- பேஸ்புக்கில் ஒரு நண்பர் என்னிடம்
ஆங்கிலத்தில் வாசிப்பது பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தார். அவரால் தமிழில் நாவல்களை
சரளமாய் வாசிக்க இயல்கிறது. ஆனால் ஆங்கிலத்தில் வாசிக்கையில் விரைவில் ஆர்வம் இழக்கிறார்.
தங்குதடங்கலின்றி வாசிக்க இயலவில்லை. ஆங்கிலத்திலும் சரளமாய் வாசிப்பது எப்படி? அவர்
கூடுதலாய் இரு தகவல்கள் தந்திருந்தார். அவர் கால்நடைமருத்துவத்தில் முனைவர் பட்ட ஆய்வாளர்.
பள்ளியில் ஆங்கிலம் வழி கல்வி பயின்றவர். ஆக அவருக்கு ஆங்கிலப் பழக்கம் உண்டு. மொழியை
தாண்டி வேறு ஒரு சிக்கல் இருக்க வேண்டும்.
அவருக்கான பதிலை இங்கே உங்களிடம்
பகிரப் போவதில்லை. ஆங்கிலத்தில் வாசிக்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரதான தடை சொற்களின்
புரிதல் சம்மந்தபட்டது அல்ல என தோன்றுகிறது.
ஆங்கிலம் கொஞ்சம் வறட்சியான மொழி.
அதாவது ஆங்கிலத்தில் தழுதழுப்பது, கண்ணீர் மல்கல், உரக்க புலம்பி அழுதல், நெகிழ்ந்து
கூவுதல், சிலாகித்தல் குறைவு. இதை பள்ளி/கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வகுப்புகளில்
உட்கார்ந்தவர்கள் உணரலாம். தமிழாசிரியர்கள் அன்னியோன்யமாய் மிக நெருக்கமாய் தோன்றுவார்கள்.
உணர்வுரீதியாய் பேசுவார்கள். உங்களை சிரிக்கவும் அழவும் கோபப்படவும் வைப்பார்கள். நான்
குருநானக் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பணி செய்கையில் அங்கே தமிழ்த்துறையில் ஜெய்கணேஷ்
என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அவர் எல்லா தமிழாசிரியர்களையும் போல் வகுப்பில் அமர்க்களப்படுத்துவார்.
அவர் கூடுதலாய் ஒரு நடிகரும் கூட. அதனால் அவ்வப்போது நடித்து காட்டுவார். மாணவர்கள்
மத்தியில் அவர் ஒரு கதாநாயகன் போல் இருப்பார். வகுப்புக்கு வெளியே அவருடன் போகையில்
மாணவர்கள் அவரைக் கண்டு ஓடி வைத்து கையை பற்றி அன்பாய் உரையாடுவார்கள். ஆங்கில ஆசிரியர்களிடம்
உணர முடியாத ஒரு சகஜத்தன்மையை அவரிடம் உணர்ந்தார்கள். இதற்கு காரணம் குறிப்பிட்ட ஆசிரியரின்
குணாதசியம் மட்டுமல்ல. தமிழில் பேச ஆரம்பித்ததும் அது நம்முடைய உணர்ச்சிகரமான, நாடகீயமான
மனக்கட்டமைப்புடன் சரியாக பொருந்தி விடுகிறது. பாலுக்காய் அழும் குழந்தை அம்மா கையில்
தூக்கிக் கொண்டதுமே அமைதியாகுமே அது போல் மாணவர்கள் தமிழ் கேட்கையில் ஆகி விடுவார்கள்.
