நண்பர் நிஷாந்துடன் இரவுணவு அருந்திக்
கொண்டிருக்கையில் ஒரு இளம் எழுத்தாளரின் நூலை குறிப்பிட்டு அதை வாசிக்க விரும்புவதாய்
சொன்னார். ஏன் என்றேன். அது தனக்கு பிடிக்கும் விதமாய் இருக்கும் என நினைப்பதாய் சொன்னார்.
பிறகு சற்றே சந்தேகத்துடன் என்னிடம் அப்படி தன் சுவைக்கேற்ற நூல்களை மட்டும் படிப்பது
தவறா என கேட்டார். நான் சொன்னேன் “இல்லை, அப்படித் தான் படிக்க வேண்டும்.”
இருவிதமான வாசிப்பு உண்டு. 1)
பட்டியலிட்டு அனைத்தையும் படிப்பது, 2) பட்டியலுக்கு வெளியே தனக்கு தேவையானதை, தன்
சுவைக்கு ஏற்றதை மட்டும் படிப்பது.
மாடு சுவரொட்டி, மீதம் வரும் சோறு,
வைக்கோல், புல், இலை தழை, பிளாஸ்டிக் என கிடைப்பதை எல்லாம் மெல்லும். ஆனால் ஆடு மிகவும்
கவனமாய் தேடி தேர்ந்து சில இலைகளை மட்டும் கடிக்கும் என்பார்கள். வாசிப்பை பொறுத்த
மட்டில் நான் ஆட்டின் பக்கம் தான்.
தமிழில் ஒரு வருடம் வெளியாகும்
அத்தனை நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகளையும் உடனுக்குடன் வாங்கிப் படிப்பவர்கள் உண்டு.
அப்டேட்டாக இருக்க இது உதவும். ஆனால் நான் அப்படி செய்வதில்லை. புத்தகத்துக்கு காலாவதி
தேதி இல்லை. 2016இல் வெளியான நாவலை 2030இல் கூட படிக்கலாம். எந்த சேதாரமும் ஏற்படாது.
என்னைப் பொறுத்த மட்டில் கவிதைத் தொகுப்புகள் மட்டுமே
இதற்கு விதிவிலக்கு. எனக்கு தமிழ் நவீன கவிதை மொழியின் போக்குகளை கவனிப்பதில் மிகுந்த
ஆர்வம் உண்டு. ஒவ்வொரு வருடமும் புதுக்குரல்கள் தோன்றுகின்றன. அதில் பல வித்தியாசமான
குணங்கள் புலப்படுகின்றன. அவற்றை அறிந்து கொள்ளும் நோக்கில், எந்த புது கவிதை நூல்
முக்கியமானதாய் பேசப்பட்டாலும் வாங்கி வாசித்து விடுவேன். ஆனால் சிறுகதை, நாவல்களில்
இது போன்ற புதுப்போக்குகள் அதிகம் தெரிவதில்லை. 2000இல் எழுதப்பட்டது போன்று தான் இன்றும்
எழுதுகிறார்கள். அதே களம், அதே மொழி, அதே சிக்கல்கள். இந்த தொடர்ச்சியில் இருந்து முற்றிலும்
துண்டித்துக் கொண்டு எழுதுபவர்கள் இணையத்தில் இருந்து தோன்றி நாவல் எழுதுபவரக்ள் தாம்.
அவர்களின் நூல்களை இந்த காரணத்துக்காகவே உடனுக்குடன் படிப்பேன். அதே போல் வணிகப்புலத்தில்
இருந்து இலக்கியத்திற்கு வந்து இரண்டும் கலந்தாற்போல் எழுதுகிறவர்களையும் உடனுக்குடன்
வாசிப்பேன்.
