பெருந்தேவியின் மொழி எழுபதுகளின்
கவிதைகளுக்கு உரியது. ஆனால் அவர் பேசுவது இக்காலத்தின் சிக்கல்கள்: குழப்பமான, இலக்கற்ற
மனிதனின் குரல், சுயபகடி, அபத்தம் ஆகியவை.
”அழுக்கு சாக்ஸ்” தொகுப்பில் நான்
ரசித்த மற்றொரு கவிதை “பிறழ் மனம்”. இது ஆத்மாநாமுக்கான ஒரு ஹோமெஜ். அதில் ஒரு வரியை
திரும்ப திரும்ப மனம் மீட்டியது:
“எல்லா கிறுக்குகளும் நீட்சேயில்லை
ஆத்மாநாமில்லை
பைத்தியம் மருகுகிறது”
மனம் பிறழ்ந்தோரில் சிலருக்கு
இந்த மாதிரி அடையாளக் குழப்பங்கள் ஏற்படும். தம்மை வித்தியாசமான மனம் பிறழ்ந்தவாய்
காட்ட முயற்சி எடுப்பார்கள். கல்லூரியில் எனக்கு அப்படி ஒரு நண்பர் இருந்தார். தமிழில்
எண்பது, தொண்ணூறுகளில் எழுத்தாளர்கள் சிலர் தாமே முன்வந்து தம் மன நலப்பிரச்சனைகளை
வெளிப்படுத்தி ஒரு கிறுக்கு பிம்பம் தேடிக் கொள்வார்கள். அப்போது எழுத்தாளன் என்றால்
மனச்சிக்கல் வேண்டும் எனும் நம்பிக்கை இருந்தது.
இத்தொகுப்பில் உள்ள சில மைக்ரோ
மினி கவிதைகளில் இதை ரசித்தேன்:
“அறுபட்டதென்ன விடுபட்டதென்ன
ஒன்றாத சுவைக்கு ஓராயிரம் நாக்கு”
மனம் ஒன்றாத ஒரு விசயத்தை ஆயிரம்
நாவுகளால் சுவைக்க நேர்கிற நிலை, அதன் அபத்தம், சுயசித்திரவதை. உங்கள் மனம் தறிகட்டு
தன் போக்குக்கு சிந்திக்கிறதை விலகி நின்று கவனித்திருக்கிறீர்களா? இக்கவிதை அப்படியான
ஒரு மன’நிலை’ குறித்தது.