Skip to main content

மாணவர்களும் அரசியலும்

Image result for iit student protests

ஐஐடி அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை ஒட்டி நடக்கும் சர்ச்சை மாணவர் கருத்துரிமையை மையம் கொண்டது. மாணவர்களுக்கு அரசியல் பேச முழு உரிமை வேண்டும் என பலரும் கோருகிறோம். கடந்த சில பத்தாண்டுகளில் தொழில்நுட்ப கல்வியும், தனியாய் கல்வி நிறுவனங்களும் பெருகி, கலை, அறிவியல் படிப்புகள் பலவீனப்பட்ட பின் மாணவர் அரசியலும் முளையில் கருகிப் போய் விட்டது. ஆனால் இதைப் பேசுகிற வேளையில் மாணவர்கள் அனைவரும் மிகுந்த அரசியலுணர்வுடன் இருப்பதாகவும் அரசும் பிற நிறுவனங்களும் இணைந்து அவர்களை முடக்குவதாகவும் நம்புவதும் மிகை தான்.


 இன்றைய கணிசமான மாணவர்களுக்கு அன்றாட அரசியல் பற்றின கட்சி சார்ந்த அறிவு கூட மிக மிக குறைவு. நான் ஒருமுறை ஒரு வகுப்பில் மாணவர்களிடம் பெரியார் யார் எனக் கேட்டேன். ஒருவர் கூட பதில் கூறவில்லை. சரி போகட்டும், திமுக அதிமுக எல்லாம் எந்த கட்சியில் இருந்து பிறந்தன எனக் கேட்டால் அதுவும் தெரியவில்லை. பிறகு நான் வேறு பல சமகால அரசியல் தலைவர்களின் பெயர்களை பரீட்சித்து பார்த்தேன். கலைஞர், ஜெயலலிதா தவிர அவர்களுக்கு யாரையும் தெரியாது. இத்தனைக்கும் இது கீழ்த்தட்டு மாணவர்கள் அதிகமுள்ள வகுப்பு. அவர்கள் நிறைய டி.வி பார்க்கிறார்கள். ஆனால் அதில் சினிமா தவிர வேறு நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு கவனம் இல்லை. செய்தி படிப்பதோ கேட்பதோ இல்லை. இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். பல வீடுகளில் செய்தித்தாள் வாங்குவதில்லை. ஐ.ஐ.டியின் ஐஐடி அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் கூட சிறிய ஒன்று தான். இந்த சூழலில் மாணவர்களுக்கு என ஒரு அரசியல் அமைப்பு சாத்தியமா என கேட்க தோன்றுகிறது. இல்லை. ஆனால் மாணவர்கள் அரசியல்ரீதியாய் ஒருங்கிணைய வேண்டுமா என்றால் வேண்டும். ஏன் மற்றும் எப்படி?
கல்லூரியில் மூன்றில் இருந்து ஐந்து வருடங்கள் படிப்பதற்கான காலம் மட்டுமல்ல. அது பல புது நட்புகளை உருவாக்கவும் நிறைய அரட்டையடிக்கவும், புத்தகங்கள், சினிமா, கலை நிகழ்ச்சிகள் என புது அறிமுகங்கள் கொள்ளவுமான காலம். மாணவர்கள் தம் கலைத்திறன்களை பரிசீலனை பண்ணுவதற்கான வாய்ப்புள்ள பருவம். இதன் ஒரு பகுதியாய் அரசியல் திறனும் ஆர்வமும் உள்ளோர் அத்துறை நோக்கியும் திரும்ப வாய்ப்புகள் வேண்டும். கேரளாவில் மாணவ அமைப்புகள் ஏதாவது ஒரு கட்சியுடன் இணைந்து செயல்படும். இளம் மாணவர் தலைவர்கள் பின்னால் கட்சித்தலைவர்களாகவும் மந்திரிகளாகவும் உயர்வார்கள். ஆனால் இந்நிலை இங்கு இல்லை.

இதற்கு எதிர்மறை விளைவுகளும் உண்டென்றாலும் மாணவர்களுக்கு அரசியல் அறிவும் செயல்பாட்டு கட்டமைப்பும் பயிற்சியும் பெற இதை விட சிறந்த வழியில்லை. என்னைப் பொறுத்த வரையில் முப்பது மாணவர்கள் சேர்ந்து பெரியாரியமும் அம்பேத்கரியமும் பேசுவது அல்ல அரசியல். அவர்கள் ஒரு பிரதான கட்சியில் இணைந்து அதன் ஒரு பகுதியாய் மாணவர் அமைப்புகளை நடத்த வேண்டும். தில்லி ஜெ.என்.யுவில் அப்படியான சூழல் உள்ளது. இது மாணவர்களுக்கு நடைமுறை அரசியல் பற்றி பல பாடங்களை கற்றுத் தரும். இதை பயன்படுத்தும் புல்லுருவிகளும் ரவுடிகளும் கல்லூரிச் சூழலில் முளைப்பார்கள். இவர்களை களையெடுக்க வேண்டியது கல்லூரி நிர்வாகிகளின் பொறுப்பு. இதற்கு பேராசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து செயல்படவும் அமைப்பில் முடிவெடுக்கும் பிரதான பொறுப்பிலும் இருக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களில் சிலர் முழுநேர அரசியலை தம் வேலையாய் எதிர்காலத்தில் மேற்கொள்ள வழி அமையும்.