எனக்கு என் மனப்போக்குக்கு ஏற்றபடி
வாசிக்க பிடிக்கும். ஒரு நண்பர் என்னை தொடர்பு கொண்டு “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”
நாவல் எங்கு வாங்க கிடைக்கும் எனக் கேட்டார். ஏன் அதை திடீரென வாசிக்க ஆர்வம் எனக்
கேட்டேன். துப்பறியும் நாவல்கள் படிக்கும் மனநிலையில் இருக்கிறேன் என்றார். நான் அவரைப்
போன்று ஒவ்வொரு வருடமும் என் மனம் சாயும் திசையில் வாசிப்பையும் செலுத்துவேன். ஆறு
மாதம் முழுக்க பேய்க்கதை படிப்பேன். அறிவியல் புனைவு அல்லது ஹெமிங்வே, ரேமண்ட் கார்வர்
படிப்பேன். அவர்களுக்கும் பின்னால் சென்று ரஷ்ய இலக்கியங்களை மீள்வாசிப்பு செய்வேன்.
ஷேக்ஸ்பியரை கூட திரும்ப படிப்பேன். அல்லாவிட்டால் ஏதாவது ஒரு ஐரோப்பிய தத்துவஞானியை
பற்றி தேடித் தேடி வாசிப்பேன். அதே போல் விசித்திரமான நூல்கள் கிடைத்தாலும் தவற விடுவதில்லை.
உதாரணமாய், ஹோவார்ட் டல்லி எழுதிய My Lobotomy என்ற புத்தகம்.
ஹோவார்ட் குழந்தைப்பருவத்தில் விளையாட்டு சுபாவம்
மிக்கவர். துடுக்குத்தமாய் அவர் செய்யும் காரியங்கள் அவரது சித்திக்கு பிடிக்காமல்
போகின்றன. ஹோவார்டுக்கும் சித்தி மீது வெறுப்பு ஏற்படுகிறது. சித்தியை வேண்டுமென்றே
வெறுப்பேற்றுகிறார். அவருக்கு ஒழுக்கவிதிகள் மீது உதாசீனம் அதிகம். எதையும் யாரையும்
பொருட்படுத்தாத முரட்டுக்குழந்தையாக இருந்தார். இதையெல்லாம் வைத்து சித்தி அவர் மனநிலை
பாதிகப்பட்டவர் எனும் முடிவுக்கு வந்தார். ஹோவார்டின் அப்பாவையும் நம்ப வைத்தார். அப்போது
அந்த ஊரில் (அமெரிக்காவின் கலிபோர்னியாவில்) வால்டர் ப்ரீமேன் எனும் மருத்துவர் தோன்றுகிறார்.
அவர் ஹோவார்டை பார்த்து விட்டு அவருக்குள்ளது மனவியாதி என முடிவு செய்கிறார்.
இந்த ப்ரீமேன் ஒரு “புரட்சிகரமான” சிகிச்சையை மனவியாதிகளுக்கு
கண்டுபிடித்திருக்கிறார். கண்களின் மேலோட்டை திறந்து மூளை நரம்புகளை நெற்றியில் இணையும்
பகுதியில் இருந்து துண்டித்து விடுவார். இதை ஒரு எளிய அறுவை சிகிச்சையாக அவர் செய்வார்.
மயக்க மருந்து கொடுத்து நோயாளியை படுக்க வைத்து விழிகளைத் திறந்து ஒரு சிறு சுத்தியால்
இமைக்கு மேலுள்ள எலும்பை உடைப்பார். பிறகு ஒரு சிறு கரண்டியை உள்ளே நுழைத்து இடது வலது
பக்கமாய் நீவுவார். அவ்வளவு தான். தையல் போட்டு விடுவார்.
இந்த ”சிகிச்சைக்கு” பிறகு நோயாளி கிட்டத்தட்ட ஒரு
காய்கறி ஆகி விடுவார். கத்தவோ வன்முறையில் ஈடுபடவோ மாட்டார். இதற்கு லோபோடமி என பெயர்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களை எப்படி சமாளிப்பது என தவித்தவர்களுக்கு ப்ரிமேனின் இந்த
சிகிச்சை ஒரு ”வரப்பிரசாதமாய்” அமைந்தது. ஆயிரக்கணக்கான நோயாளிகளை உபத்திரவமில்லாத
காய்கறிகளாய் மாற்றி குடும்பத்தினருக்கு “உதவினார்”. தன் சிகிச்சையை எப்படி சில நிமிடங்களில்
செய்ய முடியும் என அவர் ஒரு செய்முறை விளக்கம் கூட நிகழ்த்தினார். அப்போது கொத்து கொத்தாய்
நோயாளிகளை படுக்கையில் மயக்கி கிடத்தி வேகவேகமாய் அவர்களின் கண் ஓடுகளை உடைத்து அவர்
ஸ்பூனால் நரம்புகளை துண்டித்து காட்டியிருக்கிறார். அது மட்டுமல்ல தன் சிகிச்சையை பின்பற்ற
விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சியும் அளித்திருக்கிறார்.
