Skip to main content

எதிர்பாராத பிறந்தநாள்

சென்னை வெள்ளம் எங்கள் பகுதியில் எந்தவொரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நெட்வொர்க் இல்லாமல் இருளிலும் தனிமையிலும் ஆழ்ந்ததைத் தவிர. பிற பகுதிகளின் நிலவரங்களை தெரிந்து கொள்ளவும் வழியில்லை. இரண்டு நாட்கள் வீட்டில் உள்ள மளிகை பொருட்கள், காய்கறியை வைத்து சமாளித்து விட்டேன். பிறகு பேச்சுத்துணை இன்றி எனக்கு பைத்தியம் பிடிக்கும் நிலை வந்தது. மழை ஓரளவு நின்ற பின் நங்கநல்லூரில் என் மாமியார் வீட்டுக்கு சென்று விட்டேன். அங்கே என் மனைவி, பிள்ளை இருந்தார்கள்.



 போகிற வழியில் என்னைப் போல் மக்கள் கூட்டம் கூட்டமாய் சாலையில் திரிவதைக் கண்டேன். பொதுவாய் வீடு, அலுவலகத்தை விட்டு வெளியே தலைகாட்டாத மனிதர்கள் பலர் பீதியிலும் பரிதவிப்பிலும் மனிதவாசம் தேடி அலைவதைக் கண்டேன். பால், மெழுகுவர்த்தி தான் முக்கிய தட்டுப்பாடு. எல்லா கடைகளிலும் தீர்ந்து போய் விட்டன. சரி கிடைக்கிற பொருட்களை விட வேண்டாம் என மக்கள் கடைகளில் உள்ளதையெல்லாம் வாங்கி குவித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கடையில் மட்டும் பால் கிடைக்க அங்கு நீண்ட வரிசை நின்றது. இன்னொரு கடையில் இலவசமாய் லேண்ட்லைனில் பேச அனுமதிப்பதால் அங்கும் கூட்டம். என் பதின்வயதில் தான் இது போல் டெலிபோன் பூத்துகளில் எப்போதும் யாராவது பேச காத்து நிற்பதை பார்த்த நினைவு. ஸ்பென்சர்ஸ் சூப்பர்மார்க்கெட்டில் பால் உள்ளிட்ட சில பொருட்கள் இல்லை (no stock) என எழுதி ஒட்டியிருந்தார்கள். கீழ்மத்திய வர்க்கத்தை சேர்ந்த ஒரு தாத்தாவும் இரு பேரன்களும் அவ்வழி வந்தார்கள். பேரன் தாத்தாவிடம் “இங்க பால் கிடைக்குமுன்னு போட்டிருக்கு பாருங்க” என்றான். அவனுக்கு no stock புரியவில்லை. அல்லது அதை விடுத்து பால் என்பதை மட்டும் பார்த்திருக்கிறான். தாத்தா அந்தளவுக்கு எல்லாம் மெனக்கெடவில்லை. “அது ஏதாவது செயற்கை பாலாக இருக்கும்” என்று பையன்களை கூட்டி சென்று விட்டார். எனக்கு அந்த வெள்ளந்தி மனிதர்களை பிடித்திருந்தது. 