 சில அரசுக் கல்லூரிகளில் இந்த இணைவு ஓரளவு உண்டென்றாலும் பெரும்பாலும் அடியாட்களை கட்சிகளில் வேலைக்கெடுக்கும் வாய்ப்பாக தான் இது உள்ளது. இது மாற்றப்பட வேண்டும்.

நம்முடைய பிரதானக் கட்சிகள் ஊழல் வயப்பட்டவை. இவற்றில் எப்படி மாணவர்கள் இணையலாம்? இது முக்கியமான கேள்வி. நாம் நடைமுறை அரசியலில் செயல்படாமல் நேரடி வாழ்வில் மாற்றங்கள் கொணரவோ தனிப்பட்ட முறையில் உயரவோ முடியாது. அப்போது இருக்கிற கட்சிகளில் இணைவது தான் ஒரே சாத்தியம். மாணவர்களாய் புது அரசியல் அமைப்புகளை உருவாக்குவது இன்றைய சூழலில் மிக மிக சிரமம். ஆம் ஆத்மி கூட அன்றைய ஒரு குறிப்பிட்ட சூழலில் மீடியா, தொழிலதிபர்கள், முன்னாள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அன்னா ஹசாரே போன்ற ஒரு வசீகரமான காந்தியவாதி, இந்துத்துவா அமைப்புகள் என ஒன்றிணைந்து செயல்பட்டதால், அவர்களின் போராட்டங்களை காங்கிரஸ் மிக சொதப்பலாய் கையாண்டதால் ஏற்பட்ட எழுச்சியில் தோன்றின கட்சி. அதுவும் தில்லியின் நிர்வாக கோளாறுகள், பெண்கள் மீதான வன்முறை, நீண்ட கால காங்கிரஸ் செயலின்மை ஆகியவை உருவாக்கிய ஒரு சாதக சூழலை ஆம் ஆத்மி மிக சரியாய் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் இதெல்லாம் அபூர்வ நிகழ்வு. நடைமுறை அரசியல் இன்று மிகவும் செலவு பிடித்த விசயம் ஆகி விட்டது. நிரந்தரமற்றதாகவும் விட்டது. நேர நெருக்கடியும் மக்களுக்கு அதிகம். ஆக நடைமுறை அரசியலில் ஆர்வமுள்ளவர்கள் தாமாக சிறு அமைப்புகள் தோற்றுவிப்பதை விட பிரதான கட்சிகளில் இணைவது தான் அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது. அப்போது தான் படித்து வேலையில் சேர்ந்த பின் அரசியல் தொடர்ச்சி இல்லாமல் ஆகி, கல்லூரிக் கால பணிகள் வீணாகாது. எதற்கும் தொடர்ச்சி முக்கியம்.

இவ்வாறு கட்சி சார்ந்த அரசியலில் ஈடுபடுகிறவர்களுக்கு அரசியல் உணர்வும் தீவிரமாகும். இது மாணவர் அமைப்புகளுக்கு இராது. உதாரணமாய் அறுபது எழுபதுகளில் திமுக சார்ந்து அரசியலில் ஈடுபட்ட இந்தி எதிர்ப்பு, தமிழ் தேசிய போராளி மாணவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வேலைக்கு சென்று குடும்பப்பொறுப்புகள் ஏற்று வயதான பின்னரும் அரசியல் உணர்வு குறையவில்லை. இன்று அப்படியான எந்த மைய அரசியல் நிகழ்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்காததனால் தான் அவர்களின் அரசியல் உணர்வும் மிகவும் குறைவாக உள்ளது. இது சிவில் அமைப்புகளை மறைமுகமாய் பலவீனப்படுத்தும்.

