ஒவ்வொரு மாலையிலும்
வாயிற் கதவருகே வந்து விடுகிறாள்
என் மனைவி என்னை வரவேற்க,
தன் கூந்தல் கலைந்திருக்க,
அடுக்களை வேலையில் தன் ஆடை அலங்கோலப்பட்டிருக்க
என் புராதனக் கார் மெல்ல உருண்டு நுழைய. என் மகள்கள் வாயிற்கதவின்
குறுக்குக்கம்பிகளில் தொங்கியபடி
வரவேற்க தலைப்படுவார்கள்
ஒருத்தி என் பையை தூக்கிப் போவாள், இன்னொருத்தி
என் சாப்பாட்டுப் பையையும்.
என் பகல் பொழுது வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியாகி விட்டது.
அவர்களை நாள் முழுக்க மறந்து விட்டு, இப்போது
சட்டென நினைவு கொள்கிறேன் அவர்களை
மீண்டும் நான் ஏமாற்றமடையச் செய்ய வேண்டுமென,
ஏனெனில் என் மாலைப் பொழுது
மதுக்கூடத்துக்கு அர்த்தமற்று வருகை நடத்தி
வீணடிக்கப்படப் போவதாய் ஏற்கனவே தீர்மானமாகி விட்டதே.
அதோடு, என் மனைவி தந்த காப்பி
வாயில் குளிர்ந்து போகிறது.
பள்ளியில் இருந்து என் பிள்ளைகள் கொணர்ந்த
கதைகள் என் செவிக்கு சலிப்பாய் தோன்றுகின்றன.
அவர்கள் மேல் எனக்கு என்னதான் பிரியம் இருந்தாலும்
இன்றிரவு அவர்களை மீண்டும் ஏமாற்றமடையச் செய்தே ஆக வேண்டும்
நான்.