Skip to main content

வங்கதேசமும் மழை அளிக்கும் சுதந்திரமும்



வங்கதேசத்தோடான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியாவின் மோசமான தோல்வி நமது அசட்டையான அணுகுமுறையின் விளைவு தான். இது அனைவருக்கும் புரிந்திருக்கும். மற்றொரு காரணம் உண்டு. அது மழை.


வங்கதேசம் டாஸ் வென்று மட்டையாட தீர்மானித்ததும் அனைவரும் வியப்படைந்தனர். மழை பெய்யும் என ஊகம் இருந்ததால் DRS படி இரண்டாவதாய் இலக்கை விரட்டும் அணிக்கும் அனுகூலம் அதிகம் இருக்கும். மேலும் ஆடுதளம் தட்டையானது என்பதால், மைதானம் மழையில் ஈரமானால் ரிவர்ஸ் ஸ்விங் கூட கிடைக்காது. வங்கதேசம் வேறு நான்கு வேகவீச்சாளர்களுடன் களமிறங்கி இருந்தது. இந்தியா சிறப்பாய் விரட்டி ஆடும் அணி. இதெல்லாம் சேர்த்து வங்கதேச ஆதரவு வர்ணனையாளர்கள் துவக்கத்தில் இருந்தே புலம்பத் தொடங்கினார்கள்.
ஆனால் துவக்க ஆட்டக்காரர்களான தமீமும் சௌம்யாவும் வெறி பிடித்தாற் போல் அடித்தாட துவங்கினர். இன்றைக்கு பொதுவாய் உலகெங்கும் முதல் பத்து ஓவர்களும் மட்டையாளர்கள் பொறுமையாய் ஆடி அடித்தளம் அமைக்க முயலும் போது இவர்கள் t20 பாணியில் ஆடினர். இதற்கு காரணம் எப்போது வேண்டுமெனிலும் மழை பெய்யலாம் என்பதால் 25 ஓவர்கள் மட்டுமே ஆட வேண்டி இருக்கும் என எதிர்பார்த்து வங்கதேச மேலாண்மை மட்டையாளர்களுக்கு அடித்தாடும்படி முழு அதிகாரம் வழங்கி இருந்தது தான். ஓவருக்கு 8 ரன் விகிதம் அடித்து கொண்டிருக்கும் போது மழை பெய்யத் துவங்கியது. ஆட்டம் நின்றது.
 மழை முடிந்து வந்ததும் ஓவர்கள் குறைக்கப்படாது என்றார்கள். இது வங்கதேசத்துக்கு பாதகமானது. துவக்க வீரர்கள் அவுட் ஆனதும் அடுத்து வந்தவர்களுக்கு பொறுமையாய் ஆடும் நிலை வர அவர்கள் திணறினார்கள். வங்கதேச மட்டையாளர்களுக்கு சுதந்திரமாய் அடித்தாட வரும். ஆனால் பொறுமையாய் ஒற்றை ரெட்டை ஓட்டங்கள் எடுக்க கேட்டால் திணறுவார்கள். அதற்கான திறமையும் நிதானமும் அவர்களுக்கு இல்லை. இதனால் விக்கெட்டுகளை இழந்து ஓட்டங்களும் இல்லாமல் அவர்கள் திணறிக் கொண்டிருந்த போது மீண்டும் மழை பெய்தது. இது வங்கதேசத்துக்கு தனி உத்வேகம் அளித்தது. ஓவர்கள் சுருக்கப்படலாம், அதனால் இன்னும் பத்து ஓவர்களுக்கு மேல் ஆடத் தேவையிருக்காது எனும் எண்ணம் தோன்ற மீண்டும் வங்கதேச மட்டையாளர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஷக்கிபும் சபிரும் t20 பாணியில் அடிக்க தொடங்கினார்கள். அதன் பிறகு மழை நின்று வெய்யில் வந்ததும் அவர்கள் மீண்டும் திணறினார்கள். ஆனால் இந்த மழை நேரத்து சாகச மட்டையாட்டம் தந்த வேகம் மற்றும் முனைப்பில் அவர்கள் 300 ஓட்டங்களை தொட்டு விட்டனர்.

பந்து வீச்சிலும் மூன்று விசயங்கள் அவர்களுக்கு உதவின. ஒன்று மாலையில் பிளட் லைட்டின் தாக்கத்தில் பந்து இயல்பாய் ஸ்விங் ஆனது.
இரண்டாவதாய், பொதுவாய் முதன்முறை தமக்கு எதிராய் ஆடும் புது வேக வீச்சாளர்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் கொடுக்கும் வழமை நம் மட்டையாளர்களுக்கு உள்ளது. இதனால் முஸ்தபிசூர் எனும் இடதுகை வேகவீச்சாளர் பயன்பெற்றார். போன முறை நாம் வங்கதேசத்தை உலகக்கோப்பையில் ஆடின போது தன் முதல் ஆட்டத்தை ஆடின தஸ்கின் அகமதுவுக்கும் நாம் ஐந்து விக்கெட்டுகள் வழங்கினோம். உலகின் அத்தனை வேக வீச்சாளர்களும் இந்தியாவுக்கு எதிராய் டெபியு செய்யும் பாக்கியம் அமைய பிரார்த்திக்க வேண்டும்.

