Skip to main content

எழுத்தாளன் கொல்லப்பட்டால் மட்டும் தான் போராடுவோம்

டைம்ஸ் நவ் டிவி விவாதத்தில் ஒரு ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. கடந்த பத்து வருடங்களில் நடைபெற்ற குஜராத், அசாம், உ.பி என பல்வேறு மாநிலங்களில் நடந்த ஆயிரக்கணக்கான படுகொலைகளுக்கு ஏன் எழுத்தாளர்கள் இது போல் தீவிரமாய் எதிர்வினையாற்ற வில்லை? இதற்கு தாருவாலா மற்றும் ஷோபா டே இருவரும் ஒருமித்த குரலில் பதிலளிக்கிறார்கள் “ஏனென்றால் அப்போது எழுத்தாளர்கள் சாகவில்லை”. அப்படி என்றால் மற்றவர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லையா? 


எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த ஆவேசம் பற்றின கேள்விகளுக்கு இன்று வரை அவர்கள் தரப்பில் தெளிவான, தர்க்கரீதியான பதில் இல்லை. பொதுவாக கூறப்படுவது போல் நயன்தாரா சாஹல், மல்ஹோத்ரா போன்றோருக்கு காங்கிரஸ் பின்புலம் உள்ளதாய் நான் நம்பவில்லை. கடந்த கால மௌனத்துக்கு ரெண்டு காரணங்கள் தோன்றுகின்றன. 1) ஒருவேளை இவர்கள் முன்பு நடந்த படுகொலைகளின் போதும் வேதனைப்பட்டிருக்கலாம். ஆனால் தெளிவான, தொடர்ச்சியான கருத்தியல் புரிதலோ அரசியல் செயல்பாடோ இவர்களுக்கு இல்லை என்பதால் வழக்கம் போல் தமக்குள் முனகியபடி இருந்திருக்கலாம். கருத்தியல் உறுதி இல்லாதவர்கள் உணர்ச்சிகரமாய் மட்டுமே யோசிப்பார்கள்; தர்க்கரீதியாய் அல்ல. ஆதலால் எப்போதோ ஒரு தருணத்தில் தான் அவர்கள் மிக அதிகமாய் உணர்வுரீதியாய் தூண்டப்படுவார்கள். வெளிப்படையான இந்துத்துவா அரசும், நேரடியான மதவாதமும் இப்போது பரவுவதால் சாஹல் போன்றோர் அவநம்பிக்கையையும் கோபமும் உற்றிருக்கலாம். ஆனால் எப்படி எதிர்ப்பை வடிவமைப்பது என தெளிவின்றி சிறுபிள்ளைத்தனமாய் விருதை தூக்கி அரசின் முகத்தில் எறிகிறேன் என இறங்கி விட்டார்கள். சரியான அரசியல் தெளிவும் தொடர்ச்சியும் கொண்டவர்கள் கடந்த பத்தாண்டின் ஒவ்வொரு அநீதிக்கும் எதிர்வினையாற்றி வந்திருப்பார்கள். வெறும் உணர்ச்சியால் வழிநடப்படுகிறவர்கள் திடீரென ஒரு பிரச்சனையை கையில் எடுக்கும் போது அது அபத்தமாக முடியும். தம் மீது எழுப்பப்படும் எந்த கேள்விக்கும் அவர்களால் பதிலளிக்க முடியாமல் போகும். இந்த விவாதங்களை கவனிக்கிற பொதுமக்கள் ஏன் இந்த எழுத்தாளர்கள் ஒரு பிரச்சனையை மட்டுமே குறிவைத்து பேசுகிறார்கள், குஜராத்திலும் மும்பையிலும் வலதுசாரிகளால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட போது இவர்கள் மௌனமாய் இருந்தது இரட்டை வேடமோ என யோசிப்பார்கள். தவறான ஆட்கள் ஒரு சரியான விசயத்தை செய்யும் போது இது போன்ற குழப்படிகள் மட்டுமே எஞ்சும். ஆனால் தொடர்ந்து எல்லாவகையான சமூக குற்றங்கள் மற்றும் தீவினைகளுக்கும் எதிர்வினையாற்றி வந்துள்ள, போராடி வந்துள்ள பல எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இது போல் அதிர்ச்சி மதிப்பு செயல்களில் ஈடுபட மாட்டார்கள். திடீர் திடீரென அரசியல் மனசாட்சி விழித்துக் கொள்ள கதறி அழ மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு சாஹல், மல்ஹோத்ரா போல் மீடியா, பொருளாதார பின்புலம் இல்லை. ஒரு சரியான போராட்டத்தை சாஹல் போன்றவர்கள் ஹைஜேக் செய்து வெற்று இரைச்சலாக்கி விட்டார்கள். இவர்களால் முற்போக்காளர்கள் பற்றி ஒரு தவறான எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டு விட்டது.

