வெகுஜன பத்திரிகையில் எழுதுவது
வழக்கத்துக்கு மாறான, சற்று விசித்திரமான வாசகர்களை பெற்றுத் தரலாம். இணையத்திலும்
வெகுஜன வாசிப்பு உண்டென்றாலும் இங்கு ஒவ்வொரு வகையான / தரமான எழுத்துக்கும் தனித்தனி
வாசக குழுக்கள் உள்ளன. ஆனால் வெகுஜன அச்சு இதழ் வாசகர்கள் ஒரு தனி ரகம். இன்று அப்படி
ஒருவருடன் ஒரு எதிர்பாராத உரையாடல்.
அவர் எங்கள் குடியிருப்பில் தான்
வசிக்கிறார். வயது ஐம்பது இருக்கும். பத்து வருடங்களுக்கு முன் விபத்தில் தலையில் பலத்த
அடி. அதோடு நரம்பு நோயாளி ஆகி விட்டார், உடம்பை லேசாய் கோணியபடி எப்போதும் சுற்றுமுற்றும்
கண்காணித்தபடி தான் நடப்பார். பேச்சில் மிகுதியான பதற்றமும் குழறலும் இருக்கும். அவருக்கும்
மனைவிக்கும் குழந்தை இல்லை. என்று மனநலம் பாதிக்கப்பட்டதோ அன்றில் இருந்தே மனைவியை
கொடுமைப்படுத்துகிறவரானார். 45 வயதிருக்கும் தன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு என அவருக்கு
ஒரு கற்பிதம். சில இரவுகளில் உன்மத்தம் தலைக்கு ஏறும் போது மனைவியை கடுமையாய் திட்டி
அசிங்கப்படுத்தி அடித்து வெளியே துரத்தி விடுவார். அந்த அம்மா பக்கத்து வீட்டில் ஒன்றில்
புகுந்து இரவு முழுக்க புலம்பிக் கொண்டிருப்பார். காலையில் தெளிவாகி மனைவியை திரும்ப
அழைத்துக் கொள்வார். ஒருநாள் இது போன்ற பித்தேறிய இரவொன்றில் அவர் துரத்தியதில் அந்த
அம்மா எங்கள் வீட்டுக்கு வந்து சில மணிநேரங்கள் இருந்தார். “இவருக்கு சோத்தில விஷம்
வச்சு கொடுத்திடலாமான்னு சில நேரம் தோணும். ஆனால் சிலநேரம் பாவமுன்னு தோணும்” என்றார்.
இந்த ஆள் குடியிருப்பில் யார்
மாட்டினாலும் குழந்தைத்தனமாய் கோபித்துக் கொள்வார். அவர் எதிரே வந்தாலே ஏதோ பிரச்சனை
கொடுவாளுடன் எதிரே வருகிறது என்று தான் எனக்கு தோன்றும். நான் நாயுடன் வெளியே வருவது
கண்டால் அவர் பத்தடி தூரத்தில் இருந்தே பாம்பை மிதித்தது போல் துள்ளி ஐயோ என கத்துவார்.
அப்போது அவர் பண்ணுகிற ஆர்ப்பாட்டங்களில் எனக்கு வயிற்றை கலக்கும். சிலநேரம் பரோபகாரி
ஆகி விடுவார். இரண்டாவது தளத்தில் யாரோ இணையத் தொடர்பு சார்பாய் சர்வீஸை அழைத்திருக்கிறார்கள்.
ஆனால் ஆட்கள் வரும் சமயம் வீடு பூட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் நம் மாமாவை கேட்க இவரும்
உதவுகிறேன் பேர்வழி என என் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார். நான் மாலையில் அசந்து
தூங்கிக் கொண்டிருந்த சமயம். எப்போது வாசலில் ஆள் வந்தாலும் என் நாயை ஒரு கையில் பிடித்தபடி
தான் யாரென விசாரிப்பது வழக்கம். வாசலில் இவர் நின்றிருந்தார். பின்னால் சர்வீஸ் ஆட்கள்.
“உங்க வீட்டை தேடித் தான் ரொம்ப நேரமா சுத்திக்கிட்டு இருந்தாங்க. ஏதோ கம்ப்யூட்டர்
பத்தி கம்பிளயிண்ட் கொடுத்திருந்தீங்களா? நான் தான் இங்கே அழைச்சு வந்தேன்” என்று அக்கறையாய்
சொன்னார். நான் அவர்கள் தேடி வந்த வீடு என் வீடல்ல என்று புரிய வைத்தேன். இதனிடையே
என் நாயும் வழக்கம் போல் தன் பாணியில் பூமிக்கும் வானுக்குமாய் தாவி குரைத்து அவர்களை
விசாரித்தது. மாமாவுக்கு நானும் என் நாயும் நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை. என்னை
பார்த்து முகம் வலித்து விட்டு “வாங்க நான் சரியான வீட்டுக்கு அழைச்சு போறேன்” என்று
அவர்களை என் பக்கத்து வீடான மற்றொரு தப்பான முகவரிக்கு திரும்பவும் அழைத்து போனார்.
