காலையில் (சுமார் பத்து, பத்தரை
இருக்கும்) ஒரு இனிய கனவுக்குள் புதைந்து புதைந்து தூங்கிக் கொண்டிருந்த போது ரெயின்
போ எப்.எம்மில் அழைத்து திருக்குறள் தினம் பற்றி இரண்டு நிமிடம் பேச முடியுமா எனக்
கேட்டார்கள்.
தயாராவதற்கு அரைமணி அவகாசம் கேட்டு
விட்டு பேச உட்கார்ந்தேன். இதனிடையே எனக்கு பிடித்த சில குறள்களை அசைபோட்டவாறிருந்தேன்.
ஒரு எளிய குறளின் முதல் வரி - நான் திரும்ப திரும்ப யோசிப்பது - “அன்பிற்கும் உண்டோ
அழைக்கும் தாழ்”.
முதலில் பள்ளியில், பிறகு சில சினிமா பாடல்களில்
என இவ்வரி என்னை பின் தொடர்ந்தபடியே உள்ளது. அன்பு எளிமையாக நாம் அன்றாட வாழ்வில் காட்டக்
கூடியது தானே. அதை ஏன் தடுக்க முடியாதது என வள்ளுவர் சொல்கிறார்? அதை என்று தான் தடுத்து
வைத்தோம்? இப்படி எல்லாம் பள்ளியில் படிக்கும் போது குழம்பி இருக்கிறேன். இக்குறளுக்கும்
பல வித விளக்கங்கள் உள்ளன. வள்ளலார் போன்றோர் முழுக்க ஆன்மீக பார்வையில் விளக்கி இருக்கிறார்கள்.
காமத்துப் பாலில் ஒரு குறளில் காதலை மத யானையுடன் வள்ளுவர் ஒப்பிடுவார் (இது பின்னர்
”காதல் யானை வருகிறான் ரெமோவாக” சினிமாவில் வந்தது). அன்பை மதம் பிடித்த யானையின் ஆற்றலோடு
ஒப்பிட்டு புரிந்து கொள்ளவே விரும்புகிறேன். ஏன் என சொல்கிறேன்.
உண்மையான அன்பில் ஒரு மூர்க்கம்,
கண்மூடித்தனம் இருக்கும். அதை எடை தூக்கிப் பார்க்க, தர்க்கத்தால் அலச முடியாது. இதை
நட்பில், காதலில், வாசிப்பில் கூட பார்க்கலாம். அன்பை நடைமுறை எதார்த்தத்தால் புரிந்து
கொள்ள முடியாது என்பதையே வள்ளுவர் சொல்ல வருகிறார். மரத்தில் இருந்து புளியங்காய் உதிர்வது
போல் சிலர் வாரத்துக்கு ஐந்து நண்பர்களை உதிர்ப்பார்கள், புதிதாய் ஐந்து பேரை நண்பர்களாய்
சேர்த்துக் கொள்வார்கள். காதலிலும் இந்த போக்கு இன்று உருவாகி உள்ளது. திருமணத்திலும்
மிக சுலபமாய் பிரிவு பற்றி யோசிக்க துவங்குகிறோம். இதற்கு அடிப்படை காரணம் தர்க்க சிந்தனை
இன்று அன்பில் ஆதிக்கம் செலுத்துவது. நடைமுறையில் அன்பு உதவுமா என பார்க்கிறோம். ஒருவர்
தொந்தரவு அளிக்கக் கூடியவர், அவரால் நமக்கு வேதனை ஏற்படுகிறது என்றால் உடனே அந்த உறவை
கைவிடலாம் என நினைக்கிறோம். விவாகரத்துகள், காதல் பிரிவுகள் இன்று மலிகின்றன. யோசித்துப்
பார்த்தால் எல்லா உறவுகளிலும் பிரிவதற்கு பத்து போதுமான வலுவான காரணங்கள் நிச்சயம்
இருக்கும். அதையும் சகித்து தான் அவ்வுறவுகள் தொடர்கின்றன. ஒரு மூர்க்கமான, காட்டாற்று
வெள்ளம் போன்ற இச்சை, விருப்பம், அன்பு இருந்தால் அவ்வுறவுகள் என்ன துன்பம் ஏற்பட்டால்
விலகாது.
என்னிடம் சில நண்பர்கள் திருமணத்துக்கு
முன் அறிவுரை கேட்பார்கள். ஒரு பெண்ணிடம் கண்மூடித்தனமான அன்பு இருந்தால் ஒழிய அவளுடன்
30, 40 வருடங்கள் வாழ்வது வீண் என சொல்வேன். அந்த அன்பு இயல்பாக ஆரம்பத்திலேயே இருக்கலாம்.
அல்லது நாமாகவே மெல்ல மெல்ல பேசி பேசி உருவாக்கவும் முடியும். கடுமையான சிக்கல்கள்,
அலுப்புகள் தோன்றும் போதும் உறவில் ஒரு சுவாரஸ்யம், இனிமை இருந்து கொண்டே இருக்கும்.
ஏதாவது ஒரு கணத்தில் இவளுடன் வாழத்தான் வேண்டுமா என காரணங்களை பட்டியல் போட ஆரம்பித்தால்
எல்லாம் முடிந்தது.
