Skip to main content

இன்னும் எத்தனைக் காலம் தான்…



சமீபத்தில் நான் பாகிஸ்தான் – இலங்கை ஐம்பது ஓவர் கிரிக்கெட் ஆட்டமொன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். சராசரியான ஸ்கோர் தான். 292. இரண்டாவதாக ஆடிய இலங்கை அந்த இலக்கை எட்டும் நோக்கில் முதல் பத்து ஓவர்களும் சற்று கவனமாய் ஆடியது. தரங்காவும் திரிமன்னேவும் ஒரு பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து வந்தார்கள். 

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்விங் கிடைக்கவில்லை. அவர்களை சுலபமாய் அடித்தாட முடிந்தது. அடுத்து ஹபீஸ் ஸ்பின் போட வந்தார். பந்து சுழலவில்லை. சரி, இனிமேல் பாகிஸ்தானுக்கு பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனால் தான் உண்டு. அல்லாவிடில் இந்த ஜோடி நிலைத்தாடினால் இலங்கை நிச்சயம் வென்று விடும் என எண்ணினேன்.

ஆனால் அடுத்து ஒரு முக்கிய திருப்பம். ஹபீஸ் தன் இரண்டாவது ஓவர் போட வந்தார். ஒரு பந்து சட்டென எகிறித் திரும்பியது. எனக்கு இது வியப்பாக இருந்தது. அதெப்படி சுழலில்லாத ஆடுதளத்தில் இவர் மட்டும் சுழலச் செய்கிறார்? இதனை அடுத்து ஹபீஸ் சில நேரான பந்துகளை வீசினார். அவரை ஆட முடியாது தரங்கா திக்கித் திணறினார். ஒன்றிரண்டு ரன்களை எடுப்பதே ஒரு பிரயத்தனம் ஆகியது. இது மொத்தமாய் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. மூச்சுத்திணறல் கொண்ட நோயாளிகளைப் போல் இலங்கையின் பேட்ஸ்மேன்கள் நடந்து கொண்டார்கள். ரன் ரேட் எகிறியது. விக்கெட்டுகள் சரிந்தன. பாகிஸ்தான் வென்றது. அனைத்துக்கும் சூத்திரதாரி ஹபீஸ். அவர் அப்படி என்ன தான் பண்ணினார்?