என் மாமியார் வீடிருந்த குடியிருப்பில் உள்ள ஒரு பெண்ணின் பெற்றோர் அருகில் ஒரு வெள்ளம் சூழ்ந்த வீட்டில் தனியாய் வசித்து வந்தனர். அங்கு மின்சாரம் இல்லை. அண்டையிலும் ஆட்கள் இல்லை. இரவில் யாரோ சிலர் வீட்டை உடைக்க முயல்வதாய் அந்த பாட்டிக்கு பயம் வர மகளை அழைத்து அழுதிருக்கிறார். ஆனால் பொருட்களை துறந்து வீட்டை விட்டு வர மாட்டேன் என்று விட்டார். முதியவர்கள் அடம் பிடித்தால் கல்லை விட்டு வராத தோசை மாதிரி தானே. அவர்களை வெளியே வர வைக்கவும் முடியவில்லை. பாதுகாக்கவும் தெரியவில்லை. மகள் இங்கு பெரிய கூப்பாடு போட்டு அண்டை வீட்டாரை திரட்டி விட்டார். அவர்கள் அங்கு பாட்டியின் வீட்டுக்கு போய் பார்த்தால் கொள்ளைக்காரர்கள் யாரையும் காணவில்லை. ஆனால் அவரை பார்க்க சென்றவர்களை பாட்டி திருடர்கள் என நினைத்து புதிதாய் பயந்து விட்டார். மகளை போனில் அழைத்து இன்னும் நிறைய கொள்ளைக்காரர்கள் வாசலில் நின்று சத்தம் போடுகிறார்கள் என அழுதிருக்கிறார். இப்படி அங்கே ஒரே களேபரம். மறுநாள் காலையில் பார்த்தால் பாட்டிக்கோ வீட்டுக்கோ எந்த ஆபத்தும் இல்லை.
நான் இரவு என் நாய், பூனை, முயல் உள்ளிட்டோரை கவனிப்பதற்காய் வீட்டுக்கு திரும்பினேன். வழியில் மக்கள் கூட்டமாய் சத்தம் போட்டு விசேசமான துள்ளலோடு வருவதைப் பார்த்தேன். சற்று தள்ளி ஒரு வரிசை. விசாரித்த போது அங்குள்ள அம்மன் கோயிலில் உணவு வழங்குவதாய் அறிந்தேன். வரிசையில் பர்தா அணிந்த ஒரு பெண்ணும் நின்றிருந்தார். பின்னர் கோட்டூர்புரத்தில் கோயில்களை சுத்தம் செய்வதற்கு இஸ்லாமிய இளைஞர்களின் குழு ஒன்று வேலை செய்வதைப் பற்றின படம் ஒன்றுடன் செய்திக்குறிப்பு ஒன்றை ஹிந்துவில் படித்தேன். ஆபத்தின் போது மனிதர்கள் மீண்டும் மனிதர்கள் ஆகி விடுகிறார்கள். மேலும் இம்முறை நிறைய இளைஞர்கள் சமூகவலைதளத்தின் உதவியுடன் வெள்ளநிவாரணத்துக்காக கடுமையாய் உழைத்தார்கள். அவர்களின் பணி மிகவும் வணங்கத்தக்கது. என் வீட்டைத் தேடியே இரண்டு முறை சில இளைஞர்கள் வந்து உதவி வேண்டுமா எனக் கேட்டுப் போனார்கள். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த இளைஞர்களைத் தான் உல்லாசத்திலும் கேளிக்கையிலும் மட்டும் ஈடுபடும் பொறுப்பற்றவர்கள், சமூக உணர்வற்றவர்கள் என சித்தரித்து வந்தார்கள். ஆனால் உண்மையில் நம் அரசியல்வாதிகளை விட இவர்கள் எவ்வளவு மகத்தானவர்கள் என இந்த மழைவெள்ள நிரூபித்து விட்டது.

