Skip to main content

இமையத்தின் “ஐயா”

இம்மாத அம்ருதாவில் வெளிவந்துள்ள இமையத்தின் சிறுகதை ”ஐயா” படிக்க துவங்கி கொஞ்ச நேரத்திலேயே எனக்கு புதுமைப்பித்தனின் “பால்வண்ணம் பிள்ளை” கதையை நினைவுபடுத்தியது. பால்வண்ணம் பிள்ளை அலுவலகத்தில் சந்திக்கிற அவமானங்களுக்கு வடிகாலாக வீட்டில் மனைவி பிள்ளைகளிடம் அதிகாரம் காட்டுவான், துன்புறுத்துவான். அவனது வெற்று அகங்காரத்தின் மீதான பகடி அக்கதை. பு.பி பால்பண்ணம் பிள்ளையை வெளியில் இருந்து பார்த்து சீண்டுகிறார் என்றால் இமையம் கந்தசாமி எனும் சிப்பந்தியை உள்ளிருந்து நோக்கி கருணையுடன் சித்தரிக்கிறார்.

இதிலும் நிறைய பகடியும் கேலியும் அவனைப் பற்றி வருகிறது. ஆனால் பரிகாசம் மட்டுமே இமையத்தின் நோக்கம் அல்ல. பால்வண்ணம் பிள்ளை ஒருநாள் அலுவலகத்தில் உள்ள கோபத்தை வீட்டில் காட்டும் முகமாக தன் பிள்ளைகள் பால் குடிப்பதற்காக மனைவி வாங்கி கட்டியிருந்த பசுவை குறைந்த விலைக்கு விற்று விடுகிறான். அதோடு அவனுக்கு மனம் ஆறுகிறது. அவன் ஒரு குரூரமான ஆள் எனத் தோன்றினாலும் அவன் அடிப்படையில் துபாய் ரிட்டர்ன் வடிவேலு பாத்திரம் போலத் தான். அவனுக்கு பின்னால் ஒரு அவமானம், கசப்பு, வலி உள்ளது. பு.பி இதை உணர்ச்சிவயப்படாமல் விலகி நின்று சித்தரிக்க இமையம் அதையே தனக்கான நாடகிய நடையில் கண்ணீரும் தளும்பலுமாய் சித்தரிக்கிறார்.
கந்தசாமி கோபமாய் வீட்டுக்கு வருகிறான். பிள்ளைகளையும் மனைவியையும் ஏசுகிறான். பிராந்தி குடிக்கிறான். பின்னர் போதையில் அவன் குழைகிறான். அதிகாரி தன்னை ஏய்ப்பதை மனைவியிடம் சொல்லி புலம்பி அழுகிறான். அவன் இப்படி உடைகிற இடத்தில் தான் இரண்டு கதைகளும் மாறுபடத் துவங்குகின்றன.
இரண்டு கதைகளுக்கும் இன்னொரு முக்கிய வித்தியாசம் பு.பி கதையின் முடிவு தான் இமையத்தின் கதையின் துவக்கம் என்பது. அதாவது கோபத்தை மறைமுகமாய் காட்டுவது.
 இமையத்தின் கதையை ரிப்பன் கட்டாத பின்னல் போல் சரியான முடிவை எட்டாமல் பாதியில் நிற்கிறது. கதையின் பலவீனம் இது மட்டும் தான்.
ஆனால் இமையத்தின் கதை இன்னும் கலைநேர்த்தியுடன் எழுதப்பட்டது. பாத்திர அமைப்பு மெச்ச வைக்கிறது. கந்தசாமியின் இரண்டு பெண்களான கயல்விழியும் வேல்விழியும் கதை முழுக்க டிவி பார்த்தபடியே இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதாய் வசனம் ஏதுமில்லை. ஒரு பெண் மட்டும் ஒருமுறை அப்பாவிடம் நோட்டு புத்தகம் வாங்குவதற்கு பணம் கேட்பதாய் குறிப்பு வருகிறது. அவ்வளவு தான். ஆனால் ஒன்றுமே பேசாமலே அவர்கள் வலுவான பாத்திரங்களாய் உருவாகிறார்கள். இரவு 11 மணிக்கு கந்தசாமி அலுவலகத்தில் இருந்து உடைந்த மனதுடன் வீட்டுக்குள் நுழையும் போது இருவரும் டிவி பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து இரைகிறான். இருவரும் டிவி பார்ப்பதை நிறுத்தவில்லை. அவன் மறுநாளே கேபிள் கனெக்‌ஷனை நிறுத்தப் போவதாய் மிரட்டுகிறான். உடனே அவர்கள் எழுந்து நின்று அழுகிறார்கள். கந்தசாமி மனம் இளகி அவர்களை சமாதானம் செய்கிறான். இது முடிந்ததும் அவர்கள் மீண்டும் கருத்தாய் டிவி பார்ப்பதை தொடர்கிறார்கள். கந்தசாமி அவர்களிடம் டிவியை நிறுத்தி விட்டு சாப்பிடும் படி கேட்கிறான். அவர்கள் மறுப்பதும் இல்லை கேட்பதும் இல்லை. என்ன நடந்தாலும் தமக்கு தேவையானதை மட்டும் செய்கிறார்கள்.
