(செப்டம்பர் முதல் வார ”கல்கி” இதழியில் வெளியான
என் கட்டுரை)
இருபத்திரண்டு ஆண்டுகள் என்பது
நீண்ட காலம். ஆயுளின் கால் பகுதி. அதனால் தான் இந்தியா 22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில்
டெஸ்ட் தொடர் வென்றுள்ளது எனும் சேதி கேட்டதும் பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது. நாம்
கங்குலியின் அணித்தலைமையில் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடர் வென்றுள்ளோம். இங்கிலாந்திலும்
மேற்கிந்திய தீவுகளிலும் நியுசிலாந்திலும் வென்றுள்ளோம். கிட்டத்தட்ட இந்தியா போன்ற
பருவச்சூழலும் ஆடுதளங்களும் கொண்ட இலங்கையில் இவ்வளவு காலம் முடியவில்லை. ஏனென்றால்
தொண்ணூறுகளில் நாம் இலங்கையை ஒரு அணியாகவே பொருட்படுத்தவில்லை. ரெண்டாயிரத்துக்கு பிறகு
ஜெயவர்த்தனே, சங்கக்காரா போன்ற அற்புதமான மட்டையாளர்களும், முரளிதரன் எனும் ஒரு சாதனையாளரும்
சேர்ந்து இலங்கையை ஒரு ஆபத்தான டெஸ்ட் அணியாக மாற்றினார்கள். அக்கால கட்டத்தில் ஆஸ்திரேலியா
போன்ற அணிகள் கூட இலங்கையை அவர்களின் சொந்த மண்ணில் முறியடிக்க இயலாமல் திணறினர். ஆனால்
சமீபமாய் இலங்கை அணியில் சிறந்த சுழலர்கள் இல்லை. அவர்கள் அதனால் தம் பாரம்பரியமான
வலிமையான சுழலை துறந்து விட்டு வேகவீச்சுக்கு சாதகமான ஆடுதளங்களை அமைக்க துவங்கினர்.
விளைவாக நியுசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் தொடர்களை இழந்தனர். இந்தியாவுக்கு
எதிராய் சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இலங்கையினர் பழைய வியூகத்துக்கு
திடும்பினர். மீண்டும் சுழலும் ஆடுதளத்தை அமைத்தனர்.
ஆனால் முதல் போட்டியில் இந்திய
சுழலர்களான அஷ்வின் மற்றும் மிஷ்ராவின் அபாரமான வீச்சுக்கு முன் இலங்கை மட்டையாளர்களால்
தாக்குப்பிடிக்க இயலவில்லை. இந்த ஆட்டத்தை இந்தியா இறுதி நாளில் மோசமாய் ஆடி இழந்தாலும்
90% மேல் ஆதிக்கம் செலுத்தியது. இதை உணந்த இலங்கை இரண்டாவது டெஸ்டில் சற்றே வேகவீச்சுக்கு
ஆதரவான ஆடுதளத்தை அமைத்தனர். அப்போது நம் சுழலர்களுடன் சேர்ந்து வேகவீச்சாளர்களும்
அவர்களுக்கு தலைவலி கொடுக்க அந்த ஆட்டத்தை இலங்கையினர் இழந்தனர். மூன்றாவது டெஸ்டில்
முழுக்க வேகவீச்சுக்கான ஆடுதளம். சுத்தமாய் பந்து சுழலவில்லை. இது இத்தொடரில் இலங்கை
வீரர்களுக்கு ஆச்சுறுத்தலாய் விளங்கின அஷ்வினை மழுங்கடிப்பதற்காய் அவர்கள் வகுத்த வியூகம்.
ஆனால் எதிரணியினரை பற்றி கவலைப்பட்டு அதற்கு ஏற்றபடி ஆடுதளம் தயாரித்த இலங்கையினர்
தம் சொந்த வீச்சாளர்களின் நிலை பற்றி யோசிக்கவில்லை. இலங்கை வேகவீச்சாளர்களான பிரசாத்
மற்றும் பிரதீப் முழுமையான உடற்தகுதியுடன் இல்லை. ஆல்ரவுண்டர் மேத்யுவுசுக்கு முதுகுவலி
காரணமாய் ஐந்து ஓவர்களுக்கு மேல் வீச முடியாத சிக்கல். இந்நிலையில் இந்த ஆடுதளத்தை
இந்திய அணியின் வேகவீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா மற்றும் உமேஷ் யாதவ் அபாரமாய் பயன்படுத்தி
இத்தொடரை இந்தியாவுக்கு வென்றளித்தனர்.