மோடி அரசை ஒருவர் எதிர்ப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. அது வரவேற்கத்தக்கது தான். ஆனால் எதிர்ப்பின் பெயரை மீடியா ஸ்டண்ட அடிப்பவர்களை நான் ஏற்கவில்லை. எழுத்தாளர் செத்தால் மட்டுமே நாங்கள் எதிர்ப்போம் என கூறுகிறவர்களை நினைத்து வெட்கப்படுகிறேன்.
இந்த எழுத்தாளர்களின் விநோத நிலைப்பாட்டுக்கு இன்னொரு காரணம் இது. மதப்படுகொலைகள், மதவாதம், வறுமை, சிறுபான்மையினரின் ஒடுக்குமுறை ஆகியவற்றை விட எலைட்டிஸ்ட் எழுத்தாளர்களை அதிகமாய் தூண்டுவதும் கலவரப்படுத்துவதும் கருத்துரிமை பறிப்பு. கருத்துரிமை முக்கியம் தான். ஆனால் சோறுக்கும், கல்விக்கும், உயிருக்கும் பிறகு தான் அது வருகிறது. மூன்றையும் பற்றி கவலையில்லாத எலைட்டுகள் எப்போதெல்லாம் கருத்துரிமை பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் களத்தில் குதித்து கூச்சல் போடுவார்கள். இப்படி ஒன்றை தேர்ந்தெடுத்து வெஞ்சினம் கொள்வது என்பது ஒரு சாதிய மனப்பான்மை என தனியாய் சொல்லத் தேவையில்லை. தாருவாலா கூறுகிறார் “மிருகங்களை பற்றி அக்கறை கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிருகங்கள் கொல்லப்பட்டால் மட்டும் எதிர்ப்பார்கள். பறவை ஆதரவாளர்களும் பறவைகளுக்காய் மட்டுமே குரல் கொடுப்பார்கள். அது போல் நாங்களும் எழுத்தாளர்கள் கொல்லப்பட்டால் மட்டும் குரல் கொடுப்போம்”. எலைட்டுகளுக்கே உரித்தான பார்வை இது. உதாரணமாய் சாலையில் ஒரு ஆள் அடிபட்டு கிடந்தால் கவனிக்க மாட்டார்கள். ஆனா ஒரு நாய் அடிபட்டால் அதை காப்பாற்ற எலைட்டுகள் ஒரு படையாக வருவார்கள். இந்த மனப்பான்மை தான் இந்த குழப்படிக்கும், இரட்டை மனப்பான்மைக்கு மற்றொரு காரணம்.
சரி, யாராவது ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே என யோசித்தால், இவர்கள் எதிர்க்கிறேன் என்ற பெயரில் உண்மையான பிரச்சனையை திரித்து மக்களிடம் ஒரு மோசமான பெயரை ஏற்படுத்தி விட்டார்கள். எழுத்தாளர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள் என அவப்பெயர் உருவாகி விட்டது.
”புளுகிராஸ் ஆக்டிவிஸ்டுகள்” ஆக வேண்டியவர்கள் அரசியல் பிரச்சனையில் போராடினால் இப்படி மேம்போக்காய், வெறும் கவன ஈர்ப்பாய், உள்முரண்பாடானதாய் தான் முடியும். இதை நான் சொல்லக் காரணம் இது. கேரளாவில் சமீபமாய் தெருநாய்கள் கொல்லப்பட்டதும் மிருகவதை எதிர்ப்பாளர்கள் ஒரு பிரச்சாரம் தொடங்கினார்கள். கேரளாவுடனான வணிக தொடர்புகளை துண்டிப்போம். கேரளாவுக்கு இனி யாரும் செல்ல மாட்டோம் என முடிவெடுப்போம் என பேசினார்கள். இதனால் மக்கள் மனதில் நாய்கள் பற்றின வெறுப்பு தான் அதிகமாகும் என இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. சாகித்ய் அகாதெமி விருதை திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கையும் இதே பாணியில் தான் உள்ளது. தாம் எதிர்க்கிறவர்களை ராட்சசனாய் சித்தரித்து ஒரேயடியாய் தள்ளி வைக்கிற ஒரு அரசியல் இவர்களுடையது. எதிர்த்தரப்புடன் விவாதிப்பதிலோ பரப்புரை வழி எதிர்த்தரப்பையும் பொதுமக்களையும் தன் வசப்படுத்துவதிலோ இவர்களுக்கு ஆர்வமில்லை. சண்டை போட்டு, காறி உமிழ்ந்து, கண்டதை தூக்கி எறிந்து விட்டு தம் வேலையை பார்க்க கிளம்பி விடுவார்கள்.
எலைட்டிஸ்டுகள் எழுத்தாளர்கள் ஆக இருந்தால் அவர்களின் பார்வை குறுகியதாய் இருக்கும். நாங்கள், எங்கள் பிரச்சனை என்று மட்டுமே கவலைப்படுவார்கள். அதனால் தான் பொது நீரோட்ட அரசியல் பிரச்சனைகளில் இருந்து அவர்களில் பெரும்பாலானோர் விலகி இருக்கிறார்கள். மற்றபடி எனக்கு பணக்காரர்கள் மீது ஏந்த வயிற்றெரிச்சலும் இல்லை. இவர்களுடன் பின்னர் வேறு பல பின்னணி கொண்ட எழுத்தாளர்கள் சேர்ந்து கொண்டாலும் இந்த சிந்தனை ஆழமற்ற வெற்றுக் கூச்சல் எதிர்ப்பை வடிவமைத்து நடத்துவது எலைட்டிஸ்டுகள் தாம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...