நான் அற்புதமான ஆங்கில ஆசிரியர்களை
பார்த்திருக்கிறேன். மனதளவில் அவர்களும் தமிழாசிரியர்களை போல உணர்ச்சி கொழுந்துகள்
தான். ஆனால் ஆங்கிலத்தில் பேசத் துவங்கியதும் தர்க்கரீதியாய் சீரான சிந்தனை அமைப்பு
கொண்டதாய் அவர்களின் மொழி மாறி விடும். உயிரியல் ஆய்வகத்தில் கரப்பான்பூச்சியை அங்குலம்
அங்குலமாய் பிரித்து அடுக்கி பெயர் வைப்பது போல் அவர்கள் தன்னிச்சையாய் ஒரு பாடத்தை
கருணையின்றி கூறுபோடத் துவங்குவார்கள். தமிழில் பேசும் போது அவர்கள் வேறு ஆளாக இருப்பார்கள்.
ஆனால் வகுப்பில் ஆங்கிலம் பேசத் துவங்கியதும் உருமாறி விடுவார்கள். எவ்வளவு அற்புதமான
ஆங்கில ஆசிரியராக இருந்தாலும் மாணவர்களிடம் அவர்கள் சற்று விலகித் தான் இருப்பார்கள்.
இந்தியர்கள் எழுதும் ஆங்கில நாவல்களை
பாருங்கள். ஆர்.கெ நாராயண், சல்மான் ரஷ்டி, அருந்ததி ராய், கிரன் தேசாய், அமிதாவ் கோஷ்,
அரவிந்த் அடிகா, டேவிட் தாவிதார் ஆகியோரின் எழுத்தில் இந்திய மனதுக்கான கொந்தளிப்பும்,
தழுதழுப்பும் அங்கு இருக்காது. நகைமுரண், wit எனப்படும் நளினமான நக்கல், கராறாய் எதையும்
வகுத்துப் பார்க்கும் பார்வை, சற்றே விட்டேத்தியான தொனி ஆகியவை தான் பிரதானமாய் தெரியும்.
இதை அவர்கள் வாழ்க்கையில் இருந்து பெறுவதில்லை. உதாரணமாய் ஆர்.கெ நாராயண் அவருக்கு
பிந்தையை தலைமுறையினரான ரஷ்டி, அருந்ததி ராய், அமிதாவ் கோஷ் போல வெளிநாடுகளில் வாழ்ந்து
மேற்தட்டினருடன் புழங்கியவர் அல்ல. அவர் நம்மைப் போல் மத்திய வர்க்க வாழ்க்கையை தமிழகத்திலும்
கர்நாடகத்திலும் உள்ள தெருக்களில், வீடுகளில் அனுபவித்து அதையே எழுதினவர். ஆனால் ஆங்கிலத்துக்குள்
நுழைந்ததும் அவர் இந்த இந்திய வாழ்க்கையை மூக்குக் கண்ணாடியை தூக்கி விநோதமாய் பார்க்கும்
பிரித்தானிய பிரபுவாக மாறி விடுவார். வி.எஸ். நைப்பால் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த
இந்தியர். ஆனால் அந்த நாட்டு மக்களின் வண்ணமயமான கொண்டாட்டமான கலாச்சாரம் அவரிடம் வெளிப்படாது.
எதையும் சிடுசிடுப்பாய் சந்தேகமாய் பார்க்கும், மட்டம் தட்ட நினைக்கும் பிரித்தானிய
தொனியும், கராறான கட்டுப்பாடான சொற்சேர்க்கையுமே தெரியும்.
இந்த ஆங்கில இந்திய எழுத்தாளர்களின்
ஆங்கிலத்திலேயே கூட ஒரு விசித்திரம் உண்டு. இருபதாம் நூற்றாண்டுக்கு பிறகு உலகு முழுக்க
கவனிக்கப்பட்ட ஆங்கிலம் பிரித்தானிய ஆங்கிலம் அல்ல – அமெரிக்க ஆங்கிலம். இக்காலகட்டத்தில்
அமெரிக்கர்கள் வளர்ந்து வரும் மற்றும் மூன்றாம் உலக நாடுகளை ’கலாச்சார ரீதியாய்’ காலனிய
ஆதிக்கம் செய்தார்கள் என்றே சொல்லலாம். நம்முடைய இளைஞர்களின் ஆங்கிலத்தை பார்த்தாலே
அதில் அமெரிக்க தாக்கம் தான் தூக்கலாய் இருக்கும். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில்
நாம் பிரித்தானிய ஆங்கிலத்தை தான் கற்கிறோம். பிரித்தானிய ஆங்கில இலக்கியம் தான் பிரதானமாய்
படிக்கிறோம். அமெரிக்க இலக்கியத்துக்கு இரண்டாம் இடம் தான்.
