இந்த வெள்ளத்தின் போது சகமனிதர்களிடம்
அபாரமான சமூக அர்ப்பணிப்புணர்வை, சேவை மனப்பான்மையை பார்த்தோம். ஒவ்வொருவரும் கண்கூட
கண்டோம். சாருவை தவிர. இம்மாத உயிர்மையில் இவ்வாறு எழுதுகிறார்: “வெள்ளத்தில் சென்னை
மூழ்கிய போது வெள்ளத்தோடு கூடவே மனிதாபிமானமும் பெருகி ஓடியதாக பத்திரிகைகள் கூவிக்
கொண்டிருந்தன. விரல் நகத்தின் அழுக்கு அளவுக்கு தான் அந்த அபிமானம் நிலவியதாக தெரிந்தது
எனக்கு. பேனை பெருமாளாக்கியது போல் அந்த அழுக்கை தான் ஒரேயடியாக பேசுகிறார்கள் எல்லாரும்
ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் மரணம் ஒன்று போல் தாக்கிய போது மனிதன் பயந்தான்.
அதனால் ஒருவனுக்கொருவன் உதவிக் கொண்டான். அவ்வளவு தான் விசயம். இதே நகரத்தில் வெள்ளத்துக்கு
பதிலாக ஒரு மதக்கலவரம் சூழ்ந்திருந்தால் இதே மனிதாபிமானிகள் கையில் ஆயுதத்தை தூக்கியிருப்பார்கள்”.
சாருவின் பார்வையில் எனக்கு உடன்பாடில்லை.
மனிதர்கள் ஒரேயடியாய் நல்லவர்கள் ஆகி விட்டதாய் யாரும் கூறவில்லை. அதை நினைத்து சாரு
பதற்றப்பட வேண்டாம். ஆனால் மனிதனுக்குள் தூங்கும் நன்மை விழிக்க இது ஒரு சந்தர்ப்பம்
ஆகியது. மரண பயம் தான் காரணம் என நான் நினைக்கவில்லை. சிறு குழந்தைகளுக்கு கூட சகமனிதர்களுக்கு
உதவும் விருப்பம் உண்டு என ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள். அதே நேரம் சிறு குழந்தைகளுக்கு
எறும்பை நசுக்கவும் நாயை கல்விட்டு அடிக்கவும் விருப்பம் உண்டு. மனிதன் இந்த இரண்டு
விழைவுகளின் கலவை. இப்போதைக்கு நன்மையின் எழுச்சியை கொண்டாடுவோம்.
இந்த வெள்ளம் வந்த போது தான் என்றில்லை.
பொதுவாய் தமிழர்கள் இரக்கமும் நெகிழ்ச்சியும் மிக்கவர்கள். இங்கே தெரியாத ஒரு ஊரில்
கூட நான் தைரியமாய் தனியே நிற்பேன். என்னை பாதுகாக்கவும் உதவவும் ஏதோ இரு கைகள் நீளும்
என அறிவேன். எத்தனை எத்தனை இதயங்களின் அன்பை இதுவரை இந்த சிறு வாழ்வில் பெற்றிருப்பேன்.
தாயின் கருவறைக்குள் இருப்பது போன்ற பாதுகாப்புணர்வை நீங்கள் தமிழகத்தில் மட்டுமே உணர
முடியும். கேரளாவில் ரோட்டில் தனித்து ஆதரவின்றி நின்றால் யாரும் திரும்பி கூட பார்க்க
மாட்டார்கள். பெங்களூரிலும் அதே தான். அதனால் தான் எனக்கு இந்த ஊரை விட்டுப் போக என்றும்
மனமில்லை.