Skip to main content

இலக்கிய குழுக்களும் புத்தக புரொமோஷனும் 2: நான் பாரபட்சமான விமர்சகனே!


பொதுவாசகன் எனும் பொய்
“பொது வாசகன்” எனும் பிம்பம் நவீனத்துவாதிகளால் பொய்யாக கட்டியெழுப்பப்பட்ட ஒன்று. அப்படி ஒரு ஆள் வானத்தின் கீழ் எங்குமே இல்லை. ஒரு இலக்கியப் படைப்பின் சாரத்தை, எந்த சார்பும் இன்றி, சார்புநிலையின் “இழுபறிகள்” இன்றி, உறிஞ்சும் ஒரு அன்னப்பறவை வாசகன் எங்குமே இல்லை. ஏனென்றால் ஒரு நாவலுக்கோ கதைக்கோ அப்படி ஒரு மையம் - ஒரு சாரம் - இல்லை.
 என் நாவல்களுக்கு / கதைகளுக்கு அப்படி ஒரு சாரம் உள்ளதாய் நான் நிச்சயம் கற்பனை பண்ணிக் கொள்கிறேன். ஏனென்றால் அப்படி செய்யாமல் என்னால் அவற்றை எழுதி விட முடியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் எதிர்பார்க்கும் சாரத்தை என் வாசகன் தீண்டுவதில்லை, உணர்வதில்லை, எடுத்து சுவைப்பதில்லை என்பதையும் அறிகிறேன். ஏமாற்றமடைகிறேன். அப்படி ஏமாற்றமடைவது பற்றி எனக்குள் நானே சிரித்துக் கொள்வதும் உண்டு. ஆனால் அதுவே எந்த இலக்கியவாதியும் விதியும்.

தனது சார்புநிலை “சார்ந்து” ஒரு வாசகன் என் புத்தகத்தில் எதையோ ஒன்றை தேடி வந்து அடைகிறான் (அல்லது அடையாது ஏமாற்றம் அடைகிறான்.) அதற்காக என்னை பாராட்டுகிறான். (அல்லது சபிக்கிறான்.)
நம்முடைய நவீனத்துவ முன்னோடிகள் ஒரு பொத்தாம் பொதுவான, அரசியலற்ற, எதனாலும் மனம் கலையாத, ஒரு தொலைதூர வாசகன், முகமற்ற மனிதன், நம் படைப்பை நுகர காத்திருப்பதாய் ஒரு கற்பிதத்தை உருவாக்கி நம்மை அதை நம்ப வைத்தார்கள். தான் இறந்த பின்னும் தான் யாரென்றே அறியாது தனது கவிதை வரியொன்றை படித்து கண்ணீர் விடும் வாசகன் ஒருவன் வருவான் என சு.ரா ஒரு கவிதையில் எழுதினார். அவனே தன் உன்னத வாசகன் என்றும், அவனுக்கானவே தான் எழுதுவதாயும் சொன்னார். ஆனால் அவனும் கூட தன் வாழ்க்கையில் கண்ட எதையோ தேடி, தன் தனிப்பட்ட நம்பிக்கைகள், அனுபவங்கள், கருத்துக்கள், அரசியல் ஆகியவற்றின் சாயலை நாடியே சு.ராவின் படைப்பிடம் வந்து, ”அதை” அங்கு கண்டு கண்ணீர் விட்டதாய் சு.ரா அறியவில்லை.
தனது கதையொன்றைப் படித்து கடுமையாய் அதைத் திட்டி கடிதம் எழுதிய முகம் தெரியாத வாசகன் ஒருவனின் வீட்டைத் தேடிச் சென்று, அவனை ஆச்சரியப்படுத்தி, அவனுடன் ஒரு இரவு அவன் வீட்டில் கழித்த உருக்கமான அனுபவம் பற்றி எஸ்.ரா முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இப்படித் தான் “பொதுவாசகன்”, பொதுவாசகர்களின் பொது விழுமியங்கள் பற்றி ஒரு பிம்பம் தமிழில் ஏற்பட்டது.
ஆனால் இதெல்லாம் நாம் நம்ப விரும்பும் ஒரு இனிய பொய். நாம் வாயிலிட்டு முழுங்கும் இனிப்பூட்டின மாத்திரை.
இலக்கிய குழுக்கள் ஒரு புத்தகத்தை பொய்யாய் முன்னெடுத்து வாசகனின் தொண்டையில் திணிக்கின்றன என்பதும் இது போல் ஒரு பொய் தான்.
 உண்மை இரண்டுக்கும் நடுவில் உள்ளது.
உயிர்மையில் எந்த நூல் வெளியானாலும் எனக்கு தெரிய வருகிறது. எனக்கு எளிதில் கிடைக்கிறது. உயிர்மை எழுத்தாளர்களில் சிலரை நான் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். அவர்கள் என் நண்பர்கள். இதனால் நான் அவர்களை முன்பு பாராட்டியதும், இப்போது பாராட்டுவதும் இயல்பே. இதில் “திட்டமிட்ட” சார்பு என்று ஒன்று இல்லை. உங்கள் சொந்த தம்பியை அன்புடன் அரவணைத்தால் அது பாரபட்சமா? குடும்பத்தில் ஒருவருக்கு உதவினால் அது ஒருபக்க சார்பா? இலக்கிய உலகம் என் குடும்பம் அல்லவா?