அமெரிக்க ஆங்கிலமும் கலாச்சாரமும் இந்திய பண்பாட்டுக்கு
சற்றே நெருக்கமானது. அடாவடித்தனமும் ஆர்ப்பாட்டமும் நிரம்பியது. என்ன நம்மளவுக்கு நெகிழ
மாட்டார்கள். நான் குறிப்பிட்ட இந்திய ஆங்கில எழுத்தாளர்களிடம் பிரித்தானிய ஆங்கிலத்தின்
அமர்த்தலான, கனவான் தனமான தொனியும் போக்கும் தான் அதிகமாய் இருக்கும். அமெரிக்க ஆங்கிலத்தின்
வண்ணமயத்தை, மரியாதையற்ற போக்கிரித்தனமான தொனியை அதிகம் காண முடியாது. அதாவது இங்கிலாந்தின்
பௌதிகமான தாக்கம் இன்று அதிகம் இல்லை என்றாலும், அமெரிக்கா கலாச்சார ரீதியாய் உலகை
ஆக்கிமத்து வந்தாலும், ஆங்கிலத்தில் எழுத்தப்படும் பிறநாட்டு இலக்கியங்களில் இன்று
இங்கிலாந்தின் பண்பாடு தான் வெளிப்படுகிறது. இந்நாடுகள் முந்தைய பிரித்தானிய காலனிகள்
என்பது கவனிக்கத்தது. இந்த இலக்கியத்தையும் பின்காலனிய இலக்கியம் என்று தான் அழைக்கிறார்கள்.
தமிழின் பல முக்கியமான எழுத்தாளர்கள்
ஆங்கிலத்தின் தாக்கம் கொண்டவர்கள். அசோகமித்திரனிடம் ஹெமிங்வே, ரேமண்ட் கார்வர் போன்ற
அமெரிக்க எழுத்தாளர்களின் தாக்கம் உண்டு. குறிப்பாய் சொற்சிக்கனம், நேரடியான விவரணை,
எளிமையான கூர்மையான உரையாடல்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் தொனியில்
அவர் தமிழில் எழுதும் ஒரு ஆங்கில எழுத்தாளர் தான். ஆனால் இந்த அந்நியத்தன்மை தெரியாமல்
இருப்பதற்கு அவர் சென்னையில் உள்ள பிராமண மத்திய வர்க்க வாழ்க்கையை அந்தரங்கமான புரிதலுடன்
எழுதுவதும், வட்டார வழக்கை பயன்படுத்துவதும் காரணம். இருந்தாலும் அவரை ல.சா.ரா, தி.ஜா
ஆகியோருடன் ஒப்பிட்டால் வித்தியாசம் பளிச்சென தெரிந்து விடும். ஆனால் புனைவில் வெளிப்படும்
பண்பாட்டை பொறுத்த மட்டில் அசோகமித்திரனிடம் அமெரிக்கத்தனம் அல்ல ஒரு விக்டோரிய ஆங்கில
தோரணை தான் தெரியும். அசோகமித்திரன் எழுதியுள்ள ஆங்கில கட்டுரைகளில் இது இன்னும் துல்லியமாய்
தெரியும்.
