தீப்தி நேவலை ஒரு நடிகையாக அறிவேன்.
ஆனால் சமீபத்தில் நூலகத்தில் இந்திய ஆங்கிலக் கவிதைகளின் அலமாரியில் இப்பெயரில் ஒரு
கவிதைத் தொகுப்பை (Black Wind and Other Poems) கண்டெடுத்து புரட்டிய போது அவர் (இந்தி
மாற்று சினிமாவின் நட்சத்திரமாக எண்பதுகளில் திகழ்ந்த) நடிகை தீப்தி என நான் ஊகிக்கவில்லை.
பெயர் தெரியாத கவி என நினைத்து வாசித்து பிரமித்தேன்.
தீப்தியின் கவிதைகள் மனுஷ்யபுத்திரனின்
உறவு சார்ந்த கவிதைகளை நினைவுபடுத்தின. குறிப்பாக, நீ-நான் என எதிர்நிலையை முன்வைத்து
உரையாடும் பாணி. இன்னொரு பக்கம், மொழியை பொறுத்தமட்டில் ஜப்பானிய கவிதைகளை. ஜப்பானிய
கவிதைகளுக்கு என பிரத்யேகமான ஒரு மென்மையும் நுணுக்கமும் உண்டு. வாழ்வனுபவத்தின் மையத்தில்
உள்ள, விவரிக்க முடியாத, மிக மிக மென்மையான ஒரு உணர்வை, ஆன்மாவை அக்கவிதைகள் வெளிக்கொணரும்.
கவிதையில் எதிர்பாராத சந்தர்பத்தில் புறக்காட்சிகளை குறியீடுகளாக்கும். இதையே தீப்தியின்
கவிதையிலும் காண்கிறோம்.
இவ்வளவு நன்றாக எழுத வருகிற அவர்
ஏன் இவ்வளவு குறைவாய் எழுதியிருக்கிறார் என வியப்பு தோன்றுகிறது.
என் திருப்திக்காக சில கவிதைகளை
தமிழாக்கினேன். முழுமையாய் தொகுத்து மொழியாக்கின பின் வெளியிடலாம் என இருக்கிறேன்.