
நேற்று ஒரு வங்காளப் பத்திரிகையில் இருந்து ஒரு சப்-எடிட்டர் அழைத்து ஜல்லிக்கட்டு பற்றி கட்டுரை கேட்டார். அதை வங்காளத்தில் மொழியாக்கி வெளியிட அவர்களுக்கு உத்தேசம். ஆனால் ஒரு நிபந்தனை. ஜல்லிக்கட்டின் கலாச்சார பக்கம் – இலக்கியத்தில், கலைகளில், பண்பாட்டில் ஜல்லிக்கட்டு எப்படி சித்தரிக்கப்பட்டுள்ளது என – பற்றி மட்டும் எழுத வேண்டுமாம். அவரே எனக்கு எடுத்துக் கொடுத்தார். “உங்க சங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு பற்றி குறிப்பு உள்ளதாய் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றி எழுதுங்கள். சமீபத்தில் ஒரு நாவல் சாகித்ய அகாதமி பரிசு வாங்கியதே. அதில் கூட ஜல்லிக்கட்டு பற்றி வரலாற்று குறிப்பு உள்ளதாய் சொன்னார்கள்”
”காவல்கோட்டமா?”
”ஆமா ஆமா. அதைப் பற்றியும் எழுதுங்கள்.
ஏனென்றால் இங்கே வங்காளத்தில் யாருக்கும் ஜல்லிக்கட்டு பற்றி தெரியாது.”
என்னிடம் யாராவது எழுத வழிமுறைகள்
சொன்னால் கடுப்பாகி விடுவேன். ஆனாலும் அவர் எந்த அளவுக்கு போகிறார் என அறிந்து கொள்ள
விரும்பினேன். ஜல்லிக்கட்டு வெறும் பண்பாட்டு அடையாளம் அல்ல, அதன் அரசியல் சமூக பரிமாணங்களை
தவிர்த்து பேச முடியாது. மேலும் மக்களின் உணர்வுகள் திரண்டு வெளிப்பட அது ஒரு சந்தர்ப்பமாக
அமைந்ததே அன்றி அது தமிழரின் ஒட்டுமொத்த அடையாளம் அல்ல என்றேன். அவர் கேட்டு விட்டு
“உங்க விருப்பப்படி எழுதுங்கள். நாங்கள் எழுத்தாளர்களின் சுதந்திரத்துக்கு குறுக்கே
நிற்க மாட்டோம். ஆனால் சங்க இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு பற்றி அதிக கவனம் செலுத்துங்கள்”
என்றார். இவர் என்னடா தேய்ந்த ரெக்கார்டாக இருக்கிறாரே என வெறுத்துப் போனேன். போனை
வைத்தேன். ஆனால் அவர் விடுவதாக இல்லை. தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பியபடியே இருந்தார்.
வங்காளத்தில் லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிகை தம்முடையது என்று தற்பெருமை வேறு.
நான் பிடிவாதமாக இருந்தேன். ஒரு கட்டத்தில் ”சரி உங்க விருப்பப்படி எழுதுங்கள்,” என்றார்.
ஆனால் என்ன நடந்ததோ சற்று நேரத்தில் அழைத்து “நாங்கள் இந்த வாரம் ஜல்லிக்கட்டில் கவனம்
செலுத்தப் போவதில்லை. தள்ளி வைத்திருக்கிறோம். அதனால் எழுத வேண்டாம்” என்றார். நல்லது,
விட்டது சனியன் என நினைத்துக் கொண்டேன்.
இதை எதற்கு குறிப்பிட்டேன் என்றால்
ஜல்லிக்கட்டு அரசியல் பற்றி இந்திய மீடியாவும் இந்திய அறிவுஜீவிகள், மனித உரிமை போராளிகளும்
அறியாமையில் இருப்பதாய் நான் நம்பவில்லை. அவர்கள் அப்படியான ஒரு பாவனையை கொடுக்கிறார்கள்.
இந்த போராட்ட அரசியல், அதன் மீது அரச பயங்கரவாதம் செலுத்தும் ஒடுக்குமுறை பற்றி வேண்டுமென்றே
பாராமுகமாய் இருக்கிறார்கள். இவர்கள் தான் இப்படி என்றால் நம் தமிழ் வெகுஜன மீடியா
தமிழர்களை ஒட்டுமொத்தமாய் அவமதித்து விட்டது.
பெரும்பாலான பத்திரிகைகள், சேனல்கள்
போராட்டத்தின் முடிவில் மக்கள் மீது காவல்துறை அவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனமான
வன்முறையை மீடியா சித்தரித்த விதம் கடும் ஏமாற்றத்தை, கசப்பை ஏற்படுத்தியது. எப்போதும்
முற்போக்காக தன்னை எப்போதும் காட்டிக் கொள்ளும் ஆங்கில ஹிந்து பத்திரிகை போலீஸ் துறையை
பாதிக்கப்பட்ட தரப்பாக சித்தரித்தது. காவல்துறையினர் ஆட்டோவை கொளுத்தும் படத்தை பெரும்பாலான
பத்திரிகைகள் மட்டுமல்ல ஆங்கில செய்தி இணையதளங்கள் கூட வெளியிடவில்லை. தமிழில் ரிப்போர்ட்டர்,
தந்தி போன்ற பத்திரிகைகள் காவல்துறை கலவரங்கள் நடத்தும் முன்னரே “தேசவிரோத கும்பல்
காவல்துறை மீது தாக்குதல்” என தலைப்பு செய்தியை தயாரித்து விட்டன. காவல்துறையின் திட்டமிட்ட
வன்முறை அம்பலமான பின்னரும் தம் பழைய திரைக்கதையை கைவிட பத்திரிகை முதலாளிகள் தயாராகவில்லை.
இப்பத்திரிகைகளில் பணி செய்பவர்களே இதையெல்லாம் நமப மாட்டார்கள் என சொல்வேன். அப்படியென்றால்
யாரை நம்ப வைக்க, ஏமாற்ற இப்படியொரு நாடகம்? மீடியா மக்களையே செருப்பால் அடிக்கலாமா?
மனித உரிமைகள் மீதும், சிவில்
சமூகம் மீது நம்பிக்கை கொண்டோர் மீது இந்த மீடியா காறித் துப்பி விட்டது. நீங்கள் இந்த
அளவுக்கு சென்றிருக்க வேண்டாம். சோரம் போகலாம். ஆனால் அம்மணமாக தெருவில் ஓட வேண்டிய
தேவையில்லை!