எழுத்தாளர்களில் ரெண்டு வகை. 1) சதா கண்ணாடியில் தம்மை பார்த்துக் கொள்பவர்கள்; 2) தம்மைக் கண்டு லஜ்ஜை கொள்பவர்கள். நான் ரெண்டாவது வகை. எனக்கு நான் எழுதும் எதுவும் பெரிய ஈர்ப்பு தராது. என் புத்தகங்களை மீள வாசிக்கையில் எனக்குள் அதிருப்தியே எழும். என் கதைகள், நாவல், கட்டுரைகள் என எவையும் எனக்கு விருப்பமானவை அல்ல. எனில் அவற்றை ஏன் பிரசுரிக்கிறேன்? நான் என்னை எனது சரியான விமர்சகனாய் கருதுவதில்லை. எனது மதிப்பீட்டில் எனக்கே முழுநம்பிக்கை இல்லை. நான் வெகுசாதாரணமாய் கருதும் என் எழுத்துக்களில் சிலவற்றை வெகுவாய் ரசிக்கும் வாசகர்கள் எனக்குண்டு. நான் முக்கியம் என தற்காலிகமாய் நம்பியவற்றை வாசகர்கள் நிராகரிப்பதும் உண்டு..இதனாலே ஒரு கட்டத்தில் நான் என் எழுத்தை மதிப்பிடுவதை நிறுத்தி விட்டேன், கழுதை எப்படியும் போகட்டும் என அவிழ்த்து விட்டு விட்டேன். புதிதாய், தெளிவாய், நளினமாய், நாணயமாய் பொய்யின்றி எழுதுகிறேனா என்பது மட்டுமே ஒரே அளவுகோல்.