அஜெண்டா என்பது அவசியமே
 இவ்விசயத்தில் சதியாலோசனை எதும் நடப்பதில்லை. அதாவது இவ்வாறு தான் எந்த நூலையும் பொதுவெளியின் கவனத்துக்கு கொண்டு வர முடியும். இடதுசாரிகள் இடதுசாரி தத்துவத்தை முன்னெடுக்கும் ஒரு நூலினால் உந்தப்பட்டு அதைப் பற்றி தொடர்ந்து பேசி அதிக வாசகர்களுக்கு அதை எடுத்துச் செல்வார்கள். இந்துத்துவர்களும் பெண்ணியவாதிகளும் கழக அரசியல்வாதிகளும் சிறுபான்மையினரும் இதையே செய்வார்கள். இதன் பின்னால் நிச்சயம் ஒரு “அஜெண்டா” உள்ளது. ஆனால் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிற அஜெண்டா அல்ல இது. தம்மை அறியாமல் நம் குழுக்கள் செயல்படுத்துகிற அஜெண்டா இது. ஆனால் புத்தகங்கள் மக்களை அடையவும், மக்களால் வாசிக்கப்படவும் ஏதாவது ஒரு அஜெண்டா அவசியம்.
ஒரு நாவலுடன் ஒரு இனக்குழுவினர், சாதியினர் உணர்வுரீதியாய் பிணைக்கப்படலாம். அதை முன்னெடுப்பது அவர்களுக்கு அவசியமாய் இருக்கலாம். உதாரணமாய் கள்ளர் சாதியினர் தம் வரலாற்றை சித்தரித்த ஒரு நாவலை தேசமெங்கும் கொண்டு செல்ல முயலலாம். செய்யட்டுமே! என்ன குற்றம்? ஏன் ஒரு குறிப்பிட்ட சமூகத்துள் மட்டுமே வாசிக்கப்பட ஒரு நாவல் எழுதப்பட கூடாதா? Uncle Tom’s Cabin மாதிரியான ஒரு நாவல் அதன் வரலாற்றுச் சூழலுடன் கச்சிதமாய் பொருந்திப் போனதனால் மட்டுமே உலகம் முழுக்க பிரபலமாயிற்று. இன்றும் அதன் வரலாற்று பின்புலத்துக்காக, அடிமைத்தனம், இனஒடுக்குமுறை பற்றின விவாதத்துக்காக அந்நாவல் படிக்கப்படுகிறது.
சு.ராவின் “ஜெ.ஜெ சில குறிப்புகள்” அது வெளியான புதிதில் கிட்டத்தட்ட ஒவ்வொரு சிறுபத்திரிகை எழுத்தாளன் கையிலும் இருந்தது. அதைப் பற்றி பரபரப்பாய் பேசாத ஆட்கள் அப்போது இலக்கிய வட்டத்தில் இல்லை. அந்த பரபரப்பு அதன் புதுமையான பரீட்சார்த்தமான மொழியினால் மட்டும் ஏற்பட வில்லை. அந்நாவல் முன்வைத்த கலகக்கார அறிவுஜீவி, அவனது உன்மத்தமான பாய்ச்சல், விட்டேந்தியான போக்கு, அதிர்ச்சிக்குரிய வாழ்க்கை நமது சிறுபத்திரிகையாளர்களுக்கு அன்று அவசியமாய் இருந்தது. அந்த பிம்பத்தை ஒரு டெடிபேர் போல் தழுவிக் கொண்டு அவர்கள் உறங்கினார்கள். அதைக் கட்டியபடியே அன்றாட வாழ்வில் ஈடுபட்டார்கள். இன்று சிறுபத்திரிகை உலகம் இடைநிலை உலகமாய், சமூக வலைதள உலகமாய் மாறியபின், கலகத்தின் பொருள் மாறிய பின், மக்களுக்கு அந்த ஜெ.ஜெ பிம்பம் அவசியம் இல்லை. அந்நாவலும் மதிப்பை இழந்து விட்டது.

