Skip to main content

ஒரு கிளியும் டிவி சீரியல் சண்டைகளும்




மனுஷ்யபுத்திரன் வீட்டில் ஒரு கிளி உண்டு. நன்றாக பழகும். என் கையில் இருந்து கூட உணவு வாங்கி தின்றதுண்டு. ஆனால் தன்னை யாராவது சீண்டினால் எரிச்சலாகி விடும். ஒருமுறை ஒரு நண்பர் அதனிடம் ஓவராக பேசப் போய் அது கோபித்துக் கொண்டு கூண்டுக்கு திரும்பி விட்டது. மனுஷ்யபுத்திரனுக்கு ஒரே குஷி. குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டே “பாருங்க ஒரு கிளிக்கு கூண்டுங்கிறது ஒரு சிறை. ஆனா உங்க கிட்ட பேசுறதுக்கு கூண்டே மேல்னு நினைச்சு உள்ளே போயிடுச்சு” என்றார்.

 ஒற்றைக் கிளி தான். அது பாட்டுக்கு சத்தம் போட்டபடி ஒரு வயதான கன்னியாஸ்திரியை போல் முறைத்தபடி அமர்ந்திருக்கும். மனுஷ்யபுத்திரன் அது பாவம் தனியாக இருக்கிறதே என எண்ணி அதற்கு ஜோடியாக ஒரு ஆண் கிளியை வாங்க சென்றிருக்கிறார். கடைக்காரர் இரண்டு கிளிகளாகத் தான் தருவேன் என்றதால் அவர் ஒரு ஜோடியாக வாங்கி இதன் கூண்டில் விட்டிருக்கிறார். நான் அவர் வீட்டுக்கு போன போது கூண்டில் ஜோடிக்கிளிகள் தனியாகவும் அதன் எதிரே பழைய கிளி கோபமாய் முறைத்தபடியும் இருந்தன. ரொம்ப நேரமாய் அமைதியாக முறைத்தபடி இருந்தன. எனக்கே பார்க்க பயமாய் இருந்தது. “நாலைஞ்சு நாளா கிளிகளுக்கு இடையே ஒரே சண்டை. பழைய கிளி இதுகளை ஒத்துக்க மாட்டேங்குது. அது நிம்மதியா தனியா இருந்துது. நான் தான் அதுக்கு நன்மை பண்றேன்னு குழப்பத்தை உண்டாக்கிட்டேன் போல” என்றார்.
 நான் அவரிடம் என் வீட்டில் நடந்ததை சொன்னேன். என் வீட்டில் முதலில் ஒரு பூனை இருந்தது. அதற்கு இரண்டு வயது இருக்கும் போது ஒரு ஜடை பூனையை குட்டியாக கொண்டு வந்தேன். பழைய பூனை மிகவும் வெறுப்புடன் ஜடைபூனை குட்டியை நடத்தியது. தன்னுடைய இடத்தில் புது பூனை வந்தது அதை மிகவும் எரிச்சலாக்கியது. இப்போது ஐந்து வருடங்கள் ஆகின்றன. இன்னும் பூனைகள் ஒன்றை ஒன்று சகித்துக் கொள்ளுமே ஒழிய தோழிகள் ஆகவில்லை. அதன் பிறகு ஒரு நாய்க்குட்டியை கொண்டு வந்தேன். பழைய பூனை நாயை இன்னும் அதிகமாய் வெறுத்தது. நாய்க்கோ பூனை மேல் பிரியம் அதிகம். பக்கத்தில் போனாலே பூனை அதன் முகத்தில் நகங்களை விரித்து அறைந்து கிழிக்கும். இரண்டாவது வந்த பூனையோ நாய் வந்த புதிதில் ஒரு வாரம் வீட்டுக்குள் வரவே மறுத்து ஜன்னல் திண்டில் உட்கார்ந்து கொண்டது. அதன் பிறகு இரண்டாவது பூனையும் நாயும் காதலர்கள் போல் நெருக்கமாகி விட்டார்கள். அதன் பிறகு ஒரு முயலை கொண்டு வந்தோம். ரெண்டு பூனைகளும் முயலை