இதைப் படிக்கும் போது உங்களுக்குள்
ஒரு குரல் ஒலிக்கிறதே அது யாருடையது? உங்களுடையது தான். ஆனால் நீங்கள் தான் வாயே திறக்கவில்லையே?
இது எப்படி நிகழ்கிறது. அறிவியல் ஒரு விளக்கம் கொடுக்கிறது. பேச்சுக்கான சில நரம்பணுக்கள்
வாசிக்கும் போதும் செயல்படுகின்றன. அதனால் தான் ”குரல்” கேட்கிறது.
மேற்கத்திய இலக்கிய கோட்பாடுகள்
குறித்து ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு அத்தியாயம் அமைப்பியல் பற்றி.
அமைப்பியலின் பிதாமகர் சசூர். அவர் ஒரு சொல் எப்படி அர்த்தம் கொள்கிறது என விளக்குகிறார்.
சில்க் என்றதும் உங்களுக்கு எப்படி அர்த்தமாகும்? சில்க் ஸ்மிதா, பட்டாடை அல்லது பட்டின்
மென்மை, ஏன் பட்டுப்புழு கூட மனதில் தோன்றலாம். முதலிடம் எப்படியோ சிலுக்குக்கு தான்.
சரி எப்படி இந்த அர்த்தப்படுத்தல் நிகழ்கிறது?
ஒரு சொல்லை சசூர் இரண்டு விசயங்களின்
இணைப்பினால் உருவாகிற சங்கதி என பார்க்கிறார். அர்த்தப்படுத்தும் சங்கதி, அர்த்தப்படுத்தப்படும்
விசயம். சில்க் என்றால் அவரது தோற்றம் அர்த்தப்படுத்தும் சங்கதி (signifier). சில்க்
எப்படியானவர் (அதாவது ஒரு நடிகை) என்பது அர்த்தப்படுத்தப்படும் விசயம் (signified).
இதை ஏன் ரெண்டாக பார்க்க வேண்டும்? ஒருவேளை சில்க்
ஸ்மிதா தொடர்ந்து வாழ்ந்திருந்தால், அரசியலில் புகுந்து வென்று, ஒரு கட்சியின் தலைவி
ஆகி முதலமைச்சர் ஆகி தனக்கென வேறு ஒரு அடையாளத்தை உருவாக்கி இருந்தால்… ஒரு ஐம்பது
வருடங்கள் கழித்து சில்க் என கேட்டதும் உங்களுக்கு “தமிழினத் தலைவி”, “ஏழைகளின் காவலர்”
என்பது போல் ஒரு அர்த்தம் கிடைக்கலாம். ஆக அர்த்தம் நிரந்தரம் அல்ல. இதை விளக்க ஒரு
சொல்லையும் அர்த்தத்தை ரெண்டாய் பிரித்து பார்க்க வேண்டும் என்றார் சசூர். அதனால் அவர்
சொல்லையே ரெண்டாக்கினார். அர்த்தத்தை சுட்டி நிற்கும் பொருள். அது சுட்டும் அர்த்தம்.
இதை விளக்கும் போது சசூர் sound
image பற்றி சொல்கிறார். ஒரு சொல் நமக்குள் வேலை செய்ய அதற்கு ஒரு ஒலி பிம்பம் வேண்டும்
என்றார். உதாரணமாய் மோடி என்று கேட்டதும், அதாவது படித்தால் கூட, மனதுக்குள் அவரது
சித்திரம் எழ வேண்டும். அதற்கு நம் மனம் மோடி எனும் சொல் தனக்குள் ஒலித்து கேட்க வேண்டும்
என்றார். அதாவது நீங்கள் சாலையில் ஒரு அழகான பெண்ணை பார்த்ததும் அவளைக் குறித்து யோசிக்கிறீர்கள்.
அந்த எண்ணங்களை, உங்கள் குரல் பின்னணியில் டப்பிங் செய்ய, மனதுக்குள் நீங்கள் அவளை
பார்க்கும் அதே சமயம் கேட்கிறீர்கள் தானே? அப்படி கேட்காமல் அவளைக் குறித்து நீங்கள்
யோசிக்கவே முடியாது.
எனக்கு இந்த இடம் வந்ததும் ஒரு
சந்தேகம் எழுந்தது. பிறவியிலே செவிடான ஒருவருக்கு எந்த சொல்லுக்கும் ஒலி வடிவம் தெரியாது.
அவர் வாசிக்கும் போது, யோசிக்கும் போது சொற்கள் அவருக்குள் ஒலிக்குமா? அவருக்குள்
sound image இருக்காது தானே? அப்படி என்றால் சசூர் சொல்வது அவர் விசயத்தில் பொருந்தாது.
அது மட்டுமல்ல திடீரென ஒருவர்
கத்தியை எடுத்து நம் கழுத்தில் வைத்தால் அந்த நொடி உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது
என துல்லியமாய் புரிந்து விடும். ஆனால் யோசிக்கவே மாட்டீர்கள். எண்ணமே எழாமல் புரிந்து
கொள்வீர்கள். அப்போது கத்தி எனும் பிம்பத்தை அதன் ஒலி வடிவின்றி அறிந்து கொள்கிறோமே.
இது எப்படி நிகழ்கிறது?
அதே போல வேகமாய் வாசிக்கையிலும்
நம் மனம் சொற்களை உச்சரிப்பதில்லை. சசூரின் கோட்பாடே பிரக்ஞைபூர்வமான மனநிலையில் ஏற்படுத்தும்
அர்த்தப்படுத்தல் பற்றியது என நினைக்கிறேன். பிரக்ஞை அற்ற நிலையில் நாம் புரிந்து கொள்ளும்
போது சசூரின் ஒலி பிம்பம் செயல்படுவதில்லை.