அடுத்து கணவனுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் நடக்கிறது. இடையிடையே பிள்ளைகளின் பொறுப்பின்மை பற்றி பேச்சு வரும் போது இரண்டு பெண்களும் பயப்படுவது மாதிரி ஒரு நடிப்பு நடிக்கிறார்கள். அடுத்து டிவி பார்ப்பதை தொடர்கிறார்கள்.
கந்தசாமியின் மனைவி காமாட்சி அவனுக்கு சற்று பயந்தபடியே அவனை கேலி பண்ணவும் செய்கிறாள். சற்று விலகி நின்று அவனுக்கு அறிவுரை பண்ணுகிறாள். ஆற்றுப்படுத்த முயல்கிறாள். அவளது முதிர்ச்சியை எண்ணி அவன் வியக்கிறான். ஆனால் அதை வெளியே சொல்லாமல் உதைப்பேன் என மிரட்டுகிறான். அவன் ஆர்ப்பாட்டம் செய்ய செய்ய காமாட்சி அவனை பரிகசிப்பதும் அதிகமாகிறது. அதேநேரம் அவள் அவனை ஓரளவுக்கு மேல் எரிச்சல்படுத்தக் கூடாது என்பதில் கவனம் காட்டுகிறாள். அவன் திட்டும் போதும் “பிச்சக்கார கழுத” என அழைக்கும் போதும் மறுக்காமல் இருக்கிறாள். ஆனால் இருவருக்குமான உரையாடலின் ஊடே அவனை விட அவள் ஆழமானவள், கூர்மையானவள் என நமக்கு புலனாகிறது. (சம்பாஷணையை இமையம் அபாரமாய் செய்திருக்கிறார். கதையில் நேரடியான சித்தரிப்பு இல்லை. பாத்திரங்களின் மனப்பாங்கு முழுக்க வசனங்கள் வழித்தான் துலக்கம் பெறுகிறது. ஒரு கதையில் இது மிகவும் சிரமமான காரியம். அவன் இப்படி எல்லாம் உணர்ந்தான் என சொல்லி விட்டு போய் விடலாம். ஆனால் அதை சம்பாஷணை வழி குறிப்புணர்த்துவது ஒரு சவால்.)
மனைவி மற்றும் மகள்கள் கந்தசாமியிடம் நடந்து கொள்ளும் விதம் தான் கதையின் முக்கியமான பகுதி. அலுவலகத்தில் கந்தசாமி கையில் கோப்புடன் ஒரு சிலை போல அதிகாரி முன்பு நின்று கொண்டிருக்க வேண்டும்; அவரது ஏய்ப்புகளை அவமானங்களை உணர்ச்சியே இல்லாமல் முழுங்கி செரிக்க வேண்டும். இதெல்லாம் அவனை உள்ளுக்குள் அரித்து கொல்கின்றன. ஆனால் வீட்டில் அவன் “அதிகாரி” ஆகும் போது மனைவியும் மகள்களும் “சிப்பந்தி” போல் நடந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த விசயம் கதையில் மிக மிக நுணுக்கமாய் வருகிறது.
இதில் கவனிக்க வேண்டிய அம்சம் இந்த இரண்டு “சிப்பந்திகளுக்குமான” வித்தியாசம். கந்தசாமி அதிகாரி முன் அடிபணியும் போது அவன் ஈகோ புண்படுகிறது. ஆனால் வீட்டில் மகள்கள் மற்றும் மனைவிக்கு அந்த சிக்கல் இல்லை. ஒன்று அவர்கள் ஒரே குடும்பம். இன்னொன்று முக்கியமாய் அவர்கள் அவனிடம் பணிவதாய் “நடிக்கிறார்கள்”. அவனிடம் பணிந்து கொண்டே நுணுக்கமாய் அவனை மறுக்கவும் செய்கிறார்கள். அவ்வளவு லகுவாய் அவனை கையாள்கிறார்கள். கந்தசாமிக்கு இந்த நடிக்கும், கையாளும் சாமர்த்தியம் இல்லை என்பது தான் சிக்கல்.
அதிகாரத்தை எதிர்கொள்ளும் சிறந்த வழி அதை கண்மூடி எதிர்ப்பது அல்ல என்கிறார் பூக்கோ. அதிகாரத்தில் மேல் கீழ் என்றில்லை. எல்லாரும் ஏதாவது ஒரு வகை அதிகாரத்தின் முன் பணிய நேர்கிறது. அப்போது நாம் அதை ஏற்றபடியே எதிர்க்கிறோம். இந்த முரண்பாடான முறை தான் நவீன வாழ்வின் சிக்கல். உண்மையில் சகோதரத்துவம் என்பது ஒரு கற்பிதம். சகோதரர்கள், தோழர்கள், ஏன் அதிகாரத்தை எதிர்க்கும் கலகக்காரர்கள் மத்தியில் கூட ஏய்ப்பும் மறுப்பும் மோதல்களும் இருந்தபடி இருக்கும்.
