புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி,
சுந்தர ராமசாமி, கி.ரா என பெரும்பாலான நவீன கதையாளர்களின் படைப்புகளில் சுட்டியான,
நினைவில் தங்கி நிற்கிற குழந்தைகள் வந்து போகிறார்கள். ஒப்பிடுகையில் தமிழ் நவீன கவிதையில்
குழந்தைகள் குறைவே. ஒரு காரணம், நவீன கவிதை தன்னிலையில் நின்று பேசுவது. மேலும் கவிதையில்
ஒரு குறிப்பிட்ட பார்வை, பரிமாணம், அதன் குறிப்புத்தன்மை தான் முக்கியம். கதைகளில்
ஒன்றோடொன்று முரண்கொண்டு மோதும் பார்வைகள், தரப்புகள் இருக்கும். உதாரணமாய், “கடவுளும்
கந்தசாமிப்பிள்ளையும்” கதையில் கந்தசாமிப்பிள்ளை, பூமிக்கு வரும் கடவுள் ஆகியோருக்கு
முற்றிலும் மாறுபட்ட ஒரு துடிப்பான, வாழ்க்கையை அதன் முழு வெளிச்சத்தில் காண்கிற தரப்பு
கந்தசாமிப்பிள்ளையின் குழந்தையுடையது.
ஆனால் கவிதைகள் மற்றும் சிறுகதைகளில் வரும் குழந்தைகளுக்கு
ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டு வடிவங்களிலும் குழந்தைகள் உருவகங்களாகவோ குறியீடுகளாகவோ
வருகிறார்கள். (மிக கராறான எதார்த்தவாத கதைகள் மட்டுமே விதிவிலக்கு அசோகமித்திரனின்
கதைகள் போல).
குழந்தைகள் எதனுடைய குறியீடு?
மேற்கத்திய படைப்புகளில் குழந்தைகள் வசந்தத்தின், மறுமலர்ச்சியின், நம்பிக்கையும்,
ஆன்ம எழுச்சியின், தூய்மையின், சிறந்த எதிர்காலத்தின் குறியீடு. தீமையின் பல பரிமாணங்களை
விவாதிக்கும் தஸ்தாவஸ்கியின் ”கரமசோவ் சகோதரர்கள்” நாவல் குழந்தைகளின் சித்திரத்துடன்
தான் முடிகிறது. மனிதனுக்குள் என்னதான் இன்னொன்றை அழிக்கும் விழைவுக்கும் தன்னை மீறிச்செல்ல
துடிக்கும் நன்மைக்குமான மோதல் நடந்தாலும், அதில் அவன் அவ்வப்போது தோற்று தீமையில்
மூழ்கினாலும், எதிர்காலத்தில் அவன் நிச்சயம் மீண்டெழுவான் என்கிறார் தஸ்தாவஸ்கி, குழந்தைகளை
இறுதியில் காண்பிப்பதன் மூலம்.
இந்திய புனைவுலகில் குழந்தைகள்
ஒரு பக்கம் மிதமிஞ்சிய நம்பிக்கையும் உற்சாகமும் கொண்டவர்களாகவும் அதேநேரம் வாழ்வின்
கொடுமைகளில் எளிதில் வாடிப் போகிறவர்களாகவும் வருகிறார்கள். நோய்மை, வறுமை, தனிமை,
வன்முறை இவையெல்லாம் குழந்தைகளை துரத்துகின்றன. ஒரு பக்கம் மலர்ச்சி, இன்னொரு பக்கம்
கழிவிரக்கம் என இரு தொனிகள் குழந்தை பாத்திர வார்ப்பில் தெரிகின்றன. வங்காள நாவல்
”பதேர்பாஞ்சாலி”, தமிழில் கி.ரா எழுதிய “கதவு” ஆகிய படைப்புகளை உதாரணம் காட்டலாம்.
இதற்கு ஒரு காரணம் இந்தியாவில் குழந்தைகள் என்றுமே அடையாளமற்றவர்கள், அவர்கள் தம் பெற்றோர்களின்
நிழல்கள், யாரையோ சதா அண்டியிருப்பவர்கள், தமக்கென உரிமைகள் அற்றவர்கள் என்பது. ஆக
பள்ளி, குடும்பம் எங்குமே அவர்களுக்கு அச்சுறுத்தல்கள் நிறைந்திருக்கின்றன. பெரும்பாலான
இந்திய எழுத்தாளர்களின் குழந்தைப்பருவ நினைவுகளில் கசப்புணர்வும் வருத்தமும் ஊறிக்
கிடக்கின்றன. மேற்கத்திய நாவல்களில் சார்ல்ஸ் டிக்கன்ஸின் நாவல்களில் வரும் வறுமையிலும்
ஒடுக்குமுறையிலும் அல்லாடும் குழந்தைகளை மட்டும்தான் இந்திய குழந்தை பாத்திரங்களுடன்
ஒப்பிட முடியும்.