எக்காலத்துக்குமான ஒன்று உண்டா?
பரபரப்பை தாண்டின இலக்கிய மதிப்பு ஒன்று, எக்காலத்துக்குமான செவ்வியல் மதிப்பு என ஒன்று, இல்லையா? இலக்கிய மதிப்புக்காக மட்டுமே ஒரு புத்தகம் பேசப்பட வேண்டும் என நான் ஒரு காலத்தில் நம்பினேன். ஆனால் அது வெறும் கற்பிதமே என காலம் எனக்கு கற்பித்தது. தூய்மையான இலக்கிய அந்தஸ்துக்காக மட்டுமே ஒரு நாவல் ஒரு வாசகனுடன் உரையாடுவதில்லை. (ஏனென்றால் வாசகனுக்குள் அப்படியான ஒரு தூய்மையான ஒரு இடம் – ஒரு துலங்கும் ஆன்மா – இன்று இல்லை.)
ஜெயமோகனின் “பின்தொடரும் நிழலின் குரல்” நாவலை எடுத்துக் கொள்ளுங்கள். சிதையும் மனம் ஒன்றைப் பற்றின அபாரமான உளவியல் சித்தரிப்புக்காக மட்டுமே அந்நாவலை உலக இலக்கிய வரிசையில் வைக்கலாம். ஆனால் அந்நாவல் தமிழ் மண்ணில் காலூன்றின ஒன்று அல்ல. அது கேரளாவில் வெளியாகி இருக்க வேண்டியது. இடதுசாரிகள் பிரதான கலாச்சார அடையாளமாக மாறாத தமிழகத்தில் அந்நாவல் எழுதப்பட்டதால் இங்குள்ள பொதுமனதுடன் உரையாட முடியாமல் போகிறது. அவர் அதை மலையாளத்தில் எழுதி இருந்தால் நூறு மடங்கு அதிக கவனம் கிடைத்திருக்கும். இதையே “விஷ்ணுபுரத்துக்கும்” சொல்லலாம். அது ஒரு desi நாவல். அதை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நிச்சயம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றிருக்கும். அதன் இலக்கிய ”அந்தஸ்தும்” ரஷ்டி, அருந்ததி ராயின் புத்தகங்களுக்கு மேல் இருந்திருக்கும்.

குழுக்களின் புரொமோஷனில் எந்த உள்நோக்கமும் வணிக லாபமும் இல்லை

இனி மற்றொரு விசயத்துக்கு வருவோம். இலக்கிய குழு சார்ந்த புத்தக புரொமோஷனில் எந்த உள்நோக்கமோ வணிக நோக்கமோ இல்லை. ஒரு திருமண வைபவம் போல் இது நடக்கிறது. பலர் வந்து விருந்துண்ணுகிறார்கள். சிலர் பரிமாறுகிறார்கள். சிலர் புறம் பேசுகிறார்கள். சிலர் ஒருங்கிணைக்கிறார்கள். சிலர் உதவுகிறார்கள். உங்கள் நண்பனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் விநியோகிக்க செல்வது போலத் தான் இங்கு ஒரு கவிதைத்தொகுப்புக்கு மதிப்புரையோ சிறு முகநூல் குறிப்போ எழுதுவது. உணர்வுப்பெருக்கில் மிக இயல்பாய் நடக்கிற காரியங்கள் இவை. உள்நோக்குடன், பெரிய திட்டங்களுடன் நடப்பவை அல்ல. எழுத்தாளன் உட்பட யாருக்கும் இதனால் லாபம் உண்மையில் இல்லை. நூறு பிரதி விற்கிற புத்தகம் முன்னூறு பிரதிகள் விற்றால் உண்மையில் என்ன பெரிய லாபம் சம்பாதித்து விடப் போகிறான் எழுத்தாளன்?

