Skip to main content

ஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (4)


 Related image
உன்னதம் இல்லையென்றால் நெருக்கடிக்கான தீர்வு தான் என்ன?
என் பெயர் ராமசேஷன்நாவலின் பிற்பகுதியில் ஆதவன் இதற்கு பதில் தேடுகிறார். ராமசேஷனின் உண்மையான பிரச்சனை அவனுக்கு எதிலும் பிடிப்பில்லை, நம்பிக்கையில்லை என்பதல்ல. அவன் எதையும் ஒரு தனிப்பெரும் உண்மையாய் பார்க்க முடிவதில்லை என்பதே அவனது பிரதான நெருக்கடி. வெளுப்பான, தளதளப்பான, தன்னம்பிக்கை மிகுந்த பணக்காரியான மாலாவுடன் இருக்கையில் அப்படி இல்லாத ஒரு பெண்ணுக்காக ஏங்கி அவன் மனம் எம்பித் தாவுகிறது. அப்படியானவளே பிரேமா. ராமசேஷனின் அதே மத்திய வர்க்கத்தை சேர்ந்த, பிராமணப் பெண். அழகற்றவள், மாநிற நிறத்தவள். இது குறித்த குற்றவுணர்வு கொண்டவள். இப்படி எல்லா விதங்களிலும் அவள் மாலாவுக்கு எதிர்சாரி. ஆனால் இந்த பிரேமாவை அடைந்து அவளுடன் படுக்கையில் உறவு கொள்ளும் போது ராமசேஷனின் மனதில் சட்டென மாலா வந்து நிறைகிறாள். அவள் மீதான இச்சை பெருகுகிறது.

மாலாவும் வேண்டாம், பிரேமாவும் வேண்டாம் என உதறி விட்டு அவன் தன் பால்ய காலத்து இச்சையின் உறைவிடமான பங்கஜம் மாமியிடம் செல்கிறான். அவளிடம் கிட்டத்தட்ட தன் காதலைச் சொல்கிறான். அவளை திருமணம் செய்யப் போவதாய் அறிவிக்கிறான். அவனது தேர்வு முடிந்த பின் இது குறித்து முடிவெடுக்குமாறு அவள் அவனிடம் கூறுகிறாள். மாமியை அடையப் போகிறோம் எனும் ஆவேசத்துடன் ராமசேஷன் படிக்கிறான். தேர்வுகளை முடிக்கிறான். மாமியை நாடிக் கிளம்புகிறான். ஆனால் அப்போது மூர்த்தி அவனது காதலி ஒருத்தியுடன் பேருந்தில் இருந்து இறங்குவதைக் காண்கிறான். ராமசேஷனின் மனம் அப்பெண்ணையும் மாமியையும் ஒப்பிடவில்லை என்றாலும் சட்டென அவன் தன் முடிவை மாற்றுகிறான். மாமியிடம் சென்று அவளை மணந்தால் தன் குடும்பத்தில் ஏற்படும் கொந்தளிப்புகளை காரணமாய் சொல்லி அவளை விட்டுப் பிரிகிறான். அவன் பிரச்சனை மாமி ஒரு இளம்பெண் போல் பூரிப்பாய், கட்டழகாய் இல்லை என்பதல்ல. ஆனால் மாமியை அவன் மனதில் உருப்பெறச் செய்ய அப்பெண் அவனது மனத்தராசின் இன்னொரு பக்கம் இருக்க தேவையிருக்கிறது. இந்த புரிதலே அவனை மனம் மாறச் செய்கிறது. யாருடனும் தொடர்புறுத்தாமல் மாமியை தன்னால் நேசிக்க முடியவில்லை எனும் எண்ணம் அவனுக்குள் ஏமாற்றத்தையும் கசப்பையும் பெருக்குகிறது. இது மாமியை வெறுக்கச் செய்கிறது.
 ராமசேஷனின் மனம் நிலைகொள்ளாமல் எப்போதும் தத்தளிக்கிறது என இதற்கு அர்த்தமில்லை. கறுப்பு இல்லாமல் அவனால் வெள்ளையை காண முடிவதில்லை. வெள்ளை இன்றி கறுப்பைக் காண முடிவதில்லை.
இந்நாவலின் இறுதியில் ஒரு அட்டகாசமான காட்சி: ராமசேஷனுக்கு கல்லூரியில் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பிக்கிறது. அவன் விடுதியில் இருந்து வெளியே வருகிறான். சாலை இரு பக்கங்களிலாய் பிரிந்து போகிறது. அவனது சக மாணவர்கள் இரு வழிகளிலும் கலைந்து போகிறார்கள். ராமசேஷனுக்கு மட்டும் எங்கு போவதென்று தெரியவில்லை. அவனது குழப்பம் எது சிறந்த வழி என்பதல்ல: இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் வலது பக்கம் தவறான வழி என முடிவெடுக்கிறோம் என அர்த்தம். அதுவே வலது பக்கப் பாதையை தேர்கையிலும் நடக்கிறது. இப்படி ஒன்றை மறுத்தே இன்னொன்று ஏற்பது ராமசேஷனுக்கு அபத்தமாக, சுய ஏமாற்றலாக தோன்றுகிறது.
இந்த முரண் எதிர்வே ராமசேஷனின் சிக்கல். நாம் எல்லாரும் இவ்வாறு தான் வாழ்க்கையை தரிசிக்கிறோம். ராமசேஷன் இது குறித்து கூர்மையான பிரக்ஞை கொண்டிருக்கிறான். அதனாலே மனிதனின் ஒவ்வொரு நிலைப்பாடும், உணர்வுநிலையும், கோரல்களும், பிரகடனங்களும் அவனுக்குப் போலியாய் தெரிகின்றன. அவன் ஒவ்வொருவரின் முகமூடியையும் கிழிக்கத் தலைப்படுகிறான். ஒரு கையால் உங்கள் முகமூடியை கிழிக்கையில் இன்னொரு கையால் தன் முகமூடியையும் பறித்து தரையில் வீசுகிறான். சரி, அவனுக்கு என்ன தான் வேண்டும்?

