Skip to main content

கதையை கேட்பது

Image result for அசோகமித்திரன்

கதைகளை நாம் கண்களால் வாசிப்பது தான் வழக்கம். ஆங்கிலத்தில் ஒலி நூல்கள் பிரபலம். ஆனால் பழக்கம் காரணமாய் நான் எப்போதும் வாசிக்கவே பிரியப்பட்டிருக்கிறேன். முனைவர் பட்ட ஆய்வுக்கு சேர்ந்த பின் அங்குள்ள சக ஆய்வாளர்களான நண்பர்கள் அருள், டேவிட் ஆகியோர் குழுவாய் சேர்ந்து ஒரு கதையை வாசித்து கேட்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்கள். எல்லா வெள்ளிக்கழமையும் சில நண்பர்கள் சேர்ந்து மெரீனா கடற்கரையில் படைப்புகளை வாசித்து கேட்டு அது குறித்து கலந்துரையாடுகிறார்கள். இந்த குழுவுக்கு Men Friday என பேரிட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் ஆங்கிலத்துறை மாணவர்கள் என்பதால் ஆங்கிலப்பெயர் போல.


துறையில் இருக்கையில் எதேச்சையாய் ஏதாவது ஒரு கதையை பற்றி பேச்சு ஆரம்பித்து அதை கூட்டமாய் வாசிக்கவும் துவங்குவோம். அப்படித் தான் நான் போன வியாழக்கிழமை அசோகமித்திரனின் “விருந்து” கதை பற்றி அருளிடம் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தேன். அ.மியின் இரு மொத்த தொகுப்புகளும் எங்கள் நெறியாளரின் நூலகத்திலேயே இருந்ததால் உடனே எடுத்து வாசிக்க துவங்கினோம். விருந்து, பயணம், எலி, பூனை, புலிக்கலைஞன் ஆகிய ஐந்து கதைகளை நானும் டேவிட்டுமாய் வாசித்தோம். பெரும்பாலான கதைகளை டேவிட் அழகாய் ஏற்ற இறக்கங்களுடன் சரியான தொனி மாற்றங்களுடன் வாசித்தார். ஒரு கதையை கண்களால் வாசிப்பதை விட கேட்பது இன்னும் அதிகமாய் கற்பனையை தூண்டுகிறது என்பதை அனைவருமே உணர்ந்தோம். கேட்கையில் கதை கண் முன் காட்சிபூர்வமாய் நிகழ்கிறது. இது ஒரு அலாதியான அனுபவம்.

“பயணம்” எனக்கு மட்டுமல்ல பலருக்கும் பிடித்தமான கதை. அக்கதையை அபௌதிகவாதம் மீதான பகடியாய் மட்டுமே இதுவரை புரிந்து வைத்திருந்தேன். கடினமான யோகா பயிற்சி மூலம் தன் உடலை முழுக்க கட்டுப்படுத்துபவராய், உடலின் எல்லைகளை விரிவுபடுத்தி அதைக் கடந்து பயணிப்பவராய் அதில் வருகிற குருநாதர் இருக்கிறார். அவருக்கு உடல் நலமில்லாமல் போக சீடன் அவரை காடு, மலைப் பாதைகளில் சுமந்து கொண்டு ஒரு கிராமத்துக்கு பயணிக்கிறான். அப்போது அவர் அனுபவிக்கும் அவஸ்தைகள், தான் எப்படியும் ஒரு அற்ப உடல் தான் என குருநாதர் நிரூபிக்கும் இடங்கள், இறுதியில் குருவின் உடலை ஓநாய்கள் சீடனிடம் இருந்து பிடுங்கி புசிப்பது என கதை உடல் இம்மண்ணின் ஒரு பகுதி தான் என கூறுவதாய் கருதியிருந்தேன். ஆனால் அன்றைய வாசிப்பு எனக்கு இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது. அதில் வருகிற குருநாதர் பெரிய சித்தர். அவர் சலனமின்றி மூச்சு விடக் கூடியவர். ஆனால் நோய்வாய்ப்படும் போது எளிய காரியங்கள் செய்வதற்கே அதிகம் சிரமப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவர் மூச்சுக்காய் திணறும் இடம் வருகிறது. அப்போது நமக்கு பரிதாபம் வருகிறது. என்ன தான் சித்தர் என்றாலும் அற்ப மனிதப் பதர் தானே எனத் தோன்றுகிறது. பிறகு கதையில் இன்னொரு தளம் திறக்கிறது.