இது கல்வியை பாதிக்காதா? இல்லை. ஒரு கல்லூரியில் நன்றாக முழுநேரமாய் படிக்கிற மாணவர்கள் 20%. சுமாராய் அவ்வப்போது படிக்கிறவர்கள் 40%. மிச்சம் 40% வெட்டியாய் தான் இருப்பார்கள். அவர்கள் சமூகமாக்கல், கலை நிகழ்ச்சிகளில், அரட்டை என காலம் கழிப்பார்கள். இது தான் இயல்பு. இது ஏதும் தவறில்லை. பொதுவாக கல்லூரி மாணவர்களின் மதிப்பெண் சராசரியையும், பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சராசரியை ஒப்பிட்டு பார்த்தால் இதை புரிந்து கொள்ளலாம். ஓரளவுக்கு மதிப்பெண் பெற்று சான்றிதழுடன் வெளியே போன பின் வேலை சந்தையில் எல்லாரும் ஒன்று தான். அங்குள்ள தேவைகள், விற்பனையாகும் திறன்களுக்கும் சான்றிதழில் உள்ள மதிப்பெண்களுக்கும் பெரிய சம்மந்தமில்லை. இது எதார்த்தம். ஆக எல்லா மாணவர்களும் சதா வகுப்பில் இருந்து கவனிக்க அவசியமில்லை. உண்மையில் அது மாணவர்களின் வளர்ச்சிக்கும் ஆரோகியமானதல்ல.

 நான் கல்லூரியில் படிக்கையில் ஒவ்வொரு செமஸ்டரிலும் முதல் சில மாதங்கள் வகுப்புகளீல் இருந்து தேவையான அட்டெண்டென்ஸ் பெற்று விட்டு, அடுத்த சில மாதங்களில் நிறைய வகுப்புகளை கட் அடிப்பேன். அந்நேரத்தில் என் எழுத்தாள நண்பர்கள், சீனியர்களை சந்தித்து செலவிடுவேன். அந்த உரையாடல்கள் தாம் பிற்பாடு என் எழுத்துக்கும் வாசிப்புக்கும் பெரும்பாலும் உதவியது. அது போல் சில மாணவர்கள் பேச்சு, நாடகம், நடனம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வகுப்புகளை கட் அடிப்பார்கள். 50-60% மேல் வகுப்புகளில் இருக்க மாட்டார்கள். அத்தகைய மாணவர்களை வற்புறுத்தி வகுப்புக்குள் இருத்துவது அவர்களுக்கும் வகுப்பிலுள்ள பிற மாணவர்களுக்கும் ஆரோக்கியமானதல்ல.

அடுத்து கல்லூரி வளாகத்தினுள் அரசியல் செயல்பாடுகளை அனுமதிக்கலாமா? கூடாது. இது இரண்டு சிக்கல்களை உருவாக்கும். ஒரு மாணவன் தனி மனிதன் மட்டுமல்ல. அவர் கல்லூரியில் பகுதி. அவனது செயல்கள் கல்லூரியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறவை. அவனுக்கு கல்லூரியே பொறுப்பு. குறிப்பாய் கல்லூரி வளாகத்தினுள் அவன் செய்கிற விசயங்களுக்கு. இன்னொன்று கல்லூரிக்குள் நடக்கும் வேலை நிறுத்தங்கள், வன்முறை, அணி திரட்டல், பேரணிகள் வகுப்புகளை பாதிக்கும். சீர்கேட்டை உருவாக்கும். கூட்டங்கள், பிரச்சாரம், பேரணி ஆகியவற்றை வெளியே வைத்துக் கொள்வதே நல்லது. வளாகத்தினுள் மாணவர்களை திரட்டுவதில் தடை கூடாது. ஆனால் செயல்பாடுகள் வளாகத்திற்கு வெளியில் வேண்டும். இதன் மூலம் மக்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்படும். பிரதான கட்சி ஒன்றின் ஆதரவு இருந்தால் வெளியில் போராட்டங்கள் நடத்துவதில் நடைமுறை சிக்கல்களும் இராது. ஆனால் ஐ.ஐ.டியில் நடந்தது போன்ற பொது விவாதங்களுக்கு வளாகத்தினுள் தடை கூடாது.

இப்போதைக்கு கல்லூரிக்குள் நடக்கும் கணிசமான வேலை நிறுத்த போராட்டங்கள் மாணவர்களுக்கு பொழுதுபோக்கு மட்டும் தான். அல்லது ஒரு மாணவர் அமைப்பின் தலைவருக்கு நிர்வாகத்திடம் தன் அதிகாரத்தை காட்டுவதற்கான சிறு வாய்ப்பு. நான் இளங்கலை படிக்கும் போது மாணவர் அமைப்பின் தலைவருக்கும் கல்லூரி முதல்வருக்கும் தகராறு ஏற்பட்டது. பழிவாங்கும் பொருட்டு பெயருக்கு சில கோரிக்கைகளை வைத்து வேலை நிறுத்தம் நடந்தது. இவை என்ன என பல மாணவர்களுக்கே தெரியாது. ஒரு சிறு குழு வந்து மாணவர்களை வகுப்பில் இருந்து விரட்டினார்கள். கூச்சலிட்டபடி அறிவியல் லேபுகளில் நுழைந்து அடித்து நொறுக்கினார்கள். இறுதியில் கல்லூரி நிர்வாகம் காவல்துறையை வரவழைத்தது. உடைந்த பொருட்களுக்கான பணத்தை திரும்பப் பெற ஒவ்வொரு மாணவருக்கும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்தது. அதாவது உடைத்தது ஒரு சிலர், பாதிக்கப்பட்டது பலர்.

