Skip to main content

காதல்

என்னுடைய ஒரு நண்பர் ஊனமுற்றவர். அவர் தன்னை எந்த பெண்ணும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை; அதனால் தான் தனிமையாகவே வாழ்வெல்லாம் இருக்க போவதாயும்; அதுவே சிறந்த தீர்மானம் என்றும் என்னிடம் திரும்ப திரும்ப கூறுவார். அவருடைய தன்னிரக்கம் இதை கூறச் செய்யவில்லை என அறிவேன். ஏனெனில் அவர் துணிச்சலாய் உழைத்து வாழ்வில் முன்னேறியவர். என்னை விட நேர்மறையான சிந்தனை கொண்டவர். ஆனால் காதல் பற்றின அவர் பார்வையில் தான் சிக்கல்.



நான் அவரிடம் கூறினேன்: “பெண்கள் ஒருவரின் உடம்பை பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரு ஆணின் ஆளுமை தான் முக்கியம். ஆளுமையற்ற ஆண்களுக்கு அதிகாரம் உண்டென்றால் அவர்களை நோக்கியும் பெண்கள் கவரப்படுவார்கள்.” நான் அவரிடம் என் தனிப்பட்ட அனுபவத்தை ஆதாரமாய் வைத்தேன். எனக்கும் ஊனம் உண்டு. இளமையில் இரு பெண்கள் என்னிடம் காதல் தெரிவித்தார்கள். இருவரும் எனக்காய் எதையும் விட்டுக் கொடுக்க தயாராய் இருந்தார்கள். அவர்களில் ஒருவரை மணந்து கொண்டேன். கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்க்கையில் சில மாணவிகள் காதலுடன் அணுகி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி இருக்கிறேன். நான் ஒரு காதல் மன்னன் என்று கோருவதற்காய் சொல்லவில்லை. எந்த ஊனமும் இல்லாத என்னுடைய பல நண்பர்கள் காதலியே கிடைக்காமல் தவித்ததை பார்த்திருக்கிறேன். ஒரு பெண்கள் உங்கள் பேச்சால், மொழியால் கவரப்படலாம். அந்த மொழி தான் உங்கள் ஆளுமை. மொழி தான் உங்கள் தோற்றம். 

இதை நண்பர் அன்று முழுக்க ஏற்கவில்லை. ஆனால் நேற்று எனக்கு போன் பண்ணி தன்னிடம் ஒரு பெண் காதலை தெரிவித்துள்ளதாயும், என்ன முடிவெடுப்பது என புரியாமல் தவிப்பதாயும் கூறினார். “என்னால் ஒருவேளை அவளை பைக்கில் வைத்து ஊர் சுற்ற முடியாமல் போகலாம். மற்ற ஆண்களைப் போல் உடல்ரீதியான வீட்டு வேலைகளை அவளுக்காய் செய்ய முடியாது போகலாம். இதனால் ஒரு கட்டத்தில் என்னை வெறுத்து விடுவாளா?” எனக் கேட்டார். பெண்கள் ஒரு போதும் அம்மாதிரி யோசிக்க மாட்டார்கள் என அவருக்கு புரிய வைத்தேன். ஆண்கள் தாம் உடம்பால் பிறரை மதிப்பிடுகிறோம். நம் மூளை அமைப்பு அப்படி. ஒரு பெண்ணை பார்க்கையில் நாம் பார்வை அவர்களின் பால் கொடுக்கும் திறன் (மார்பு அமைப்பு) மற்றும் பிள்ளை பெறும் வலுவை (இடை அமைப்பு) தானே அளவெடுக்கிறது. ஆனால் பெண்கள் உணர்வு வயப்பட்டவர்கள். அவர்கள் கண்ணியம், கனிவு, விசுவாசம் ஆகிய விழுமியங்களுக்கு தான் மதிப்பளிப்பார்கள். பல சச்சரவுகளின் போது பெண்கள் திரும்ப திரும்ப ஆண்களிடம் கோருவது இதையெல்லாம் தான். ஆனால் ஆண்கள் தாம் பெண்களை பார்க்கும் விதத்திலேயே பெண்களும் தம்மை மதிப்பிடுகிறார்கள் என தவறாய் புரிந்து கொள்கிறோம். ஒரு பெண்ணும் உங்கள் மார்பளவையும் இடையையும் ரசிக்கலாம் என்றாலும் அதைக் கொண்டு உங்களை மதிப்பிட மாட்டாள்.

ஒரு பெண்ணை எப்படி வாழ்க்கைத் துணையாய் தேர்ந்தெடுப்பது? இக்கேள்வியை நண்பர் இறுதியாய் கேட்டார். அப்பெண் மீது ஒரு குருட்டுத்தனமான ஈர்ப்பு உங்களுக்கு இருக்க வேண்டும் என்றேன். இதே பதிலை பதினைந்து வருடங்களுக்கு முன் யாராவது என்னிடம் கூறி இருந்தால் சிரித்திருப்பேன். ஆனால் இன்று என் அனுபவம் இது தான் உண்மை என கற்றுத் தந்திருக்கிறது. ஒருவருடன் நீண்ட காலம் வாழும் போது சகிக்க முடியாத பிரச்சனைகள், கோபதாபங்கள், முரண்பாடுகள் தோன்றும். பிரிந்து போவதற்கான ஆயிரம் காரணங்களை நம் மனம் வரிசையாய் கூறும். ஆனாலும் விளக்க முடியாத ஒரு பிரியம் நமக்கு அவள் மீது இருக்கும். அது தான் அந்த உறவை நீடிக்க வைக்கிறது. (அல்லது சிலருக்கு நடைமுறை தேவைகளும் உறவு நீடிக்க காரணமாய் இருக்கும்)
ஒருவர் மீது நமக்கு அப்படி ஒரு குருட்டு அன்பு உண்டென எப்படி கண்டறிவது? மிக மோசமான ஒரு வாக்குவாதம், சண்டை நடந்த பின் நீங்கள் மீண்டும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஈர்க்கப்படுகிறீர்கள் என்றால் அது தான் உண்மையான அன்பின் முதல் அறிகுறி. அவளோடு வாழவே கூடாது என்பதற்கு கச்சிதமான காரணம் கிடைத்த பின்னும் கூட வாழ ஆசை தோன்றுகிறது என்றால் உங்கள் காதல் உண்மையானது என்று பொருள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...