Skip to main content

தோனி, கோலி × கலைஞர், ஸ்டாலின்



தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோற்று விட்டது. அதுவும் சுலபமாய் ஜெயிக்க வேண்டிய நிலையில் இருந்து சொதப்பலாக ஆடி வெற்றியை தென்னாப்பிரிக்காவுக்கு பரிசளித்தது. ரோஹித் தன்னந்தனியாய் 150 அடித்து முயன்றாலும் இன்னொரு பக்கம் கோலியில் இருந்து தோனி வரை யாராலும் ரன் ரேட்டை உயர்த்த முடியவில்லை. கோலி பொதுவாய் மூன்றாவது எண்ணில் ஆடி பழக்கப்பட்டவர் என்பதால் 4வது எண்ணில் தாமதமாய் அவர் ஆட வந்ததும் தன்னுடைய புது பாத்திரத்தில் அவரால் சுலபமாய் பொருந்த இயலவில்லை. முன்பு கோலி 20 பந்துகளில் 15 அடித்து விட்டு பொறுமையாய் அவ்வப்போது பவுண்டரி அடித்து அரை சதத்துக்கு சென்று அங்கிருந்து இன்னிங்ஸை கட்டமைப்பார். ஆனால் 4 அல்லது 5 என்பது வேறு விதமான ஆட்டத்தை கோருகிறது. நீங்கள் வந்ததுமே 100 ஸ்டிரைக் ரேட்டில் ஆட வேண்டும். தேவையென்றால் சற்று நேரத்தில் 150 அல்லது 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆட முடிய வேண்டும். இந்த இடம் தோனி அல்லது ரெய்னாவுக்கு கச்சிதமானது. ஆனால் தோனியின் ஆட்டநிலை மிக மோசமாய் உள்ளதாலும், ரஹானே 4இல் ஆடுவதில் தோனிக்கு நம்பிக்கை இல்லை என்பதாலும் ஆட்ட வரிசையில் நிறைய குழப்படிகள் ஏற்பட்டுள்ளது.

 தோனியை தவிர்த்து கோலி அல்லது ரெய்னா அட்டகாசமான ஆட்டநிலையில் இருந்தால் இந்த சிக்கல் தெரியாமல் மறைந்து விடும். அல்லது தோனி சிறப்பான ஆட்டநிலையில் இருந்தால் கோலியை 3இல் அனுப்பி விட்டு 4 அல்லது 6இல் யாரை வேண்டுமானாலும் ஆடவிட்டு சமாளிக்கலாம். தோனி தனியாகவே கடைசி 20 ஓவர்களை கையாள்வார். இப்படியான சௌகரியங்களை இனி யாரும் கீழ்மத்திய வரிசையில் எதிர்பார்க்க இயலாது. வயதும் காயங்களும் காரணமாய் தோனி தன்னுடைய சன்னமான நிழலாய் மாறி விட்டார். அவரால் இனி அடித்தாடும் மட்டையாளர்களுக்கு ஒத்துழைப்பு மட்டுமே தர இயலாம். அவரால் தன்னந்தனியாய் 10 ஓவர்களில் 100 ஓட்டங்கள் எல்லாம் அடிக்க இயலாது. கடைசி ஓவரில் 10 அடிக்கவே அவர் திணறுகிறார். இன்றைய ஆட்டத்தில் தோனி தன் வழக்கமான பாணியில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறுவது பார்க்க பரிதாபமாய் இருந்தது. அவர் இன்று தன் ஆட்டவாழ்வில் முதன்முதலாய் ஒரு லேப் ஷாட் அடித்தார். ஸ்டெயின் பந்தில் ஸ்டம்பில் இருந்து விலகி போய் பந்தை ஸ்வீப் செய்வது போல் தூக்கி பின்னால் அடித்தார். இது பொதுவாய் பந்தை நேராகவே லாங் ஆனிலோ சிக்ஸருக்கு விளாசும் ஆற்றல் இல்லாத மட்டையாளர்கள் ஆடும் ஷாட். ஜெயவர்த்தனே, தினேஷ் கார்த்தி போன்றோர் இத்தகைய லேப் ஷாட்களை அதிகம் அடிப்பார்கள். தோனி தன்னால் பழையது போல் பந்தை வலுவாக டைமிங்குடன் அடிக்க முடியவில்லை என்று உணர்ந்ததால் தன் ஆட்ட பாணியை மாற்ற முன்வந்துள்ளார். தன் பலவீனத்தை அவர் ஏற்றுள்ளார் என்பதை இது காட்டுகிறது.
