Skip to main content

டிசைன் அப்பிடி!


எனக்கு புத்தக வடிவமைப்பில் மிகுந்த ஆர்வம் உண்டு; ஆனால் அதைப் பற்றி எந்த ஞானமும் இல்லை. எந்த புதுப் புத்தகத்தைக் கண்டாலும் அதை வாசிப்பது இரண்டாம் பட்சம் தான். அதன் காகிதம், அட்டை வடிவமைப்பு, எழுத்துரு, பின்னட்டை வாசகம் ஆகிய அம்சங்களைத் தான் முதலில் உற்று கவனித்து ரசிப்பேன்.
புத்தகத்தின் உள்ளடக்கமான எழுத்துக்கும் இந்த பதிப்புக் கலை அம்சங்களுக்கும் சம்மந்தமில்லை. எழுத்து மீது அணிவிக்கப்பட்ட ஆடைகளே இவை. அலங்காரம் என சொல்லவில்லை. எழுத்துக்கு புதுப் புது அடுக்குகளை ரசனையின் அடிப்படையில் இவை உருவாக்குகின்றன. பதிப்பாளன் எந்தளவுக்கு சிறந்த ரசிகன் என்பதை அட்டைப்படம் மற்றும் வடிவமைப்பின் அழகியல் மற்றும் நேர்த்தியை வைத்து சொல்லி விடலாம்.



நான் இதை எழுதுவதன் நோக்கம் இரண்டு புத்தக டிஸைன் அற்புதங்களை சுட்டத் தான். ஒன்று பீட்டில்ஸ் எனும் ஆங்கிலேய பாப் இசைக்குழுவினர் பற்றின ஒரு புத்தகம். All the Songs. Coffee table புத்தகம் என்பார்கள் அம்மாதிரி புத்தகம் இது. கெட்டியான வழவழ தாள்கள், பக்கத்துக்கு பக்கம் திருவிழா தோரணங்கள் போல் வண்ணங்களின் ஆர்ப்பாட்டம். பீட்டில்ஸின் பிரபலமான பாடல்களை எடுத்துக் கொண்டு அவை தோன்றிய கதை, அதில் பங்கேற்ற கலைஞர்களின் பேட்டி என பீட்டில்ஸ் ரசிகர்களுக்கு ஜாலியான ஒரு அனுபவம் இப்புத்தகம். இதில் என்னை மிகவும் கவர்ந்தது உள்ளடக்கம்.
 வடிவமைப்பின் சிறப்பே அது எந்தளவுக்கு காட்சிபூர்வமாய் உள்ளதில் என்பதில் தான் உள்ளது. உள்ளடக்கம் பக்கத்தில் வழக்கமாய் அத்தியாய தலைப்புகளும் பக்க எண்ணையும் கொடுப்பார்கள். ஆனால் இதிலோ அத்தியாயத் தலைப்புக்குப் பதில் பீட்டில்ஸ் பாடல் தலைப்பை ஆல்ப வடிவில் கொடுத்திருந்தார்கள். மொத்தமாய் பார்க்க ஆல்பங்களின் தொகுப்பு போல் உள்ளடக்கம் தெரிகிறது. அபாரமான ஐடியா இது.
தமிழில் சினிமா சம்மந்தமாய் புத்தகம் போடுபவர்கள் இதை முயன்று பார்க்கலாம். என்ன தயாரிப்பு செலவு கொஞ்சம் கூரையை கிழித்து விடும்.
Image result for மோகமுள்
இன்னொரு புத்தகம்மோகமுள்”. ஐந்திணைப் பதிப்பக வெளியீடு. வடிவமைப்பாளர் யாரெனத் தெரியது. முகப்பில் ரொம்ப சாதாரணமான ஒரு படம் தான்குளோசப்பில் பெண் விரல்கள் தம்புரதாத் தந்திகளை மீட்டுகின்றன. இந்நூலை வாங்கிய பின் சில முறை மீள படித்திருக்கிறேன். அப்போதெல்லாம் இந்த முகப்பை நான் பொருட்படுத்தியிருக்க வில்லை. ஆனால் சமீபத்தில் எதேச்சையாய் இப்படத்தைப் பார்த்த போதுஏன் பெண் விரல்கள்?” எனும் கேள்வி எழுந்தது. தி.ஜாவின் இந்நாவலில் ஆண்கள் மட்டுமே பாடித் திளைக்கிறார்கள். இசைக்கருவி மீட்டுகிறார்கள். பாபு உருகி உருகி நேசிக்கும், அவனை விட வயதில் மூத்தவளான அழகும் புத்திசாலித்தனமும் பொருந்திய யமுனா பாடுவதில்லை. யமுனா கிடைக்காத விரகத்தில் அவன் தங்கம் எனும் இளம் பெண்ணுடன் தகாத உறவு கொள்கிறான். அவளும் பாடுவதில்லை. இப்பெண்கள் அழகு விக்கிரகங்கள். தம் அன்பையும் கருணையையும் நெஞ்சுறுதியையும் சொல்லிலும் செயலிலும் மட்டும் காட்டுபவர்கள். ஆனால் இந்நாவலின் ஆண்கள் தம் இச்சையை, தேவையை, கசப்பை, ஆற்றாமையை சொல்லில் வடிக்கத் தெரியாதவர்கள். தமக்குள் இவ்வுணர்வுகளை அழுத்தி வைத்து பின்னர் இசையின் உருக்கத்தில், பேரொழுக்கில் அவற்றை வெளிப்படுத்துபவர்கள். மனித இச்சையை அமானுஷ்ய கலைப் பாய்ச்சல்களாய் உருமாற்றுபவர்கள். இது தான் இந்நாவலின் மையம். இது முகப்புப் படத்தில் எவ்வளவு சாமர்த்தியமாய் சுருக்கமாய் நளினமாய் வெளிவந்து விட்டது பாருங்கள். பெண் + தம்புரா = மோகமுள். பெண் மீதான சொல்ல முடியாத இச்சை தம்புரா வழி மோகப்பெருவெள்ளமாய் பாய்கிறது.
ஆனால் இதை வடிவமைத்தவர் சந்தோஷ் போல சாமர்த்தியமான கலை அறிவு படைத்த ஒரு ஆளாக இருக்க முடியாது. நான் மேலே சொன்னதை எல்லாம் அவர் கவனித்து திட்டமிட்டு வடிவமைத்திருக்க முடியாது. எதேச்சையாய் இப்படம்தம்புரா மீட்டும் பெண் விரல்கள்அழகாய் இருக்கிறதே எனத் தோன்றி முகப்புப் படமாய் வைத்திருக்கலாம். கதையும் பாட்டுப் பாடும் பாபு பற்றினது தானே. ஆனால் அது கதையின் மையப் பார்வையையே பிரதிபலிக்கும் ஒரு பிம்பமாய் அமைந்து போனது தான் விசித்திரம்!


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...