| கீர்க்கெகாட் |
நண்பர் லஷ்மி கணபதி கலை, இலக்கியம்,
விளையாட்டு ஆகியவற்றின் நோக்கம் பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார். அக்கேள்வி
மற்றும் என் பதிலை கீழே பார்க்கலாம்.
வணக்கம் அபிலாஷ்! எனக்கு
ஒரு கேள்வி!!! மக்கள்
கொண்டாட்டங்களில், கேளிக்கைகளில், இசையின் சிலாகிப்பில், விளையாட்டின்
வெற்றிக் களிப்பில் ஈடுபடும் போதோ அல்லது பேசி புளகாங்கிதம் அடையும்போதோ எனக்கு நாம் அனைவரும் பிளாட்டோ வின் குகை மனிதர்களில் ஒருவர் தானோ என்று சந்தேகம் வருகிறது.
நாமாய் ஒன்றை கட்டமைத்து விட்டு பிறகு இது தான் உச்சம் மகிழ்ச்சி என்று தம்பட்டம் அடிக்கிரோமோ அல்லது பீத்திககொள்கிறோமோ என்று தோன்றுகிறது. குகை
மனிதர்கள் சுவரில் நிழல் வந்தால் ஆனந்த கூச்சலிட்டார்கள் நாம் ரஜினிகாந்தை பார்த்து பீத்தோவனின் இசையை கேட்டு மயிர் கூச்சலிடுகிறோம் என்று எனக்கு தோன்றுகிறது. கார்ல்
சாகன் தன்னுடைய "மங்கலான நீல புள்ளி(PALE BLUE DOT)" நூலில் இதைத்தான் சொள்ளவருகிரரோ "உன் இருப்பிடம் இப்பேரண்டத்தில் ஒரு ஒரு கொசுறு நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள் அண்டம் கவலைப்படாது" என்கிற தொனியில் பேசி இருப்பார் தத்துவமும் அறிவியலும் ஒன்றுமே இல்லை என சொல்லும் ஒன்றை அடைய ஏன் இவ்வளவு களபேரங்கள்?
என் மனதில் இருக்கும் நீண்ட கால கேள்விதான் இது ஒரு வேளை முட்டாள்தனமாகவும் குழந்தைதனமாகவும் ஏன் எனது தனிப்பட்ட கேள்வியாகவும் இருக்கலாம் எனக்கு தெரியவில்லை. உங்களின்
கட்டுரைகளில் பற்பல வாழ்வியல் சிக்கல்களுக்கு விடை கண்டுள்ளேன் ஆகவே தான் இந்த வினாவை எழுப்பினேன்.
அன்புள்ள லஷ்மி கணபதி
நீங்கள் எழுப்பி இருப்பது முக்கியமான
கேள்வியே. தத்துவார்த்தமான கேள்வி என்பதால் தத்துவம் சார்ந்தே பதில் அளிக்கிறேன்.
உங்கள் கேள்வி வாழ்க்கையின் முழுமை
பற்றியது என ஊகிக்கிறேன். நாம் அறிகிற வாழ்க்கை முழுமையற்றது என்கிறீர்கள். அதற்காகவே
பிளேட்டோவின் குகை மனிதர் உதாரணத்தை அளிக்கிறீர்கள். வாழ்க்கை முழுமையானதா என்பதற்குள்
போகும் முன் ஏன் வாழ்க்கை முழுமையற்றது என கூறுகிறார்கள் எனப் பார்ப்போம். கிரேக்க
தத்துவ ஞானிகளில் வாழ்க்கையை அகவயமாய் அணுகி, மனம் எப்படி வாழ்க்கையை கட்டமைக்கிறது
என முதலில் அவதானித்தவர் பிளேட்டோ என்கிறார்கள். அவரை ஒரு கருத்துமுதல்வாதி
(idealist) எனலாம். அவர் தான் வாழ்க்கையை எதிரிடையாக பார்க்கும் பழக்கத்தையும் ஆரம்பித்து
வைத்தார். உண்மை × போலி என்று தான் அவர் வாழ்க்கையை அணுகினார். நாம் உண்மையென நினைப்பது
ஒரு காட்சி மயக்கம் என்றார். மனம் தான் விரும்பியதை மட்டுமே பார்க்கிறது. அதையே உண்மை
என நினைக்கிறது. அது உண்மை அல்ல. உண்மையின் நிழல். உண்மை நம் பார்வையை கடந்து வெகு
தொலைவில் இருக்கிறது. தர்க்கம் மூலம் ஓரளவு உண்மையான உண்மையை நெருங்க முடியும் என பிளேட்டோ
நினைத்தார். அதுவும் ஓரளவு தான். தான் உண்மை என கண்டடைந்ததையே பிளேட்டோ நம்பவில்லை.
