உயிர்மை எனக்கு சொந்த வீடு போல.
உயிர்மையில் எழுதின கட்டுரைகள் வழியாக அதன் பல முகங்களில் ஒன்றாகவே நான் அறியப்பட்டு
வருகிறேன். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு மாதம் கூட தவறாமல் உயிர்மையில் எழுதி வந்திருக்கிறேன்.
இம்மாதம் முதன்முறையாய் இடநெருக்கடி காரணமாய் என் கட்டுரை இடம்பெறவில்லை. இனியும் தொடர்ந்து
எழுதத் தான் போகிறேன் என்றாலும் ஒரு பெரிய உறவு முடிந்து போகிற கலக்கமும் பதற்றமும்
என்னை சட்டென தாக்கின. நீண்ட நேரமாய் இதழை கையில் வைத்து பார்த்தபடியே இருந்தேன்.
முதன்முறையாய்
என் கட்டுரை கவர் ஸ்டோரியாய் இடம் பெற்ற போது அத்தகவலை மனுஷ்யபுத்திரன் எனக்கு போனில்
அழைத்து தெரிவித்தார். அப்போது நான் கொடைக்கானலில் ஒரு காட்டேஜில் இருந்தேன். மலைச்சரிவின்
பக்கச்சுவர் ஒன்றை பிடித்து நின்றபடி அவரிடம் மனக்கிளர்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்த
காட்சி எனக்கு மீண்டும் மீண்டும் நினைவு வந்தது. உயிரோசையில் நான் எழுத ஆரம்பித்த காலத்தில்
அவர் என்னிடம் வாராவாரம் போனில் பேசுவார். என்ன கட்டுரை எழுத உத்தேசிக்கிறேன் என விசாரிப்பார்.
கட்டுரை படித்த பின் விரிவாக அக்கறையுடன் நிறைய பேசுவார். எந்த எடிட்டரும் இது போல்
ஒரு இளைய எழுத்தாளனிடம் அக்கறை காட்டியிருக்க மாட்டார்கள். உயிர்மையில் தொடர்ந்து எழுதிய
வருடங்களிலும் மாதாமாதம் அவர் நான் எழுதப் போகிற கட்டுரை பற்றி கேட்காமல் இருந்ததில்லை.
இம்மாதம் மட்டும் நேரமின்மை காரணமாய் அவருக்கு பேச இயலாமல் போயிற்று. இது ஒரு சின்ன
விசயம் தான். ஆனால் எழுத்தாளனுக்கு இந்த விசாரிப்பும் அக்கறையும் ஒரு முக்கியமான அரவணைப்பு.
அது இல்லாமல் போவது, ஒரே ஒரு தடவை என்றாலும், அவன் தவித்துப் போகிறான். படைப்பு பிரசுரமாவதை
விட அவர் கேட்பதும், அவருக்காய் நான் அதை எழுதுவதும் எனக்கு அளித்துள்ள உவகையும் திருப்தியும்
வர்ணிக்க இயலாத ஒன்று. ஐந்து வருடங்களில் முதன்முறையாய் இன்று நான் மிகவும் தனிமையாய்
உணர்கிறேன்.