சுந்தர ராமசாமியையும் நாம் இவ்விசயத்தில்
அசோகமித்திரனின் பக்கத்தில் வைக்கலாம். சு.ராவுடையது இயல்பான தமிழ் அல்ல. அது பிரக்ஞைபூர்வமாய்
கட்டமைப்பட்டது. தமிழ் உரைநடையில் சிலாக்கியமான நடை கொண்ட சுஜாதாவின் சொற்றொடர்களிலும்
ஒரு மொழியாக்க தன்மை உண்டு. அவர் பல ஆங்கில சொற்றொடர்களை மொழிபெயர்த்து தனதான வகையில்
உருமாற்றி, உறுத்தலின்றி பயன்படுத்துவார்.
“நான் ஆத்மா” என்றேன். அவன் கையை தேடிக் கொண்டு தயங்காமல் தன்
கையை நீட்டிக் குலுக்கினான்.” (”பாலம்”)
இந்த சொற்றொடரில் ” கையை தேடிக்
கொண்டு தயங்காமல்” என்பதில் ஒரு ஆங்கிலத்தன்மை உள்ளது.
சுஜாதாவின் வாக்கிய அமைப்பை பார்ப்போம்:
“சிலருக்கு லாட்டரியில் பரிசு
விழுகிறது. சிலரை பஸ் ஸ்டாண்டில் பிரபல இயக்குநர் பார்த்து “அடுத்த அமாவாசை ஷூட்டிங்குக்கு
வா” என்கிறார். இப்படி திடீரென தனிமனிதர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஏதோ ஒரு
வகையில் பிரசித்தி பெறுகிறார்கள். அம்மாதிரி நானும் பிரசித்தமானேன். என்னை ஒரு குதிரை
கடித்ததால்!” (”குதிரை”)
தன்னிலையில் சொல்லப்படும் இந்த
மொழியில் தன்னிலையில் உள்ள உணர்ச்சிகள் இல்லை. ஒரு வறட்டுத்தனமான விலகல் உள்ளது. அது
துருத்தி தெரியாததற்கு சுஜாதாவின் நகைச்சுவை காரணம். நான்கு, ஐந்து வார்த்தைகள் கொண்ட
அவரது குறுகிய வாக்கியங்களை கவனியுங்கள். இவற்றை இலக்கணத்தில் simple sentences என்கிறார்கள்.
ஆனால் தமிழ் பேச்சில் simple sentences மிகவும் குறைவு. நம்மிடைய இரு சிறுவாக்கியங்களை
ஒட்டி ஒன்றாய் பயன்படுத்தும் compound sentences அதிகம். உதாரணமாய் “நேத்து ரேஷன் வாங்க
போனேனா, அங்கே ஒரே கூட்டம்”. குட்டி குட்டி சொற்றொடர்களில் எழுதுவது அமெரிக்க ஆங்கில
பாணி.
”அம்மாதிரி நானும் பிரசித்தமானேன்.
என்னை ஒரு குதிரை கடித்ததால்!” என்பதில் இரண்டாவது ’வாக்கியம்’ ஒரு முழு வாக்கியம்
அல்ல. அது வாக்கிய துண்டு. இப்படியான வாக்கிய துண்டுகள் தமிழில் அரிது. இந்த பத்தியில்
சுஜாதா எங்குமே ”நான்”, “என்” பயன்படுத்தி இருக்க மாட்டார். ஆனால் நேரடி தமிழில் நீங்கள்
இந்த இரண்டு சொற்களில்லாமல் புழங்குவது இல்லை. அதே போல், இந்த பத்தி புதுக்கவிதையின்
வடிவில் இருப்பதை கவனிக்கலாம். இதை கொஞ்சம் உதிர்த்து போட்டால் எப்படி தோன்றும் என
கற்பனை பண்ணுங்கள். சுஜாதாவின் அழகான தனித்துவமான நடை புதுக்கவிதையின் உத்திகள், அமெரிக்க
ஆங்கிலத்தின் வடிவம், அவரது மனப்பாங்கு ஆகியவை கலந்து உருவான ஒரு புது மொழி.
