அஜயன் பாலாவின் “இரண்டாம் வெளி”
சிறுகதை அவரது படைப்புகளில் என்னை மிகவும் கவர்ந்தது. அக்கதையை பற்றி சொல்லும் முன்
அஜயன் பாலாவின் மொழி பற்றி ஒரு குறிப்பு.
அஜயன் தொண்ணூறுகளில் எழுத வந்தவர்.
அப்போது பின்நவீனத்துவ/மாந்திரிக எதார்த்த அலை உச்சத்தில் இருந்தது. அப்போது தமிழில்
பல அற்புதமான சிறுகதைகள் எழுதப்பட்டன. தமிழ்க்கதை இதுவரை பயணிக்காத தடங்களில் எல்லாம்
குச்சியால் ஒற்றை டயர் ஓட்டும் ஒரு குழந்தை போல ஓடியது. அஜயன் பாலாவின் சிறந்த கதைகளும்
லத்தீன் அமெரிக்க அலையின் எழுச்சியில் விளைந்தவையே.
அத்தாக்கத்தின் எதிர்மறை விளைவு என்னவென்றால் சரம்
சரமாய் கோர்த்த வாக்கியங்களை எழுத்தாளர்கள் எழுத ஆரம்பித்தார்கள். வாக்கியத்தை ஆரம்பித்து
படித்து முடிக்கும் போது தான் இன்ன தான் சொல்ல வருகிறார்கள் என புரியும். ஆனால் அதற்குள்
உங்களுக்கு மூச்சு வாங்கி கண் சொருகும். மார்க்வெஸ் போன்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின்
கதைகளை இது போன்ற complex வாக்கியங்களில் ஆங்கிலத்தில் படிக்க அழகாய் இருக்கும். ஆனால்
தமிழ் நேரடியான எளிய வாக்கியங்களுக்கேற்ற உணர்ச்சிகரமான மொழி. இக்கதைகளை தமிழில் மொழியாக்கின
போது இங்கு பெரும் வரவேற்பை பெற்றன. அதே போல் தமிழிலும் எழுதிப் பார்க்க முயன்றார்கள்.
உதாரணமாய், அவன் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்தான் என்பதை ”வெயில் அனைத்து ஜீவன்களையும்
வாட்டின, சாலையில் பசுக்கள் சுவரொட்டிகளை கடித்து இழுக்கும், சைக்கிள் மணிகள் ஒலிக்கும்
சூழலில் வீட்டிக்குள் அனலடித்திட, ஜன்னல் வழி உள்ளிறங்கும் வெயில் பூனை தன் வாலை நெளித்து
முதுகை வளைத்து மியாவ் என கரைந்தபடி அவனை நோக்கி கால்களை அகட்டி வைத்து நடந்து வர,
அதன் குரலின் வெம்மையில் மனம் உராய்ந்து பற்றி கொள்ள அவன் தன் அன்றைய தின வேலைகளை பற்றி
மனதில் திட்டம் வகுத்தபடி வெளியே சாலையில் கடந்து போகிறவர்களின் காலடித்தடங்களை கேட்டபடி
பாட்டிலை திறந்து நீர் அருந்தினான்” என்று எழுதுவார்கள். ஆனால் லத்தீன் அமெரிக்க கதைகளின்
மேஜிக் உண்மையில் அந்த மொழியில் இல்லை வாழ்க்கையில் இருந்தது என்பதை அவர்கள் புரிந்து
கொள்ளவில்லை. ஆனால் இந்த மொழியாக்க மொழியை பயன்படுத்தாமல் மாந்திரிக எதார்த்ததை கதைக்குள்
கொண்டு வருவதில் வெற்றி பெற்றவர் அஜயன் பாலா தான். அவர் எளிமையான, நேரடியான தமிழில்
எழுதினார். இந்திய வாழ்க்கையில் கூட சாத்தியமான சில அமானுஷ்ய விசயங்களை கதையில் கொண்டு
வந்து விடுவார். ஒரு நல்ல உதாரணம் “இரண்டாம் வெளி”. இது வாழ்க்கைக்குள் கலகம் செய்ய
விரும்பும் ஒரு வங்காளி நண்பனுடனான கதைசொல்லியின் பயணம் பற்றியது.
கதைசொல்லி எல்லாவற்றையும் தர்க்கரீதியாய்
புரிய விரும்புபவர். ஒரு பாட்டை வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தால் அது ஏன் என யோசித்து
எப்படியாது மூல காரணத்தை கண்டுபிடித்து விடுவார். ஆனால் உடனே சப்பென்று இருக்கும்.