இத்தொடரை இந்தியா வென்றதற்கு முதன்மை
காரணம் துவக்கத்தில் இருந்தே கோலி வெற்றி நோக்கில் செயல்பட்டது. இலங்கையோ தோல்வியை
தவிர்க்கும் எதிர்மறை, சுயபாதுகாப்பு நோக்கிலேயே இயங்கியது. இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன்
களமிறங்க இலங்கை ஏழு மட்டையாளர்களை தேர்ந்தது. ஆனால் ஏழு மட்டையாளர்களாலும் தொடர்ந்து
நன்றாய் ஆட இயலவில்லை. இவ்வாறு மட்டையாட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் முன்பு தோனியின்
தலைமையில் இந்தியாவும் ஏழு மட்டையாளர்களுடன் ஆடியுள்ளது. ஆனால் ஏழு மட்டுமல்ல எட்டு
மட்டையாளர்கள் ஆடினாலும் இந்தியாவால் அப்போது பெரிய ஸ்கோர்களை அடிக்க இயலவில்லை. ஆனால்
ஆறு மட்டையாளர்களுடன் ஆடும் போது அனைவருக்கும் பொறுப்புணர்வு கூடுகிறது. உதாரணமாய்
இத்தொடர் முழுக்க துவக்க மட்டையாளர்கள் மற்றும் 3, 4 இடங்களில் ஆடின ரஹானே, கோலி ஆகியோர்
மிகுந்த கவனம் மற்றும் பொறுப்புடன் ஆடினர். இதற்கு முன்பு 7 மட்டையாளர்கள் இருக்கையில்
இவர்கள் சற்று மனம் போன போக்கில் ஆடி ஆட்டம் இழப்பதுண்டு. இம்முறை ஒரு மட்டையாளர் குறைவு
எனும் எண்ணம் நம் மட்டையாட்டத்துக்கு உதவியது.
அதே போல 5 பந்து வீச்சாளர்களுடன்
களமிறங்கும் போது நிச்சயம் “வெற்றி ஒன்றே நோக்கம், டிரா அல்ல” எனும் சேதியை கோலி வலுவாக
உணர்த்தி விடுகிறார். முன்பு தோனியின் கீழ் இஷாந்த் போன்றோ 130க்கும் குறைவான வேகத்தில்
ஒரே ஸ்பெல்லில் 8 ஓவர்கள் வீசுவார்கள். விக்கெட் வீழ்த்துவதை விட ஓட்டங்களை கட்டுப்படுத்துவதே
நோக்கமாய் இருக்கும். ஆனால் கோலி ஒரு ஓவரில் 4 ஓவர்கள் மட்டுமே முழு ஈடுபாட்டுடன் வீசக்
கேட்க இஷாந்தின் வேகம் அதிகரித்தது. அதுவரை மெத்தனமாய் வீசி வந்த இஷாந்த் திடீரென
142 கிலோமீட்டர் வேகத்தில் ஒவ்வொரு பந்தையும் ஆவேசமாய் வீசினார். ஏனென்றால் நிறைய ஓவர்கள்
வீசும் அவசியம் இப்போது இல்லை என்பதால் வீச்சாளர்கள் தம்மை பாதுகாக்கும் மனப்பான்மையுடன்
ஆடுவதில்லை. ஐந்து வீச்சாளர் வியூகத்தின் சிறப்பு இது தான்.
அதே போல் கோலி அஷ்வினை பயன்படுத்திய
விதமும் சிறப்பானது. அவர் ஹர்பஜனை தேர்ந்தெடுத்து அஷ்வினுடன் ஆட வைத்ததும் ஒரு மறைமுக
செய்தியை அஷ்வினுக்கு உணர வைத்தது. முன்பு ஜடேஜாவும் ஓஜாவும் கூட ஆடும் போது அஷ்வின்
மட்டுமே ஆதிக்கம் செலுத்தக் கூடிய சுழலராக இருப்பார். பிறர் ஓட்டங்களை கட்டுப்படுத்த
அஷ்வின் பெரும்பாலான விக்கெட்டுகளை எடுப்பார். ஆனால் கோலியோ தான் அஷ்வினை மட்டுமே நம்பி
இருக்கப் போவதில்லை என உணர்த்தினார். முதல் டெஸ்டில் அஷ்வினுடன் ஹர்பஜன் களமிறக்கப்பட்டார்.
