Skip to main content

ஜோசப் விஜய்யும் நிஜ விஜய்யும்: எச். ராஜாவின் முட்டாள் வியூகங்கள்

 Image result for h raja

அரசியல் என்பது மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களை ஒன்று திரட்டுவது தான். ஆனால் அதை செய்ய நீங்கள் மக்களுக்கு நெருக்கமாய் நின்று அவர்களை ஆழமாய் பாதிக்கும் உணர்ச்சிகள் என்ன என தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களுக்கு இந்த எளிய சூத்திரம் புரியவில்லை. அவர்கள் திரும்பத் திரும்ப தம்மை கோமாளியாக்கிக் கொள்கிறார்கள்.
 விஜய் ஒரு கிறித்துவர் என எச்.ராஜா வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியதில்லை. தன் பெயர் ஜோசப் தான் என்பதை அவரே துணிச்சலாய் சொல்வார். தன் லெட்டர் பேடில் அப்பெயருடன் தான் அவர் குமுதத்துக்கு நன்றிக் கடிதம் அனுப்புகிறார். அவரது தாய் இதைப் பற்றி முன்பு ஒரு பத்திரிகைத் தொடரில் எழுதியுள்ளார். விஜய்யின் தாய் இந்து. அப்பா கிறித்துவர். விஜய் கிறித்துவராகவே வளர்ந்துள்ளார். இது தமிழர்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை என்பது எச்.ராஜாவுக்கு புரியவில்லை என்பது தான் பிரச்சனையே.