இரவில் குருவின் உடலை ஒரு ஓநாயிடம் இருந்து சீடன் காப்பாற்றுகிறான். மறுநாள் அவர் இறந்து விட்டதை உணர்கிறான். அவர் உடலை எப்படியாவது கிராமத்துக்கு கொண்டு போய் முறைப்படி புதைத்து விட வேண்டும். ஆனால் இரவுக்குள் அவனால் மலையை கடக்க இயலவில்லை. இரவு வருகிறது. கூடவே ஓநாய்க் கூட்டமும். அவற்றை விரட்டி பிணத்தை பாதுகாக்கையில் அவனுக்கு தானும் அந்த ஓநாய்களில் ஒருவனோ என குழப்பம் ஏற்படுகிறது. ஓநாய்கள் பல திசைகளில் இருந்தும் அவனைத் தாக்கி குலைத்து அதிரடியாய் பிணத்தை பிடுங்க முயல்கின்றன. அவன் தொடர்ந்து ஓநாய்களுடன் போராடுகிறான். இறுதியில் ஓநாய்கள் பிணத்தை தூக்கிக் கொண்டு ஓடுகின்றன. மறுநாள் குருநாதரின் சிதைந்து போன பிணத்தை தேடிக் கண்டுபிடிக்கிறான். தலையை காணவில்லை. ஆனால் ஒரு கையில் ஒரு ஓநாயின் பிய்ந்த கை இருக்கிறது. கதை முடிகிறது. இம்முடிவு எனக்கு இது குருநாதர் மற்றும் சீடனின் மனதின் பயணமாகவும் இருக்கலாம் என நினைக்க தூண்டியது.
ஓநாய்களுடனான போராட்டம் அச்சீடனின் மனப்போராட்டத்தின், குருவுடனான அகமோதலின் குறியீடாய் இருக்கலாம். நோயின் விளிம்பில் தன் உடம்பில் இருந்து வெளியேறும் குருநாதர் தன் அபார கட்டுப்பாடு காரணமாய் ஓநாய்கள் தன் உடலை குதறுகையில் மீண்டும் வந்து விடுகிறார். அப்போது அவர் தன் உடலுக்காய் போராடுகிறார். மிருகத்தோடு மிருகமாய் சண்டையிட்டு ஓநாயின் கையை பிய்த்து எடுக்கிறார். ஒரு கட்டத்தில் குருநாதரும் சீடனும் கானகத்தின் மத்தியில் மிருக நிலையை அடைந்து போராடுகிற சித்திரத்தை நான் அன்று கதை கேட்கையில் மனதில் உருவாக்கினேன். ஆன்மாவின் உச்சத்தை நாடி பயிலும் இருவர் தம்முள் உள்ள மிருகநிலையின் உச்சத்தை அடைவதைக் காட்டும் கதையாய் ஒரு புது பார்வை கிடைத்தது. நல்ல கதைகளின் குணம் இது. அவை எவ்வளவு முறை வாசித்தாலும் எப்போதும் ஒரு புது ஜன்னலைத் திறந்து எதிர்பாராத காட்சியை காட்டும்.
“பயணம்” மாந்திரிக தன்மை கொண்டது. கவித்துவமானது. அசோகமித்திரன் பாணி கதையே அல்ல. புதுமைப்பித்தன் விளையாடுகிற கதைக் களம் இது (கபாடபுரம்). இக்கதை எனக்கு ஹெமிங்வேயின் படைப்புகளையும் நினைவுபடுத்தியது.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...