எதிர்பாராத நேரத்தில் அவசியமாய்
வரும் உதவி எப்படி உணர வைக்கும்? மகிழ்ச்சியாய், நெகிழ்ச்சியாய், நிம்மதியாய் தோன்றும்
எனத் தான் பொதுவாய் நம்புவோம். ஆனால் இல்லை.
நான் பொருளாதார ரீதியாய் மிகவும்
நொடிந்து போயிருந்தேன். முக்கியமான வேலைகளை விட்டு விட்டு அன்றாட செலவுக்கான பணத்துக்காய்
ஒரு பிடிக்காத வேலைக்கு போக வேண்டியிருப்பதாய் ஒருவரிடம் தெரிவித்தேன். ஒரு தகவலாய்
தான் சொன்னேன். அவரை நான் அடுத்த முறை சந்தித்த போது ஒரு உறையில் சிறிது பணம் வைத்து
தந்தார். நான் எதற்கு என்றேன். வாங்க தயங்கினேன். அவர் வற்புறுத்தி வாங்க வைத்தார்.
மிக மிக அரிதாய் தான் மனிதர்கள் இப்படி நாம் கேட்காமலே உணர்ந்து உதவுவார்கள். அப்பணத்துக்கு
அவசர செலவு இருந்தது. சற்று நிம்மதியாய் இருந்தது. ஆனால் பிறகு கசப்பும் ஏற்பட்டது.
அவர் தந்திருக்க வேண்டாம் எனத் தோன்றியது. மானப்பிரச்சனை, சங்கடம் ஒன்றும் இல்லை. அவர்
என்னை உதாசீனித்திருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இந்நகரத்தில் பலரும் அது போல் நம்மை
தம் தேவைக்கேற்றபடி பேசி அனுப்பி விடுகிறார்கள். அது போல் இவரும் நடந்து கொண்டால் என்
மனம் களிப்படைந்திருக்கும் என நினைத்தேன். நான் ஏன் இப்படி விசித்திரமாய் யோசிக்கிறேன்
என வியப்படையவும் செய்தேன். ஆனால் நம் மனம் அப்படித் தான். சிலநேரம் அது காயங்களையும்
காயங்கள் மீது யாராவது மிதித்து நசுக்கி ஏற்படுத்தும் வலியையும் விரும்பும்.
18 வயதில் நான் “கரமசோவ் சகோதரர்கள்”
படித்தேன். ஒரு நல்ல விரிவான நாவல் என்பது போக அது வேறேப்படியும் என்னை வியப்புற வைக்கவில்லை.
அப்போது ஜெயமோகனிடம் அந்நாவல் பற்றி என் எதிர்வினையை சொன்னேன். அவர் சுருக்கமாய் சொன்னார்
“இந்நாவலில் தஸ்தாவஸ்கி மனித மனதில் பற்பல விசித்திரங்களை எப்படி சித்தரித்திருக்கிறார்,
வாழ்க்கையில் நாம் காணும் பலவகை மனிதர்களை எப்படி ஒட்டுமொத்தமாய் நாவலின் பரப்புக்குள்
கொண்டு வந்திருக்கிறார் போன்றவற்றை நீங்கள் அறிய உங்களுக்கு வயதாக வேண்டும். முப்பது
வயது கடந்த பின் இந்நாவல் உங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைத் தரும்”. கரமசோவ்
சகோதரர்களை மீண்டும் சமீபத்தில் படித்த போது ஜெயமோகன் சொன்னது எவ்வளவு சரியானது எனப்
புரிந்தது. ஒரு நாவலை ஆழமாய் படிக்க அறிவும் முயற்சியும் மட்டும் போதாது. வாழ்வில்
அடிபட்டுப் பெறும் அனுபவமும் வேண்டும்.
”கரமசோவ் சகோதரர்களில்” அப்பா
கரமசோவ் சதா தன்னைத் தானே கோமாளியாக்கிக் கொள்வதில் களிப்படைபவர். அவர் வயதானவர். பணக்காரர்.
