Skip to main content

நயன்தாரா சாஹல் போல் நாமும் விருதை திரும்ப அளிக்கலாமா?


நரேந்திர தலோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி ஆகியோர் வலதுசாரிகள் சிலரால் கொல்லப்பட்டதையும், தாத்ரியில் மாட்டுக்கறி உண்டதாய் சொல்லி ஒருவரை கொன்றதையும் கண்டிக்கும் விதமாய் எழுத்தாளர் நயன்தாரா சாஹல் தனக்கு அளிக்கப்பட்ட சாகித்ய் அகாதெமி விருதை திரும்ப அளிக்க முடிவெடுத்துள்ளார். இதன் மூலம் பிரதமர் மற்றும் மத்திய அரசின் மீதான தன் கண்டனங்களை தெரிவிக்க விரும்புகிறார். ஏற்கனவே இது போல் எழுத்தாளர்கள் விருதை திருப்பி அளிப்பது நடந்துள்ளது. சார்த்தர் தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை மறுத்தார். நோபல் பரிசு என்பது அரசியல் ரீதியாய் முடிவு செய்யப்படுகிற ஒன்று. அமெரிக்காவின் சரவ்தேச உறவுநிலைகள் தான் ஒவ்வொரு வருடமும் யாருக்கு அது வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. ஆனால் சாகித்ய அகாதெமி விருது அப்படி அல்ல. இதுவரை எனக்குத் தெரிந்து அரசு நேரடியாய் அவ்விருதின் தேர்வில் தலையிடுவது இல்லை. தமிழை எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் ஆட்சியிலும் சரி இப்போதும் சரி இடதுசாரிகளின் செல்வாக்கு தான் சாகித்ய அகாதெமியில் வலுவாக உள்ளது. அதற்காக இடதுசாரி படைப்பாளிகள் தான் தேர்வாகிறார்கள் என்றில்லை. நாஞ்சில் நாடன் நல்ல உதாரணம். அதனால் சாகித்ய் அகாதெமி விருதை ஒருவர் அரசின் நிலைப்பாட்டை கண்டிக்கும் வண்ணம் திரும்பி அளிப்பது அபத்தமான பொருத்தமற்ற செயல்.


ஆனால் இதற்கு ஒரு குறியீட்டுத்தனமான முக்கியத்துவம் உள்ளது தான். ஒரு எழுத்தாளர் தேசிய விருதை திரும்ப அளிக்கும் போது அவர் பேசும் பிரச்சனை சட்டென மீடியா கவனம் பெறுகிறது. சாஹலை தொடர்ந்து பிற எழுத்தாளர்களும் தம் விருதுகளை திரும்ப கொடுக்கலாமா?
சாஹலுக்கும் பிற மாநில, வட்டார எழுத்தாளர்களுக்கும் வர்க்க ரீதியான முக்கிய வேறுபாடு உண்டு. சாஹல் ஒரு எலைட்டிஸ்ட். ஆங்கிலத்தில் நாவல் எழுதுபவர். அவர் நேருவின் சகோதரியின் மகள். நேரு குடும்பம் எவ்வளவு பெரும்பணக்காரர்கள் என உங்களுக்குத் தெரியும். சாகித்ய அகாதெமி விருதும் அதன் பணமும் அவர்களுக்கு டாய்லெட் பேப்பருக்கு சமம். ஆனால் மாநில எழுத்தாளர்கள் பலரின் நிலை பரிதாபமானது. நான் இவ்வருடம் ஷிலோங்கில் யுவபுரஸ்கார் விருது வாங்குவதற்கு சென்றிருந்த போது பிறமாநில எழுத்தாளர்களை சந்தித்தேன். எல்லாரும் மத்திய வர்க்கம். எழுதி எந்த கவனமும் அதுவரை கிடைக்காதவர்கள் சாகித்ய அகாதெமி தரும் சிறு வெளிச்சமும் பணமும் அவர்களுக்கு முக்கியம். விருது சரி, பணத்தையும் திரும்ப கொடுப்பதென்றால் அவர்கள் எங்கு போவார்கள்? அந்த நிகழ்வில் ஒரே ஒரு எழுத்தாளர் மட்டும் தான் பங்கு பெறவில்லை. அவர் தான் எழுதிய ஆங்கில நாவலுக்காய் பரிசு பெற்ற கௌஷிக் பாரு. அவர் வெளிநாட்டில் ஏதோ வேலையாக இருந்ததனால் தன் அம்மாவை அனுப்பி இருந்தார். பொதுவாக ஆங்கில இந்திய எழுத்தாளர்களுக்கு இது போன்ற விருதுகளெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அவர்கள் சதா விமானத்தில் பறந்து கொண்டும் நியுயார்க் வீதியில் காதலியுடன் கைபற்றி நடந்து எந்த நட்சத்திர விடுதியில் உணவருந்தலாம் என யோசித்தபடியும் இருப்பார்கள்.