இதில் புரொமோஷன் - சதித்திட்டம் - ஒன்றும் இல்லை:
 (1) தமிழ் இலக்கிய வட்டாரங்களில் யாரும் இதையெல்லாம் திட்டமிட்டு செய்வதில்லை. எனக்குத் தெரிந்து. அதுவாகவே நிகழ்கிறது. முன்பு தமிழினி நூல்களை ஜெயமோகன் தொடர்ந்து அறிமுகப்படுத்தி பாராட்டிக் கொண்டிருந்தார். ஏனென்றால் அந்நூல்களை அவருக்கு உடனடியாய் கிடைத்துக் கொண்டிருந்தன. காலச்சுவடு சார்ந்த படைப்பாளிகளுக்கும் இதுவே நிகழ்கிறது. இதில் நமது நண்பர்களின் படைப்புகளை கூடுதல் கவனம் கொடுத்து வாங்கி வாசிப்போம். நட்பு காரணமாய் கூடுதல் ஸ்பூன் சர்க்கரை கலந்து பாராட்டவும் செய்வோம். இதெல்லாம் இயல்பே.

(2) திட்டமிட்டு பாராட்டி இங்கு ஒரு நூலை நீங்கள் ஆயிரம் பிரதிகள் விற்க வைக்க முடியாது. கூடுதலாய் பத்து பிரதிகள் விற்கலாம். இருக்கட்டுமே. அதனால் நம் பண்பாட்டுக்கு என்ன நஷ்டம்? நான் பாராட்டிய நூலை படித்து வீணாகிய நேரத்தைக் கொண்டு வாசகன் என்ன ஆப்பிள் கம்பெனி ஆரம்பித்து உலகை தலைகீழாய் புரட்டிப் போட்டிருப்பானா? கூல் பாஸ். வாசித்து நீங்கள் எதையும் வீணடிப்பதில்லை. மேலும் பிடிக்காவிட்டால் பத்து பக்கங்களிலே தூக்கிப் போட வேண்டியது தானே? பணம் வீணாகிறது என்றால் புத்தகத்தை இரவல் வாங்க வேண்டியது தானே? அல்லது நூலகத்தில் போய் படியுங்கள். பிடிக்காவிட்டால் நூலை அலமாரியில் திரும்ப அதே இடத்தில் வையுங்கள்.

ஏன் சிலர் மட்டும் முன்னெடுக்கப்படுகிறார்கள்?

சில எழுத்தாளர்கள் ஏன் சிலரால் தொடர்ந்து கொண்டாடப்படுகிறார்கள் என எனக்கும் உண்மையில் புரிவதில்லை தான். சமகாலத்தவர்களின் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை. முன்னோடிகளைப் பற்றி சொல்கிறேன். கி.ரா, பா.சிங்காரம், தஞ்சை பிரகாஷ் போன்றவர்களிடம் அப்படி என்னதான் சிறப்பு என என்னால் சத்தியமாய் விளங்கிக் கொள்ள முடிந்ததில்லை. ஆனால் இவர்கள் இங்கு சில குறிப்பிட்ட இலக்கிய குழுக்களுக்கு குலசாமிகளாய் இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து எதையோ அந்த குழுவினர் (படைப்பாளிகள்) ஆதர்சமாய் பெற்றுக் கொள்கிறார்கள்; விழுமியமாகவோ பிம்பமாகவோ மொழியாகவோ அது இருக்கலாம். இவர்களால் இக்குழுவினர் தூண்டப்படுகிறார்கள். தஞ்சைப் பிரகாஷைக் கொண்டாடும் லஷ்மி சரவணகுமார் தஞ்சைப் பிரகாஷை விட மேலான கதைகளை எழுதியிருப்பதாகவே எனக்குப் படுகிறது. அவ்விதத்தில் தஞ்சைப் பிரகாஷ் பயன்படுவது ஒரு நல்ல விசயம் தானே? 
நான் இவர்களிடம் போய் ஏன் தஞ்சைப் பிரகாஷ் ஏன் ஒரு சிறந்த படைப்பாளி இல்லை என எழுதியும் விவாதித்தும் நிறுவ முயல மாட்டேன். உடையாத பொருள் ஒன்றை பழுது பார்க்கக் கூடாது என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு (if it aint broke don’t fix it). அது இவ்விசயத்தில் நன்கு பொருந்தும்!

