மெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி
அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங்கள் சிலர் துவங்கி தமிழ் உள்ளூர்
முகநூல் விமர்சகர்கள் வரை தெரிவித்த ஆதரவைக் காண்கையில் இந்த கேள்வி மட்டுமே எனக்கு
எழுகிறது: ஒரு திட்டமிட்ட அரசியல் நாடகத்தில் அவசியமின்றி ஏன் பலரும் எண்டர் ஆகி எழுதப்படாத
வசனங்களைப் பேசி வேறு யாருக்கோ கைத்தட்டல்கள் போவதை உணராமல் புல்லரிக்கிறார்கள்?
இந்த சர்ச்சையின் நோக்கம் என்ன? (ஆம், எந்த ஊடக சர்ச்சையும், அதுவும் அரசியல்வாதிகள்
சம்மந்தப்பட்ட எந்த சர்ச்சையும், தாமாக ஏற்படுவதில்லை.
1) விஜய்யை ஒரு மாற்று அரசியல் சக்தியாக லாஞ்ச் செய்வது.
2) ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான அதிருப்திக்கு, மத்திய அரசுக்கு
எதிரான கோபத்துக்கு ஒரு போலி வடிகாலை உருவாக்குவது.
3) இதன் மூலம் அடுத்த சில வருடங்களில் வரப் போகும் மாநில தேர்தலில்
நால்முனை அரசியல் போட்டியை திமுகவுக்கு மாற்றாக பா.ஜ.க உண்டுபண்ண விரும்புகிறது. அதற்கான
ஒரு பரிசோதனை நிகழ்வு போல விஜய் எனும் அரசியல் தரப்பு மக்கள் முன்னிலையில் வைக்கப்படுகிறது.
சில வாரங்கள் முன்பு
தான் பிக்பாஸ் மற்றும் தனது குழப்பக் கவிதைகள் வழி கமல் அரசியல் விமர்சனங்களை தொடர்ந்து
வைத்து பரபரப்பை உண்டு பண்ணினார். பிக்பாஸ் முடிந்து கமலும் கொஞ்சம் அமைதியானதும் விஜய்
முன்னே வருகிறார். கமலை பா.ஜ.கவினர் தாக்கியதைப் போன்றே விஜய்யையும் தாக்குகிறார்கள்.
இது எதேச்சையாய் நடக்கிறது என நான் நம்பவில்லை.
கமல் அரசியல் கருத்துக்கள் தெரிவித்து, பின்னர் அவர் கட்சி ஆரம்பிக்கப் போவதாய்
புரளி கிளம்பி, அவரே அதை மறுத்து பல குழப்பங்கள் ஏற்பட்ட நிலையிலும், எடப்பாடி கும்பலைப்
போன்றே கமலும் ஒரு பா.ஜ.க பினாமி எனும் நம்பிக்கை மக்களிடம் வலுப்பட்டது. விஜய் விசயத்தில்
அத்தவறு நேராமல் பா.ஜ.க கவனம் காட்டி உள்ளது. எடப்பாடி அரசை விமர்சிக்காமல் விஜய் பா.ஜ.க
அரசை விமர்சிக்கிறார்.
இது போல் மத்திய அரசை விமர்சிப்பதில்
விஜய் மட்டுமல்ல எந்த நடிகருக்கும் முன்மாதிரி இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
அதிகபட்சம் ஆளும் மாநில அரசை விமர்சிப்பார்கள். எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில்
மத்திய அரசு இதுவரை அதிகம் விமரசிக்கப்பட்டதில்லை. (ஏனெனில் தமிழகத்தில் அப்படி ஒரு
தேசிய அளவிலான அரசியல் ஆர்வமும், மத்திய அரசை பொருட்படுத்தும் அவசியமும் இருந்ததில்லை.)
விஜய் தனது முந்தைய படங்களில் எந்த தெளிவான அரசியல் தரப்பும் வெளிப்படுத்தியதில்லை.
எந்த கட்சிக் கொள்கையையும் நிர்வாக சீர்கேட்டையும் குறிப்பாய் விமர்சித்ததில்லை. ஏன்
இப்போது இவ்வளவு தெளிவாக ஜி.எஸ்.டியை சாடுகிறார்?
விஜய் பா.ஜ.க எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதாய் நான் நம்பவில்லை. மாறாக பா.ஜ.கவுக்காக
ஒரு (போலி) எதிர்-பா.ஜ.க நிலைப்பாடு எடுக்கிறார்.
வரும் தேர்தலில் அதிமுகவும் பா.ஜ.கவும்
கூட்டணி அமைக்கும் அல்லது மறைமுக கூட்டணி வைக்கும். அப்போது பா.ஜ.க கூடுதலாய், கமல்,
ரஜினி, விஜய், தீபா என மூன்று அல்லது நான்கு முனை போட்டியை களத்தில் உருவாக்கும். ஒரு
கட்சி அதிமுகவை எதிர்க்கும், இன்னொன்று பா.ஜ.கவை எதிர்க்கும், இன்னொன்று ஊழலை பொத்தாம்
பொதுவாய் எதிர்க்கும், இன்னொன்று எல்லா திராவிட கட்சிகளின் சீர்கேட்டையும் எதிர்க்கும்.
