க பரிந்துரைக்க மாட்டார்கள். ஆனால் பதின் வயதில் நான் வாசிக்க நேர்ந்த அவரது கட்டுரை நூல்கள் இன்று வரை என்னை என்னையறியாது வழிநடத்துகின்றன. ஒரு நட்பு எப்படி இருக்க வேண்டும் என அவர் விளக்கியதையே இன்றும் பின்பற்றுகிறேன். அவரது டெஸிடெரட்டா கவிதை மொழியாக்கம் மற்றும் விளக்கத்தை நான் என்றும் மறக்க முடியாது. ருத்ரனை விட சு.ரா பல மடங்கு மேலான எழுத்தாளர்; சிந்தனையாளர்; கட்டுரையாளர். ஆனால் சு.ராவின் கட்டுரைகளை சுலபத்தில் மறந்து விட்டேன். ருத்ரன் என்னை வழிநடத்துகிறார். 12 வயதில் அவர் ஒரு டிவி நிகழ்ச்சியில் சொன்ன சம்பவத்தை இப்போதும் என் வகுப்பில் நினைவு கூர்ந்து சொல்கிறேன். இவை வாசக மனத்தின் விசித்திரங்கள். நம் மனம் அதன் போக்கிற்கு சிந்தனைகளை, சிந்தனையாளர்களை பின் தொடர்ந்து செல்ல நாம் அனுமதிக்க வேண்டும். நம் மனத்திற்கு ஒரு போதும் கடிவாளம் இடக் கூடாது.

2)   வாசக குழுக்கள் வாசிப்புக்கு வேகம் கூட்ட தேவை தாம். குறிப்பாக ஒரு விசயத்தை ஒட்டி தொடர்ந்து இயங்குவதற்கு. நீங்கள் சினிமா பற்றி அலசி எழுத விரும்புகிறீர்களா? சினிமா பற்றி நுணுகி ஆராயும் நண்பர் குழுவொன்றில் இணைந்து அவர்களுடன் பயணியுங்கள். நூல்களை பகிர்ந்து படியுங்கள். படித்ததைப் பற்றி பேசிக் கொண்டே இருங்கள். அந்த பேச்சில் இருந்தே நல்ல எழுத்தும் படைப்புகளும் தோன்றும். தொண்ணூறுகளில் “நிறப்பிரிகை” இதழை ஒட்டின விவாதங்களும் அதில் இருந்து தோன்றின எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களும் நல்ல உதாரணம். ரெண்டாயிரத்தில் தமிழ் ஸ்டுடியோ அருண் இது போன்று சினிமாவுக்கென ஒரு அமைப்பை உருவாக்கினார். அதில் பங்கேற்றது தனக்கு பின்னாளில் வெகுவாய் உதவியது என இயக்குநர் ஸ்ரீகணேஷ் ஒரு தனிப்பட்ட உரையாடலில் என்னிடம் குறிப்பிட்டார். என் பதின்வயதில் கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்கள் எனக்கு இவ்வாறு உதவின. சமீபத்தில் கிறைஸ்ட் பல்கலை மாணவர்களுடன் இணைந்து லக்கான் பற்றி ஒரு நூல் வெளியிட்டேன். அதற்காக மாணவர்களுடன் தொடர்ந்து நிறைய உரையாடல்களில் ஈடுபட்டேன். எழுதப் போகிறவர்களை தனியாய் அழைத்து அவர்களுடன் தீவிரமாய் விவாதிப்பேன். இதை ஒட்டி உடனே ஐந்தே வரிகளில் தம் மனத்தில் இருப்பதை எழுதிக் காட்ட சொல்வேன். அதை பாராட்டுவேன். வீட்டுக்கு சென்று அதை விரித்தெழுத சொல்வேன். ரெண்டே வாரங்களில் அந்நூலில் உள்ள பத்து கட்டுரைகளையும் மாணவர்கள் இவ்வாறு எழுதினார்கள். லக்கான் குறித்து இணையத்திலோ புத்தகத்திலோ படித்து அதைக் கொண்டு எழுத முடியாது. அவரைப் பற்றி அரட்டையடிப்பது, விவாதிப்பது, பேசி விளக்குவது வழியே அவரைப் பற்றி எழுதுவதற்கான மொழி நம்மிடம் உருவாகும் என நான் உறுதியாக நம்பினேன். இப்போதும் நம்புகிறேன்.
3)   வாசக குழுக்களை மீறி செல்லுங்கள். இதுவும் உங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவசியம். ஒரு குழுவுக்குள் தொடர்ந்து பயிலும் போது உங்கள் தனித்துவம் காலியாகும். குழுவின் மொழியும் நுண்ணுணர்வும் அரசியலும் நம்பிக்கைகளும் உங்களுடையது என்றாகும். ஒரு நல்ல வாசகன் / எழுத்தாளன் தனித்து யோசிப்பவனாய், பொதுப்போக்கை மறுத்து மீறி செல்பவனாய் இருத்தல் அவசியம். ஆக ஒரு குழுவில் தோன்றி, வளர்ந்து பின் அதைக் கடந்து செல்லுங்கள். உங்கள் பாதை தனித்ததாக இருக்கட்டும்.
4)   பிடிக்காத நூல்களை படிக்காதீர்கள். வாசிப்பில் சுவை, பொழுதுபோக்கு, கிளர்ச்சி, மனத்திளைப்பு ஆகியன முக்கியம். வாசிப்பு அனுபவம் காதலில் ஈடுபடுவதற்கு இணையாக இருக்க வேண்டும். கட்டுக்கட்டாய் நூல்களை வாங்கி வீட்டில் அடுக்கி விட்டு வாசிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் வெளிச்சூழலின் அழுத்தம் காரணமாய் அந்நூல்களை நாம் வாங்கி இருப்பதே. நான் ஒருபோதும் இதைச் செய்ய மாட்டேன். மொத்த உலகமும் ஒரு நூலை கொண்டாடினாலும் என் உள்ளுணர்வு கோராவிட்டால் நான் அதை வாசிக்க மாட்டேன். வாசிப்பில் அந்தரங்கத் தேர்வு மிக மிக முக்கியம். மூளைக்கு நல்லது, ஆகையால் படித்தால் கசக்கும் என நம்பி படிக்காதீர்கள். எனக்கு தத்துவம் பிடிக்கும். ஹைடெக்கர் படித்தால் கசக்காது. இன்னொருவருக்கு தத்துவம் அலுப்பென்றால் அவர் ஹைடெக்கர் படிக்க தேவையில்லை. எல்லாருக்குமான பொது நூல்கள் இல்லை.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...