மறுநாள் காலை மாமியார் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். கதவைத் திறந்ததும் அவர் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த வெள்ளக்கொடுமைகள், நெருக்கடிகளுக்கு இடையே இப்படி ஒன்று இருப்பதையே மறந்து விட்டேன். மனைவி எனக்கு இரண்டு புத்தகங்களை பரிசளித்தாள். அருந்ததி ராயின் Listening to Grasshoppers மற்றும் தேவ்தத் பட்நாயக்கின் Myth=Mithya.
 ராயின் புத்தகத்தில் உள்ள பல கட்டுரைகளை ஏற்கனவே பத்திரிகைகளில் படித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை புரட்டி பார்த்தேன். ”ஆஸாதி” அது வெளியான புதிதில் என்னை கவர்ந்த கட்டுரை. சூட்சுமம், தர்க்கம் ஏதும் பார்க்காமல் சும்மா தரையில் இறங்கி அடிக்கும் துணிச்சலான எழுத்து. ஆனால் அதேவேளை கொஞ்சம் மிகையான தட்டையான வெறும் உணர்ச்சி கொப்புளிப்பு எழுத்தும் தான். புஷ் இந்தியாவுக்கு வந்து செங்கோட்டையில் பேசுவது பற்றி ஒரு கட்டுரை. ”இந்தியாவின் கோடானுகோடி மக்களுடன் நானும் புஷ் இந்தியாவுக்கு வருவதை எதிர்க்கிறேன்” என முடித்திருந்தார். ஆனால் இந்தியாவின் தொண்ணூறு சதவீதம் மக்களுக்கு புஷ் என்றால் யாரென்றே தெரியாது. பொதுவாக அரசியல் பேசும் சிறுபான்மை அறிவுஜீவுகளுக்கு உள்ள மன்னபிரமை தான் இது. மற்றபடி அவரது மொழியும் பாணியும் இன்று பேஸ்புக்கில் எழுதும் பலரும் மிக சாதாரணமாய் பயன்படுத்துவது தான். அவரை போல் அரசியல் எழுதும் நூற்றுக்கணக்கான பேர் வந்து விட்டார்கள். வினவு எழுதுவதை ஆங்கிலத்தில் மொழியாக்கினால் அது அருந்ததி ராய் போலவே இருக்கும்.
தேவதத் பட்நாயக் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். மகாபாரதம் மற்றும் ராமாயணம் பற்றின அவரது புத்தகங்கள் நிச்சயம் படிக்க வேண்டியவை. மனைவி பரிசளித்த அவரது நூலை இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.
பிறந்த நாள் கொண்டாட்டம் என்றாலே பேஸ்புக் தானே நமக்கெல்லாம் ஒரே தஞ்சம். இவ்வருடம் பிறந்ததினம் இணையமோ செல்பேசி தொடர்போ இல்லாமல் சத்தமேயின்றி முடிந்து விட்டது என நினைத்தேன். இன்று பேஸ்புக் வந்ததும் நிறைய நண்பர்கள் குறுஞ்செய்தியில் வாழ்த்து அனுப்பி இருப்பதை பார்த்தேன். ஒவ்வொருவராய் நன்றி சொல்லி விட்டு வருகிறேன். இன்னும் முடியவில்லை. அனைவருக்கும் ஒரு ஒட்டுமொத்த நன்றியை இங்கே சொல்லிக் கொள்கிறேன்.
நான் இளங்கலை ஆங்கில இலக்கியம் படிக்கும் போது ஒரு பேராசிரியர் இருந்தார். கோபக்காரர். அமெரிக்காவில் சென்று படித்து வந்தவர். எப்போது டை கட்டி இறுக்கமாய் கடுமையாய் இருப்பார். அவருக்கு என்னை பார்த்தாலே பிடிக்காது. ஒருமுறை நாங்கள் நண்பர்கள் சேர்ந்து ஒரு பத்திரிகை கொண்டு வந்தோம். Strings என பெயர். அதை நான் தான் எடிட் செய்தேன். கவிதைகளுக்கு படமாக பழைய ஐரோப்பிய ஓவியங்களை சேர்த்திருந்தேன். கொஞ்சம் உடம்பு தெரிகிற மாதிரி புஷ்டியாக கிரேக்க தேவதைகள் தோன்றும் ஓவியங்கள். இந்த பேராசிரியர் ஒழுக்கவாதி வேறு. அவர் என்னை திட்டி தீர்த்து விட்டார். இது பத்திரிகை அல்ல, போர்னோ புத்தகம் என்று சொல்லி கிழித்தே போட்டு விட்டார். எனக்கும் அவருக்கும் ஏதாவது ஒரு முரண் ஓடிக் கொண்டே இருக்கும். ஒருமுறை அவர் வகுப்பில் நைப்பாலில் area of darkness புத்தகத்தை பாடமெடுத்தார். என்னிடம் அது பற்றி அடுத்த வகுப்பில் பேசச் சொன்னார். நான் அதை கடுமையாய் தாக்கி பேசினேன். அவர் அதை குறிப்பெடுத்துக் கொண்டு அதற்கு அடுத்த வகுப்பில் என் ஒவ்வொரு கருத்துக்கும் பதில் சொல்லிப் போனார். என்னையெல்லாம் ஏன் பொருட்படுத்தி பதில் சொல்கிறார் என வேடிக்கையாய் தோன்றியது. ஆனால் அவர் அப்படித் தான். எந்த வம்பென்றாலும் ஒரு கைபார்க்காமல் விட மாட்டார். அதுவும் என் நிழலைப் பார்த்தாலே குத்துச்சண்டைக்கு தயாராகி விடுவார். பேஸ்புக் வந்த பின் அவருக்கு நட்பு அழைத்து விடுத்து இணைந்து கொண்டேன். இவ்வருடம் அவரும் எனக்கு குறுஞ்செய்தியில் வாழ்த்து சொல்லி இருந்தார். எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த வாழ்த்து அது தான்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...