தமிழ் நவீன கவிதைகளில் குழந்தைகள்
குறித்து இந்த கசப்பேறிய சித்திரம் இல்லை. இருவிதமாய் குழந்தைகள் வருகிறார்கள். ஒன்று,
மேற்கத்திய வார்ப்பில் நம்பிக்கையின், களங்கமின்மையின் குறியீடாக, வசந்தமாக…
கல்யாண்ஜியின் இக்கவிதையில் குழந்தை
வாழ்வின் தீமையை இன்னும் சுவைக்காத தூய வடிவம்:
தலைப்பிரட்டைகள்
நீயும்
பிஸ்கட் தின்னென்று
பேபி
சொல்லும்
ஆயாவோ
மீதித்
துட்டை சரி பார்த்து
வாங்க
நிற்பாள்.
பேக்கரியின்
பீரோ
அடியில் பழம்பேப்பர்க்
கிழிசலோடு
விளையாடி
பூனைக்குட்டி
தரையெல்லாம்
புரண்டு
கொஞ்சும்
எலி வேட்டை
இன்னும்
தெரியாது
என்பதால்
(கல்யாண்ஜி
கவிதைகள், பக். 9)
சுகுமாரனின் இக்கவிதையில் வரும்
சிறுமி அறிவின், கற்பனையின் விரிவின் மூலம் வாழ்க்கையை வென்றெடுக்கும் நம்பிக்கையை
குறிக்கிறாள்.
பூமியை வாசிக்கும் சிறுமி
மடியிலிருத்தி
அரிசிபரப்பிய
தாம்பாளத்தில்
பிஞ்சுவிரல்
பிடித்து நான்
பயிற்றுவித்த
குட்டிப்பெண்
வாழ்க்கையின்
முதல் கடிதம் எழுதியிருந்தாள்:
நாலுவரி
நீளம்
’ அன்புள்ள
சுகுமாரன் சாருக்கு
சுகம்.
நீங்கள் சுகமா”
இங்கே
நேற்றைக்கும் மழை பெய்கிறது
வேறு
விசேஷமில்லை.
சர்க்கரை
முத்தங்களுடன்…’
பட்டுப்பூச்சியை
தொட்ட
சுட்டுவிரலைப்
போல
வடிவமெய்தாத
ஒவ்வொரு எழுத்திலும்
நிழல்
படியாத ஒளியின் வர்ணம்
அரிசித்தாம்பாளத்திலிருந்து
காகித
வெளியை அடைய
எழுத்தைத்
திறந்து
சொற்களைத்
திறந்து
வரிகளைத்
திறந்து
வந்திருந்தாள்
குட்டிப் பெண்
மகிழ்ந்து
கசிந்தேன்
எனினும்
வார்த்தைகளாலேயே இனி
பூமியை
வாசிப்பாள் என்பதால்
மனவெளியில்
ஏதோ நெக்குவிடும் பேரோசை
(பூமியை
வாசிக்கும் சிறுமி, பக். 192)
பூமா ஈஸ்வரமூர்த்தியின் இக்கவிதையையும்
இவ்வகையில் சேர்க்கலாம். கூடவே கராறான நவீனத்துவரான சுகுமாரனிடம் இல்லாத ரொமாண்டிக்கான
நெகிழ்வும் இதில் உள்ளது. இந்த “அஞ்சலிப் பாப்பா” கவிதையில் பூமா குழந்தைகளின் வடிவை
கவிதை வடிவத்திலும் கொண்டு வர முயன்றிருக்கிறார். அதனால் தான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு
வரியாகிறது.
அம்மா
அம்மா
வீடு
தொடாத
நாட்களில்
சின்னப்
பெண்குழந்தை
தம்ளரில்
விரல்பொத்தி
வாசல்
தெளிக்கும்
ஒரு
மிருது
அருவியில்
பூமி
குளிரும்
அன்றைக்
கென்றே
அழகாய்
உதிக்கும்
சூரியன்.
(பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள் பக். 15)
இரண்டாவது வித ’குழந்தை சித்தரிப்புகள்’
மேலும் சுவாரஸ்யமானவை. குழந்தைகளை களங்கமின்மையின் குறியீடாய் பார்த்தது கற்பனாவாத
(ரொமாண்டிஸ) காலத்தின் நிலைப்பாடு. அதற்கு நிச்சயம் கிறித்துவ ஆன்மீக மரபில் வேர் உள்ளது.
