நேற்று புதிய தலைமுறையில் எழுத்தாளர்கள்
விருதுகளை திரும்ப அளிப்பது பற்றின நேர்பட பேசு பார்த்தேன். அருமையான விவாதம். குணசேகரன்
நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிற விதம் பாராட்டத்தக்கது. பா.ஜ.க சார்பில் வந்திருந்த ராமசுப்பிரமணியனுக்கும்
மனுஷ்யபுத்திரனுக்குமான சண்டை தான் அல்டிமேட். அதை மிகவும் ரசித்தேன். மனுஷ்யபுத்திரன்
இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு ஒருவரிடம் மோதி பார்த்ததில்லை. பா.ஜ.க சார்பாளருக்கும் ஒருவிதத்தில்
இது தேவைப்படுகிறது. அவர்கள் தாம் ஒரு இஸ்லாமியருடன் மோதுகிறோம் எனும் செய்தியை கட்சிக்காரர்களுக்கும்
மக்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறார்கள். அதன் மூலம் இந்து – இஸ்லாம் எதிரிடையை இங்குள்ள
கருத்துச்சூழலில் நிறுவ விரும்புகிறார்கள்.
சன் நியூஸ் விவாதத்திலும் ஒரு பா.ஜ.க கட்சிக்காரரிடம்
இதை கவனித்தேன். பா.ஜ.கவை மிக மோசமாய் நான் திட்டிய போதும், பிராமணர்களை குற்றம் சாட்டிய
போதும் அவர் சாதாரணமாய் எடுத்துக் கொண்டு பதில் சொன்னார். ஆனால் ஒரு முஸ்லீம் நண்பர்
அதையே கூறிய போது கொதிப்படைந்து “நாங்க இனி முஸ்லீம்ஸையும் ஓபனா தாக்குவோம்” என்றார்.
மனுஷ்யபுத்திரனுடன் விவாதிக்கும் போதும் அவர்கள் அடிக்கடி “அப்துல் ஹமீத்” என பெயரை
குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது. இது ஒரு திட்டமிட்ட நாடகமோ என தோன்றுகிறது. தமிழக
மீடியாவில் பா.ஜ.கவினரை இடதுசாரிகள், மதசார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் என பலரும்
எதிர்க்கிறார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் விவாதத்தில் எதிர்வரும் போது மட்டும் ஏன் மிகவும்
குரோதத்துடனும் வன்மத்துடமும் பேசுகிறார்கள்? இதன் பின் ஒரு தெளிவான திட்டமிடல் உள்ளது.
நாம் இதற்கு இரையாகாமல் கவனமாய் இருக்க வேண்டும்.