Skip to main content

மதுவிலக்கு: சில கேள்விகளும் தீர்வுகளும்



(ஆகஸ்டு மாத “வெற்றிவேந்தன்” பத்திரிகையில் வெளியான என் கட்டுரை)
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என கலைஞர் அறிவித்தார். அதை ஒட்டி காந்தியவாதி சசிபெருமாள் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தும் போது மரணமடைய தமிழகம் எங்கும் மதுவிலக்கை கோரி பலவலான போராட்டங்கள் நடந்தன.
இந்நேரத்தில் மதுவிலக்கை பற்றி சில கேள்விகள் எழுகின்றன.

1)   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் அதில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கானோர் கதி என்ன?
2)   இதிலிருந்து வரும் கோடிக்கணக்கான வரி எனும் வருமானத்திற்கு மாற்று என்ன? அதற்கான திமுகவின் திட்டம் என்ன?
3)   பூரண மதுவிலக்கா அல்லது கேரளாவில் உள்ளது போல் நட்சத்திர ஓட்டல் பார்களில் மட்டும் மது கிடைக்கும் நிலை வருமா? அது நியாயமாக இருக்குமா?
4)   பூரண மதுவிலக்கு வந்தால் இதுவரை தினமும் குடித்து வந்த மக்கள் பொழுதுபோக்க வேறு என்ன செய்வார்கள்?
5)    அடிமையானவர்களுக்கு இலவச சிகிச்சையளிக்கும் மையங்களை அரசு திறக்குமா?
மேற்சொன்ன பிரச்சனைகளில் வரி இழப்பு தான் மிகப்பெரும் சிக்கலாக மாறும். தொழிற்சாலைகள், விவசாய உற்பத்தி பெருக்கம் என மெல்ல மெல்ல மாற்று வருமான வழிகளை உருவாக்காமல் திடுதிப்பென மதுவிலக்கு கொண்டு வருவது நடைமுறைக்கு உகந்ததா எனக்கேட்டால் இல்லை. பொதுவாக இது குறித்து சிந்தனையாளர்களும் சமூக ஆர்வலர்களும் பேசும் போது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் அது செயல்படும் நேரத்தையும் குறைத்தால் போதும் என்கிறார்கள். அதுவே சிக்கலற்ற ஒரு மையப்பாதையாய் இருக்கும்.
மதுப்பழக்கம் ஒரு கலாச்சார பிரச்சனை என்பதே என் நம்பிக்கை. வேறெந்த காலத்திலும் விட இப்போது மதுப்பழக்கம் அதிகரித்துள்ளதற்கு ஒரு காரணம் மட்டுமே மலிந்துள்ள டாஸ்மாக் கடைகள். அதாவது accessibility. மற்றொரு முக்கிய காரணம் மக்களின் கடுமையான அக நெருக்கடியும் வாழ்விலுள்ள அலுப்பும். முன்பு மக்களுக்கு நண்பர்கள் மற்றும் சொந்தபந்தங்களுடன் புழங்கவும் கொண்டாடவும் விழாக்கள் நிறைய இருந்தன. வாழ்க்கை இன்னும் நிதானமாய் இருந்தது. இன்று நகர வாழ்க்கையே அனைவரின் கனவாய் மாறி உள்ளது. நகரத்தில் மக்கள் பரஸ்பரம் சந்திக்கவும் கொண்டாடவுமான ஒரே இடம் மதுக்கடை தான். இது ஒரு துரதிஷ்டமான உண்மை. ஆக மதுப்பழக்கத்தை ஒழிக்க முதலில் வேறு நிறைய சமூகமாக்கல் சாத்தியங்களை (விழாக்கள், மக்களூக்கான கலை நிகழ்ச்சிகள்) அரசும், சமூக மத அமைப்புகளும் நடத்த வேண்டும். அங்கும் மக்கள் குடிப்பார்கள். ஆனால் குடியுடன் வேறு மாற்றுகளும் உருவாகும்.
மனிதனுக்கு தன்னை மறக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டும். மது அதற்கான ஒரு வழி. அதனாலே மனித இனம் தோன்றியதில் இருந்தே மதுவை பயன்படுத்துகிறது. சொல்லப் போனால் மிதமான மதுப்பழக்கம் மனிதனின் ஆரோக்கியத்துக்கும் மன நிம்மதிக்கும் நல்லது தான். எப்போது அது மிதமிஞ்சுகிறது என நாம் யோசிக்க வேண்டும்.
