அசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் அஞ்சலி உரையின் உணர்ச்சிகரமான சாராம்சம் மீது எனக்கு முழு உடன்பாடே. சொல்லப்போனால் அப்பேச்சு என்னை மிகவும் நெகிழ வைத்தது.
ஆனால் அப்பேச்சின் மைய உணர்ச்சியை, சாரமான சேதியை விடுத்து விட்டு அசோகமித்திரன் டீ வாங்கி வருவது, கார் ஓட்டுவது போன்ற பணிகளை செய்ய நிர்பந்திக்கப்பட்டார் என ஜெயமோகன் சொல்வதை மட்டும் எடுத்துக் கொண்டு அது உண்மையா என நாம் கொந்தளிப்பதும் சர்ச்சிப்பதும் நகைமுரணானது. நாம் ஏன் கொதிக்கிறோம்? அ.மி அவமதிக்கப்பட்டார் என்றா? ஆனால் ஜெயமோகனின் உரை முழுக்க அ.மியின் மேதைமையை, பங்களிப்பை, இலக்கிய லட்சியவாதத்தை புகழும்பட்சமாகவே இருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் தலைகீழாக புரிந்து கொள்ளலாகாது. ஒருவேளை ஜெயமோகன் சொல்வது போல் அ.மி கீழான பணிகளை தன் பிழைப்புக்காக செய்யாதிருந்திருக்கலாம். இத்தகவல்கள் ஜெயமோகனின் கற்பனையாக இருக்கலாம். ஆனால் அ.மியை பழிக்கும் வண்ணம் அவர் இதை சொல்லவில்லையே? அ.மியின் எழுத்து வாழ்வின் போராட்டங்களை, தமிழ் சமூகம் அவரை பேணாததன் அவலத்தை சுட்டிக் காட்டத் தானே இதை சொல்கிறார்?
இங்கு நாம் ஏன் கொந்தளிக்கிறோம்? அவர் மொண்ணையான சமூகத்தின் ஒரு பகுதியாக நாம் நம்மை கருதுவதாலா? அவரது பேச்சு நம்மை கழிவிரக்கம் கொள்ள செய்கிறதா? புதுமைப்பித்தனின், பாரதியின் வறுமையைப் பற்றி கண்ணீர் வடிக்கும் போது நமக்கு இதே குற்றவுணர்வு ஏற்படுவதில்லை. ஏனெனில் அது வேறொரு சமூகம், வரலாற்றுக் காலம். இது நம் காலம். இப்பொழுது எழுத்தாளன் நியாயமாய் கவனிக்கப்படுவதாய் நம்ப விரும்புகிறோம்.
ஆனால் அது உண்மையல்ல. அசோகமித்திரன் தன் கடைசிக் காலத்தின் தன் பிள்ளைகளின் கவனிப்பினால் மட்டுமே சௌகர்யமாய் இருந்தார். அவர்கள் வளர்ந்து நல்ல வேலையில் அமர்ந்ததால் அவர் முதுமையில் துயருறாமல் பார்த்துக் கொண்டனர். தமிழ் சமூகம் அளித்த ராயல்டி பணத்தினால் அவர் என்றும் சொகுசாய் வாழவில்லை.
இப்போது நாம் அ.மியின் வறுமையை மறக்க விரும்புகிறோம். அவரை ஒரு இலக்கிய தொன்மமாய் மாற்றி வழிபட்டு கடக்க தவிக்கிறோம். ஜெயமோகன் அ.மியின் பொருளாதார சிரமங்களை பேசும் போது நமக்கு எரிச்சலாகிறது. உடனே அவர் அ.மியை பழிப்பதாய் பிரச்சனையை திருப்பிப் போடு கும்முகிறோம். இதற்கெல்லாம் அவசியமில்லை.
ஜெயமோகன் பேச்சின் சாராம்சம் உண்மையானது. அ.மியின் வறுமையும் அவமானங்களும் இச்சமூகம் அவருக்கு அளித்தவையே. முக்கியமான விசயம் என்னவெனில் நாம் அதற்காக குற்றவுணர்ச்சி அடைந்து கோபப்பட வேண்டியதில்லை.
அ.மியை அல்லல்பட வைத்த சமூகம் நாம் அல்ல. அதற்கு நாம் பொறுப்பாக வேண்டியதில்லை. அ.மியின் வறுமைக்கு பொறுப்பு நம் வரலாறு தான். நாம் அனைவரும் வரலாற்றின் ஒரு பகுதி. நாம் அதை மாற்ற முடியாது. அதற்கு பொறுப்பேற்க வேண்டிய அவசியமும் அதனால் இல்லை.