டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்கள்
நடந்த போது காவல்துறை குடிகாரர்கள் நிம்மதியாய் குடிப்பதற்காய் பாதுகாப்பு கொடுத்ததைப்
பார்த்தோம். அதை வெட்கக்கேடு என விமர்சித்தோம். இது போன்ற சந்தர்பங்களில் போலீசாரின்
நிலை உண்மையில் ரொம்பவே பரிதாபம்.
என் வீட்டுப் பக்கத்தில் ஒரு டாஸ்மாக்
உண்டு. அங்கு வரும் கூட்டத்திற்கு வாகனங்கள் நிறுத்த இடமில்லை. சிலர் சற்று தொலையில்
காலி இடங்களில் நிறுத்துவார்கள். பலர் டாஸ்மாக்குக்கு எதிரிலும் பாதி சாலையிலும் ஏதோ
அடிப்பம்புக்கு முன் குடங்களை அடுக்கி வைத்தது போல் நிறுத்தி விட்டு போய் விடுவார்கள்.
அது ஏற்கனவே குறுகலான சாலை. இதனாலே எப்போதும் டாஸ்மாக் பிஸியாக உள்ள மாலை வேளைகளில்
போக்குவரத்துக்கு மலச்சிக்கல் வந்து நின்று விடும். இன்று ஒன்பது மணிக்கு நிறைய பேருந்துகள்
அவ்வழி போகும் நேரம். எதிரெதிரே வந்த இரு பேருந்துகள் மேலும் நகர முடியாதபடி சாலை வரை
பைக்குகள் நின்றிருந்தன. பேருந்து ஓட்டுநர் பைக்கை எடுத்து நீக்கி வைக்குமாறு கத்துகிறார்.
யாரும் கேட்கவில்லை. அவர் கடுப்பாகி சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டு இறங்கி சென்று
விட்டார். முதலில் எல்லோரும் பைக்குகள் அங்குள்ள ஓட்டலில் சாப்பிடுகிறவர்களுடையது என
நினைத்திருந்தார்கள். ஓட்டல்காரர்கள் உண்மையை தெளிவுபடுத்தியதும் ஓட்டுநர் பைக்குகளின்
உரிமையாளர்களே வந்து நகர்த்தட்டும், அதுவரை பஸ் நகராது என்று விட்டார். ஒரே களேபரம்.
கடைசியில் ரொம்ப பிஸியாக பரோட்டா அடித்துக் கொண்டிருந்த மாஸ்டர் கையை கழுவி விட்டு
வந்து பைக்குகளை தூக்கி தள்ளி வைத்தார்.
பேருந்து நகர போக்குவரத்து சீரானது. கொஞ்ச நேரத்தில்
ஸ்பீக்கர் கட்டிய ஜீப்பில் இரு போலிசார் ஆடம்பரமாய் மிரட்டியபடி வந்தனர். அவர்கள் ஓட்டலின்
காலி முக்காலி ஒன்று வெளியே கிடப்பதை கண்டு “அதை தூக்கி உள்ளே போடுடா” என கத்தினர்.
அடுத்து பைக்குகளைப் பார்த்தனர். உடனே பைக்குகளை அங்கிருந்து எடுக்காவிட்டால் பறிமுதல்
செய்யப்படும் என அறிவித்தனர். யாரும் பொருட்படுத்தவில்லை. அடுத்து ஓட்டல்காரரிடம் பைக்குகளின்
உரிமையாளர்களை அழைக்கும்படி கூவினார்கள். அவர்கள் டாஸ்மாக்குக்குள் போய் பார்க்கும்
படி கூறினர். டாஸ்மாக் என்று கேட்டதுமே போலிசார் கப்சிப் என்றாகி விட்டனர்.
அவர்கள் நினைத்தால் டாஸ்மாக்குக்குள் சென்று பைக்கின்
உரிமையாளர்களை அழைத்து வந்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் டாஸ்மாக்குக்குள் போலிசார்
நுழைந்து கைது என செய்தி வந்தால் அடுத்த நிமிடமே அம்மா இரண்டு பேரையும் சஸ்பண்ட் செய்து
வீட்டுக்கு அனுப்பி விடுவார். குடிப்பவர்களின் அதிகாரமும் கெத்தும் என்னவென நான் உணர்ந்த
தருணம் அது. டாஸ்மாக்குகள் பக்கத்தில் வந்தாலே போலிசார் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தது
போல் நடுங்குகிறார்கள். ஒவ்வொரு டாஸ்மாக்கும் அவர்களுக்கு அம்மாவின் பெயரிலான கோயிலாகவே
படுகிறது. குடிகாரர்களைத் தொட்டால் அரசு உதைக்கும். நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள்
காறித் துப்புவார்கள்.
ஒரு போலீஸ்காரர் ஒரு வீம்புக்காக
பைக்குகளின் டயர் காற்றை திறந்து விட முயன்றார். ஆனால் அதையும் அவரால் சரிவர செய்யத்
தெரியவில்லை என பொதுமக்கள் சிரித்தனர்.
முன்பெல்லாம் ஒருவர் தன்னை மந்திரியின்
மைத்துனன், எம்.எல்.ஏ உறவுக்காரன், வட்டச்செயலாளர் என ஏதாவது ஒரு பெயர் சொல்லி போலிசையும்
அரசு எந்திரத்தையும் மிரட்டுவார்கள். இன்று நான் டாஸ்மாக் வாடிக்கையாளன் என்று சொன்னால்
போதும் அதற்கு ஒரு தனி மரியாதை வந்துள்ளது. குடிகாரர்களை போலிசார் சல்யூட் அடிக்காத
குறை தான். அந்த பெருமை நிச்சயம் அம்மாவுக்கே சேரும். குடிகாரர்கள் இனி இந்த அரசிடம்
இருந்து ஓய்வூதியம், பஞ்சப்படி ஆகியன கோரலாம். ஐ.டி கார்ட் கேட்கலாம். தொழிற்சங்கம்
அமைக்கலாம். அவர்கள் மீது கை வைத்தால் இந்த அரசு பார்த்துக் கொண்டிருக்காது!