ஹோவார்ட் டல்லி 12 வயதில் லோபோடமி
சிகிச்சைக்கு ஆட்படுத்தப்பட்டார். அவருக்கு எந்த உளவியல் சிக்கலும் இல்லை. இன்றைய மருத்துவர்கள்
கவனச்சிதைவு மிக்கவர் என அடையாளப்படுத்தக் கூடிய ஒரு குழந்தை மட்டுமே அவர். சிறுவயதில்
தாயை இழந்தது, சித்தி மீதான வெறுப்பு அவரை சற்று வன்முறை கொண்டவராக ஆக்கியது. முதலில்
ஹோவார்டை பரிசோதித்த ப்ரிமேனும் இதை உணர்ந்தார். ஆனால் ஹோவார்டின் சித்தி அவரை வற்புறுத்துகிறார்.
இந்த பையனின் தொல்லைகளை என்னால் பொறுக்க முடியவில்லை. இவனை கட்டுப்படுத்த வேண்டும்
என நச்சரிக்கிறார். அவருக்காக ப்ரீமேன் ஒப்புக் கொள்கிறார். சிகிச்சைக்கு பிறகு ஹோவார்ட்
தன் நினைவு மற்றும் அறிவுத்திறன்களை இழக்கிறார். மந்தமாகிறார். அவரால் கல்வியை தொடர்
முடியாமல் ஆகிறது. தனக்கு என்ன நேர்ந்தது என புரியவே அவருக்கு நீண்ட காலம் ஆகிறது.
பல வருடங்கள் எதுவுமே செய்ய முடியாமல் வீட்டில் ஒரு பொம்மை போல் அமர்ந்திருக்கிறார்.
பின்னர் ப்ரிமேனின் சிகிச்சை முறை மீது கடும் விமர்சனங்கள் தோன்றுகின்றன. அவர் அந்த
கொடும் வன்முறையை நிறுத்தி விட்டு ஒதுங்கிக் கொள்கிறார். அவரது பலியாடுகளில் ஒருவரான
ஹோவார்ட் தன் முப்பதுகளில் ஓரளவு செயலூக்கம் பெறுகிறார். சிறுவேலைகள் செய்து பிழைப்பை
நடத்துகிறார். தன் அனுபவங்களை ஒரு நூலாக எழுதுகிறார். அது தான் My Lobotomy. (One
Flew over the Cuckoo’s Nest, Shutter Island ஆகிய படங்களில் இச்சிகிச்சை பற்றின குறிப்புகள்
வரும்.)
தமிழில் எந்த சுயசரிதையும் எனக்கு
இந்நூல் தந்த தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. அதற்காகத் தான் இந்நூலைக் குறிப்பிட்டேன்.
இதை நான் எதேச்சையாக கண்டெடுத்து படித்தேன். இப்படி என் ஆர்வத்துக்கு ஏற்ப படிக்கவே
எனக்கு பிடிக்கிறது. இந்த வாசிப்பு முறையில் என் தேடல் துலக்கம் பெறுகிறது. என் உள்தேடல்
என்னை வழிநடத்துகிறது.
நான் நண்பர் நிஷாந்திடம் சொன்னேன்,
“எனக்கு இலக்கிய, சமூக அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வதை விட உபன்யாசங்கள் கேட்க
பிடிக்கும். எதாவது ஒரு கோயிலில் ஒருவர் பேசுவது கேட்டால் போய் உட்கார்ந்து கொள்வேன்.