Dialogues புத்தகம் முழுக்க அவர் தனது பார்வையை பிறரிடம் முன்வைத்து பல மாற்று கருத்துக்களை
தொடர்ந்து பரிசீலிப்பதைக் காணலாம். உண்மை தேடலை பிளேட்டோ ஒரு முடிவற்ற தேடலாகத் தான்
பார்த்தார். ஆனால் முக்கியமாக, அவர் ஒரு அசலான உண்மை உள்ளது என நம்பினார். இந்த அசலான
உண்மையை நாம் கடவுள் என புரிந்து கொள்ளலாம்.
பத்தாவது நூற்றாண்டுக்கு பிறகு
வந்த தத்துவஞானிகள் பிளேட்டோவின் இதே எதிரிடை சரடை தான் பின் தொடர்ந்தனர். இந்த மரபின்
உச்சபட்ச சாதனையாக ஹெகலின் dialecticsஐ சொல்லலாம். இன்றும் ஹெகலின் வழத்தோன்றலாய் கிட்டத்தட்ட
பிளேட்டோவை போல் சிந்திக்கும் தத்துவஞானிகள் பின்நவீனத்துவத்துக்கு உள்ளும் இருக்கிறார்கள்,
ஷிஷெக் போல. பிளேட்டோவின் ஐரோப்பிய வழித்தோன்றல்களில் ஒரு சாரார் அசல் உண்மை இல்லை
ஆனால், பிரதி மட்டுமே உண்டு என கூறினர். இவர்களே இருத்தலியவாதிகள்
(existentialists). சோரன் கீர்க்கெகாட், சார்த்தர் போன்றோரை உதாரணமாய் சொல்லலாம்.
கீர்க்கெகாட் வாழ்க்கையில் துயரம் என்பது தவிர்க்க
இயலாதது என்றார். ஒரு மனிதன் வாழ்க்கையிலும் குடும்பத்திலும் நிறைவாக இருப்பான். சமூகத்தில்
அவனை மதிப்பார்கள், கொண்டாடுவார்கள். ஆனாலும் அவன் தனக்குள் நிறைவற்றவனாக, அதிருப்தியானவனாய்
இருப்பான். இதை உணராதவன் கேளிக்கைகளில் தன்னை தொலைப்பான். உணர்ந்தவன் துக்கத்தில் ஆழ்வான்.
இது ஏன் என கீர்க்கெகாட் யோசித்தார். முழுமையான மகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் பெரும்
வெளி இயக்கத்துடன் நம் மனம் ஒத்திசைவு கொள்ளும் போது உண்டாகிற ஒன்று. வாழ்க்கையின்
இந்த பேரியக்கமே ஒரு பொய் தானோ என மனிதனுக்கு ஐயம் ஏற்படுகிற போது அவன் எதனோடும் ஒத்திசைவு
கொள்ள முடியாதவனாக ஆகிறான். மிக எளிமையாக சொன்னால், கடவுள் இல்லாத உலகில் மனிதன் தன்
மன மயக்கங்களுடன் மட்டும் போராடிக் கொண்டு இருக்கிறான் என்பது அவரது பார்வை. நாம் உண்மை
என ஒன்றையும் உண்மையின் பிரதி என ஒன்றையும் நினைக்கிறோம் என கீர்க்கெகாட் ஏற்கிறார்.
அவர் மாறுபடுவது எங்கெனில் உண்மை என நாம் நினைப்பதே உண்மையின் நிழல் தான் என்பதில்
தான். ஆக நாம் ஒரு நிழலின் பிரதிபலிப்பை தான் உண்மை என நம்பிக் கொண்டிருக்கிறோம். இந்த
நிழலுக்கு பின்னால் சென்றால் அங்கு உண்மை இருக்குமா என நமக்குத் தெரியாது. ஒருவேளை
அங்கும் மற்றொரு நிழலே இருக்கலாம். வரிசையாய் அடுக்கி வைத்த கண்ணாடிகளை கற்பனை செய்யுங்கள்.
ஒன்றை ஒன்று கண்ணாடிகள் பிரதிபலித்தபடி இருக்கின்றன. இந்த கண்ணாடிகளில் எல்லாம் ஒரு
முகம் மட்டும் தெரிகிறது. ஆனால் இம்முகம் எங்கே உள்ளது என நமக்குத் தெரியாது. எவ்வளவு
பின்னால் போனாலும் நம்மால் முகத்தின் பிரதிபிம்பத்தை மட்டுமே காண இயலும். இது மனிதனுக்கு
கடுமையான மன அவஸ்தையை, பதற்றத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் கீர்க்கெகாட் தனது The
Sickness Unto Death நூலில்.