அடுத்த நாள் காலையில் நான் அலுவலகம்
கிளம்ப என் ஸ்கூட்டரில் ஏறும் போது அவர் கிடுகிடுவென என்னிடம் வந்தார். “நீங்க அன்னிக்கு
நடந்து கிட்டது நல்லா இல்ல” என்றார். “அதுவும் உங்க நாய் எப்பிடி குலைச்சுது. நான்
அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணிற நோக்கத்தில தான் உங்க வீட்டுக்கு அழைச்சு வந்தேன்.
ஆனால் நீங்க என்ன மதிக்காம நாயை குலைக்க விட்டீங்க”. நான் அவரிடம் என் வீட்டுக்கு யார்
வந்தாலும் நாய் குலைக்கும் என்றேன். உடனே அவர் “சரி தான். ஆனா குலைக்கும் போது நீங்க
என்ன பண்ணனும்? ‘டேய் சுப்பிரமணி. வாயை முடுன்னு’ சொல்லணும்”. நான் என் நாயின் பெயர்
சுப்பிரமணி அல்ல என்றேன். அவர் சொன்னார் “சுப்பிரமணி சும்மா இருடான்னா அவன் வாயை மூடிக்க
போறான்”. நான் என்னுடைய நாய் அப்படி என் பேச்சை கேட்கிற வகை இல்லை; நான் என்ன சொல்கிறேனோ
அதற்கு மாறாக தான் செய்யும் என்றேன். “ஆனாலும் நீங்க குலைக்க விட்டிருக்க கூடாது”.
எனக்கு கடுப்பாகி விட்டது. நான் சொன்னேன் “என் வீட்டில வளர்க்கிறது குயில் இல்ல. அப்பிடீன்னா
நீங்க வந்தா பாட்டு பாடலாம். ஆனா நான் வளர்க்கிறது நாய். அது பாட்டெல்லாம் பாடாது.
குலைக்க தான் செய்யும்.” அவருக்கு நான் சொன்னது ரொம்ப குழப்பமாகி விட்டது. எனக்கு இப்படித்
தான் கோபம் வந்தால் இலக்கிய மொழி தான் வாயில் வரும். இரண்டு பேரும் அடுத்து என்ன பேசுவது
எனத் தெரியாமல் திகைத்து நின்றோம். அவர் கோபமாய் தலையை ஆட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.
நானும் போகும் வழியெல்லாம் என் நாய் பெயரை இவர் எப்படி சுப்பிரமணி எனக் கூறலாம் என்றே
மனதுக்குள் அபத்தமாய் பொருமிக் கொண்டிருந்தேன்.
அதற்கு பிறகு அவரை எங்கு பார்த்தாலும்
வேறு வழியில் ஒளிந்து கொள்வேன். அல்லது முகம் கொடுக்காமல் கடந்து விடுவேன். அடுத்து
ஏதாவது சொல்லி வம்புக்கு இழுப்பாரோ என பயம் தான். இன்று காலையில் நான் அலுவலகம் கிளம்பும்
போது அவர் பின்னால் வந்தார். ஸ்பஷ்டமான தமிழில் “வணக்கம் சார்” என்றார். ஆஹா ஏதோ பெரிய
பிரச்சனை போல இருக்கிறது. அதனால் தான் சுத்த தமிழில் ஆரம்பிக்கிறார் என நினைத்துக்
கொண்டேன். என்னை தயார் படுத்தியபடி ”வணக்கம். சொல்லுங்க” என்றேன். அவர் குரல் மென்மையாக
பிரியத்துடன் “நீங்க குமுதத்துல எழுதறது படிச்சேன். நல்லா இருந்துது” என்றார். துண்டுதுண்டாய்
பேசினார். “அஷ்வின் பத்தி நல்லா எழுதியிந்தீங்க” என்றார். ”இந்த வாரம் கங்குலி கூட
நல்லா இருந்துது” என்றார். இவர் போய் கிரிக்கெட் பற்றியெல்லாம் படிப்பாரா என எனக்கு
திகைப்பு நீங்கவில்லை. எனக்கு அறிவுரையும் நல்கினார். ஒரு வீரரை பற்றி எழுதும் போது
அவரது பிறந்தா நாளை குறிப்பிட கேட்டார். அப்படி என்றால் ”நாங்க அவரை அழைச்சு வாழ்த்த
வசதியாய் இருக்கும்”, என்றார். இப்போ தான் அவர் பார்முக்கு வருகிறார். தேதி அறிந்தால்
இவர் கங்குலியை போனில் கூப்பிட்டு வாழ்த்துவார? ஆனாலும் அவர் பரிந்துரைக்கு நன்றி கூறினேன்.
