2ஜி அலைக்கற்றை தீர்ப்பு சம்மந்தமான இரு விதமான முகநூல்
பதிவுகளைப் படித்தேன். ஒருவகை - இது கார்ப்பரேட் அரசியல் மோதல்களில் நம்
கண்ணுக்குத் தெரியும் சிறு முடிக்கற்றை மட்டுமே. அவர்களுக்குள் அடித்துக் கொண்டு
சமரசமாகி விட்டார்கள். பரஸ்பரம் மிரட்ட இந்த வழக்கை பயன்படுத்திக் கொண்டார்கள்.
இவ்வழக்கில் குற்றம் நிச்சயம் நடந்திருக்க வேண்டும். ஆனால் குற்றவாளிகள் ஒன்று
ராஜாவும் கனிமொழியும் அல்ல, அல்லது அவர்கள் மட்டும் அல்ல.
பெருந்தலைகள் பலர் எந்த தொல்லையும் இன்றி ஜாலியாக தப்பித்து விட்டார்கள்.
இன்னொரு வகை - இந்த ஊழலே நடக்கலைங்க. ஏனென்றால் அதற்கு ஆதாரமே
இல்லைங்க. ஏனென்றால்... இப்படிப் போகிறது அவர்களின் வாதம். தீர்ப்பின்
ஆயிரக்கணக்கான பக்கங்களில் சிலவற்றை தெளிவாக ஊன்றிப் படித்து ராஜன் குறை எழுதிய
பதிவும் இவ்வாதங்களில் ஒன்று. குற்றம் நடந்ததாய் ஒரு மாயை உருவானதே அன்றி,
அது நடந்ததாய் எந்த ஆதாரமும் இல்லை. ஆகையால் இவ்வழக்கில் யாரையும்
தண்டிக்க முடியாது. சொல்லப் போனால் நடந்த ஒரே குற்றம் குமாஸ்தாக்கள் 2ஜி சம்மந்தமான கோப்புகளை சரிவர தொகுத்து சேகரிக்காதது தான்.
ராஜன் குறையுடன் பல விசயங்களில் உடன்படும் என்னால் இவ்விசயத்தில்
முடியவில்லை.
ஆதாரம் இல்லாமல் தண்டிக்க முடியாது என்றால் ராஜீவ் காந்தி வழக்கில்
ஒரு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக பேரறிவாளனை ஏன் இன்னும் சிறையில்
வைத்திருக்கிறார்கள்? ராஜீவைக் கொல்ல சதியாலோசனை நடந்தது, இன்னின்னார் இங்கிங்கே வைத்து நடத்தினார்கள் என்பதற்கான தெளிவான தீர்க்கமான
ஆதாரங்களை சி.பி.ஐ முன்வைக்கவில்லை. அவ்வழக்கில் காங்கிரசின் பெருந்தலைகளுக்கு
இருந்த பங்கு என்ன என்பதும் விசாரிக்கப்படவில்லை. சதியாலோசனை நிரூபிக்கப்படாத போது,
ஆலோசனையை நடத்தினர்கள் பிடிக்கப்பட்டு குற்றவாளிகள் என
நிரூபிக்கப்படாத போது சதியாலோசனையே இல்லை என ஆகி விடாதா? அப்படி
எனில் நிரூபிக்கப்படாத சதியாலோசனையை நிறைவேற்ற பேட்டரி வாங்கிக் கொடுத்த
குற்றத்துக்காக எப்படி பேரறிவாளனை தண்டிக்க முடியும்? சதியாலோசனைக்கான
ஆதாரம் இல்லை எனில் அதுவே ஒரு மாயை என கூற முடியாதா? அப்படி
எனில் பேட்டரி மட்டும் எப்படி ஒரு ஆதாரம் ஆகும்?
இதில் இருந்து என்ன தெரிந்து கொள்கிறோம்?
ஆதாரங்களை தேவையான போது உருவாக்குவதும், மறைப்பதும்,
ஆதாரம் இல்லையென்றாலும் யாரை வேண்டுமானாலும் உள்ளே வைக்கக் கூடியதே
நம் நீதித்துறை என்றல்லவா?
உண்மையில் மன்னார்குடிக் கும்பலை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானவர்கள்
விசாரணை அதிகாரிகளும் நீதித்துறையினரும்.
ஆகையால், நண்பர்களே இவ்விசயத்தில்
குற்றமே நடக்கவில்லை எனும் தேங்காய் மூடி கச்சேரிக்கு நான் செவிசாய்க்க மாட்டேன். நான் முதல் தரப்பினருடனே உடன்படுகிறேன். 2ஜி எனும் பரப்பிரம்மத்தின் கால் நகங்களை மட்டுமே நாம் கண்டிருக்கிறோம். காணாதது நம் கற்பனையை மீறியது, ஆனாலும் அது அதே சமயம் நம் அனைவராலும் புரிந்து கொள்ளுமளவு
எளிதானது. சட்டம், ஆதாரம் என யோசிப்பவர்கள் பிரம்மத்தின் கால் நகத்தைக் கண்டு
வியந்து கொண்டிருக்க வேண்டியது தான்.