Skip to main content

விவாதமும் படுக்கையறையும்

Image result for argument cartoon
நான் சின்ன வயதில் இருந்தே சர்ச்சிப்பதில், மாற்றுக்கருத்தை முன்வைப்பதில், வாயாடுவதில் ஆர்வமுள்ளவன். சொல்லப் போனால் வெறுமனே ஒரு வாதத்துக்காகவே நான் வாய் வளர்ப்பதுண்டு. அதில் உணர்வுரீதியாய் ஈடுபட மாட்டேன். அதில் ஒரு திகைப்பு, பரபரப்பு, கிளர்ச்சி எல்லாம் உள்ளது.
ஆனால் சமீபமாய் நானிப்படி வாதிடுவதை குறைத்து வருகிறேன். என் நேசத்தை உரையாடல் வழி பகிர்ந்து கொள்ள முயல்கிறேன். அது என்னை விரிவு கொள்ள வைக்கிறது. அதிக மகிழ்ச்சி தருகிறது என நினைக்கிறேன். இந்நிலையில் நான் சிலரிடம் மட்டும் “அதப்படி இல்லீங்க…” என ஆரம்பித்து கற்ற வித்தைகளை எல்லாம் இறக்குவதுண்டு.
தற்போது பணிபுரியும் இடத்தில் என்னுடன் அப்படி சமர் புரிய சில அற்புதமான நண்பர்கள் உண்டு. அதில் ஒருவர் ராஜீவ் எனும் சமூகவியல் பேராசிரியர். எனது பிரியத்துக்குரிய நண்பர். வாழ்க்கைப் பார்வையில், நம்பிக்கைகளில், அணுகுமுறையில் எங்களுக்குள் கைகுலுக்கும் புள்ளிகளே இல்லை. எல்லா விசயங்களிலும் எதிர் எதிர். சில நேரம் ஒரு சின்ன வரியை எடுத்துக் கொண்டு மணிக்கணக்காய் நாங்கள் கத்தி வீசுவதுண்டு. முடிவில் வீட்டுக்கு கிளம்பும் போது ராஜீவ் என் கையைப் பற்றிக் கொண்டு சொல்வார், “நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. ஆனாலும் நான் இப்படித் தான் எப்போதும் இருக்கிறேன். என்ன செய்வது…”. அல்லது நான் அவரிடம் சென்று குரல் தழுதழுக்க “ச்சே நான் எவ்வளவு அபத்தமாய் பேசினேன் இல்லையா? நான் சொன்னதையெல்லாம் மறந்து விடுங்களேன் ப்ளீஸ்” என்பேன்.
 ஒரு இனிய சுமூகமான உறவில் கசப்பை கலந்திடும் படியாய் ஏன் சொற்பாம்புகளை என் நண்பர்கள் மீது ஏவுகிறேன்? ஏன் அப்படி செய்து என்னையே நோகடிக்கிறேன்? சர்ச்சையை விட கூடுதல் இன்பம் தரும் மார்க்கம் இருக்கையில், ஏன் சொற்களால் யுத்தம் புரிகிறேன் என யோசித்தேன். எனக்கு ஒரு விசயம் புரிந்தது.
விவாத இச்சை அல்ல என்னை சில குறிப்பிட்ட நண்பர்களிடம் விவாதிக்க தூண்டுவது (நான் சுத்தமாய் விவாதிக்காத, பிரியத்தை மட்டும் பொழிகிற நண்பர்களும் உண்டு). அதன் காரணம் வேறு. சில நண்பர்கள் இயல்பிலேயே ஆளுமை மிக்கவர்கள். வலுவான கருத்துக்களும் அவற்றை திறமையாக நிறுவி என் மனதை சுண்டியிழுக்கும் தன்மை கொண்டவர்கள். எப்படி காந்தத்தினால் ஈர்க்கப்படும் இரும்புத் துகள் ஒரு கட்டத்தில் காந்த சக்தி பெற்று காந்தமாகவே மாறிடுமோ, அப்படியே இந்த நண்பர்களின் நண்பர்களுக்கும் நிகழும். இவர்களின் பேச்சு ஒரு அக்டோபஸாக நம் மனத்தைப் பிடித்து விழுங்கிடுமோ எனும் அச்சம் உங்களுக்கு - நீங்களும் தனித்துவமான கருத்துக்களும் அணுகுமுறையும் கொண்டவராக இருக்கும் பட்சத்தில் - ஏற்படும்.
மனித மனத்தின் அடிப்படையான உந்துதல் சுயமுரணானது – ஒரு பக்கம் நாம் நம்முடன் அழகாய் ஆர்வமூட்டும்படியாய் உரையாடுபவர்களிடம் நம்மை இழக்க விரும்புகிறோம். அதே நேரம் நம்மை நாம் முழுக்க இழந்து கரைந்து விடக் கூடாது என்றும் பதறுகிறோம்.
நமது உரையாடல்களை ரெண்டாய் பிரிக்கலாம். (1) உணர்வுரீதியானவை. (2) கருத்து உறவாடல்கள் (விவாத பரிமாற்றங்கள்).