காரணம் தெரிந்தவுடன் அச்செயலின் சுவை போய் விடும். அவர் மனதுக்குள் அப்படி ஒரு சுவை
குன்றாத புதிரான அனுபவம் உள்ளது. அவர் ஒரு வேலைக்காக செல்கையில் இரவில் மாசினி குடி
எனும் மலைப்பகுதி கிராமத்தில்ஒரு அந்நிய குடும்பத்தின் வீட்டில் தங்க நேர்கிறது. அங்கு
இரு இளம் பெண்கள் மட்டுமே. சகோதரிகள். அழகிகள். அங்கே தங்குவது குறித்து அவருக்கு மனம்
கிளர்கிறது. கற்பனை சிறகு கட்டி பறக்கிறது. அப்பெண்களுக்கு அவரை அங்கு தங்க வைப்பதில்
சிறு சஞ்சலம். அப்போது மூத்தவள் திடீரென அழத் துவங்குகிறாள். கதைசொல்லியைப் பார்க்க
தனது இறந்து போன தம்பியைப் போல் உள்ளதாய் கூறுகிறாள். வாழ்க்கையில் அக்கா, தங்கை இல்லாத
அவருக்கோ இந்த தகவல் விசித்திரமாய் இருக்கிறது. இப்பெண்களை வெறும் பெண்களாய் அல்லாமல்
சகோதரிகளாய் எப்படி பார்க்க என தெரியவில்லை. அக்காவைத் தொடர்ந்து தங்கையும் அவரிடம்
வந்து “நான் உங்களை அண்ணா என்று அழைக்கலாமா?” என கேட்கிறாள். அதன் பிறகு இருவரும் இயல்பாகிறார்கள்
சமைத்து பரிமாறுகிறார்கள். பாசத்துடன் நடந்து கொள்கிறார்கள். இரவெல்லாம் அப்பெண்களுடன்
சீட்டாடுகிறார்கள். விடிகாலையில் புறப்பட்டு விடுகிறார்கள். கதைசொல்லிக்கு இச்சம்பவம்
மனதில் ஆழமாய் பதிந்து விடுகிறது. அப்பெண்கள் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்கள்? அச்சம்பவம்
ஏன் நிறைவுறாமல் போய் விட்டது? அவருக்கு அவர்களை மீண்டும் பார்க்க ஆசை.
இதனிடையே அவரது வங்காளி நண்பனான
சாட்டர்ஜிக்கு ஒரு நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையின் நெருக்கடி காரண காரிய பார்வையால்
வருகிறது என அவன் நினைக்கிறான். வாழ்க்கை நம்மீது செலுத்தும் அதிகாரத்தை எதிர்ப்பதற்கு
அபத்தத்தை ஏற்பதே சிறந்த வழி என்கிறான். அபத்தமாய் ஏதாவது செய்ய வேண்டும்? என்ன செய்யலாம்?
கதைசொல்லி அவனிடம் மனிசிகுடியில் உள்ள சகோதரிகளின் வீடு பற்றி குறிப்பிடுகிறார். உடனே
சாட்டர்ஜி அங்கு இரவில் சென்று வீட்டை தொட்டு விட்டு யாரிடமும் சொல்லாமல் திரும்பி
வந்து விடலாம் என்கிறான். அந்த செயல் காரணகாரிய புரிதலை முறியடிக்கும் என்பதால் ஒரு
புரட்சியாக இருக்கும் என நினைக்கிறான். இருவரும் புறப்பட்டு போகிறார்கள். பகலெல்லாம்
எப்படியோ கழித்து விட்டு இரவில் அந்த மலைப்பாங்கான பகுதிக்கு ஏறிச் சென்றால் அந்த வீட்டை
காணவில்லை. சமவெளியாக இருக்கிறது. வீட்டை இடித்து விட்டார்கள். அந்த இடத்தில் ஒரு நட்சத்திர
ஓட்டல் வரப் போவதாய் அறிவுப்பலகையை பார்க்கிறார்கள். அப்போது தான் அவர்கள் தாம் ஒரு
அபத்தத்தை நிகழ்த்த நினைத்தாலும் அந்த திட்டத்தின் பின் ஒரு காரணகாரிய நம்பிக்கை இருந்ததை
உணர்கிறார்கள். அந்த வீடு அங்கு அப்படியே இருக்கும் என தர்க்க ரீதியாய் ஊகிக்கிறார்கள்.
அபத்தமே உண்மை என்றால் நேற்றிருந்த வீடு இன்றிருக்க அதே இடத்தில் வேண்டியதில்லையே!
கதை முடிவில் “இயற்கை அபத்த்தை வென்று விட்டது” என சேட்டர்ஜி கூறுகிறான். வாழ்க்கையை
நுணுக்கமாய் ஆராயும் விளையாட்டுத்தனமான மொழிநடை கொண்ட கதை இது. எனக்கு இக்கதை மிலன்
குந்தெராவை நினைவுபடுத்தியது.
சரி அந்த சகோதரிகள் ஏன் இவனை அண்ணா
என அழைக்க எண்ணினார்கள்? அது உண்மையா அல்லது விளையாட்டா? அதைப் பற்றி கதையில் விளக்கம்
ஏதும் இல்லை. ஒருவேளை அப்பெண்கள் அவனிடம் சகஜமாய் பழகுவதற்காய் பயன்படுத்தின உத்தியாக
அது இருக்கலாம். இன்றும் சில பெண்கள் ஆணிடம் சுலபமாய் பழகுவதற்கு “அண்ணா” என்று அழைத்து
ஒரு பிட்டை போட்டு விடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையில் உங்கள் மீது அண்ணன் என்கிற
பாசம் எல்லாம் இருக்காது.
#”இரண்டாம் வெளி” சிறுகதை
2002இல் உயிர் எழுத்தில் வெளியானது. ”அஜயன் பாலா சிறுகதைகள்” இடம்பெற்றுள்ளது.