மூன்றாவதாய் தவன் மற்றும் கோலி மிக மோசமான தேவையற்ற ஷாட்கள் ஆகி உடனுக்குடன் வெளியேறியது. குறிப்பாய் கோலிக்கு அவர் வந்தவுடன் ஐந்து பந்துகள் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வைடாய் வீசினால் தானாகவே கேட்ச் கொடுத்து வெளியேறி விடுகிறார். இதற்கு பதிலாய் இவ்வாறு யாராவது தனக்கு எதிராய் பந்து வீசுவதாய் தோன்றினால் அவர் வந்தவுடனே ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி விடலாம். நான்கு விக்கெட் போன பின் திரும்ப வந்து ஆடலாம். அல்லது அவர் ஐந்தாவது எண்ணில் இறங்கி 35 ஓவருக்கு பிறகு ஆட வரலாம். ஏனென்றால் உலகம் முழுக்க இந்த வியூகத்தை அவருக்கு எதிராய் வெற்றிகரமாய் நிறைவேற்றி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவில் மட்டுமே டெஸ்டுகளில் அவர் இதை சமாளித்து நன்றாய் ஆடினார்.

அவர்கள் நம்மை விட நல்ல கட்டுப்பாட்டுடன் சரியான நீளத்தில் பந்து வீசினர். நாம் ஆடும் போது மழை பெய்யவில்லை. ஒருவேளை பெய்து 30 ஓவர்களுக்குள் ஆட்டத்தை சுருக்கி இருந்தால் நாம் நிச்சயம் வென்றிருப்போம். இலக்கு பெரும்பாலும் 220 என்றிருந்திருக்கும்.

வங்கதேச வீச்சாளர்களிடம் விக்கெட் எடுக்கும் வெறியும் முனைப்பும் இருந்தது. தஸ்கினும் முஸ்தபீசுரும் வீசிய லைனும் நீளமும் விக்கெட் எடுக்கும் நோக்கம் கொண்டவை. மாறாக நமது புவனேஷ்வர் ஆரம்பத்தில் இருந்தே அடிபடாமல் இருக்கும் பயத்துடன் மோசமான உடல் மொழியுடன் வீசினார். உமேஷ் யாதவ் கட்டுப்படின்றி வீசினார். மோஹித் ஆஸ்திரேலியாவில் குறைநீளத்தில் வீசியது போல் வங்கதேச மெத்தன ஆடுதளத்தில் வீசும் அபத்தத்தை செய்தார். ஜடேஜா ஆரம்பத்தில் நன்றாய் வீசினாலும் போகப் போக அவரும் சரியான திட்டமின்றி ஓட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மோசமாய் வீசினார். நமது வீச்சாளர்கள் யாருமே நேர்மறையாய், ஆவேசத்துடன் ஆடும் நிலையில் இல்லை. ஒவ்வொருவரும் தம்மை பாதுகாக்கும் முனைப்பில் ஆடுகிறார்கள். அரசு ஆஸ்பத்திரியில் நான்கு குழந்தைகளை வரிசையாய் நடத்திப் போகும் அம்மாவைப் போல் இருக்கிறார் தோனி. அஷ்வின் மட்டுமே நல்ல நிலையில் இருக்கிறார். மற்ற வீச்சாளர்களுக்கு தன்னம்பிக்கை பற்றாக்குறை அல்லது மோசமான ஆட்டநிலை பிரச்சனை.


தோனியின் வித்தேத்தி தலைமையும் சிலநேரம் அவரது வீரர்களை அக்கறையின்றி ஆட அனுமதிக்கிறது. கோலி இன்னொரு புறம் டெஸ்டில் அணித்தலைவராய் இருப்பதும் வீரர்களுக்கு யாரிடம் அதிகாரம் உள்ளது, யாருக்கு முழுமையாய் பணிய வேண்டும் எனும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். உதாரணமாய் தோனியிடம் நல்ல பெயரை வாங்கும் பட்சத்திலும் ஜடேஜா, புவனேஷ்வர், மோஹித் போன்றோர் கோலியின் அணியில் இடம்பெறும் உத்தரவாதம் இல்லை. இரு அணித்தலைவர்கள் ஒரு நல்ல நடைமுறை தானோ என இப்போதே எனக்கு சந்தேகம் வந்து விட்டது. முதல் அறிகுறிகளே சரியில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...