தேவாலயம், இஸ்லாமிய கூட்டங்கள் என எதையும் விட்டு வைப்பதில்லை. எனக்கு அரசியல், இலக்கிய
மொழிகளை விட மதத்தின் மொழி பிடித்திருக்கிறது. அதில் புழங்கும் சொற்கள், அங்கு கிடைக்கும்
மன எழுச்சி, கவித்துவம் என்னை கிளர்ச்சி கொள்ள வைக்கிறது. எனக்கு எப்படி சமூக முன்னேற்றம்,
சமத்துவம், அறம், சமூக நீதி ஆகியவற்றில் நம்பிக்கை இல்லையோ, அவை எப்படி வெறும் பகற்கனவுகள்
என நினைக்கிறேனோ, அதே போல் கடவுளிலும் நம்பிக்கை இல்லை. ஆனால் கடவுள் குறித்த உரையாடலில்
ஒரு புதிர் உள்ளது. அந்த புதிர்தன்மை தான் என்னை தூண்டுகிறது. மேலும் அறிந்து கொள்ள
கேட்கிறது. ஆனால் அரசியல் சமூக விவாதங்களில் முற்றுப்பெற்ற நம்பிக்கைகள் தாம் முன்வைக்கப்படுகின்றன.
மத உரையாடல்களில் உள்ள அரூபமான மொழி, உளவியல் சிடுக்குகள், உருவகங்கள் எனக்கு மிகுந்த
ஆர்வமூட்டுகின்றன.”
சமீபத்தில் ஐசக் எனும் மற்றொரு
இளம் எழுத்தாளரை சந்தித்தேன். அவர் என்னிடம் ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளன் தினத்தந்தி
போன்ற நாளிதழ்கள் படிக்கலாமா எனக் கேட்டார். தனக்கு “தந்தி” படிக்கும் போது இதையெல்லாம்
படிக்கிறோமே என குற்றவுணர்வு ஏற்படுகிறது என சொன்னார். நான் அவரிடம் அவர் எந்த வரைமுறையும்
இன்றி படிக்க வேண்டும் என்றேன். ஒரு நல்ல வாசகனுக்கு தந்தியும் உயிர்மையும் ஒன்று தான்.
அவன் இரண்டிலும் புழங்கும் மொழியை மட்டுமே கவனிப்பான். பலவிதமான மொழிகளை கவனிப்பது,
பழகுவது அவன் எழுத்தை லாவகமாக, மினுக்கம் கொண்டதாக மாற்றும்.
”ஒரு நல்ல எழுத்தாளனாக நான் என்னவெல்லாம்
செய்ய வேண்டும்?” என ஐசக் என்னிடம் கேட்டார். ”எழுதிக் கொண்டே இருங்கள் அது போதும்”
என்றேன். அவர் வியப்பாக “நீங்கள் என்னை நிறைய படிக்க சொல்லுவீர்கள் என எதிர்பார்த்தேன்”
என்றார். நான் சொன்னேன் “எழுத்தாளன் நிறைய படிக்க வேண்டும் என்பது நம் ஊரில் உள்ள ஒரு
கற்பிதம். அது உண்மை அல்ல. குறைவாக நமக்கு தேவைப்படும் அளவுக்கு படித்தால் போதும்.
வாசிப்பின் மூலம் எழுத கற்க முடியாது. எழுதித் தான் எழுத கற்க முடியும். சொல்லப் போனால்
நிறைய வாசிப்பது எழுத்துக்கு பாதகமாகவே முடியும். அது மூளையை அடைத்துக் கொள்ளும். கற்பனையை
சுரக்காமல் செய்யும். நீங்கள் விக்கிபீடியாவை பிரதியெடுக்க ஆரம்பிப்பீர்கள். ஒரிஜினலாக
எழுத குறைவாக படிக்க வேண்டும்”
இயக்குநர் மிஷ்கின் இதை நன்றாக
புரிந்து கொண்டவர். அவர் நிறைய நிறைய புத்தகங்கள் வைத்திருக்கிறார். ஆனால் குறைவாக
படிக்கிறார். தன் கற்பனையை தூண்டும் புத்தகங்களை தேவையான அளவு படித்து விட்டு மூடி
விடுகிறார். சில நேரம் ஒரு நூறு பக்க புத்தகத்தில் நாம் பத்து பக்கமே படித்தால் போதுமாக
இருக்கும்.
எல்லாவற்றையும் படிப்பது பண்டிதர்கள்
மற்றும் ஆய்வாளர்களின் பணி மட்டுமே!