Skip to main content

ரஜினியின் அரசியல் பிரவேசம்: வாம்மா மின்னல்

 Image result for rajinikanth politics
ரஜினி தான் சொன்னது போல் அதிகார பூர்வ அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார். ஏற்கனவே நான் இது குறித்து எழுதிய போது ரஜினி, கமல், விஜய், விஷால் ஆகியோர் சரியாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் மட்டுமே கட்சிப் பணியை துவக்குவார்கள் என சொல்லி இருந்தேன். ரஜினி இப்போது வெளிப்படையாக அதை ஒத்துக் கொண்டிருக்கிறார். என் சிற்றறிவுப்படி அரசியல் கட்சி ஆரம்பிக்கிறவர்கள் கட்சியை கட்டமைத்து, பல அடுக்கு நிர்வாகிகள், தலைவர்களை நிறுவி, கட்சியின் கொள்கையை விளக்கி, ஆளுங்கட்சிக்கு எதிராய் அறிக்கைகள் விடுத்து போராட்டங்கள் செய்து தம்மை நிறுவிக் கொண்டு ஆற அமர தேர்தலுக்கு தயாராகவே ஒரு வருடமாவது ஆகும். விஜயகாந்த் தன் கட்சியை வளர்க்க ஒரு வருடத்துக்கு மேலாகவே எடுத்துக் கொண்டார். ஆனால் ரஜினி இப்போதைக்கு தன் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கிற பணியை மட்டுமே எடுத்துக் கொள்ளப் போகிறார். எந்திரன் 0.2, காலா ஆகிய சினிமாப் பணிகளை முடித்து விட்டு பொறுமையாய் அரசியலில் அவர் இறங்குகிற விதத்தை பார்த்தாலே அவருக்கு வெற்றி பெற்று ஒரு சின்ன எதிர்க்கட்சித் தலைவராகும் இலக்கு கூட இல்லை எனத் தெரிகிறது.

