இந்த வார குமுதம் லைஃபில் எஸ்.பி.பியின்
பேட்டி படித்தேன். மிக நேர்மையாக வெளிப்படையாக தயக்கமின்றி பேசியிருக்கிறார். அதற்கு
ஒரு தன்னம்பிக்கை வேண்டும். உதாரணமாய், “எனக்கு இருக்கிற மிகச்சிறிய ஞானத்துக்கு எவ்வளவு
புகழை கொடுத்திருக்கிறார் இறைவன். அதனால் வாழ்க்கையில் எனக்கு அதிருப்தி என்பதே கிடையாது”.
எஸ்.பி.பி போன்ற ஒரு நட்சத்திரம் பணக்கவலைகளே இல்லாமல்
இருந்திருப்பார் என நினைத்தேன். ஆனால் “இந்த 50 வருட இசை வாழ்க்கையில் 48வது வருடம்
தான் கடனில் இருந்தே வெளியே வந்தேன். தினமும் 5 பாட்டு பாடிட்டு சாயங்காலம் வீட்டுக்கு
வரும் போது வீட்டுல சேட்டு காத்துக்கிட்டு இருப்பான்” என்கிறார். என்னுடைய சில நண்பர்கள்
விசயத்திலும் இதை கவனித்திருக்கிறேன். வெளியே இருந்து பார்க்க வசதியாய் பளபளப்பாய்
இருப்பார்கள். ஆனால் அணுகி பார்த்தால் பண விசயத்தில் தத்தளித்தபடி இருப்பார்கள்.
எஸ்.பி.பியின் எத்தனையோ அருமையான
பாடல்களில் என்னால் என்றும் மறக்க முடியாதது “ஆயர் பாடி மாளிகையில்…” அது தாலாட்டு
அல்லது பக்தி பாடல் போலிருக்காது. ஒரு மென்மையான ரொமாண்டிக்கான பாடல் போன்றே பாடியிருப்பார்.