கடும் வெறுப்புடன் நடத்துகின்றன. இப்படி ஒரு இடத்தில் கூடுதலாய் ஒரு நபரை கொண்டு வரும் போது மகிழ்ச்சியை விட பிரச்சனைகள் தான் அதிகமாகின்றன. என் ஊரில் ஒரு பெண்ணை வெளியூரில் கட்டிக் கொடுத்தார்கள். அவ்வீட்டில் கணவனின் அம்மா, சகோதரி எல்லாம் கூட்டுக்குடும்பமாக வசித்தார்கள். நிறைய பேராய் சேர்ந்து ஒரே வீட்டில் வசிப்பது பிடிக்கவில்லை என்று சொல்லி அப்பெண் பிரிந்து வந்து விட்டாள். பிறகு இரண்டு வருடங்கள் அவள் கணவன் எவ்வளவோ கேட்டுப் பார்த்து விட்டான். அவள் முடியாதென்று விவாகரத்து செய்து விட்டாள். இந்த விவகாரத்தை அழுத்தமாய் நம் டிவி சீரியல்கள் பேசுகின்றன. அங்கு பிரதான பிரச்சனையே ஒரு பெண் புதிதாய் ஒரு குடும்பத்தில் நுழைகிற போது வருகிற சிக்கல்கள் தானே – மாமியார் மருமகள் சண்டை, சகோதரிகளுக்கு இடையிலான சச்சரவு, கணவனின் காதலி இப்படி இப்படி.
 இடத்துடன் மனிதனுக்கும் மிருகங்கள் பட்சிகளுக்கும் கூட தீவிரமான உறவு இருக்கிறது. தன்னுடைய ஒரு அடி இடத்தை கூட பகிர்ந்து கொள்ள தாங்க முடியாத ஒன்று. உணவு, ஜோடியை கூட பகிரலாம். குடும்ப சண்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் நிறைய இடம் இருந்தாலோ (யாரோ ஒருவர் பதுங்கிக் கொள்வதற்கான அறை), வீட்டுக்குள் ஒருவர் அருகாமையில் மற்றவர் அதிக நேரம் இல்லாமல் இருந்தாலோ நிறைய சண்டைகள் எழாது. அஜித்திடம் முன்பு ஒரு பேட்டியில் “உங்களுக்கும் ஷாலினிக்கும் இடையில் சண்டை வருவதுண்டா?” எனக் கேட்டார்கள். அவர் சொன்னார் ” we do have our proximity squabbles”. அதாவது ஒரே இடத்தில் தொடர்ந்து ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டிருப்பதால் வருகிற சண்டைகள் எங்களுக்கு இடையிலும் வருவதுண்டு என்று.
 நம்முடைய சாதி சண்டைகள், குடும்ப பகைகள் நிலத்தை யார் எடுத்துக் கொள்வது என்பதைப் பற்றியது தானே! இடத்துடனான விகிதாச்சாரம் சரியாக இல்லாமல் போகும் போது வரும் குழப்பங்களையும் மனக்கொதிப்புகளையும் தான் சீரியல்கள் பேசுகின்றன. ஒவ்வொரு frameலும் ஐந்து பேருக்கு மேல் இருப்பார்கள். இதில் மூன்று பேரை குறைத்தால் பிரச்சனைகள் தீர்ந்து சண்டை நின்று சீரியல் முடிந்து போகும்.
 நான் கிளம்பும் போது மனுஷ்யபுத்திரனிடம் சொன்னேன் “ஒருவேளை புதிதாய் வந்த ஆண் கிளி பழைய பெண் கிளியை சற்று காலம் கழித்து ஏற்றுக் கொள்ள வாய்ப்புண்டு. கெமிஸ்டிரி வொர்க் அவுட் ஆகலாம் இல்லையா?”. அவர் சொன்னார் “அந்த ஆண் கிளி என்ன உங்களை மாதிரின்னு நெனச்சிட்டீங்களா?”

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...