234 தொகுதிகளிலும் ரஜினியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றால் அதற்கான செலவை யார் பார்த்துக் கொள்கிறார்கள்? இதற்கான ஆயிரமாயிரம் கோடிகளை ரஜினிக்காக வாரி இறைப்பது யார்? இக்கேள்வியை மீடியா நிச்சயம் கேட்க வேண்டும்.
ரஜினி அரசியலில் இறங்குவதால் அவருக்கு விளையப் போகும் ஆபத்துகளைப் பற்றி குஷ்பு குறிப்பிட்டுள்ளார். அவர் தோற்றால் கடுமையான விமர்சனங்களையும் கேலியையும் பழிகளையும், அரசியல் விரோதத்தையும் சம்பாதிக்க நேரிடும். முன்பு போல் அவரால் சுதந்திரமாய் வணிக படங்களில் நடித்து வெளியிட முடியாமல் கூட போகலாம். ரஜினி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என குஷ்பு குறிப்புணர்த்துவதாய் புரிந்து கொள்கிறேன். ஆனாலும் அவர் ஏன் இவ்வளவு ரிஸ்கை எடுக்கிறார்?
பணம் தான் பிரதான காரணம் என்பது என் கணிப்பு. ரஜினி மூன்று நான்கு வெற்றிப்படங்களில் நடித்து சம்பாதிப்பதை விட பல மடங்கு பணத்தை இத்தேர்தல் மூலம் அடைந்து விட முடியும் என நம்புகிறார். வென்றாலும் தோற்றாலும் அவருக்கு லாபமே. பாஜக கொடுக்கும் ஆயிரமாயிரம் கோடிகளை சிக்கனமாய் செலவழித்தால் மீதும் பணமெல்லாம் அவரது ஸ்விஸ் வங்கி கணக்குக்குத் தானே பாயும்?
அரசியலில் குதிப்பதற்கான அவரது காரணங்களைப் பாருங்கள். அரசியல் நிலைமை சீர்கெட்டுப் போயுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழக ஆரசின் நிர்வாகக் கேட்டை கேலி செய்கிறார்கள் – சரி தான். ரஜினி குறிப்பிடும் நிர்வாக சீர்கேடுகள், ஊழல், மக்களின் துன்பம் ஆகியவை இப்போது தான் புதிதாய் நிகழ்கின்றனவா? ஏன் இப்போது அவர் அரசியல் நெற்றிக்கண்ணைத் திறக்கிறார்?
இதற்கு அவர் தெளிவான காரணத்தை ஒன்றும் சொல்லவில்லை. ”இனியும் அரசியலில் ஈடுபடாமல் இருந்தால் குற்றவுணர்வு அரித்து கொன்று விடும்” என்கிறார். அப்படி எனில் இத்தனைக் காலம் எப்படி குற்றவுணர்வில் இருந்து தப்பித்தார்? ஏன் எந்த அரசியல் சமூகக் கருத்துக்களும் தெரிவிக்காமல் லாலா கடை வியாபாரி போல் தேமேவென இருந்தார்? இப்போது அவரை சட்டென தூண்டிய நிகழ்வு எது?
ஒரு பக்கம் அவர் அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டைப் பற்றி விமர்சிக்கிறார். அடுத்து உடனே தன் நிர்வாகிகளிடமும் ரசிகர்களிடமும் “நீங்கள் ஆளும் அரசியல் கட்சி, பிற கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை விமர்சித்து பேசக் கூடாது” என்கிறார். இப்படி அறிவுறுத்தும் அவர் மட்டும் ஏன் அதிமுக அரசை சாடுகிறார்? என்ன குழப்படி பாருங்கள். இவர் கட்சி ஆரம்பித்த பின் இன்னும் என்னவெல்லாம் பிதற்றப் போகிறாரோ?
ரஜினி இப்படி தன் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை கட்டுப்படுத்துவதன் நோக்கம் வேறு. ஆளும் அரசை அவர் விமர்சித்தால் இரண்டு விசயங்கள் நடக்கும். அதிமுக அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளாகும். அதிமுக அரசை ஆட்டுவிக்கும் மோடி இதை விரும்ப மாட்டார். அடுத்து, ரஜினியின் கட்சி உண்மையில் வளரும் வாய்ப்பு ஏற்படும். அப்படி ஒரு ரஜினி அலை உருவாவதை இப்போதைக்கு பாஜக விரும்பவில்லை. ஏனெனில் அப்படி ரஜினி தம் கையை மீறி வளர்வதை பாஜக ரசிக்காது. ரஜினியின் அறிவுறுத்தல் ஒருவிதத்தில் பாஜகவின் அஜெண்டாவை காட்டிக் கொடுக்கிறது.
இப்போதைக்கு அவர்களின் திட்டம் சீண்டாமல் தீண்டாமல் ஒரு புது மணப்பெண்ணைப் போல் ரஜினியின் கட்சியை அடுத்த தேர்தலுக்கு சற்று முன் அறிமுகப்படுத்துவது. கூடவே கமல், விஜய், விஷால் கட்சிகளையும் பக்கமேளக்காரர்களைப் போல் இறக்குவது. ஒரு குழப்பத்தை, பரபரப்பை ஏற்படுத்தி திமுகவின் ஓட்டைப் பிரிப்பது.
அப்படியே ஒருவேளை இக்கட்சிகளும் ஒன்றிரண்டு இடங்களைப் பெற்று இன்னொரு பக்கம் திமுக ஆட்சியைப் பிடித்தாலும் பாஜக இவர்களையும் வேறு சின்ன கட்சிகளையும் அதிமுகவின் ஒ.பி.எஸ் எடப்பாடிகளையும் வைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒன்றை உருவாக்க முயலும்.

ஆக இந்த சூதாட்டத்தில் இந்த நடிகர்களுக்கோ பாஜகவுக்கோ எந்த பெரிய நட்டமும் ஏற்படாது. மீடியாவுக்கும் சமூக வலைதள போராளிகளுக்கும் தீனி கிடைக்கும். இந்நடிகர்கள் மக்களுக்கு தலைக்கு 5000 கொடுத்தால் அதன் வழி பாஜகவின் கறுப்புப் பணத்தில் ஒரு பகுதி தமிழக எளிய மக்களை அடையும். மற்றபடி தமிழக அரசியலில் எந்த மாற்றமும் நிகழாது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...