 ஆனால் மாநில மொழி எழுத்தாளர்கள் அஞ்சுக்கும் பத்துக்கும் அலைகிறவர்கள். இந்த சமூகம் அவர்களுக்கு நிறைய வசதியும் புகழும் கொடுத்திருந்தால் விருதை துச்சமாக தூக்கி எறியலாம்? ஆனால் beggars can’t be choosers என்றொரு பழமொழி ஆங்கிலத்தில் உண்டு. பிச்சைக்காரர்களுக்கு தேர்வுகள் இல்லை.

முன்பு அமெரிக்காவில் பெண்ணியவாதிகள் ஆணாதிக்கத்துக்கு எதிரான குறியீட்டு போராட்டமாக பிராக்களை பொதுவில் எரித்தார்கள். உங்களுக்கு தெரியுமா என தெரியவில்லை – தரமான பிரா என்பது அதிக விலை கொண்டது. பிராவை எரிக்கிறவர்கள் எப்படியும் பிரா அணியத்தான் போகிறார்கள். இரண்டு பிராக்களை துவைத்து மாறி மாறி அணிகிற பெண்கள் உண்டு. அவர்கள் இருக்கிறதை எரித்தால் என்ன செய்வார்கள்?

துணிச்சலாய் செயல்பட ஒன்று உங்களிடம் ஒன்றுமே இருக்க கூடாது. அல்லது நீங்கள் பணக்காரராய் இருக்க வேண்டும். ஆங்கில இந்திய எழுத்தாளர்களைப் போலன்றி நம் மாநில மொழி எழுத்தாளர்கள் மத்திய வர்க்கத்தினர். அவர்களின் முதல் கவலையே இன்று தேவைக்கான ஐந்து பக்கெட் தண்ணீர் கிடைக்குமா என்பதாகத் தான் இருக்கும். அவர்களால் செய்ய முடிவதென்ன? அவர்கள் சமூக அநீதிக்கு எதிராய் தொடர்ந்து எழுதலாம், மீடியாவில் பேசலாம், நேரடியான போராட்டங்களில் கலந்து கொள்ளலாம். ஆனால் துரதிஷ்டவசமாய் நான் சந்தித்து உரையாடியது வரை கேரளா, வங்காளம் மொழியை சேர்ந்த விருதாளர்களைத் தவிர பிறருக்கு அதிக அரசியல் உணர்வு இல்லை.
சாஹலின் லாஜிக் படியே யோசித்தால் இந்த அரசாங்கம் நமக்கு வழங்கும் மின்சாரம், தண்ணீர், பொதுபோக்குவரத்து, தொலைதொடர்பு வசதி என பல விசயங்களை நாம் கைவிட வேண்டி வரும். அரசு சாலைகளில் நடக்க கூடாது. அரசு மானியங்களை வாங்க கூடாது. எனக்குத் தெரிந்து இதையெல்லாம் செய்யும் வசதி கொண்டவர்கள் ஆங்கில இந்திய எலைட் எழுத்தாளர்கள் தாம். அவர்கள் பெரும்பாலான நாட்கள் அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ வாழ்வதால் நம் அரசின் எந்த சேவையும் அவர்களுக்கு தேவையில்லையே!

சாஹலின் முடிவின் முக்கிய தர்க்கபிழை அவர் மோடியையும் அரசு எந்திரத்தையும் ஒன்றென நினைத்து குழப்பிக் கொள்வது தான். மோடி போனாலும் கூட அரசின் சேவைகளான மின்சாரம், தண்ணீர் மற்றும் அங்கீகாரங்களான சாகித்ய் அகாதெமி போன்றவை அப்படியே தானிருக்கும். மோடியை எதிர்த்து போராட அவர் தில்லியின் தெருக்களில் நடக்கும் இடதுசாரி போராட்டங்களில் கலந்து கொள்ளலாம். மீடியாவில் எழுதலாம். கூட்டங்களில் பேசலாம். இது போன்ற போராட்டங்களை நடத்தும் குழுக்களுக்கு தன் கோடிக்கணக்கான சொத்தில் ஒரு சிறு பகுதியை கொடுக்கலாம். சுதந்திர போராட்டத்தின் போது பெரும் முதலாளிகள் தம் சொத்துக்களை காந்திக்கு அப்படி அளித்திருக்கிறார்கள்.

இதை ஒட்டி இன்னொரு சந்தேகம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிற ஒருவர் கோக் குடிக்கலாமா? அமெரிக்க பிராண்ட் சட்டைகள், ஜீன்ஸ் அணியலாமா? காபி டே போகலாமா? ஹாலிவுட் படங்கள் பார்க்கலாமா? ஆணாதிக்கத்தை எதிர்க்கிற பெண்கள் அழகாய் ஆடையணியலாமா? ஜெயலலிதாவை எதிர்க்கிறவர்கள் அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய் இட்லி சாப்பிடலாமா? மனைவி மீது கோபம் என்றால் அவள் சமைத்த உணவை வேண்டாம் என சொல்வது போல் எளிதல்ல இதெல்லாம்?

நன்றி: தி ஹிந்து

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...