பொங்கி பிரவாகிக்கும் வெள்ளத்தில் மாட்டிக் கொள்வது
போலத் தான் உறவுகள். மாட்டிக் கொண்டபின் தன் போக்குக்கு உறவு நம்மை அடித்து செல்லும்.
எதிர்த்து நீந்தக் கூடாது. உண்மையான அன்பில் இந்த சாகச உணர்வு இருந்து கொண்டே இருக்கும். உங்கள் காதலியிடம் / மனைவியிடம் கேட்டால் உங்களைப் பற்றி நூறு குற்றங் குறைகளை உடனடியாய் பட்டியல்
இடுவாள். ஆனால் உங்களிடம் தனக்கு பிடித்ததும் இதே நூறு குறைகளே என தன் மனதிற்குள் ஒத்துக்
கொள்வாள்.
எனக்கு மிகவும் பிரியமான நண்பர். அவர் என்னிடம் சொன்னார்
“கடந்த இரு வருடங்களில் பலமுறை நீ என்னை திட்டியிருக்கிறாய். உன் உறவை துண்டிக்க எனக்கு
ஒரு நொடி ஆகுமா சொல். நான் ஏன் அதை செய்யவில்லை?”. நான் பதிலுக்கு புன்னகைத்துக் கொண்டேன்.
உண்மையான அன்பு இது போல் ஏதாவது
ஒரு விடையற்ற புள்ளியில் கேள்வி போல் தொக்கி நிற்கும்.
உணர்ச்சி பிரவாகமாய் பித்து நிலையில்
நேசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அன்பு அப்படி மட்டுமே இருக்க வேண்டியதில்லை.
தடையற்ற அன்பு நிதானமாயும் நிகழ முடியும். நேர்த்தியாய் உள்ளார்ந்து நேசிக்கிறவர்களும்
இருக்கிறார்கள். இதை அறிய ஒரு அளவுகோல் இவர்களின் பேச்சின் இடையே எப்போதும் தான் விரும்புகிறவர்
பற்றி குறிப்பு வந்தபடியே இருக்கும். நான் கல்லூரியில் படிக்கும் போது அடிக்கடி சுந்தர
ராமசாமியை சந்தித்து பேசுவேன். அவர் மிகவும் கவனமாய் அக்கறையாய் நேர்த்தியாய் எல்லாவற்றையும்
அளந்து கணித்து வாழ்ந்தவர். அவர் காதல் மௌனமானது. என்னிடமே இருமுறை தன் மனைவி பற்றி
குறிப்பிட்டிருக்கிறார். ஒருமுறை அமெரிக்க நூலகங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
தான் வாசித்த நூல்கள் பற்றி பேசும் போது எதேச்சையாய் தன் மனைவியை குறிப்பிட்டு ‘அவளுக்கு
இலக்கிய வாசிப்பு போதாது’ என்றார். அதில் ஒரு புகார் தொனி, குறும்புத்தனமான கடிதல்
எல்லாம் இருந்தது. அதன் பிறகு அமெரிக்காவில் மனைவியுடன் தினமும் நடைபழக போவது பற்றி
பிரியத்துடன் குறிப்பிட்டார். அப்போது அவருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். ஆனால்
எதைப் பற்றி பேசினாலும் மனைவியை அவரால் அதில் இருந்து தவிர்க்க இயலவில்லை. நான் பிறகு
சந்தித்த பல கணவர்கள் தம் மனைவியை பற்றி பேசுவதையே தவிர்த்து விடுவதை பார்த்திருக்கிறேன்.
அப்படி ஒருவர் தன் வாழ்க்கையில் இல்லை என்பது போன்றே நடந்து கொள்வார்கள். மனைவியின்
வாழ்க்கையில் இவர் ஒரு நிழலாகவும் இவர் வாழ்க்கையில் மனைவி ஒரு நிழலாகவும் இருப்பார்கள்.
இந்த உறவில் அன்பு செத்து விட்டது. ஆனால் சு.ரா அப்படி அல்ல. தான் இறுதி மூச்சு வரையிலும்
மனைவியின் அன்பு குறித்த பிரக்ஞையுடன், அந்த அமைதியான பிரியத்துடன் இருந்திருப்பார்
என ஊகிக்க முடிகிறது. ஏனென்றால் தன் வாசகர்களுடனும் சக எழுத்தாளர்களுடனும் செய்தது
போல் தன் மனைவியுடனும் தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருந்தார். அவர் சரியாக நூல்களை
வாசிப்பதில்லை என்று முதுமையிலும் புகார் சொல்கிறார் என்றால் அந்த அக்கறையின் ஆழத்தை,
அன்பின் குறும்பை புரிந்து கொள்ளலாம். சு.ராவின் அன்பெனும் காட்டாற்று வெள்ளம் அவதானிப்புகளாலும்
அக்கறையினாலும் ஆனது.
இவ்வளவு விசயங்களின் சாராம்சத்தை
இன்று வானொலியில் பேசினேன். ஒரு நல்ல விசயத்தை பேசி ஒரு நாளை ஆரம்பிப்பது மகிழ்ச்சியானது.