மனிதர்களில் இருவகை. 1) சமூக ஒழுங்குக்கு கட்டுப்படுகிறவர்கள் 2) கட்டுப்படாதவர்கள். இது பிறக்கும் போது நம் இயல்புப்படி உருவாகிற வகைமை. சுயமாய் செயல்படுகிற இரண்டாம் வகையினருக்கு சீக்கிரமே எதிலும் அலுப்பு தோன்றும். பிறழ்வுகளில் ஆர்வம் ஏற்படும். ஆபத்தான விசயங்களில் இறங்குவார்கள். இவர்கள் கலை, விளையாட்டு, சாகசங்கள் ஆகியவற்றில் ஜொலிக்க முடியும்.
 முதல் வகையான அடிபணிகிறவர்கள் பள்ளி, கல்லூரிகளிலும், பின்னர் அலுவலகங்களிலும் குடும்பத்திலும் யாருக்கும் தொந்தரவில்லாமல் இருப்பார்கள். ஒருவித மந்தை மனப்பான்மை கொண்டவர்கள் இவர்கள். பிரச்சனை வந்து விட்டால் கண்ணை மூடி சமரசம் செய்வார்கள். எந்த ஆபத்தையும் தவிர்ப்பார்கள். இது கராறான வகைமை அல்ல. மக்கள் இரண்டு வகைமையிலும் கலந்தும் இருப்பார்கள். ஆனால் பொதுவாய் இரண்டாம் வகை மக்களே மதுவுக்கு அடிமையாக வாய்ப்பு அதிகம்.
இரண்டாம் வகையினரை சிறு வயதில் இருந்தே கலை, வாசிப்பு, இசை, விளையாட்டு என ஈடுபடுத்த வேண்டும். வளர்ந்தவர்களுக்கும் அது தேவையே. நம்மளவு பண்பாட்டு வறட்சி மிக்க மற்றொரு சமூகம் இருக்க முடியாது. இங்கு சினிமாவையும் குடியையும் தவிர வேறெந்த பொழுது போக்கும் இல்லை. இப்போது கூடுதலாய் பணம் சம்பாதித்து அதை அர்த்தமற்று செலவு செய்வதும் மற்றொரு பொழுதுபோக்காய் மாறி உள்ளது. இது அதிருப்தி தரும் போது மதுவை நாடுகிறோம். மாற்று பொழுதுபோக்குகளையும் பண்பாட்டு களங்களையும் தோற்றுவிப்பது மதுப்பழக்கத்துக்கு ஒரு தீர்வு. அதே போல உடல் சார்ந்த நடவடிக்கைகள் மனிதனின் உள்ளார்ந்த எரிச்சலுக்கு நல்ல வடிகாலாய் இருக்கும். நம் நகரத்தில் குழந்தைகள் சைக்கிள் ஓட்டக் கூட இடம் இல்லை. குழந்தைகள் விளையாட பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் மைதானம் இல்லை. தினமும் ஒரு மணிநேரமாவது விளையாடும் வாய்ப்பு பெரும்பாலானோருக்கு கிடைத்தால், அதில் ஈடுபாடு தோன்றினால், வாழ்வில் மகிழ்ச்சி அதிகமாகும். உடல் களைப்பு மதுவை நாட செய்யாது. ஆனால் மனக்களைப்பு மதுவின் மீது ஆர்வத்தை அதிகமாக்கும்.
கலை பற்றி நான் சொன்னதற்கு மற்றொரு சுவாரஸ்யமான பக்கமும் உண்டு. பொதுவாக கலைஞர்களே மதுவையும் போதை மருந்துகளையும் அதிகம் பயன்படுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் இது கலையில் வெகுதூரம் பயணிப்பவர்களின் ஆபத்து. அன்றாட வாழ்வில் எளிய கலை ஈடுபாடு கொள்வபர்கள் அதனால் பயனே அதிகமடைவார்கள்.