உணர்வுரீதியான அணுகுமுறையில் நீங்கள் பேசத் துவங்கும் போதே எதிர்தரப்புடன் உங்களை முழுக்க இணைத்துக் கொள்ள, அதில் உங்களை இழந்து அழிந்து கரைந்து போக ஆசைப்படுகிறீர்கள். ஆகையால் எதிர் தரப்பில் உள்ளவர் என்ன சொன்னாலும் அது நமக்கு சரி என்றே தோன்றும். உங்களைத் திட்டி கரித்துக் கொட்டினால் கூட இன்பமாகவே அது இருக்கும். ஏனென்றால் அப்போது நீங்கள் உங்களை ஒரு கோப்பை நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை போல் கரைத்துக் கொள்கிறீர்கள்.
ஆனால் விவாத உரையாடல்களில் நீங்கள் உங்களை கைவிடத் தயாரில்லாத சமர் நிலையில் இருக்கிறீர்கள். உங்கள் தரப்பை வலுப்படுத்தவே போராடுகிறீர்கள். ஆகையால், அங்கு உங்கள் நோக்கம் நீங்கள் எதிர் தரப்பின் அபாரமான வசீகரத்தின் முன் மண்டியிட்டு விடக் கூடாதே என்பது தான். ஒரு துறவி தனக்குள் எழும் காமத்தை கட்டுக்குள் வைக்க போராடுவதைப் போன்றது இது. வார்த்தை சமர் மூலம் உங்களைச் சுற்றி அழுத்தமான எல்லைக் கோடு ஒன்றை வரைகிறீர்கள். “இது நான். நான் என் அடையாளத்தை அழித்துக் கொள்ள மாட்டேன்” என உங்களுக்குள் அறைகூவுகிறீர்கள்.
ராஜீவுக்கும் எனக்கும் உள்ள இந்த பரஸ்பர பதற்றமே வாக்குவாதங்களில் ஈடுபட எங்களைத் தூண்டுகிறது.
நான் இந்த அவதானிப்பையும் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அப்போது ஒரு உதாரணம் சொன்னேன். நமது ஆடைகள் ஒருவிதத்தில் நமது தனி அடையாளம், சுயத்தின் தனித்துவம் போன்றவை. ஆடை களைகையில் நாம் எளிய அடிப்படை தேவைகள் கொண்ட உயிர்கள் ஆகிறோம். செக்ஸில் அது நிகழ்கிறது. ஒரு உடல் இன்னொன்றை விழுங்குகிறது. விழுங்கப்படுவதற்கு தயாராக நம்மை நெகிழ்வாய் அப்போது வைத்துக் கொள்கிறோம். பள்ளியறையில் ஒரு பெண்ணுடன் முயங்கும் போது ஒரு ஆண் தன் அகங்காரத்தை முதலில் கழற்றி வைக்க வேண்டும். தான் அற்றுப் போய் இருக்க தயாராக இருக்க வேண்டும். ஆனால் உடல் வழி சுயம் அழிவது தற்காலிகமானது. அடுத்த நாள் காலை மீண்டும் ஆடைகள் அணிகையில் ஆணும் பெண்ணும் இரு தனிமனிதர்கள் ஆகிறார்கள்.
முயங்குவது உணர்ச்சிபூர்வ உரையாடல் என்றால், ஆடை அணிந்து அலுவலகம் கிளம்புவது விவாத உரையாடல்.
ஆனால் மொழியில் நிகழும் தன்னழிப்பில் இருந்து நீங்கள் அப்படி சுலபமாய் தப்பிக்க முடியாது. முந்தின இரவு கழற்றி வீசின ஆடைகளை பொறுக்கி எடுத்து அணிந்து தன்னுணர்வை, அகந்தையை மீட்டெடுத்து உருமாறிட முடியாது. மொழிக்குள் தன்னை இழக்கும் மனிதன் ஒரு மலைமுகட்டில் இருந்து குதித்து கீழே தலைகீழாய் விழுந்து கொண்டிருக்கும் ஒருவனைப் போன்றவன். அவனுக்கு பாதுகாப்பின்மையும், அச்சமும், தடுமாற்றமும் அதிகம். ஆகையால் தான் அவன் இரண்டு வகையான உரையாடல்களுக்கும் மாறி மாறி இருக்க நேர்கிறது.
 பரஸ்பரம் மிக மிகப் பிரியமாய் நடந்து கொள்ளும் இரு ஆளுமை மிக்க மனிதர்கள் இப்படித் தான் தமது அடையாளத்தை பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஒன்று அவர்கள் வரவேற்பறையில் அமர்ந்து கருத்துக்களை பரிமாறி விட்டு படுக்கையறை சென்று கருத்துக்களை முழுக்க கழற்றி வைக்கிறார்கள். அல்லது படுக்கையறையில் இருந்து வரவேற்பறை நோக்கி செல்கிறார்கள்.

நான் இதை ராஜீவிடம் சொன்ன போது அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “நீ சொன்ன விசயத்துடன் எனக்கு முழு உடன்பாடில்லை. மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அதையெல்லாம் இன்னொரு நாள் பேசுவோம். ஆனால் நீ சொன்ன விதத்தை மிகவும் ரசித்தேன். நல்ல உதாரணம் அது!”

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...