Skip to main content

அ.மாதவனுக்கு சாகித்ய அகாதெமி விருது



2015ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்திருக்கும் அ.மாதவனுக்கு வாழ்த்துக்கள். அவரது ”கிருஷ்ணப்பருந்து” ஒரு பிராயிடிய புதினம். பிராயிடின் sublimation கோட்பாட்டை நாவல் வடிவில் பரிசீலித்திருப்பார். சொல்லப்போனால் அந்நாவல் வயதான ஒருவரின் “மோகமுள்”. இளம் வயது பாபுவுக்கு பதில் ஒரு முதிர்ந்த ஒரு மனிதர். பாபு வயதில் மூத்த பெண் மீது இச்சை கொள்கிறான். இவர் தன்னை விட வயதில் குறைந்த இளம்பெண்ணை விரும்புகிறார். இரண்டு பேரும் தம் வயதுமீறின காமத்தை அடக்கிக் கொள்கிறார்கள். பாபுவுக்கு அது இசை மீதான பெருங்காதலாகவும் இவருக்கு அது அன்பும், கருணையுமாய் சமூகம் ஏற்கத்தக்க வடிவெடுக்கிறது (sublimation). கச்சிதமான வடிவில், மென்மையான அங்கதத்துடன் கூடிய எண்பதுகளுக்கே உரித்தான பாணியில் சில நல்ல சிறுகதைகளையும் அவர் எழுதி இருக்கிறார்.


அ.மாதவனை விட மேலான படைப்பாளிகளாக நான் கருதும் எஸ்.ரா மற்றும் ஜெயமோகனுக்கு “நரைகூடி கிழப்பருவம் எய்தும்” முன் சாகித்ய அகாதெமி விருது கொடுத்து விட வேண்டும். அதே போல் நாம் போதுமான அளவு அங்கீகாரிக்காத சாதனையாளர்கள் நம் கவிஞர்கள். சொல்லப்போனால் நம் புனைவெழுத்தாளர்களை விட நம் கவிஞர்கள் மிகச்சிறந்த படைப்பாளிகள் (இதை என்னிடம் ஒருமுறை அசோகமித்திரனே ஒத்துக் கொண்டார்). தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன், யுவன் (யவனிகா ஸ்ரீராம், என்.டி ராஜ்குமார், குட்டிரேவதி என இப்பட்டியல் நீள்கிறது) போன்றோர் இவ்விருதை பெற புனைவெழுத்தாளர்களை விட நிச்சயம் தகுதியானவர்கள். பொதுவாய் விருது கொடுப்பதில் புனைவுக்கு மட்டும் கொடுக்கப்படும் மிகை கவனத்தை அ.ராமசாமி சமீபத்தில் கண்டித்து எழுதியிருந்தது கவனிக்கத்தக்கது. பல அற்புதமான கோட்பாட்டு மற்றும் ஆய்வுக் கட்டுரைகள், சமூகவியல், மொழியியல் நோக்கிலான அலசல் நூல்களை எழுதியவர்களையும் எத்தனைக் காலம் இருட்டிலே வைத்திருக்கப் போகிறோம்? ராஜ் கௌதமன், ரவிக்குமார், தமிழவன், அ.கா பெருமாள் போன்றவர்களை என்று கௌரவிக்க போகிறோம்? ரவிக்குமார் அளவுக்கு ஆழமும் செறிவும் கொண்ட உரைநடை கொண்டவர்களை மிக அரிதாகத் தான் பார்க்க முடியும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் அவர் பங்கேற்ற கருத்தரங்கில் வாசித்த உரையை சமீபத்தில் வாசிக்கப் பெற்றேன். எவ்வளவு நுணுக்கமாய், துல்லியமாய், கூர்மையாய் தத்துவ ஆழத்துடன் அவரால் எழுத முடிகிறது என வியந்து கொண்டே இருந்தேன். ஒரு சிறு உரையே இப்படி என்றால் அவரது கட்டுரைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர் அளவுக்கு ஐரோப்பிய கோட்பாட்டு நூல்களை நுணுக்கமாய் அறிந்து கொண்டவர்கள் தமிழில் மிக மிக குறைவு. சமீபத்தில் பேஸ்புக்கில் அவர் வரையும் கோட்டோவியங்கள் பார்க்கும் போது இம்மனிதர் எதைத் தொட்டாலும் மின்னுகிறதே என தோன்றியது. ஒரு கட்டத்துக்கு பிறகு அவர் தன் ஆற்றலையெல்லாம் அரசியலில் திருப்பி விட்டது நிச்சயம் ஒரு இழப்பு தான்.
பொத்தாம் பொதுவாய் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு விருது என்றில்லாமல் புனைவு, கவிதை, உரைநடை என பிரித்து மூன்று சாகித்ய அகாதெமி விருதுகள் கொடுத்தால் இந்த சாதனையாளர்களை அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஓரளவுக்கு கவர் செய்ய முடியும். நடக்கும் என நம்புவோம்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...