தொண்ணூறுகளில் தமிழில் லத்தீன்
அமெரிக்க கதைகள் மொழியாக்கம் மூலம் அறிமுகமாக அது நம் வாக்கிய அமைப்பை முழுக்க மாற்றியமைத்தது.
எஸ்.ரா மற்றும் கோணங்கியின் மொழி வசீகரமானது, கவித்துவமானது என்றாலும் சற்றே அந்நியமானது.
ரஜினியின் தமிழ் போன்றது. அதனாலே அவர்கள் உடனடியாய் கவனம் பெற்று கணிசமான வாசகப்பரப்பை
பெற்றார்கள். பால்யத்தில் நான் எஸ்.ராவின் கதைகளை படித்து அம்மொழி மீது காதலுற்றிருக்கிறேன்.
அவரது தமிழ் அக்காலத்தில் மொழியாக்கப்பட்ட மார்க்வெஸ், போர்ஹெஸ் போன்றோரின் மொழியை
போன்றே அடுக்கடுக்காய் நீளமாய் இருக்கும். இம்மாதிரி வாக்கியங்களை complex
sentences என்பார்கள். தான் அக்காலத்தில் மார்க்வெஸின் வாக்க்யங்களை அலகலகாய் அலசி
எந்த இடத்தில் எந்த சொல் வரும் என ஒரு டயரி முழுக்க எழுதி வைத்திருந்ததாய் எஸ்.ரா என்னிடம்
ஒருமுறை கூறினார். இரண்டாயிரத்துக்கு பிறகு இந்த மார்க்வெஸ் தாக்கத்தில் இருந்து எஸ்.ரா
விடுபட்டு இன்னும் துலக்கமான கூர்மையான மொழியை அடைந்து விட்டார். ஆனால் கோணங்கி விடுபடவில்லை.
எஸ்.ரா, கோணங்கி மற்றும் மொழியாக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களால் தூண்டுதல்
பெற்று எழுத வந்த அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்களான லஷ்மி சரவணகுமார், ஜெ.பி சாணகியா,
மற்றும் எஸ்.செந்தில்குமாரின் மொழியும் இவ்வாறே complex வாக்கியங்களால் நிறைந்தது.
உதாரணமாய் ஜெ.பி சாணக்யாவின்
“கறுப்புக்குதிரைகள்” கதையில் இருந்து:
“வெளியில் சுற்றித் திரியும் போது
குதிரையின் ஞாபகத்தில் உச்சரிக்கும் தாளங்கள் காட்டில் விழுந்த விதைகளைப் போலக் கம்பீரத்துடன்
பசும் மண்ணில் வளர்ந்தோங்கிக் கொண்டிருந்தன”
இந்த வாக்கியம் உங்களுக்கு முதலில்
படித்ததுமே புரியாது. ஏனென்றால் இதன் complex வடிவம் தமிழுக்கு உரித்தானது அல்ல. இந்த
ஒரு வாக்கியத்தினுள் மூன்றில் இருந்து நான்கு வாக்கியங்கள் பேனாகத்தி போல் மடிந்து
இருக்கின்றன.
1.
குதிரை வெளியில் சுற்றித் திரியும் போது
2.
அது தன் ஞாபகத்தில் தாளங்களை உச்சரிக்கும்
3.
அத்தாளங்கள் காட்டில் விதைகளைப் போல விழும்
4.
அவை கம்பீரத்துடன்
பசும் மண்ணில் வளர்ந்தோங்கின
மேலும்
ஒரு உதாரணம்.
