பல வருடங்களுக்கு முன்பு “கற்றது தமிழ்” வெளியான போது சுஹாசினி ராமை பேட்டி
எடுத்தார். அதில் ராம் இவ்வாறு சொன்னார்: “வரும் சில ஆண்டுகளில் ஓட்டலில் ஒரு கோப்பை
காப்பி குடிப்பதற்கு நாம் ஒரு மூட்டை நிறைய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்ல நேரும்.”
பணவீக்கம் பற்றி ராம் சொன்ன ஆருடம் மிகையானது என எனக்கு அப்போது தோன்றியது. சமீபத்தில்
fullyfilmy யூடியூப் பக்கத்தில் ராமின் பேட்டியில் மீண்டும் இதே விசயத்தை லேசாய் தொட்டுப்
பேசினார். பேட்டியாளர்: “சார் உங்களுக்கும் சர்வைவல் பிரச்சனை இருக்கிறதா?”
ராம்: “ஆமாம். அன்றாட செலவுகள், வாடகை எல்லாவற்றையும் சமாளிப்பது இப்போதும்
பெரும்பாடு தான். யாருக்குத் தான் சர்வைவல் பிரச்சனை இன்று இல்லை? கௌதம் வாசுதேவ் மேனனுக்கும்
தான் இருக்கிறது. ஆனால் என்னையும் உங்களையும் போல் இராது. அவர் அளவில் வேற லெவலில்
அது இருக்கும். ஆனால் அவருக்கும் இன்று பணப்பிரச்சனை உள்ளது.”
ஆனால் இப்போது … ராம் சொன்னது உண்மை
என எனக்கு இப்போது நிச்சயமாய் தோன்றுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை எனும்
உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் கைநிறைய சம்பாத்தாலும்
வருட இறுதியில் பணம் சேர்த்து வைக்க முடியாது. சாப்பாடு, துணி, அன்றாடத் தேவைக்கான
பொருட்களுக்கே பெரும்பகுதி வருமானம் விரயமாகிறது. ரொம்ப போராடி நீங்கள் சேர்த்து வைத்த
பணம் கூட வருடத்துக்கு ஒருமுறை வியாதி வந்து சில வாரங்கள் மருத்துவமனையில் இருந்தால்
மொத்தமாய் காலியாகி விடும். ஏனென்றால் கடந்த பத்து வருடங்களில் சின்ன சின்ன பொருட்களின்
விலையே பல மடங்கு அதிகமாகி விட்டது. ஐம்பதினாயிரம் இருபதினாயிரம் என மதிப்பிழந்து விட்டது.
ஒரு லட்சம் ஐம்பதினாயிரம் ஆகி விட்டது. குறிப்பாக கடந்த சில வருடங்களில் பணவீக்கம்
நம் அடிவயிற்றில் பெட்ரோலாக புகுந்து குபுகுபுவென பற்றிக் கொண்டு எரிகிறது.
பணவீக்கத்தை குறைக்க இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் தாம் என்ன எனும் கேள்வியை
நாம் எழுப்ப வேண்டும். ரூபாய் நோட்டுத் தடையால் நம் தட்டில் விழும் சோற்றின் விலை குறைந்ததா
இல்லையா எனும் கேள்வியை நேரடியாய் எழுப்ப வேண்டும். இந்தியர்களின் பிரச்சனையே எதற்கும்
எதிர்வினையாற்றாமல் மண்ணாந்தையாய் எப்போதும் இருப்பது தான். இந்திய வாக்காளர்களை எவ்வளவு
வேண்டுமானாலும் சித்திரவதை பண்ணலாம். பத்து வருடங்கள் பொறுப்பார்கள். அதன் பின்னர்
நிலைமை எப்படி இருந்தாலும் புதுக்கட்சிக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள். ஏதோ முடுக்கி
விட்ட எந்திரம் போல் இருக்கிறார்கள் நம் வாக்காளர்கள்.. அந்த நம்பிக்கை தான் பா.ஜ.கவை
இப்படி ஆட வைக்கிறது. மோடி மீண்டும் பிரதமர் ஆன பின் இந்த தேசத்தில் நம்மால் மூன்று
வேளை சாப்பிட்டு வாடகை கொடுத்து வாழ முடியுமா என எனக்கு இப்போது ஐயம் ஏற்படுகிறது.
எனக்கு மட்டுமல்ல, யாரிடம் பேசினாலும் “மீண்டும் மோடியா? ஐயய்யோ” என அலறுகிறார்கள்.
(ஆனால் தினமும் போட்டு அடிக்கும் குடிகார கணவனை பாதுகாக்கும் மனைவிமார் போல இவர்களே
மோடிக்கு மீண்டும் வாக்களித்து கூடுதலாய் தம் வயிற்றில் அடித்துக் கொள்வார்கள் என்பதே
உண்மை!)
இந்த தேசம் நாம் வாழத் தகுதியற்றதாய் போய் விட்டது. ஒரு நவீன தாது வருச பஞ்சத்தை
நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். நகரங்களில் கடைகள் எப்போதும் திறந்திருக்கும். எங்கும்
செல்வம் கொழிக்கும். யாராவது பார்களில் குடித்தும் பப்களில் ஆடிக் கொண்டும் இருப்பார்கள்.
பளபளப்பான கார்கள் வரிசை வரிசையாய் நகரும். ஆனால் மக்களுக்கு சாப்பிட பணம் இருக்காது.
குடியிருக்க வீடிருக்காது. தம்மைச் சுற்றி பணத்தை அள்ளி செலவழிக்கும் ஒரு சில மக்களிடம்
மட்டும் எப்படி பணம் வருகிறது என வியந்தபடி பெரும்பாலான மக்கள் சாலைகளில் அலைந்து திரிவார்கள்.
ஒரு பகுதியினரிடம் வீடுகள் இருக்கும். கார் இருக்கும். ஆனால் வங்கியில் கடனை திரும்ப
செலுத்த முடியாது திகைப்பார்கள். இருக்கும் ஆனால் இருக்காது என்பது தான் புதிய தாதுவருச
பஞ்சமாக இருக்கும்.
இந்த தேசத்தில் இனி இரு தரப்பினர் தாம் வாழ இயலும்:
1) வெற்றிகரமான வியாபாரிகள்.
2) வெளிநாடு சென்று பத்திருபது வருடங்கள் நிறைய சம்பாதித்து
விட்டு திரும்புகிறவர்கள்.
வேறு எல்லாரும் எலிகளைப் போல் ஓடிப் போய் கடலில் குதிக்க வேண்டியது தான்!