அதன் தாக்கத்தில் தான் நாமும் அஞ்சலிப்பாப்பாக்களை எழுத்தில் இங்கு உருவாக்கிப் பார்த்தோம்.
ஆனால் நவீன உளவியல் குழந்தைகள் குழந்தைகள் அல்ல என்றது. குழந்தைகளுக்குள் செயல்படும்
பாலியலைப் பற்றி பிராய்ட் பேசினார். குழந்தைகள் எப்படி வளர வளர தம்மை அம்மாவில் இருந்து
வேறுபடுத்தி மற்றொரு தன்னிலையாக (அம்மாவின் பகுதி என்றல்லாது, “நானாக”) புரிந்து கொள்ள
துவங்குகின்றன என லகான் பேசினார். கண்ணாடி முன் முதன்முதலில் நின்று தன்னை உணரும் குழந்தை
என்ன யோசிக்கும் என அவர் ஆராய்ந்தார். இதை அடுத்து மேற்குலகில் குழந்தைகளை தனிமனிதர்களாக,
அதற்கான கௌரவத்துடன் நடத்த வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. ஓரளவு அந்த பார்வை இந்தியாவிலும்,
குறிப்பாய் நகரங்களில், தோன்றியது. நவீன இலக்கியத்தில் குழந்தைகளுக்குள் உள்ள பெரியவர்கள்
பற்றி அவதானிப்புகள் தோன்றின. குழந்தைகள் தம்மை குழந்தைகளாக நினைப்பது போன்றே பெரியவர்களும்
தம்மை பெரியவர்களாக நினைக்கிறார்கள். ரெண்டுமே தோரணைகள் தாம். குழந்தைகளுக்குள் பெரியவர்களும்,
பெரியவர்களுக்குள் குழந்தைகளும் இருக்கிறார்கள் எனும் பார்வை நவீன எழுத்தில் தோன்றியது.
இப்படி முரண்பட்டு இரண்டு தோரணைகள் ஒரு மனிதருக்குள் இருப்பதன் அபத்தம் தமிழ் நவீன
கவிதையில் சித்தரிகப்பட்டுள்ளது. இந்த பாணி கவிதைகளில் வெகுவாக பெயர் பெற்றவர் முகுந்த்
நாகராஜன்.
முகுந்தின் இக்கவிதையில் குழந்தைகளுக்குள்
இருக்கும் பெரியவர் தோன்றுகிறார்:
மூக்கில்
சினிமாப்
பத்திரிகையில் இருந்த
நடிகைகளின்
மூக்கின் மேல்
வட்டப்
பொட்டு
வரைந்து
கொண்டிருந்த
சிறுமியை
மூக்கில்
மச்சம் கொண்ட
அவள்
அம்மா வந்து
அதட்டிக்
கூட்டிப் போனாள்.
(K அலைவரிசை,
பக். 31)
முகுந்தின் இந்த கவிதை வளர்ந்தவர்களுக்குள்
உள்ள குழந்தைகள் பற்றியது:
காசி விஸ்வநாதன்
தப்பாகத்தான்
சொன்னான் என்றாலும்
ஒரு செண்ட்டுக்கு
எத்தனை
சதுர அடி என்று
முதலில்
என்னிடம் சொன்னவன்
காசி
விஸ்வநாதன்.
வீடு
வங்க வேண்டும் என்ற
விளம்பரத்தைப்
பார்த்து
என்னைத்
தொடர்பு கொண்டவன்.
தினமும்
தொலைபேசியில்
வீடுகளைப்
பற்றி விவரிப்பான்.
அதை அப்படியே
உன்னிடம் சொல்லுவேன்.
திட்டங்களை
வெறுக்கும் பெண்ணே,
நம் பேச்சு
கட்டிடமயமாவதை
உன்னால்
தாங்க முடியவில்லை.
பின்னால்
ஊஞ்சல் கட்டி விளையாடும்
வசதி
உள்ள வீட்டைத்
திட்டம்
போடாமல் வாங்க முடியுமா,
சொல்.
(K அலைவரிசை,
பக். 18)
முகுந்தை போன்று குழந்தைகளின்
இந்த அபத்த உலகை ஜென் மன எழுச்சியுடன் சித்தரிப்பவர் தேவதச்சன். தமிழில் வெகுவாக பாராட்டப்பட்ட
கவிதை இது:
அம்மாவும் மகளும்
அம்மாவும்
மகளும் நடந்து போகிறார்கள் அருகில்
அருகில்
அம்மாவின் கையில் ஒரு பை இருக்கிறது. அதில்
சில காய்கறிகளும்,
கடுகு, சீரகப் பாக்கெட்டுகளும் இருக்கின்றன.