முகமூடிகளே இல்லாத ஒரு நிர்வாண நிலையை அவன் கனவு காண்கிறான். பட்டவர்த்தமான ஒரு உண்மையை இறைஞ்சுகிறான். இருமையற்ற ஒரு அத்வைத் உண்மையை தேடுகிறான். நவீன வாழ்வின் நெருக்கடிகளில் இருந்து ராமசேஷன் இந்த தத்துவ தரிசனத்தை வந்தடையும் இடம் நாவலில் மிக முக்கியமானது.
 ஆனால் ராமசேஷன் இதனால் ஞானியாகி விடுவதில்லை. இங்கு தான் ஆதவன் தன் வாழ்க்கைச் சித்தரிப்பை அன்றாடத்தின் சகதிக்கு இழுத்து வருகிறார். ராமசேஷன் என்னையும் உங்களையும் போன்றவன். அவனுக்கு உண்மையின் ஒற்றை ஒளிக்கீற்று சிலந்தி வலையிழை போல் கண்ணில் படும். அவன் அதைக் கையில் பற்றி விரலால் தொட்டு நோக்கியதும் அது அறுந்து விடும். அவனால் அதைக் கொண்டு தனக்காக ஒரு கூட்டை ஒரு போதும் கட்ட முடியாது.
நாவலின் ஒரு கட்டத்தில் ராமசேஷன் தான் இனி யாரையும் எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை; அதுவே உண்மையான விடுதலை என முடிவெடுக்கிறான். ஆனால் அடுத்த நிமிடமே அவன் ஏதாவது ஒரு உணர்ச்சிகரமான உறவில் / பிரச்சனையில் போய் சிலந்தி வலையில் பூச்சி போல் மாட்டிக் கொள்கிறான். எதிலும் மாட்டிக் கொள்ளாமல் தன் இருப்பை அறிய அவனால் முடிவதில்லை.
இந்நாவலில் இந்த இருமையின் கண்ணாமூச்சியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு பாத்திரம் இயக்குநர் வி.எஸ்.வி மட்டுமே. அவர் எந்த கருத்தியலுடனும் வாழ்க்கைப் பார்வையுடனும் தன் படைப்பை பொருத்த மறுக்கிறார். தன் படைப்பு என்பது எதேச்சையாய் தான் கண்டடையும் ஒரு தரிசனம், அதற்கு தான் பொறுப்பல்ல, அதனுடன் தானே முழுக்க உடன்பட அவசியம் கூட இல்லை என ஒரு ஒட்டாமை நிலைப்பாட்டை அவர் கொண்டுள்ளார். ராமசேஷனால் அவருடன் உடன்பட முடிவதில்லை; அவரை போலியானவர், ஒரு பச்சோந்தி என கருதுகிறான்.
ஆனால் என்றாவது ஒருநாள் அவன் வி.எஸ்.வியின் ஆற்றொழுக்கில் மிதக்கும் இலைச்சருகு மனநிலையை சென்றடைவான் என நாம் ஊகிக்க நாவலில் இடமுள்ளது.

அதுவரை ராமசேஷன் எந்த அடையாளத்துக்கும் பிடி கொடுக்காமல் மீனைப் போல் நழுவிக் கொண்டே இருப்பான். பொறுப்பின் சிலுவையில் ஏறாமல் இருப்பதும், தடைகளின்றி மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் அனுபவிப்பதே வாழ்வின் இலக்கு என கூறுவான்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...