பிரியும் போது எங்களுக்கிடையே கோபம் மறைந்து மென்மையான புரிதல், பிரியம், கனிவு எல்லாம்
தோன்றி இருந்தது.
எழுத்தாளனுக்கு ஒரு குறிப்பிட்ட
முகம் உண்டு. ஆனால் வெகுஜன வாசகன் பல முகங்கள் கொண்டவன். ”கல்கியின்” அமிர்தம் சூர்யா
ஒருமுறை என்னிடம் கூறினார் “எங்கள் பத்திரிகையில் ஆன்மீக விசயங்களை ஆர்வமாய் படிப்பவர்கள்
தான் மாறுபட்ட அரசியல் பார்வை, கலக சிந்தனை கொண்ட கட்டுரைகள் வந்தால் உற்சாகமாய் வரவேற்கிறவர்கள்.
அவர்கள் ஒரு விசித்திரமான கலவை”. நான் கல்பாக்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேச சென்றிருந்த
போது நாற்பது வயதுள்ள பள்ளி ஆசிரியை என்னிடம் வந்து “ப்ரியா தம்பியின் எண் கிடைக்குமா?”
எனக் கேட்டார். அப்போது ப்ரியா விகடனில் “பேசாத பேச்செல்லாம்” எழுதிக் கொண்டிருந்தார்.
முற்போக்கான பெண்ணியவாத பார்வை கொண்ட பெண்கள் தான் அதை படிப்பார்கள் என நினைத்துக்
கொண்டிருந்தேன். இந்த ஆசிரியையிடம் பேசிய போது அவருக்கும் பெண்ணியத்துக்கும் பல மைல்
தொலைவு என தோன்றியது. ஆனாலும் அவரது அடிப்படை பிரச்சனைகளின் நாடி ஒன்றை ஏதோ ஒரு தருணத்தில்
ப்ரியா தொட்டிருக்கிறார்.
போன வாரம் இதற்கு மாறான ஒரு தீவிர
வாசகரை என் அலுவலகத்தில் சந்தித்தேன். பெயர் குருராஜன். அவர் ஃப்ரிலேன்ஸ் வேலை ஒன்றை
செய்வதற்கு அங்கு வந்திருந்தார். என்னை பார்த்ததும் “என்ன நீங்க இங்கே?” என்றார். ஆள்
தெரியாமல் பேசுகிறார் போல என நினைத்து “எனக்கு உங்களை முன்னமே தெரியுமா?” என்றேன்.
அவர் என் பெயரை குறிப்பிட்டு நீங்க ரைட்டர் தானே என்றார். என் பிளாகையும் பேஸ்புக்
பதிவுகளையும் தொடர்ந்து படிப்பதாய் சொன்னார். அவருக்கு என் மீது வியப்பும் மரியாதையும்
இருந்தது. தன் வாழ்க்கையில் ஓய்வாக எஞ்சுகிற கொஞ்ச நேரத்தை தீவிரமாய் உண்மையாய் செலவழிக்கும்
பட்சம் இலக்கியமும் தீவிர விசயங்களும் படிக்க செலவழிக்கிறவர். தன் அடையாளங்களில் ஒன்றாய்
தீவிர எழுத்து ஆர்வம் இருக்க வேண்டுமென விரும்புகிறவர். ஆனால் இவர்கள் மூளையால் நம்மை
நேசிப்பவர்கள். தர்க்கமானவர்கள். ஆழமானவர்கள். எழுத்தாளனுக்கு இணையானவர்கள். சகஹிருதயர்கள்.
ஆனால் வெகுஜன வாசகர்கள் வேறு வகை.
அவர்கள் கருத்தளவில் அல்ல மொழியின் ஊடே உணர்ச்சிகரமாய் அந்தரங்கமாய் எழுத்தாளனுடன்
உரையாட முனைகிறார்கள். உங்களுக்குள் ஆழமாய் நுழைய மாட்டார்கள். பகுத்தறிந்து விமர்சிக்க
மாட்டார்கள். ஆனால் முரணின்றி ஏற்றுக் கொள்வார்கள். ஈகோ இன்றி பாராட்டுவார்கள். சுலபத்தில்
அணைத்துக் கொள்வார்கள்.
தீவிர வாசகர்கள் இடது மூளை, வெகுஜன
வாசகர்கள் வலது மூளை. ஒன்று சிந்தனைக்கு. மற்றது உணர்ச்சிகளுக்கு. இருவரும் வாசிப்புலகை
நிறைவு செய்கிறார்கள்.