சினிமாவில் வரும் விஜய்யும் நிஜ விஜய்யும் வேறு வேறு என மக்களுக்குத் தெரியும். மிக மிகச் சில நடிகர்கள் விசயத்தில் தான் நிஜ பிம்பமும் திரை பிம்பமும் ஒன்றாய் தோன்றும். ஷாருக்கானை வடக்கத்தியர்கள் முஸ்லீமாக காண்பதில்லை. அவர் பெயர் மட்டுமே அவரை முஸ்லீமாக்குவது இல்லை. ரஜினியை தமிழர்கள் கன்னடியர் என நினைப்பதில்லை. காவிரி நதி நீர் பிரச்சனையின் போது அவர் வெளிப்படையாக தமிழர் பக்கம் நிற்கவில்லை என்ற போதும் கூட தமிழர்கள் அவரை நோக்கி துரோகியே என கூவவில்லை. அவரது ரசிகர்களின் எண்ணிக்கை இதனால் குறையவில்லை. ஒருவர் பல பரிமாணங்கள் கொண்டவராய் நிஜத்திலும் நிழலிலும் இருப்பதை நாம் ஏற்கிறோம். அதன் முரண்பாடுகள் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.
ஏனெனில் தமிழர்கள் உணர்ச்சிக் கொழுந்துகள். அந்தந்த நேரத்தில் எது உண்மையாகப் படுகிறதோ, யார் நேர்மையாய், பாசாங்கின்றித் தெரிகிறார்களோ அவர்களை அள்ளி அரவணைப்பது தாம் தமிழர்களின் இயல்பு.
நாம் யாரையும் சுலபத்தில் சந்தேகப்பட்டு ஓரக்கண்ணால் பதற்றத்துடன் கண்காணிப்பவர்கள் அல்ல. அதனாலே இங்கு எந்தவிதமான பிரிவினைவாதமும் எடுபடுவதில்லை.
எம்.ஜி.ஆர் தமிழர் அல்ல, மலையாளி என நம் மக்களுக்குத் தெரியாதா? மிக நன்றாகத் தெரியும். ஆனால் அவரை நெஞ்சார நேசித்ததால் அவர் ஜெர்மானியர் என தெரிய வந்தாலும் தமிழர்கள் பொருட்படுத்தி இருக்க மாட்டார்கள்.
தமிழர்களுக்கு இன உணர்வு உண்டு. ஆனால் இன்னொரு இனம் மீதான வெறுப்பு இருப்பதில்லை. இது ஒரு வித்தியாசமான மனநிலை. எச்.ராஜா போன்றோருக்கு இது புரிவதில்லை.
இங்கு பிராமணர்களுக்கு எதிரான அரசியல் கோட்பாடு செல்வாக்காய் உள்ளது என சில ஆங்கில ஊடகவியலாளர்கள் எழுதுவார்கள். அதனாலே தமிழக பிராமணர்கள் இங்கிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடி சென்றதாய் கூட கூறுவார்கள். பிராமணர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு பேசினார் அசோகமித்திரன். அத்தனையும் மிகை. ஜெயலலிதா பிராமணர் இல்லையா? தனது சாதியை அவர் மறைத்தாரா? இல்லையே. அவரை எம்.ஜி.ஆர் அளவுக்கு தமிழர்கள் நேசித்தார்களே.
இங்கு பிராமணர்களுக்கு எதிராய் மத்திய சாதிகள் திரண்டனர் தாம். இங்கே வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது எனும் கோஷம் எழுந்தது தான். ஆனால் அது அதிகாரத்துக்கான ஒன்று திரளல் மட்டுமே அன்றி வெறுப்பரசியலாய் என்றுமே இருந்ததில்லை. நான் அறிந்து இங்கே பிராமணர்கள் அவமதிக்கப்பட்டதில்லை. அவர்கள் மாறாக மிக அதிகமாய் மதிக்கப்படுகிறார்கள். இங்கே வடக்கத்தியர்கள் தாக்கப்பட்டதில்லை. மற்றமையை வெறுக்க நமக்குத் தெரியாது என்பதே உண்மை.
இதனால் தான் அண்ணாவில் இருந்து கலைஞர் வரை கடந்த நாற்பதாண்டுகளில் இங்கே இந்து மதத்தை பழித்து அரசியல் தலைவர்கள் பேசியதில்லை. கோயில்களை இடித்ததில்லை. வெளிப்படையாக ஆதரிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்து மதம் தழைப்பதை அவர்கள் தடுத்ததில்லை. அவர்களின் அரசியல் கோட்பாடு மதத்தையும் மரபான நம்பிக்கைகளையும் மறுப்பதே. ஆனால் மக்கள் அவர்களின் நாத்திகத்துக்காக என்றும் வாக்குகளை அளித்ததில்லை. பிராமணர்களை வெளியேற்று எனும் கோரிக்கையுடன் மக்கள் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ வாக்களித்ததில்லை.
இதை பாசாங்கு என நான் ஒரு காலத்தில் எண்ணினதுண்டு. ஆனால் அப்படி அல்ல என பின்னால் புரிந்து கொண்டேன். ஒரு கம்யூனிஸ்ட் தான் நம்புவதையே பேசுவான். அதையே பின்பற்ற முனைவான். கோட்பாட்டில் இருந்து வாழ்க்கை உருப்பெறுகிறது என அவன் நம்புவான். ஆனால் ஒரு திராவிட இயக்க சிந்தனையாளன் அப்படி அல்ல. கோட்பாடுகள் மக்களை உணர்வுரீதியாய் ஒன்றிணைக்கத்தானே அன்றி, அவற்றை அப்படியே வாழ்க்கையில் தேட வேண்டியதில்லை என அவன் அறிவான். ”பாம்பைக் கண்டால் விட்டு விடு, பார்ப்பானைக் கண்டால் அடி” எனும் தத்துவத்தை எந்த தமிழனும், எந்த திராவிட மரபில் வந்த அரசியல்வாதியும் பின்பற்ற மாட்டான். அது வெறும் அரசியல் பஞ்ச் வசனம் என அவன் அறிவான்.
திராவிடக் கொள்கை வேறு, தமிழ் உளவியல் வேறு. இரண்டும் பக்கத்தில் பக்கத்தில் இருக்கும். ஆனால் இரண்டும் ஒன்றல்ல.
அதனால் தான் பா.ஜ.கவினர் தமிழ் தேசியவாதத்தை அப்படியே இந்து தேசியவாதமாக மாற்ற முடியாது என நினைக்கிறேன். இன்னொருத்தனை எதிரியாய் காட்டி, அவனை அடி என தூண்டி விடும் அரசியல் உ.பியிலோ மும்பையிலோ எடுபடும். இங்கே எடுபடாது.
இங்கே திராவிட கொள்கை பலமாய் உள்ளதால் மதவாதம் வளராது எனும் வாதத்தில் எனக்கு உடன்பாடில்லை. தமிழகம் கோயில்களின் மாநிலம். இங்கே எச்.ராஜா இந்து மதப் பெருமைகளைப் பற்றி உரையாற்றலாம். மக்கள் கேட்பார்கள். ரசிப்பார்கள். ஆனால் இஸ்லாமியப் படையெடுப்பினால் நாம் அழிகிறோம் எனும் வெறுப்புவாதத்தை ரசிக்க மாட்டார்கள். கிறுத்துவர்களால் நமக்கு ஆபத்து என உரையாற்றினால் பொருட்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் தமிழனுக்கு மாற்றானை வெறுக்கத் தெரியாது. அது தான் உண்மையான காரணம்.
கமலஹாசன் பிராமணர் என்பதால் அவரை முதல்வர் ஆக்க அனுமதிக்க மாட்டார்கள் என சாருஹாசன் சொன்னதையும் நான் ஏற்க மாட்டேன். நாம் கமலை அப்படிப் பார்க்க சாத்தியமே இல்லை. கமல் தன்னை ஒரு குறிப்பிட்ட சாதியின் பிரதிநிதியாய் காட்டிக் கொண்டால் ஒழிய அவரை மக்கள் அப்படி முத்திரை குத்த மாட்டார்கள்.
பா.ஜ.கவினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து இங்கே ஒரு பிரிவினைவாத வெறுப்பை நுழைத்து விடலாம் என எதிர்பார்க்கிறார்கள். சமீபமாய் அவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போது தமக்கு எதிராய் உரையாடுகிறவர்களின் மத அடையாளத்தை முன்னிறுத்தி பேச முயல்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியின் போது மனுஷ்யபுத்திரனை அப்துல் ஹமீது என திரும்பத் திரும்ப அழைத்துப் பேசினார் ஒரு பா.ஜ.க பேச்சாளர். மக்கள் இம்மாதிரி தந்திரங்களை எல்லாம் தூ என துப்பி கடந்து விடுவார்கள்.
 நீங்கள் என்றுமே ஒரு மாநில மக்களின் அடிப்படை இயல்புக்கு மாறான எந்த பிரச்சாரத்தையும் பயன்படுத்தக் கூடாது. அது தோல்வி காணுமே அன்றி வெல்லாது.

இதை உணராத வரையில் தமிழக பா.ஜ.கவுக்கு முதல் எதிரி எச்.ராஜா போன்றோர் தாம். அவர்கள் ஒரு புற்றுநோய் போல் பா.ஜ.கவை உள்ளிருந்தே தின்று அழித்து விடப் போகிறார்கள்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...