Skip to main content

விபத்து ராசி


சில வருடங்களுக்கு ஒரு நண்பர் தான் ஸ்கூட்டர் ஓட்டுவதை முழுசாய் நிறுத்தியதற்கு ஒரு காரணம் சொன்னார்: “ஓவர் ஸ்பீடில் எங்கேயாவது போய் இடிச்சிட்றேன்.” எனக்கு அது கேட்க ஆச்சரியமாக இருந்தது. அவர் ஓவர் ஸ்பீட் என்றதை நான் 70-80 கி.மீ வேகம் என நினைத்துக் கொண்டேன். குறைந்தது 60 கி.மீ. அதுவும் எந்த வாகனமும் வந்து மோதாது இவராகவே எதாவது ஒரு இடத்தில் போய் மோதி விழுந்து விடுவார். ஒருவேளை அவருக்கு வேகத்தில் ஒரு த்ரில் இருக்கும் என ஊகித்தேன். ஆனால் 45 கி.மீ வேகத்தில் போனால் கூட கட்டுப்பாடில்லாமல் விபத்தாகலாம் என்பதை சமீபத்தில் ஹாண்டா ஆக்டிவா வாங்கி ஓட்ட ஆரம்பித்த பின்பு தான் உணர்ந்தேன்.
 கடந்த ஆறு மாதங்களில் மூன்று விபத்துகள்.

 மூன்று முறையும் வண்டிக்கு பலமான அடி. பக்க சக்கரங்கள், அவற்றை மூடியுள்ள மட் கார்ட் வளைந்தன. சற்று முன் என் மூன்றாவது விபத்து நிகழ்ந்தது. இப்போது கூடுதலாய் முன் சக்கரத்தின் fork வளைந்து விட்டது. வண்டியை நேராக ஓட்டலாம். திருப்ப முடியாது. எப்படியோ சமாளித்து வீடு வந்து சேர்ந்தேன்.
 நான் 15 வயதில் வண்டி ஓட்ட ஆரம்பித்தேன். முதலில் கைனடிக் ஹோண்டா. அதன் பிறகு ஸ்கூட்டி. இந்த இரண்டு வண்டிகளிலும் எனக்கு ஒருமுறை கூட விபத்தானதில்லை. ஆனால் ஆக்டிவா வாங்கிய பின் விபத்து ராசி அமோகமாய் இருக்கிறது.
என்னுடைய குடியிருப்பில் ஒரு சின்ன பையன் இருக்கிறான். ரெண்டு வயதிருக்கும். அவனுக்கு என்னைப் பார்த்தால் பீதி. நான் எதிர்பட்டால் அவன் பயத்தில் ஸ்தம்பித்து விடுவான். நானும் அவனிடம் இனிமையாய் சிரித்து கொஞ்சி பேசி பார்த்து விட்டேன். என்னைப் பார்த்தாலே ஏதோ சிங்கம் புலி பார்த்தது போல் உறைந்து போய் விடுகிறான். நின்ற இடத்திலேயே அழுவான். அவன் அம்மா அழைத்தாலும் ஒரு இஞ்ச் நகர மாட்டான். அவனை யாராவது தூக்கித் தான் போக வேண்டும். அப்படி தூக்கப்பட்டு போகும் போதும் என்னைப் பார்த்தபடி தலையை என் திசையில் இருந்து திருப்பாமலே அலறியபடி இருப்பான். விபத்துக்கு முன்பான சில நொடிகளில் நானும் இந்த பையனைப் போல் ஆகி விடுகிறேன். பயத்தில் ஸ்தம்பித்து என்ன செய்வதென அறியாமல் அம்மா என்று கத்தியபடி ஹேண்டில் பாரில் இருந்து கைகளை எடுத்து விடுகிறேன். வண்டி அடுத்து கட்டுபாட்டை இழந்து பக்கவாட்டில் வழுக்கிச் சென்று சுவரிலோ நடைபாதைக் கல்லிலோ மோதி நிற்கும். நான் இருக்கையில் இருந்து வழுக்கி உருண்டு ஒன்று சாலையிலோ நடைபாதையிலோ கிடப்பேன். ஒவ்வொரு முறையும் இப்படித் தான். பிரேக் போட்டு வண்டியை நிறுத்த எனக்குத் தோன்றுவதில்லை.