ஆனால் சிறுவயதில் இருந்தே சமூகம் தன்னை கேலி செய்கிறது, மதிக்கவில்லை எனும் ஆழமான வடு
ஏற்படுகிறது. அப்போதில் இருந்து அவர் பிறர் தன்னை மேலும் மேலும் இழிவு படுத்தும்விதம்
நடந்து கொள்கிறார். அடுத்தவர்கள் அவரை கோமாளி, முட்டாள், ஸ்திரிலோலன், முரடன், நாகரிகமற்றவன்
என பழிக்கும் போது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கிறது. மடம் ஒன்றில் நடக்கும்
காட்சியில் துறவி ஸோஸிமா அவரிடம் இதையே வற்புறுத்திக் கூறுவார். “உன்னைப் பிறர் கேவலமாய்
நினைப்பதை இப்படி ரசிக்கும் வரையில் நீ உன்னையே ஏமாற்றிக் கொண்டிருப்பாய். உனக்கு நிம்மதியே
கிடைக்காது. ஏனென்றால் நீ பொய்களை விரும்பி ரசித்து பொய்களுக்குள் மூழ்கிப் போய் திளைக்கிறாய்.
உன்னை யாரும் கீழாக நினைக்கவில்லை எனும் உண்மையை ஏற்க நீ தயங்குகிறாய்” என்பார். ஒரு
மனிதன் ஏன் தன்னை பிறர் தாழ்வுபடுத்தவில்லை என நம்ப மறுக்கிறான்? எப்படி பிறர் நம்மை
மதிக்கிறார்கள் என நினைப்பதில் கிளர்ச்சி அடைகிறோமோ அதே போல் பிறர் நம்மை அசிங்கப்படுத்துகிறார்கள்
என உணர்வதிலும் நாம் அதே போன்ற கிளர்ச்சியும் சிலாகிப்பும் அடைவதுண்டு.
என் சொந்த ஊரில் தந்தை கரமசோவ்
போன்ற சில மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். தம்மை யாராவது மட்டம் தட்டினால் அதற்காய்
மனம் கசிந்து அழுவார்கள். புலம்புவார்கள். ஆனால் யாரும் கேலி செய்யாத போது பதற்றமாகி
அதற்கான சூழலை உருவாக்குவார்கள். தம்மைப் பற்றி தாமே மோசமாய் பேசுவது, பிறரை வம்புக்கிழுப்பது,
சிக்கல்களை தோற்றுவிப்பது ஆகியன செய்வார்கள். இவர்கள் சற்று அப்நார்மலானவர்கள் என நினைத்தேன்.
ஆனால் அது உண்மை அல்ல. மிக நார்மலாய் தெரியும் என்னைப் போன்றவர்களிடமும் இம்மனநிலை
செயல்படும். சுற்றிலும் தீயவர்கள் நின்று என்னை மட்டம் தட்டுவதாய், நான் துன்புறுவதைக்
கண்டு ரசிப்பதாய் எண்ணுவதில் பரவசம் கொள்வேன். இப்படியான மனநிலை முன்பு எனக்கு இருந்ததில்லை.
ஆனால் மின்னல் போல் எனக்குள் அது தோன்றி மறைகிறது. அப்போது நல்லவர்கள் என்னை எரிச்சல்படுத்துகிறார்கள்.
என் மீது யாராவது வெறுப்பு கக்க மாட்டார்களா என ஏங்குகிறேன்.
ஒருவேளை தஸ்தாவஸ்கியும் இம்மனநிலையை
கடந்து போயிருக்கலாம். யாரோ அண்மையில் உள்ளவரிடம் இதை கவனித்திருக்கலாம். அவர் மிகப்பெரும்
கலைஞனாய் அறியப்படுவது மனித மனதை ஒரு விஞ்ஞானியை போல் துல்லியமாய் ஊடறுத்து பார்க்க
முடிவதால் தான். ஒரு நாவலாசிரியன் வெறுமனே கதை சொல்வதில்லை. சமூக நிலையை, வரலாற்றை
பதிவு செய்வதில்லை. உங்களை அழவோ சிரிக்கவோ வைப்பதில்லை. அவன் தன் நாவலின் பாத்திரத்தின்
மனதையும், அப்பாத்திரத்தின் செயல்பாடுகளையும் துல்லியமாய் அறிந்து வைத்திருப்பான்.
தஸ்தாவஸ்கியை போல் மனித மனதை நுணுகி அறியும் போதே ஒரு நாவலாசிரியன் கலைஞன் ஆகிறான்.