ஜப்பானிய “மாங்கா” காமிக்ஸில்
காந்தியின் வாழ்க்கைசரிதம் படித்தேன். ரொம்ப எளிமைப்படுத்தப்பட்ட ஆனால் நளினமான அழகான
புத்தகம். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம்.
வளர்ந்தவர்களுக்கும்
நல்ல அனுபவமாய் இருக்கும். இதில் ஒரு விசயம். காந்தியை தவிர இந்தியர்கள் மற்றும் வெள்ளைகாரர்களுக்கு
முக்கு சற்று சப்பையாகவும் கண்கள் சுருங்கி நீளமாகவும் உள்ளது. படங்களை வரைந்த கிஸுகி
எபினே தன் நாட்டினரை கவர்வதற்காய் இப்படிய ஒரு ஜப்பானிய சாயலை அளித்திருக்கலாம். அவ்விதத்தில்
நமக்கு இது ஒரு வித்தியாசமான காட்சிபூர்வ அனுபவத்தை கொடுக்கிறது. இதில் வரும் நேரு
ஒன்பதாம் வகுப்பு பையனைப் போல் தோன்றுகிறார். ஆனால் சுதந்திரம் கிடைக்கும் காலத்தில்
நேருவுக்கு வயதாகி விட்டது என்பதை ஓவியர் மறந்து விட்டார் போல. அம்பேத்கர், வல்லபாய்
பட்டேல் போன்றவர்களையும் இன்னொரு பக்கம் கோட்சே, ஆர்.எஸ்.எஸின் கதைகளையும் சேர்த்திருந்தால்
கதை இன்னும் நுட்பமாய் சுவாரஸ்யமாய் வந்திருக்கும். கிஸுகி எபினே தனக்கு கொடுக்கப்பட்ட
ஒரு பணி இலக்காக தான் இதை எடுத்துக் கொண்டிருக்கிறார். கிடைத்த நேரத்தில் காந்தியின்
சுயசரிதை, அவரைப் பற்றி எழுதப்பட்ட நூல் என மூன்று புத்தகங்களை படித்திருக்கிறார்.
அவர் காந்தியின் கொள்கைகள் பற்றி அம்பேத்கர் எழுதியதையும் படித்திருந்தால் இன்னும்
பயன்பட்டிருக்கும்.
கிஸுகி இந்நூலில் எழுதியுள்ள சிறுகுறிப்பில் காந்தியை
அறியும் போது அவர் தனது பெற்றோர்க்ளை நினைவுபடுத்தியதாய் குறிப்பிடுகிறார். அவரது போதனைகள்
அன்றாட வாழ்வுக்கு பயன்படாதவை என அவர் ஆரம்பத்தில் நினைக்கிறார். இந்த கருத்து நமக்கு
வேறுநாட்டை சேர்ந்த புதுதலைமுறையினர் காந்தியை படிக்கையில் எப்படியான சித்திரத்தை பெறுவார்கள்
என புரிய வைக்கிறது. ஜப்பான் அமெரிக்காவை போன்றே நவீனமயமாக்கலையும் நகரமயமாக்கலையும்
தீவிரமாய் ஏற்றுக் கொண்ட நாடு. இப்போது அங்கு எந்த பாரம்பரிய நம்பிக்கைகளை அந்நியமாய்
பார்க்கும் ஒரு தலைமுறை உள்ளது. அவர்களுக்கு காஸ்மோபொலிட்டன் நுண்ணுணர்வுடன் முராகாமி
எழுதுவது தான் பிடித்திருக்கிறது. அதனால் காந்தி அந்நியமாய் தோன்றுவதில் வியப்பில்லை.
குறிப்பின் முடிவில் தன்னை மிகவும்
கவர்ந்த காந்தியின் புகைப்படம் ஒன்றை பற்றி குறிப்பிடுகிறார். காந்தி அதில் ஒரு குழந்தையை
கையில் ஏந்தி ஒரு குழந்தையை போல் பொக்கைவாயால் சிரிக்கிறார். எப்போதும் நமக்கு ரொம்ப
சீரியசாய் யோசிப்பவராய் முரண்டுபிடிப்பவராய் தோன்றுகிற காந்தியும் குழந்தையை கையில்
வாங்கும் போது மற்றொரு குழந்தை ஆகி விடுகிறார். மொத்த நூலையும் விட இந்த குறிப்பு ஆழமாய்
இருந்தது.