நான் ஹபீஸின் பந்துகளை கூர்ந்து கவனித்தேன். ஒரு சில பந்துகளை மட்டும் அவர் கையை நேராக வைத்து வீசுவது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இப்பந்துகள் மட்டும் திரும்பின. அதாவது அவர் பந்தை எறிய ஆரம்பித்தார். இது விதிமுறைக்கு எதிரான ஒன்று. ஆனால் மிகச்சில பந்துகளுக்கு மட்டுமே அவ்வாறு செய்தார். இது பேட்ஸ்மேனைக் குழப்ப, அவர் தனது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆக்‌ஷனில் மீதிப் பந்துகளை வீசினார். மிகுந்த கட்டுப்பாட்டுடன், பந்தை அழகாய் பிளைட் செய்து அவர் வீசினார் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த “எறி பந்துகளே” அவருக்கு தன்னம்பிக்கையையும் பேட்ஸ்மேன்களுக்கு மூச்சுத் திணறலையும் அளித்தது. அதுவே ஆட்டத்தை மாற்றி அமைத்தது. டி.வியில் பார்க்கும் எனக்கே இது தெளிவாய் தெரிய ஏன் நடுவர் வேடிக்கை பார்த்தபடி இருந்தார்?
இப்போது இத்தொடரில் பந்தை எறிந்ததற்காய் ஹபீஸ் தடை செய்யப்பட்டிருப்பதாய் செய்தி வந்திருக்கிறது.
2005இல் இருந்தே ஹபீஸ் தொடர்ந்து பந்தை எறிவதாய் குற்றம் சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டு வந்திருக்கிறார். கடந்த மூன்று வருடங்களில் மூன்று முறை தடைசெய்யப்பட்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் தன் ஆக்ஷன் சரி பண்ணப்பட்டதாய் காட்டி தடையை நீக்கி அவர் ஆட வந்து விடுகிறார். அவர் ஆடியதும் பாகிஸ்தானின் பந்து வீச்சு பலமடங்கு பலம் கொண்டதாகிறது. எப்படி அவர் தொடர்ந்து சட்டத்தின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிக்கிறார்?
இவ்விசயத்தில் ஐ.சி.சியின் விதிமுறைகள் சற்றே வேடிக்கையானவை. ஒருவர் பந்தை எறிகிறார் என நடுவர் கருதி, அதை ரிபரியும் ஏற்றுக் கொண்டால் அவரை நிபுணர் குழு ஒன்றிடம் அனுப்புவார்கள். இந்த குழு முன்பு வீசிக் காட்டும் போது ஹபீஸை போன்றவர்கள் பந்தை எறிய மாட்டார்கள். ஒழுங்காக வீசுவார்கள். உடனே தடையை நீக்கி அவரை ஆட அனுமதிப்பார்கள். அவரும் திரும்பவும் வீசுவார். திரும்பவும் தடை. திரும்பவும் நான் நல்லவன் என சத்தியம் பண்ணிக் கொடுத்து ஆட வந்து விடுவார்.
இப்படி செய்கையில், இரண்டு வருடங்களுக்குள் ஒரு பவுலர் மீண்டும் பந்தை எறிந்ததாய் கண்டறியப்பட்டால் அவருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்படும். 2015இல் அப்படித் தான் தடை விதிக்கப்பட்டு ஹபீஸ் ஒரு வருடம் வீட்டில் இருந்தார். ஆனால் 2017இல் மீண்டும் தப்பு செய்ய மீண்டும் தடை. ஆனால் இது மூன்றாவது விதிமீறலாய் கருதப்பட மாட்டாது. முதல் தவறாய் கருதப்படும். இது ஐ.சி.சி விதிமுறையின் முக்கியச் சிக்கல். இனி ஹபீஸ் அடுத்த ஒரு வருடமே கவனமாய் இருக்க வேண்டும். அதறாக அவர் இனி பந்தை எறிய மாட்டார் என்றில்லை. நடுவர் கண்ணில் படும்படி ரொம்ப அதிகமாய் எறியக் கூடாது.
சில ஊர்களில் ஒரு திருடன் பல வருடங்களாய் இருப்பான். அடிக்கடி போலீஸ் அவனை பிடித்துக் கொண்டு போய் விடும். ஆனால் அவன் திரும்ப வந்து அதே வீட்டில் வசிப்பான். அதே போல திருடுவான். சிறைத்தண்டனை, போலீஸ் தொந்தரவு, வதை ஆகியவற்றுடன் அவன் சமரசம் பண்ணி ஒருவிதமாய் பழகி விடுவான். போலீசும் அவனுடன் ஒரு புரிந்துணர்வுடன் செயல்படும். ஹபீஸ்-ஐ.சி.சி விவகாரம் இப்படித் தான் போகிறது.
இதற்கு சரியான தீர்வுகள் இரண்டு:
1)   ஒரு ஆட்டம் நடைபெறும் போதே நடுவர் ஒரு பவுலர் எறிகிறாரா இல்லையா என கவனித்து தடுத்து நிறுத்த அவருக்கு சட்டரீதியான அதிகாரத்தை நல்க வேண்டும். இப்போதுள்ள நடைமுறைப்படி நடுவர் ரெபரியிடம் தெரிவித்து, அவர் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்து ஐ.சி.சிக்கு தெரிவித்து அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து அந்த பவுலரின் வாரியத்துக்கு தகவல் அனுப்புவார்கள். இதற்குள் ஆட்டத்தொடரே முடிந்து போகும். அவர் எறிந்தெறிந்தே தன் அணியை பல ஆட்டங்கள் வெல்லச் செய்து விடுவார்.

2)   இப்படி ஒருவர் பந்தை எறிந்ததாய் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆட்டங்களில் அவரது அணி பெற்ற வெற்றிகள் செல்லாதவை என அறிவிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறையை கொண்டு வந்தாலே ஹபீஸை போன்றவர்களை பாகிஸ்தான் தேர்ந்தெடுக்காது. அல்லாவிட்டால் பழைய குருடி கதவைத் திறடி என கதை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...