பைக்கு
வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கறிவேப்பிலை
இலைகள்
சீராக அசைந்தபடி கூட
நடக்கின்றன.
மகள் இடுப்பில் கனக்கும் தன் குழந்தையை
தோளில்
போட்டுக்கொள்கிறாள். ஒருவர் பின்
ஒருவர்
செல்கிறார்கள். அம்மாவின் ஜாக்கெட்டுக்கு வெளியே
“பாடி”
நாடா தெரிகிறது என்று மகள் சரி செய்கிறாள்
எதிரில்
உயரமான தபால் நிலைய காம்பவுண்டுக்குள்
தெரிகிறது
கொன்றை மரம்; மரத்திற்குள் நடந்து செல்லும்
மஞ்சள்
மலர்களை இருவரும் ஒரே சமயத்தில் பார்க்கிறார்கள்.
(கடைசி
டினோசர், பக். 34)
இக்கவிதையில் தோளில் உள்ள குழந்தை
அம்மாவின் “பாடி” நாடாவை சரி செய்யும் போது அவளுக்குள் உள்ள வளர்ந்த பெண் தலை காட்டுகிறாள்.
அதே போல குழந்தைகளுக்கு நம்மைப் போல காலம் குறித்த தெளிவான பிரக்ஞை இல்லை. அவர்களின்
காலம் முடிவற்றது. ஏனென்றால் அக்காலம் அவர்களின் மனதுக்குள் இருக்கிறது. அவர்களின்
இடம் குறித்த பிரக்ஞையும் அவ்வாறே. இக்கவிதையில் ”பைக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்
/ கறிவேப்பிலை / இலைகள் சீராக அசைந்தபடி கூட / நடக்கின்றன.” எனும் வரி கறிவேப்பிலை
கொத்து அம்மாவுடன் சேர்ந்து ”நடந்து” போகும் சித்திரத்தை அளிக்கிறது. கிளையில் வரிசையில்
நகர்வதாய் தோன்றும் மஞ்சள் மலர்களை அம்மாவும் மகளும் ஒரே சமயம் பார்க்கிறார்கள். இதுவும்
கறிவேப்பிலை இலைகள் போலத் தான். இக்கவிதையில் இந்த இடத்தில் பெரியவர்களுக்குள் இருக்கும்
குழந்தையும் குழந்தைக்குள் இருக்கும் குழந்தையும் ஒரே சமயம் சந்தித்துக் கொள்கிறார்கள்.
தாம் நடந்து கடந்து போவதாலே மரத்தில் வரிசையாய் நிற்கும்
பூக்கள் நகர்வதாய் தோன்றுகின்றன என அம்மாவும் மகளும் இயற்பியல் ரீதியாய் அர்த்தம் காண்பதில்லை.
இதுவும் ஒரு உண்மை என ஏற்று ரசிக்கிறார்கள். இப்போது அம்மா மகளுடன் கறிவேப்பிலை கொத்தும்,
கிளையில் பூக்களும் சேர்ந்து ”நடக்கிறார்கள்”. இந்த புரிந்துணர்வு தான் அம்மாவையும்
மகளையும் இணைக்கிறது.
கால / இடத்தின் நான்-லீனியர் தன்மையை
குறிப்புணர்த்தவே இக்கவிதையின் வடிவிலும் ஒரு வரியை துவங்கி அடுத்த வரியிலும் தொடரும்படி
தேவதச்சன் செய்கிறார். முதல் வரியின் கடைசி சொல் அடுத்த வரியில் முடிந்து முற்றுப்புள்ளி
வைத்து அடுத்த வரியை துவக்குகிறார். இது கவிதையில் வழக்கமான ஒன்றல்ல. இதன் மூலம் காலம்
மற்றும் இடத்தின் முடிவற்ற ஒரு அழகான ஒழுங்கற்ற ஒழுக்கை கவிதையின் வடிவில் நிகழ்த்தி
காட்டுகிறார். மேலும் இதில் உள்ள குழந்தைத்தனமும் கவனிக்கத்தக்கது.
இவ்வாறு காலத்தையும் இடத்தையும் குறித்த பிரக்ஞை
எனும் சங்கிலியில் இருந்து நம் மனதை அறுத்துக் கொள்வதே உண்மையான விடுதலை என ஜென் கூறுகிறது.
உண்மையான குழந்தை வளராத மனித நிலை அல்ல. குழந்தைமை கால / இட தளைகளில் இருந்து விடுபடும்
ஒரு மனநிலை. எப்போதாவது தான் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ”குழந்தையாக இருக்க”
வாய்க்கிறது. நவீன கவிதைகள் அதைத் தான் அவதானிக்கின்றன.
நன்றி: புத்தகம் பேசுது, 2017