 இதை குழந்தைகள் ஒருவரை ஒருவர் நடத்துவது பார்த்தால் புரியும். குழந்தைகளின் நட்புக் குழுவில் வெளிப்படையாகவே ஒருவரை ஒருவர் மட்டம் தட்டுவது, நேரடியாக அடித்து தொந்தரவு செய்வது நடக்கும். இதன் மூலமாய் குழுவில் யார் மேலே யார் கீழே என தீர்மானமாகும். நான் சமீபமாய் சில பள்ளி மாணவர்கள் பேருந்து நிறுத்ததில் காத்து நிற்பதை கவனித்தேன். பத்து பதினொரு வயதுக்குள் இருக்கும். ஒரு பேருந்து வர ஒரு கூட்டம் மாணவர்கள் அதில் ஏறிக் கொண்டார்கள். தம் நண்பனை ஓடி வந்து ஏறிக் கொள்ளுமாறு கூவினர். அவன் கடுமையாய் முயன்றும் கூட்டம் காரணமாய் முடியவில்லை. அவன் தோல்வியை கண்டு பேருந்தில் உள்ள மாணவர்களும் வெளியே நிறுத்தத்தில் நிற்பவர்களும் ஒருசேர பரிகசித்து விமர்சிக்கிறார்கள். ஒரு பையன் வந்து அவன் தலையில் தட்டி விட்டு போகிறான். அப்பையன் அதை ஏற்று அசட்டுத்தனமாயும் களைப்பாயும் சிரிக்கிறான். வளர்ந்தவர்கள் இவ்வளவு வெளிப்படையாய் ஏய்க்க மாட்டோம் என்றாலும் நுணுக்கமாய் பல விதங்களில் மட்டம் தட்டுவோம் (ஐந்து இலக்கிய நண்பர்கள் சேர்ந்தால் ஐந்தே நிமிடத்தில் கத்தியின்றி ரத்தமின்றி பரஸ்பரம் படுகொலைகள் நடத்தி விட்டு கைகுலுக்கி பிரிவார்கள்).
 இப்படி மட்டம் தட்டுவதும் தட்டப்படுவதும் உறவுகள் எனும் எந்திரத்தில் ஊற்றப்படும் எண்ணெய். அதிகாரத்தை காட்டுவதும் அதை ஏற்று தலைவணங்குவதும் சிக்கலின்றி நிகழும் போது பிரச்சனைகள் தோன்றாது. ஆனால் கந்தசாமி போன்ற ஒரு ஆள் இந்த அதிகார செயல்பாட்டை புரிந்து கொள்ளாதவன். அவன் ஒரு லட்சியவாதி. தன்னை நல்லவன், நியாயமானவன் என நினைப்பவன். கௌரவம், அடிப்படை மரியாதை, உரிமை என்றெல்லாம் யோசித்து அதிகார கொடுக்கல் வாங்கலை புரிந்து கொள்ள முடியாதவன்.
இமையத்தின் கதைகள் அடிப்படையில் குறுநாடகங்கள். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு நோக்கம் கதையளவில் இருக்கும். அவர்கள் ஒரு மனநிலையை பிரதிநுத்துவப்படுத்துவார்கள். பல மனநிலைகளின் மோதலாக கதை இருக்கும். கதை நிகழும் இடம் கூட நாடக களம் போன்றே இருக்கும். பிற சிறுகதைகளைப் போல அவர் கதைகளில் மாந்தர்கள் நகர்ந்து கொண்டே இருக்க மாட்டார்கள். இடங்களும் மாறியபடி இருக்காது. ஒரே இடம். அதில் அப்பாத்திரங்கள் நின்று பேசும் ’இடமும்’ நாடக அரங்கில் போல தெளிவாய் குறிக்கப்பட்டிருக்கும். அவர்கள் அங்கிருந்து நகராமலே பேசுவார்கள். நாடகத்தில் போலவே இங்கும் வசனங்கள் தான் கதையின் இயக்குவிசை.

அதுவும் இரண்டே வசனங்கள் மூலம் கதையின் இன்னொரு தளத்தை திறந்து பளிச்சென காட்டுவதில் இமையம் கில்லாடி. காமாட்சி கந்தசாமியிடம் அவனை ஏய்க்கும் அதிகாரியின் சாதி என்ன என வினவுகிறாள். அவர் கீழ்சாதியாக இருக்கலாம் என அவன் குறிப்பாக சொல்கிறான். இத்தனை வருடங்களில் அவன் பல அதிகாரிகளின் அவமானங்களை எளிதில் பொறுத்திருக்கிறான். ஆனால் இம்முறை மட்டும் ஏன் அவன் புது அதிகாரியிடத்து இவ்வளவு அவமானத்தில் குறுகிப் போகிறான் என அவளுக்கு புரியவில்லை. இந்த இடத்தில் கந்தசாமியின் அடிப்படை பிரச்சனை அவளுக்கு தெளிவாகி விடுகிறது. நமக்கும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...