இன்றைய ஆட்டத்தில் மிக முக்கியமான கட்டத்தில் ரஹானே வெளியேறினதும் எனக்கு அது மோசமான சகுனம் எனப் பட்டது. ஏனென்றால் இன்னும் முப்பது நாற்பது ஓட்டங்கள் அவர் கூடுதலாய் சேர்த்திருந்தால் கோலி வந்ததுமே விளாச துவங்கி இருக்கலாம். தோனியும் இன்னும் தன்னம்பிக்கையுடன் ஆடியிருப்பார். அடுத்து ரெய்னா வருவார் என எதிர்பார்க்க தோனி களமிறங்கினார். ஒவ்வொரு ஓவரிலும் ரோஹித் சிக்ஸர்கள் அடிக்கும் போதும் தேவையான ஓட்டங்களின் விகிதம் 9க்கு மேலாக இருந்தது. காரணம் தோனி பந்தை டைம் செய்ய திணறி 50 ஸ்டிரைக்ரேட்டில் ஆடிக் கொண்டிருந்தார். அவருக்கு பதில் ரெய்னா வந்து சரளமாய் ஆடியிருந்தால் தேவையான ஓட்டவிகிதம் 6க்கு வந்திருக்கும். அங்கிருந்து சுலபமாய் ஒற்றை இரட்டை ஓட்டங்கள் ஓடியே வென்றிருக்கலாம்.
தோனி முன்பு இந்தியாவின் வெற்றிகளுக்கு அடித்தளமாய் இருந்தார். ஒரு சூப்பர்மேனாய் தன்னந்தனியாய் இந்திய அணியை வழிநடத்தினார். ஆனால் இப்போது அவரது அதிரடியாய் ஆட்டநிலை அதலபாதாளத்தில் விழுந்து விட்டது. இதற்கு வயது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அவருக்கு 33 தானே ஆகிறது? சேவாகும் இந்த வயதில் பந்தை டைம் செய்ய திணறியது நினைவிருக்கலாம். கங்குலி, கம்பீர் போன்ற நல்ல ஸ்டுரோக்பிளேயர்களுக்கு பொதுவாய் 33, 34 வயதில் கைக்கும் கண்ணுக்குமான ஒருங்கிணைவு குறைகிறது. சச்சின், டிவில்லியர்ஸ் போன்று மேதைகளால் மட்டும் தான் 35 வயதிலும் 25 வயதின் ஆற்றலுடன் ஆட இயலும்.
 அல்லது இது ஒரு தற்காலிக ஆட்டநிலை சரிவாக இருக்கலாம். கடந்த ஒரு வருடமாகவே தோனி சரளமாய் இல்லை. ஐ.பி.எல்லில் கூட அவர் மெத்தனமாய் தான் ஆடுகிறார். இவ்வளவு காலம் ஒரு வீரர் மோசமான ஆட்டநிலையில் இருக்க கூடுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் மீதும் ஸ்ரீனிவாசன் மீதுமான ஊழல் குற்றச்சாட்டுகள், வாரியத்தில் அவருக்கு பழைய அதிகார பிடிப்பு இல்லாமை, அவருக்கு மாற்றான தலைமை கோலியின் வடிவில் உருவாகி வருதல் ஆகியவை அவர் மீது கடுமையான அழுத்ததை உருவாக்கி இருக்கலாம். இந்த அழுத்தம் அவரது ஆட்டநிலையை பாதித்திருக்கலாம்.
