Skip to main content

யுத்தத்துக்காக ஆயுதமா ஆயுதத்துக்காக யுத்தமா? (2)

Image result for kane and abel murder


இனி யுத்தத்துக்கு வருவோம்.
உலகின் முதல் கொலை எப்படி நடந்திருக்கும்? ஒரு வலுவான எதிரியை ஒருவன் கட்டையால் அடித்தோ கல்லால் மண்டையை பிளந்தோ, அல்லது கத்தி அல்லது ஈட்டி கண்டு பிடிக்கப்பட்ட பிறகென்றால் குத்தியோ கொன்றிருக்கலாம். ஆனால் இந்த ஆயுதங்கள் எதுவுமே இல்லை. எந்த ஆயுதங்களுமே சாத்தியப்படாத இடத்தில் அவன் வசிக்கிறான். அவன் கொல்ல வேண்டிய ஆள் அவனை விட வலுவானவர். பக்கத்தில் போய் கழுத்தை நெரித்து கொல்ல முடியாது. அப்படி எனில் கொலையே நடந்திருக்காது.

ஆனால் கொலை நடந்தது. ஏனெனில் ஆயுதம் அவன் கண்ணில் பட்டது. உலகின் முதல் கொலையை பற்றி விவிலியம் பேசுகிறது. கேன் தன் சகோதரன் ஏபெலை கொல்கிறான். அவன் காதில் சாத்தான் சொல்கிறான்: “ஏபெலின் தலையை ஒரு கல்லால் அடித்து உடைத்துக் கொல்.” சாத்தான் முதலில் ஆயுதத்தை (கல்) கொடுக்கிறான். அடுத்து தான் கொலையை நிகழ்த்தச் செய்கிறான். நம் சூழலில் இந்த சாத்தானாக ஆயுத நிறுவனங்கள் உள்ளன. அவை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆயுதங்கள் வழங்கி போருக்கு தயார் செய்கின்றன. அவை அமெரிக்காவை அப்கானிஸ்தானிலும், இஸ்ரேலை பாலஸ்தீனிலும் குண்டு போடச் சொல்கின்றன. உலகம் ஆயுத வியாபாரத்தை தடை செய்திருந்தால் அந்த கொடூரமான ஈழப் போர் நடந்திருக்காது. லட்சக்கணக்கான அப்பாவிகள் சிதைந்திருக்க மாட்டார்கள்.
ராணுவத்திற்கு என்று தனியாய் ஒரு சமூகப் பங்களிப்பு உண்டா என்பதில் எனக்கு ஐயம் உள்ளது. பேசி சமரசமாகிப் போகும் பிரச்சனைகளே தேசங்களுக்கு இடையே உள்ளன. ஆனால் அரசியல்வாதிகள் நல்ல பெயர் எடுக்க சிலநேரம் போர் பீதியை மக்களிடையே தூண்டுகின்றன. வாஜ்பாய் அரசு கார்கிலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுமதித்து விட்டு பிறகு போரை ஆரம்பித்தது ஒரு உதாரணம். இதுவே 1947இல் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரை ஆக்கிரத்த போதும் நடந்தது. மௌண்ட் பேட்டன் பாகிஸ்தானிய ராணுவம் காஷ்மீருக்குள் நுழைவதை தடுப்பதை தள்ளிப் போட்டார். (அவர்களை படையெடுக்க தூண்டியதே அவர் தான் என்றும் சொல்கிறார்கள்.). நேருவும் அவருக்கு உடன்பட்டார். காஷ்மீரை பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்த பின்னர் இந்தியர்கள் ராணுவத்தை அனுப்பி போரிட்டார்கள். எளிதில் முடக்கி இருக்க வேண்டிய எளிய சிக்கலை பெரிதாய் வளர்த்தெடுத்தார்கள். பிரிவினையையும் பிரிட்டீஷ் அரசாங்கம் வேண்டும் என்றுமே மோசமாய் திட்டமிட்டு கடும் உயிர்சேதத்தை இருபக்கமும் ஏற்படுத்தியது. இது இரு தேசங்கள் இடையிலும் தீராப் பகையை தோற்றுவித்தது. மேலும் பிரிட்டீஷ் அரசு ஒரு பக்கம் இந்தியாவை ஆதரித்து விட்டு இன்னொரு பக்கம் பாகிஸ்தானையும் தூண்டி விட்டது. இல்லாவிட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பு நாடுகளாய் நீடித்திருக்க முடியும்.
வலுவான ராணுவம் இல்லாத ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்கிரமிக்கும் என்பதும் ஒரு தொன்மம் தான். இலங்கையை இந்தியா சுலபத்தில் ஆக்கிரமிக்க முடியுமே? ஏன் இல்லை? தேவையில்லை என்பதலே. பெரிய ராணுவங்கள் இல்லாத எத்தனையோ சிறு தேசங்கள் உலகில் பரஸ்பர புரிந்துணர்வு, வணிக ஒப்பந்தங்கள், பண்பாட்டு பரிமாற்றங்கள் மூலம் போர் இன்றி நிலைத்து வருகின்றன. ஆனால் ராணுவத்துக்காக பட்ஜெட்டில் பெருந்தொகையை ஒதுக்கும் தேசங்கள் அவ்வப்போது போரில் ஈடுபடுவதை காணலாம். அமெரிக்கா சிறந்த உதாரணம்.
போருக்காக ஆயுதமா? ஆயுதத்துக்காக போரா?
ஆயுதத்துக்காக போர் என்பதே என் தரப்பு.
முதன்முதலில் ஆயுதம் ஒன்றை காணுற்ற பின்னரே மனிதனுக்கு கொல்லும் எண்ணம் வருகிறது. ஆயுதம் வழியாகத் தான் அவன் கொலையை அறிகிறான். நீங்கள் கேட்கலாம். ஆயுதத்தை அவன் தேடியதையே கொல்லும் இச்சை ஏற்பட்ட பின்னர் தானே?
நண்பர்களே என் பதில் இது: ஆயுதம் இன்றி ஒரு மனிதன் கொலையை கற்பனையே பண்ணி இருக்க முடியாது. அறிந்திருக்க முடியாது. அறியாத ஒன்றை எப்படி நம் மூதாதை (கற்பனை) செய்திருக்க முடியும்? ஆயுதத்திற்கு பின்னர் தான் கொலையே தோன்றி இருக்க முடியும். அதன் நீட்சியாய், ஆயுத வியாபார்கள் ராணுவங்களையும் ராணுவங்கள் போரையும் தோற்றுவித்தனர்.

 (நன்றி: மலைகள்.காம்)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...