முதல் முறை ஹாண்டா ஆக்டிவா வாங்கிய புதுசில் நான் நங்கநல்லூரில் இருந்து ஆதம்பாக்கம் வழி என் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். சாலை காலியாக இருந்தது. ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தேன். ஒருவர் தன் குடும்பத்துடன் பைக்கை நடைபாதையில் இருந்து ரிவர்ஸ் எடுத்து சாலைக்கு நடுவில் வந்தார். பாதி சாலையை அடைந்தவர் என்னைப் பார்த்ததும் அவர் பயத்தில் வண்டியை அப்படியே நிறுத்தி விட்டார். நான் அவரைப் பார்த்த பயத்தில் பிரேக்கை பிடிக்க மறந்து வண்டியை திசை திருப்ப முயன்று அதுவும் முடியாமல் என் கைகளை எடுத்து விட்டேன். உருண்டி நடைபாதையில் போய் விழுந்தேன். கிடந்தபடி நான் “ஐயய்யோ என் வண்டிக்கு என்னாச்சோ” என்று தான் கத்தினேன். ஆனால் வண்டி ஓரளவு தான் சேதாரமானது. அவரிடம் “ஏங்க நடு ரோட்டில வந்து பிளாக் பண்ணி நிக்கிறீங்க?” என்று கத்தினேன். “ரோட்டில யாருமே இல்லென்னு நினைச்சு ரிவர்ஸ் எடுத்தேன்” என்றார். எனக்கு தோளில் பலத்த அடி. குணமாக பத்து நாட்கள் ஆயின. இனிமேல் மெதுவாகத் தான் ஓட்டணும் என உறுதி எடுத்துக் கொண்டேன்.
ஆனால் அடுத்த முறை கடுமையான மழையில் சாலையில் ஓட்டி வரும் போது சனியன் வேறொரு வடிவில் வந்தது. இந்த முறை எனக்கு சாலை தெளிவாய் தெரியவில்லை. ஒரு திருப்பத்தில் டிவைடர் வைத்திருப்பார்கள். அந்த இடத்தில் மட்டும் பாதி இடிந்து போய் இருக்கும். அதனால் தொலைவில் இருந்து பார்த்தால் தெரியாது. வழக்கமாய் கவனமாய் பார்த்து வருவேன். மழை எரிச்சலில் என்னை அறியாமல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்தேன். டிவைடரை மோதப் போகும் போது தான் கவனித்தேன். வழக்கம் போல் கைகளை விடுத்து உருண்டு விழுந்தேன். இம்முறை சிராய்ப்பு, கால் முட்டியில் பலத்த அடி. வண்டியின் சேதாரங்களை சரி பண்ணவும் ஆயிரம் ரூபாய் காலியானது.
மூன்றாவது முறையாய் இன்று. இன்றும் சாலை கிட்டத்தட்ட காலி. ஆழ்வார்பேட்டையில் நாரதகான சபா இருக்கும் சாலை. ஏதோ நினைவில், சாலை காலியாக இருக்கும் நம்பிக்கையில் ஆக்சிலெட்டரை லேசாய் திருகினேன். அவ்வளவு தான். எனக்கு வேறெதுவும் நினைவில்லை. எனக்கு முன்பு ஒரு பெரிய வெள்ளை கார் நின்றிருந்தது. அது நகர்ந்து கொண்டிருப்பதாகவே எனக்கு முதலில் தோன்றியது. பக்கத்தில் போனதும் தான் அது பிரேக் போட்டு சாலை நடுவே நின்றிருப்பது புலனானது. இம்முறை காரில் இடித்து என் வண்டி ஒரு பக்கம் சிதறி ஓட நான் கார் பக்கத்தில் விழுந்து விட்டேன். தோளில், கை மணிக்கட்டில், முதுகில் அடி. நிறைய பேர் உதவிக்கு வந்தார்கள். அவர்களாகவே வண்டியை ரிப்பேர் செய்ய ஆளை அழைத்து வந்தார்கள். ஓரமாய் நாற்காலி போட்டு அமர வைத்தார்கள்.