எப்படியாயினும் தோனியின் ஆட்டநிலை மேம்படாவிட்டால் இந்த ஒருநாள் தொடரை நாம் இழக்கக் கூடும்.
தோனி-கோலி இரட்டை தலைமை காரணமாய் அணிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் குழப்பம் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பாண்டியராஜனின் ஒரு படத்தில் அவர் பள்ளியில் படிக்கும் போது எதேச்சையாய் ஒரு பெண்ணை மணந்து வீட்டுக்கு அழைத்து வருவார். அவரை உதவாக்கரை என சதா வையும் அப்பா இப்போது கரித்து கொட்டுவார். இரண்டு பேரையும் வைத்து சோறு போடும் அவர் பாண்டியராஜனை தன் மனைவியோடு படுக்கையில் சேர விடமாட்டார். கோலியின் நிலை கிட்டத்தட்ட இது போலத்தான். அவர் டெஸ்ட் அணியின் தலைவராய் அபாரமாய் செயல்படுகிறார். வீரர்கள் அவர் கீழ் முழுமையான உத்வேகத்துடன் ஆடுகிறார்கள். இயல்பாக அவர் ஒருநாள் வடிவிலும் தலைவராக விரும்புகிறார். ஆனால் தேர்வாளர்கள் இந்த “முதலிரவை” தள்ளிப் போட விரும்புகிறார்கள். தோனி இன்னும் ஒரு வருடம் தலைமை தாங்குவதன் மூலம் அவர்களால் கோலி-ஷாஸ்திரி கூட்டணியையும் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க முடியும். தோனியை நீக்கி அவரது விசிறிகளின் வெறுப்பை சந்திப்பதில் இருந்தும் தப்பிக்க முடியும். கிரிக்கெட் வாரியமும் தேர்வாளர்களும் இந்த பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இரண்டு முகாம்களையும் தம் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறார்கள். ஆனால் இது அணிக்குள் பெரிய குழப்பத்தை உருவாக்குகிறது.
ஒன்று தேர்வாளர்கள் அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை வரை தோனி தான் அணித்தலைவர் என அறிவிக்க வேண்டும். அப்போது கோலி தன் விதியை ஏற்று அடங்கிப் போவார். ஆனால் அவர்கள் அணித்தலைமை எனும் அழகிய இளம்பெண்ணை கட்டிலில் இருத்தி விட்டு ஒரு வருடம் கழித்து தான் முதலிரவு என கோலியிடம் சொல்கிறார்கள்.
போன உலகக்கோப்பையில் இருந்தே கோலி முழுமனதுடன் மட்டையாட வில்லை. அவர் சரியாக ஆட நினைக்கிறார். ஆனால் உள்ளுக்குள் தனக்கு நியாயமான பதவியை தோனி ஆக்கிரமித்திருப்பதாய் கசப்புணர்வு அவரை ஆட்கொள்கிறது. அவரது பாதி மனம் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்றும் மீதி மனம் தோனி தோற்க வேண்டும் என்றும் நினைக்கிறது. இந்த ஒருநாள் தொடரை இந்தியா இழந்தால் தோனி ஓய்வு பெற வேண்டும் எனும் முழக்கம் மீடியாவில் வலுக்கும். அதனால் தேர்வாளர்கள் அவரி நீக்க போவதில்லை. ஆனால் இன்னும் மூன்று தொடர்களை தோனி இழந்தால் தேர்வாளர்கள் ஒரு அதிரடி முடிவு எடுக்கக் கூடும். கோலி உள்ளார அதை விரும்புகிறார். அவரை பழிக்கவும் முடியாது. அவரிடத்தில் நாம் இருந்தாலும் அதைத் தான் விரும்புவோம். ஸ்டாலினை நினைத்துப் பாருங்கள். அவர் நிலை தான் கோலிக்கும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...