“தனக்காக
கிடத்தப்படும் படுக்கையில் நெடுநாள் பாதுகாக்கப்படும் சவத்தின் துர்வாடையினையும் ஸ்ர்ப்பங்கள்
புணர்கையில் வெளிப்படும் மூர்க்கமும் பின்னிக்கிடந்ததாய் உணர்ந்தவனுக்கு கைவிரல்கள்
மெலிந்து உதிரம் கட்டிப்போயிருந்தது” (லஷ்மி சரவணகுமார், “நீலநதி”)
இவ்வாக்கியத்தின்
சிக்கல் ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் செயப்பாட்டு வினையில் உள்ள “தனக்காக
கிடத்தப்படும்” என்பதில் உள்ளது. “அவன் தான் கிடந்த படுக்கையில்” என்றிருந்தால் இன்னும்
எளிது. அதே போல் “கைவிரல்கள் மெலிந்து உதிரம் கட்டிப்போயிருந்தது” என்பதை உடைத்து தனிவாக்கியம்
ஆக்கினால் இன்னும் சுலபமாகும். செயப்பாட்டு வினை முறையை லஷ்மி சரவணகுமார் மொழியாக்க
கதைகளின் தாக்கத்தால் பெற்றிருக்க வேண்டும்.
இப்படியான
தாக்கத்தை நான் ஒரு குற்றம் குறையாக பார்க்கவில்லை. ஒரு எழுத்தாளனின் மொழி அப்படியாக
அச்சுபிசகாமல் மக்களிடம் இருந்து எடுக்கப்படுவதல்ல. அது அவனால் கட்டமைப்படுவது. அவனுக்கு
மட்டுமே உரித்தானது. உதாரணமாய் தான் பயன்படுத்தும் குமரிமாவட்ட வட்டார தமிழ் எங்குமே
பேசப்படுகிற ஒன்றல்ல; அது தான் உருவாக்கினது என்று ஜெயமோகன் கூறுகிறார். ஆங்கிலத் தாக்கமே
இல்லாதது போல் தெரியும் வட்டார வழக்கு எழுத்தாளர்களின் தமிழும் செயற்கையாய் உருவாக்கப்பட்டது
தான். ஆனால் ஒரே வித்தியாசம் சிலர் சூட்சுமமாய் அறிகுறிகளை மறைத்து விடுகிறார்கள்.
சிலர் தம் மொழியில் படியும் லிப்ஸ்டிக் உதட்டுக் கறையை அழிக்க மறந்து விடுகிறார்கள்.
அவ்வளவு தான்.
பி.ஏ
கிருஷ்ணன் தன் நாவல்களை முதலில் ஆங்கிலத்தில் எழுதி விட்டு பிறகு தமிழாக்கி விடுவார்.
அவரது தமிழ் அழகானது. குறும்பும் துள்ளலும் கொண்டது. ஆனால் அதன் தொனி ஆங்கில இந்திய
எழுத்தாளர்களுக்கு உரியது. அதே போல் சாரு நிவேதிதாவின் மொழிநடை உருவான முறையும் வித்தியாசமானது.
சாரு நிவேதிதா லத்தீன் அமெரிக்க எழுத்தளர்களை தலைக்கு மேல் வைத்து கொண்டாடினாலும் அவரது
மொழியில் நீங்கள் ஸ்பானிய தாக்கத்தை காண இயலாது. சாருவின் மொழி வெகுஜன, பத்திரிகை தமிழில்
இருந்து உருவானது என ஜெயமோகன் அவதானிக்கிறார். அவரது சரளமும், வாசகரை உள்ளே இழுக்கும்
அரட்டைத்தன்மையும் இப்படி சிறுபத்திரிகை உலகுக்கு சம்மந்தமில்லாத ஓரிடத்தில் இருந்து
வருகிறது. சாரு மொழியை மட்டுமே இப்படி வெகுஜன தளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளவில்லை.
மொழியுடன் வெகுஜன மனநிலையும் அவருடன் ஒட்டிக் கொள்கிறது. ஐரோப்பிய இலக்கியத்தில் இருந்து
சாரு எதிர்கலாச்சார வாழ்க்கையை மட்டுமே எடுத்துக் கொள்கிறார். புக்காவஸ்கியும் வாரமலர்
கிசுகிசுவும் இணைந்து ஒரு தனித்துவமான சாரு பாணி உருவாகிறது. இதில் அவரது அரட்டையான
ஜாலி உலகம் இயல்பாகவும், எதிர்க்கலாச்சாரம் செயற்கையாக துருத்தியபடியும் இருக்கிறது.