இது என் தனிப்பட்ட அனுபவமும் கூட. நான் இரண்டாம் வகையான ஆள். என் ஆளுமை பிறழ்வினால் ஈர்க்கப்படும் ஒன்று. நான் குடிக்க ஆரம்பித்து 13 வருடங்கள் இருக்கும். இன்னும் எனக்கு மதுவில் பிடிப்பு வரவில்லை. குடித்தால் களைப்பு தோன்றி எழுத முடியாமல் போகும் என பல நாட்கள் தவிர்த்திருக்கிறேன். மேலும் மதுவில் கிடைப்பதை விட பல மடங்கு அதிகமான போதை எனக்கு எழுத்தில் கிடைக்கிறது. எழுதும் போது நேரத்தையும் இடத்தையும் மறந்து பல மணிநேரங்கள் இருக்க முடிகிறது. முழுபோதையில் தள்ளாடும் போது கூட காலம் இடம் பற்றின பிரக்ஞை எனக்கு இருந்து கொண்டே இருக்கும். அதனால் மது எனக்கு இரண்டாம் பட்சம் தான். ஒருவேளை எழுத்தில் சுகம் இல்லாவிட்டால் நான் நிச்சயம் குடித்து அழிந்திருப்பேன். எழுத்தும், அதை ஒத்த பிற கலைகளும் என்னைப் போல் மேலும் பலரை காப்பாற்றக் கூடும்.
பரபரப்பான, நிறைவான வாழ்வுக்கும் மதுப்பழக்கத்துக்கும் ஒரு சம்மந்தம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாய் மனுஷ்யபுத்திரன் குடிப்பதில்லை. அவர் என்னிடம் சொன்ன காரணம் இது. முன்பு அவர் மாலையில் ஓய்வாக இருப்பார். அவரை நாடி நண்பர்கள் வருவார்கள். சேர்ந்து குடிப்பார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாய் நிறைய டிவியில் பேசுகிறார், பயணிக்கிறார், எழுதுகிறார். அது போக பதிப்பகமும் நடத்துகிறார். இதனால், ஒன்று, அவருக்கு குடிக்க நேரம் இருப்பதில்லை. இன்னொன்று குடித்தால் இந்த வேலைகள் முடங்கிப் போகும் என்பதாலும் குடிப்பதில்லை என்றார். நான் சென்னை கிறுத்துவக் கல்லூரியில் படிக்கையில் என்னுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் உயர்வர்க்கத்தை சேர்ந்த பணக்கார மாணவர்களில் மதுவுக்கு மட்டுமல்ல கஞ்சாவுக்கும் அடிமையான பலர் இருந்தார்கள். மிக அதிகமாய் கஞ்சா பயன்படுத்துபவர்களுக்கு எங்கள் விடுதியில் வருட இறுதியில் Heavenly Selayurian என விருது வேறு வழங்குவார்கள். ஆனால் இவர்கள் படித்து முடித்ததும் பெற்றோர்கள் பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுப்பார்கள். அல்லது அப்பாவின் எஸ்டேட் அல்லது நிறுவனங்களை அவர்களே நடத்துவார்கள். அப்போது போதை பழக்கத்தை பெருமளவு குறைத்துக் கொண்டு சாமான்ய வாழ்க்கைக்கு மீள்வார்கள். என்னுடன் படித்த இத்தகைய மாணவர்கள் பலரும் இன்றும் என்னுடன் தொடர்பில் இருப்பதால் இதை உறுதியாய் சொல்ல முடிகிறது. ஆனால் இவர்களைப் பார்த்து இப்பழக்கத்தை கற்றுக் கொண்ட மத்திய வர்க்க மாணவர்களோ இன்றும் மீளாமல் போதையில் மூழ்கி இருக்கிறார்கள். ஆக வாழ்க்கையில் நாம் அடையும் வெற்றி, பொருளாதார நிறைவு, சமூக அங்கீகாரம், திருப்தி ஆகியவற்றுக்கும் மதுப்பழக்கத்துக்கும் ஒரு முக்கிய தொடர்பு உள்ளது.
இன்றைய நவீன வாழ்வு தொடர்ந்து மத்திய வர்க்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. எல்லாரும் எதிர்காலம் பற்றின பதற்றத்துடனே வாழ நேர்கிறது. இந்த எதிர்மறை எண்ணங்களுக்கு எல்லாம் வடிகாலாய் டாஸ்மாக் அமைகிறது. மத நிறுவனங்கள் மக்களை கொள்ளையடிக்க முயலாமல் அவர்களது மனநலன் மீது உண்மையான அக்கறை கொள்ளும் பட்சத்தில் நெருக்கடியில் தவிக்கும் இம்மனிதர்களை காப்பாற்ற இயலும். மதுவும் (அபினும்) மதமும் இரு போதைகள் என்றார் மார்க்ஸ். ஒரு போதைக்கு தீர்வு என்றும் மற்றொரு போதை தான்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...