 நான் முதலில் வேலை பார்த்த இன்னொரு கல்லூரியில் முதல்வருக்கும் சில பேராசிரியர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாய் பேராசிரியர்கள் மாணவர் அமைப்பினரை தூண்டி விட்டு வேலை நிறுத்தம் செய்ய வைத்தனர். முதல் வேலை நிறுத்தத்தின் போது நான் வகுப்பை கலைக்க மறுத்தேன். சிலர் வகுப்புக்குள் நுழைந்து கலைக்கும் படி கோரினர். நான் மறுத்தேன். அவர்கள் தாமாக திரும்ப சென்றனர். பிறகு வெளியில் இருந்து கல்லை வீசினர். அப்போதும் நான் கலைக்கவில்லை. இறுதியில் துறைத்தலைவரே வந்து கேட்டபின் தான் மாணவர்களை வெளியில் அனுப்பினேன். ஒன்று எனக்கு இது போன்ற அற்ப வேலை நிறுத்தங்களில் நம்பிக்கை இல்லை. அதே போல் பேராசிரியர்களே நினைத்தால் இதை நிறுத்த முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். DYFI போன்ற அமைப்புகளுக்கு அரசியல் பின்புலம் உண்டென்றாலும் இவை நடைமுறை அரசியலோடு தொடர்பற்றவை. உதாரணமாய் பெட்ரோல் விலை உயர்வுக்கோ, ஊழலுக்கோ எதிராய் போராட மாட்டார்கள். தம் போராட்டத்தை சமூகத்தின் மைய அரசியலோடு இணைக்கவும் இவர்களுக்கு தெரியாது. இன்றுள்ள கணிசமான மாணவர் அமைப்புகளின் சிக்கல் அவை “நடைமுறை” அரசியலற்றவை என்பது.
நான் சென்னை கிறுத்துவக் கல்லூரியில் படிக்கும் போது அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல் நினைவு நாளன்று கல்லூரி நிர்வாகம் இரண்டு நிமிட அமைதி கோரும்படி முதல் வகுப்பின் போது மணியடித்து கோரினார்கள். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்மந்தம்? மும்பை தாக்குதல் தினமன்று இவ்வாறு செய்வார்களா? மாட்டார்கள். இன்னொரு பக்கம் ஈழத்தமிழர் பிரச்சனை ஒன்றை ஒட்டி தமிழ்த்துறை மாணவர் சில கொடும்பாவி எரித்தனர். இரண்டு நிகழ்வுகளும் 98% மாணவர்களுக்கு அந்நியமாய் தெரிந்தன. நான் மற்றொரு கல்லூரியில் வேலை பார்த்த போது இளவரசன் – திவ்யா பிரச்சனை உச்சத்தில் இருந்தது. இளவரசன் இறந்த தினம் நான் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். ஆனால் அன்று கல்லூரிக்குள் அந்த பெரும் ஜனநாயக படுகொலையின் நிழலைக் கூட காண இயலவில்லை. பெரும்பாலான மாணவர்களுக்கு என்ன நடந்த்தென்றே தெரியவில்லை. அதை வகுப்பில் பேசும் உரிமை உள்ள நிரந்த பேராசிரியர்கள் மௌனம் சாதித்தனர். இது அரசியல் செயல்பாட்டின்மையின் இன்னொரு கொடிய துருவம்.

இந்த சூழலில் மாணவர்களுக்கு கருத்துரிமை இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன? இந்த சூழல் மாறாத நிலையில் கருத்துரிமையை மட்டும் கோருவதில் அர்த்தமில்லை.

அறுபதுகளின் லட்சியவாத அரசியலைக் கடந்து இன்று நாம் அதிகாரத்தைக் கோரும், தொழில்ரீதியிலான அரசியலுக்குள் நுழைந்துள்ளோம். இன்று கருத்தியலால் ஈர்க்கப்பட்டு ஒரு மாணவனை முழுநேர அரசியலுக்குள் ஈர்ப்பது பெரும்பாலும் சாத்தியம் இல்லை. அரசியலில் செயல்பட்டால் தனக்கு நடைமுறையில் என்ன பயன் என அவன் இளமையில் ருசித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான் மாணவர் அமைப்புகளில் இருந்து முக்கியமான தலைவர்கள் நமக்கு எதிர்காலத்தில் கிடைப்பார்கள். 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...