நான் பாரபட்சமானவனே!
 நான் இதை வெளிப்படையாகவே ஒத்துக் கொள்வேன்.
நான் சார்புநிலை கொண்டவன். இதை நெஞ்சு நிமிர்த்தி உரக்க சொல்வேன்.
என் ஊரை சேர்ந்த அத்தனை எழுத்தாளர்கள் மீதும் எனக்கு பாரபட்சம் உண்டு. அதைச் சொல்வதிலும் கூச்சமில்லை. என்.டி ராஜ்குமாரைப் பற்றி என்னை விட விரிவாய் யார் எழுதியிருக்கிறார்கள்? அவர் என்ன குறைபட்ட படைப்பாளியா? தமிழின் சாதனையாளர்களில் ஒருவர். அதே போன்றே நட.சிவகுமார் பற்றியும் எழுதியிருக்கிறேன். மேலும் பல சொந்த ஊர் எழுத்தாளர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். என் மண்ணின் எந்த படைப்பாளியைப் படித்தாலும் என் நெஞ்சுக்கு இனிக்கிறது. உடனே சிலாகித்து எழுத உள்ளம் துடிக்கிறது. தவறா? நிச்சயம் இல்லை.
மனுஷ்யபுத்திரனை எவ்வளவு பாராட்டினாலும் எனக்கு திகட்டாது. இரண்டு காரணங்கள். 1) அவர் ஒரு அற்புதமான கவிஞர். 2) அதை விட முக்கியமாய், அவர் என் பிரியத்துக்குரியவர். இதை வெளிப்படையாகவே ஒத்துக் கொள்வேன். எனக்கு இதில் தயக்கமே இல்லை. ஒருவேளை நான் அவர் பதிப்பகத்தில் எழுதுவதை நிறுத்தினாலும் இதையே செய்வேன். ஏனென்றால் பிரியத்துக்கு காலாவதி தேதி கிடையாதே.
நான் சி.சு செல்லப்பாவோ சு.ராவோ அல்ல. நான் பாரபட்சமான ஒரு ஆள்.

இன்னொரு பக்கம், காலச்சுவடு ”முகாமை” சேர்ந்த சுந்தர ராமசாமி (ஹா ஹா ஹா), சுகுமாரன், அரவிந்தன் போன்றோரையும் கொண்டாடி எழுதியிருக்கிறேன். அதற்காய் நான் திரு.கண்ணனிடம் சம்பளம் வாங்குகிறேனா? என்னை கடுமையாய் திட்டிய பிரபு காளிதாஸின் நாவலைப் பற்றி தேன் சொட்ட சொட்ட பாராட்டி எழுதி இருக்கிறேன். நான் சார்புநிலை கொண்டவனாய் இருக்கும் அதேவேளை சிலநேரம் “பாரபட்சம் இன்றியும்” எழுதுகிறேன் தான். என்ன செய்ய? என்னை ஒரு பைத்தியம் என வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வுலகில் நான் அறிந்த ஒரே பொதுவாகர் என் மனைவி மட்டுமே. அவளுக்கு நான் இதுவரை எழுதியது ஒன்றுமே பிடிக்காது. (அப்படி ஒருவராவது கிடைப்பது கொடுப்பினை தானே! அதனாலே நான் அவளை மனதார காதலிக்கிறேன்.)


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...