ஆங்கிலமும்
தமிழும் இருவேறு மனநிலைகள். நீங்கள் இந்தியாவில் வசித்து அந்த அனுபவத்தை ஆங்கிலத்தில்
எழுதினாலும், தமிழகத்தில் வாழ்ந்து தமிழிலே எழுதினாலும், ஆங்கிலம் மற்றும் தமிழில்
ஒரேசமயம் எழுதினாலும் அது ஆங்கிலத்தன்மை கொண்டதாக இருக்கலாம். மொழி உங்களையே அறியாமல்
உங்கள் தொனியை, வாழ்க்கை பார்வையை மாற்றி விடுகிறது.
ஆங்கிலத்தில்
வாசிக்கையில் மற்றொரு பண்பாட்டை, மன அமைப்பை எதிர்கொள்கிறோம். அது நம் வாசிப்பை சற்றே
சிரமமானதாக்குகிறது. ஆனால் இது ஆங்கிலத்தில் வாசிக்கையில் மட்டும் தோன்றுகிறதல்ல. நவீன
தமிழ் எழுத்தாளர்களிடம் கச்சா பொருள் தமிழ் அனுபவமாய் இருந்தாலும் அவர்களது எழுத்தின்
தொனியும் நடையும் அதன் வண்ணத்தையும் சுவையும் மற்றொன்றாக்கி விடுகிறது. சென்னை பிராமணர்
ஹெமிங்வேயின் முகமூடி போடும் போது அங்கு ஒரு கலவையான மனநிலை வெளிப்படுகிறது. மதுரைக்கார
எழுத்தாளர் ஸ்பானிய எழுத்தாளர்களின் மொழியை ஒரு கறுப்புக்கண்ணாடியாய் ஸ்டைலாய் எடுத்தணியும்
போது அந்த வாழ்க்கையையும் சற்றே மாறி விடுகிறது.
யார்
தாக்கமும் இன்றி எழுத முடியாதா? முடியாது. ஹெமிங்வேயும், கார்வரும் அப்படியே அமெரிக்க
மொழியை, வாழ்க்கையை படியெடுத்து எழுதவில்லை. அங்கு உள்ள வாழ்க்கையை அங்கில்லாத ஒரு
புது பார்வையில் புது மொழியில் படைத்தார்கள். அவர்களுக்கு ஐரோப்பிய எழுத்தாளர்கள் ஆதர்சமாய்
இருந்தார்கள். மார்க்வெஸுக்கு பார்கனரும் ஹெமிங்வேயும் பெரும் தாக்கம் ஏற்படுத்தினார்கள்.
போர்ஹெஸை பாதித்த எழுத்தாளர்களின் பட்டியல் விசித்திரமானது. தமிழில் போர்ஹெஸை கொண்டாடியவர்கள்
யாரும் பொருட்படுத்தாத ஜி.கெ செஸ்டெர்டன், ஹெச்.ஜி வெல்ஸ், வில்கி காலின்ஸ் ஆகியோர்
அவருடைய ஆதர்ச நாயகர்கள். தஸ்தாவஸ்கி, காப்கா ஆகியோரும் அவரை பாதித்தார்கள்.
நாளை
தமிழ் எழுத்தாளர்கள் உலக பிரசித்தி பெற்றால் அவர்கள் ஆங்கில எழுத்தாளர்களால் படிக்கப்பட்டு
கொண்டாடப்பட்டால் நேர்மாறான விளைவு தோன்றலாம். தமிழ் வாழ்க்கையின் தாக்கத்தினால் உருமாறிய
ஒரு புது ஆங்கிலம் தோன்றலாம்.
நன்றி:
தீராநதி, நவம்பர், 2015