இவ்வாறு, அதிமுக அதிருப்தி (கூடுதலாய் பா.ஜ.க எதிர்ப்பு) வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல்
பா.ஜ.க பார்த்துக் கொள்ளும். அதற்கான முன்னோட்டம் தான் நாம் இதுவரை பார்த்தது.
அடுத்த வருட இறுதிக்குள் ரஜினி தனது பட வேலைகளை முடித்துக் கொண்டு சில பல அரசியல்
கருத்துக்களை கூறி களத்தில் குதிப்பார். எச்.ராஜா துவங்கி பல உள்ளூர் பா.ஜ.கவினர் ரஜினியை
கேவலமாய் திட்டி சர்ச்சையை உண்டு பண்ணுவார்கள் (அல்லது அவர்கள் அமைதியாக அதிமுக அமைச்சர்கள்
ரஜினியை ஏசித் தள்ளுவார்கள்.). மொத்த ஊடக உலகமும் பேஸ்புக்கும் அதைப் பற்றிப் பேசும்.
ரஜினியோ கமலோ உடனடியாய் கட்சி ஆரம்பிப்பார்கள்
என நான் நம்பவில்லை. இப்போதே அவர்கள் கட்சி ஆரம்பித்தால் அவர்கள் வளர்ந்திட நிச்சயம்
வாய்ப்புள்ளது. எப்படி ஒ.பி.எஸ்ஸோ, எடப்பாடியோ கால் இஞ்ச் வளர்வதைக் கூட பா.ஜ.க அனுமதிக்காதோ
அவ்வாறே அது இந்த சினிமா தலைவர்கள் விசயத்திலும் நடந்து கொள்ளும். தேர்தலுக்கு சற்று
முன் காளான்கள் போல் முளைத்து ஒருவித புதுமையையும் அது சார்ந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தி,
அதை இந்த சினிமாத் தலைவர்களின் கட்சிகள் வாக்குகளாய் அறுவடை செய்ய முடியுமா என பா.ஜ.க
பார்க்கும். அப்போதும் இவர்கள் அதிகமாய் வாக்குகள் பெறாமல் கவன சிதறல் அரசியல் மட்டுமே
பண்ண வேண்டும் என்கிற கட்டளையையும் அது இந்த சினிமா தலைவர்களுக்கு அளிக்கும். எல்லாரும்
மோடியின் உள்ளங்கைக்குள் நிற்கும் அளவு மட்டுமே வளர வேண்டும். அதற்குள் நின்று தரப்பட்ட
வசனங்களை பேச வேண்டும். இதுவே பா.ஜ.கவின் தேர்தல் திட்டம்.
”மெர்சல்” விசயத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள் தலையிட்டு கருத்து
சொன்னதை எண்ணி எச்.ராஜா போன்றவர்கள் உள்ளுக்குள் நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள் என
நினைக்கிறேன்.
இச்சர்ச்சையில் வலைதளங்களில் கருத்து சொன்னவர்களில்
அராத்து சொன்னதில் மட்டுமே எனக்கு வெகுவாக இணக்கமுண்டு. அவர் கேட்கிறார்: ”விஜய் சினிமாவில் அரசியல்
பேசுவது எவ்வளவு காமெடியோ, அந்த காமெடிக்கு சற்றும் குறைந்ததல்ல, தமிழக பாஜக இந்த
படத்தை எதிர்ப்பது. மத்திய அரசால், ஒரு சின்ன இன்கம்டாக்ஸ் ரெய்ட் மூலம் இந்த
நடிகர்களை தொடை நடுங்க வைத்து வழிக்கு கொண்டு வந்து விட முடியும்.
இதைப்போன்ற
நடிகர்கள் ஏதோ ரெண்டு வசனம் திரைப்படத்தில் பேசி விட்டதை புரட்சி என்பதும், அதற்கு
எதிர்வினையாக கோமாளிகள் அந்த காட்சிகளை எடுக்க வேண்டும் என்று சொல்வதை அடக்குமுறை
என்பதும் அடர் கருப்பு நகைச்சுவையன்றி வேறென்ன? ”
உண்மையிலேயே, விஜய்யை வழிக்கு கொண்டு வர பா.ஜ.க இது போல்
வீர வசனங்கள் ஏன் பேச வேண்டும்? அவர்களின் பலம் அவர்களுக்குத் தெரியாதா அல்லது
தெரியாதது போல் நடிக்கிறார்களா?
இதை ஒரு கருத்து சுதந்திர விவகாரமாக நாம் சுருக்குவதும்
ஒரு கண்ணாமூச்சி விளையாட்டில் பங்கேற்பதாக முடியும்.
இனிமேல் பா.ஜ.கவினர் கொதித்து எழும் எந்த சர்ச்சையிலும்
நாம் கவனமாய் இருக்க வேண்டும்.