அந்த இலையுதிர்
பருவக் காலங்களில்
என் பெற்றோர்
கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்ட
மெல்லிய பஞ்சு
மெத்தையில் வெதுவெதுப்பாய் உறங்கினர்
என் அம்மாவின்
கைகளில்
உறைந்த நதிகளின்
அலைகள் போல வளையல்கள்
அன்று இரவில்
பிரார்த்தனைகளுக்குப் பின்
அவள் இறங்கி
தன் அறைக்கு செல்கையில்
படிக்கட்டில் பனி
உடையும்
பல வருடங்களுக்குப்
பின் பனிக்காலத்துள் உடையும்
சன்னமான ஒலியை
கேட்டேன்
எங்கள் வீட்டைச்
சுற்றிலும்
கூரையில் இருந்து
தீவட்டிகளைப் போல்
தொங்குபனிக் கட்டிகளை
உடைத்தெடுக்கும் ஆண்கள்
அவற்றை சுவர்களில்
ராவுகிறார்கள்
சிமிண்டின் கருஞ்சிவப்பு
நீரின் விளிம்புகளில்
நெருப்பூட்டும் வரை
காற்று பனியின்
புதைமணலாக
என் அப்பா
வெளியே கால்வைக்கிறார்
என் அம்மாவோ
தன் கைகளை
மோதி
நதிகளை உடைக்கும்
ஒரு விதவையாக
எரியும் வீட்டுக்குள்
(தமிழில் ஆர். அபிலாஷ்)