அவரது இருப்பே அஷ்வினை இன்னும் சிறப்பாய் வீச செய்தது. ஆனால் ஹர்பஜன் தன்னளவில் சொதப்ப
அவர் அடுத்த டெஸ்டில் மற்றொரு அதிரடி சுழலரான மிஷ்ராவை தேர்ந்தெடுத்தார். அஷ்வினுடன்
ஆடிய மற்றொரு சுழலர் அவருக்கு இணையாக வீசக் கூடியவர் என்பது அவரது போட்டியுணர்வை தூண்டியது.
கோலியின் கீழ் அஷ்வின் உன்னதமான ஆட்டநிலையில் இருப்பதற்கு அவருக்கு கோலி ஒரு சின்ன
அளவில் நெருக்கடி கொடுத்ததும் ஒரு காரணம். உதாரணமாய் இறுதி டெஸ்டில் கோலி அஷ்வினுக்கு
முன்பே மிஷ்ராவை பந்து வீச வைத்தார். வர்ணனையாளர்கள் இது குறித்து வியந்தனர். இது அஷ்வினை
புண்படுத்தாதா எனக் கேட்டனர். ஆனால் மாறாக இது அஷ்வினின் சாதிக்கும் வெறியை இரட்டிப்பாக்கியது.
தனக்கு வீச வாய்ப்பு கிடைத்ததும் அவர் அபாரமாய் ஆடி ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
கடந்த பத்து வருடங்களாய் இந்திய
அணி டெஸ்டில் ஆடும் போது சற்று அலுப்பாய் செயல்படும். குறிப்பாய் வெளிநாடுகளில் ஆடும்
போது வேகவீச்சாளர்கள் திங்கட்கிழமை பள்ளிக்கு செல்லும் குழந்தைகளைப் போல் தோன்றுவார்கள்.
காரணம் தலைவர் தோனி டெஸ்ட் போட்டிகளில் தீவிரத்துடன் செயல்படுவதில்லை என்பது. ஆனால்
இம்முறை முதன்முறையாய் ஐந்து நாட்களில் ஒருமுறை கூட இந்திய அணி மெத்தனமாய் ஆடவில்லை.
ஆர்வமின்றி மனம்போன போக்கில் செயல்படவில்லை. எப்படியாவது தொடரை வெல்ல வேண்டும் எனும்
வெறியை கோலி ஒவ்வொரு வீரருக்குள்ளும் சுடர் விட்டு எரிய செய்தார். இத்தொடர் வெற்றி
ஒரு முக்கியமான திருப்பு முனையாக இருக்கப் போகிறது. எந்த ஒரு குறிப்பிட்ட நட்சத்திர
வீரரையும் இந்தியா நம்பி இருக்கவில்லை. விஜய், தவன், ராகுல், ரஹானே, கோலி, ரோஹித்,
சாஹா, மிஷ்ரா, அஷ்வின், இஷாந்த், உமேஷ் யாதவ், பின்னி என ஒவ்வொருவரும் வெற்றியில் பங்களித்தனர்.
அதனாலே தொடர் பாதியில் விஜய், தவன் மற்றும் சாஹாவை காயம் பொருட்டு இழந்த பின்னரும்
இந்தியா சுணங்காமல் தொடர்ந்து வென்றது.
பந்து வீச்சை பொறுத்த மட்டில்
தொடர்ந்து கராறாய் வீசி நெருக்கடியை ஏற்படுத்துவது எவ்வளவு முக்கியம் என கோலி தன் வீச்சாளர்களுக்கு
புரிய வைத்துள்ளார். அவ்விதத்தில் பின்னி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை என்றாலும்
எதிரணியின் ஓட்டங்களை வறள வைப்பதில் முக்கிய பங்காற்றினார். இவ்விசயத்தில் பந்து வீச்சு
பயிற்சியாளர் ஸ்ரீதரும் பாராட்டத்தக்கவர். ராகுல் மற்றும் ரஹானேவின் ஸ்லிப் கேட்சுகள்
பந்து வீச்சு இரட்டிப்பு கூர்மையாக்கினது. இருவரும் பல ஆபாரமான கேட்சுகளை பிடித்தனர்.
இதே பாதையில் பயணித்தால் இந்த அணியின் எதிர்காலம்
பிரகாசமானது.