 ஏன் அந்த கார் பிரேக் போட்டு நின்றது என்பதை பிறகு தான் அறிந்து கொண்டேன். அந்த காருக்கு முன்பாக போய்க் கொண்டிருந்த ஸ்கூட்டர் பங்க்சராகி அதில் இருந்த இரு பெண்கள் விழுந்து விட்டனர். வேகமாய் வந்த காரோ எப்படியோ உடனடியாய் பிரேக் போட்டு நின்று விட்டது. அவர் வண்டியை ரிவர்ஸ் எடுத்திருந்தால் கூட அந்த அசைவை கவனித்து நான் சுதாரித்திருப்பேன். ஆனால் அவரும் அதிர்ச்சியில் அப்படியே சில கணங்கள் நின்று விட்டார்.
மருந்தகத்துக்கு வலிநிவாரணி மாத்திரை வாங்க சென்றேன். அங்கிருந்தவரிடம் விபத்தை வர்ணித்தேன். அவர் கேட்டார் “ஸ்கூட்டர் என்ன ஆக்டிவாவா?
”ஆமாங்க”
“எனக்கு கூட ஆக்டிவா ஓட்டி போன மாசம் விபத்து ஆயிடுச்சு. காலில் நல்ல அடி””
ஓ இது ஒரு சீரியல் கில்லர் ஸ்கூட்டர் போல என புரிந்து கொண்டேன். மற்ற ஸ்கூட்டர்களை விட இதில் பிக் அப் அதிகம். என் பழைய ஸ்கூட்டரை நான் வேகம் கூட்டினால் அது மெல்ல மெல்ல தான் நாற்பதுக்கு சென்று அங்கிருந்து ஐம்பதுக்கு வரும். ஆனால் இந்த வண்டி ஒரு நொடியில் ஐம்பதைத் தொட்டு விடுகிறது. அதுவும் ஆக்ஸிலேட்டரை லேசாய் திருகினால் போதும். திருகுவது கூட தேவையில்லை. சின்னதாய் மணிக்கட்டை அசைத்தால் போதும், சீறுகிறது. இதன் வேகத்துக்கு பழகாதது தான் இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என அந்த நண்பர் சொன்னார்.
இதை ஓட்டும் போது வேகம் கூடாதபடி மிகுந்த பிரக்ஞையுடன் இருக்க வேண்டும். என் பழைய வண்டியில் வேகம் அதிகரிக்கும் போது வண்டி சற்று இரையும். நான் உடனே மட்டுப்படுத்துவேன். ஆனால் இந்த வண்டியில் வேகம் அதிகரிப்பது எனக்கு சற்றும் தெரிவதில்லை. விழுந்த பிறகு தான் ஓ வேகமாய் வந்தேனா என யோசிக்கிறேன். அதுவும் என்னை வேடிக்கை பார்த்தவர்கள் ”ஓவர் ஸ்பீடா வந்தீங்க” எனும் போது நம்பத் தோன்றவில்லை.
இதற்கே நானெல்லாம் இந்த கதி என்றால் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டுபவர்களை நினைத்தால் வயிறு கலங்குகிறது. ஒருவேளை அவர்கள் பிரேக் பிடித்து சரியாக நின்று விடுவார்களாக இருக்கும். எனக்கு தான் அங்கே கண்டம் இருக்கிறதே!

”உழைப்பாளி” படத்தில் ரஜினி வயதான கெட்டப்பில் வந்து கவுண்டமணியிடம் தன் 16 வயது மனைவி பற்றி வர்ணித்து வெறுப்பேற்றுவார்: “பகலெல்லாம் சீதாவா இருப்பா. ஆனால் ராத்திரியானா சிலுக்கு ஆயிடுவா. கையை பிடி காலை பிடின்னு என்னை ஒரு வழி பண்ணிடுவா….” ஆளில்லாத சாலையில், தனியான சுகமான பொழுதில், ஆக்டிவாவின் சிலுக்கு அவதாரத்தை எப்படி கையாள்வது என்றுதான் எனக்கு தெரியவில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...