இந்த பின்புலத்தில் தான் உங்கள்
கேள்வியைப் பார்க்கிறேன். இலக்கியம், சினிமா போன்ற கலைகளும் பிற வாழ்க்கை தேடல்கள்
வழி நம் என்றும் முழு உண்மையை நாம் அறிய முடியாது. அதனால் அவை வியர்த்தம் தானே என்கிறீர்கள்.
என் கேள்வி இது தான் – வாழ்க்கை நம் அறிதலுக்கு அப்பாலானது என உங்களுக்கு எப்படி தெரியும்?
வாழ்க்கையில் அறிய வேண்டிய நம்மைக் கடந்த ஒரு உன்னத மெய்நிலை உண்டென எப்படித் தெரியும்?
கலைகளும் விளையாட்டுகளும் வாழ்வின் இயக்கத்துடன் ஒரு சமநிலை கொள்ள நம்மை உதவுகின்றன.
ஆனால் அதை நம்மால் தக்க வைக்க இயல்வதில்லை. ஒருவேளை நம்மைக் கடந்து செல்ல வேண்டும்
எனும் பிரக்ஞை தான் நமது முதல் எதிரியாக இருக்கலாம். சும்மா இருப்பதன் மகத்துவம் பற்றி
நம் இந்திய தத்துவங்களும் ஜென்னும் பேசுகிறது. எதையும் தேடிச் செல்ல வேண்டியதில்லை;
நாம் தேடிச் செல்வதன் ஒரு பகுதியாக ஏற்கனவே இருக்கிறோம் என கூறுகின்றன. இவ்விசயத்தில்
நாம் ஐரோப்பிய மற்றும் ஆசிய பார்வைகள் அளிக்கும் ஒரு கோணங்களையும் கவனிக்க வேண்டும்.
எனக்கு இருத்தலியவாதிகளிடம் உள்ள கேள்வியே கடவுள் இல்லை என எப்படி அவர்களுக்கு உறுதியாய்
தெரியும் என்பது தான். இல்லை என்பதை ஏன் உறுதியாய் நம்ப வேண்டும்? உண்டு என்பதையும்
ஏன் உறுதியாய் பிடித்துக் கொள்ள வேண்டும்?
இந்த விவாதத்தில் நான் அசோகமித்திரனின்
பக்கம் தான். மூன்று வேளை சாப்பிட்டு ஒரு சின்ன இடத்தை நாம் வாழ்வதற்கு என அடைந்து
அதை தக்க வைப்பதே பெரும் போராட்டமாய் இருக்கிறது. வயிறு முழுமையாய் நிரம்புமா என கேள்வியில்
எனக்கு மெய்நிலை நோக்கிய தேடல் முழுமையானதா என்கிற கேள்வி மறந்து போகிறது. அடுத்த இருபது
வருடங்களில் நாம் ஆயிரம் ரூபாய் கொடுத்து மதிய உணவு வாங்கித் தின்ன வேண்டி வரும். அப்போது
எனக்கு உடல் நலமில்லாமல் ஆகி வேலை செய்து சம்பாதிக்க முடியாமல் ஆனால் என் நிலை என்ன
என கவலை கொள்கிறேன். மருந்து வாங்க, உணவு உண்ண வழியில்லாமல் தவித்து சாகிற நிலை வருமா
என யோசிக்கிறேன். இந்த பிரபஞ்சத்தில் நான் சின்ன புள்ளியாய் இருந்தால் என்ன பெரிய புள்ளியாய்
இருந்தால் என்ன? இந்த புள்ளியின் வயிற்றுக்குள் தானே எல்லாம் இருக்கிறது. வாழ்க்கைப்பாட்டுக்கான
போராட்டத்தில் எனக்கு மெய்தேடல் சரியானதா போன்ற கேள்விகள் எல்லாம் எழுவதில்லை. இம்மாதிரியான மீபொருண்மை
கேள்விகளுக்கான விடை சிலநேரம் மிக பௌதிகமான, வயிற்றுப் பசியை சார்ந்த வாழ்வில் உள்ளது
என நினைக்கிறேன். மீபொருண்மை சிக்கல்களைப் பற்றி யோசிக்க நேரமே இன்றி ஓடிக் கொண்டே
இருப்பதனாலே நாம் சில தத்துவ நெருக்கடிகளில் இருந்து தப்பித்து நிறைவாக, தவிப்பின்றி
இருக்க முடிகிறது. வயிற்றை நோக்கி மனம் குவிவதால் நம்மையும் அறியாமல் ஒரு நிலையமைதி,
நிதானம் கிடைத்து விடுகிறது.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்