விகடன் விருது பெறும் ஷோபா சக்தி,
யூமா வாசுகி, கார்த்திகைப்பாண்டியன், சபரிநாதன், கண்டராதித்தன், பாலு சத்யா ஆகியோருக்கு
வாழ்த்துக்கள். நண்பன் லஷ்மி சரவண குமாருக்கு கூடுதல் அன்பும் முத்தங்களும். எப்போதும்
விகடன் விருது பெறும் புத்தகங்களுக்கு புத்தகக் கண்காட்சியில் மவுசு கூடும். அதை மனதில்
வைத்து மார்ச்சில் அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அல்லது மார்ச்சில்
விகடன் வாசகர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டலாம். இம்முறை விருது பெறுகிறவர்கள்
முக்கியமானவர்கள். தொடர்ந்து பங்காற்றி வருகிறார்கள். யூமா வாசுகியின் உழைப்பு திகைப்பூட்டுகிறது.
எவ்வளவு முக்கியமான நூல்களை மலையாளத்தில் இருந்து மொழியாக்கி இருக்கிறார்! ஷோபா சக்தி
நம் காலத்தின் ராக் ஸ்டார். அவருக்கான ஒவ்வொரு அங்கீகாரமும் நாம் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
மொழிபெயப்புக்காய் விருது வாங்கியுள்ளவர் கவிஞர் சபரிநாதன் தானே? அவர் கவிதைகள் படித்திருக்கிறேன்.
இளந்தலைமுறை கவிஞர்களில் மிக மிக முக்கியமானவர். அவர் தொகுப்பு பற்றி எழுத வேண்டும்
என பல மாதங்களாய் எடுத்து வைத்திருக்கிறேன். லஷ்மி சரவணகுமார் நூறு வருடங்கள் கழித்தும்
நம் மொழியின் கலாச்சார அடையாளமாய் நிலைக்க போகிற எழுத்தாளன். அதற்கான திறமையும் உழைப்பும்
அர்ப்பணிப்பும் அவரிடம் உண்டு. ஒருவித self-obsessionஇன் உச்சம் அவர். அது நேர்மறையாக
அவருக்கு எழுத்தில் பயன்படுகிறது.
சரி இவ்வளவு பேரும் சேர்ந்து எப்போது
பார்ட்டி கொடுக்க போகிறீர்கள்?