கேணி கூட்டம் பற்றின என் விவாதத்தை ஒட்டி நண்பர் எம்.ராஜா எனக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினார். அதற்கு எனது பதிலும்
அவரது எதிர்வினையும் மனித குணம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பது பற்றி நல்ல
விவாதமாக அமைந்தது. இந்த கடித பரிவர்த்தனைகளை அவரது அனுமதி பெற்று பிரசுரிக்கிறேன்:
அன்புள்ள அபிலாஷ்:
நலம் தானே?
உங்கள் பதிவில் வருமாறு எழுதி இருந்தீர்கள்: "உதாரணமாக இரா.நடராஜன இதே கூட்டத்தில் பேசும் போது
வகுப்பறை ஒழுக்கத்தின் ஒடுக்குமுறையை கண்டித்தார். ஆனால் அவர் ஒழுக்கவாதத்துக்கு
எதிரானவரா? அவரே இன்னொரு இடத்தில் சினிமாவும், டி.வியும் பார்த்து குழந்தைகள்
கெட்டுப் போவதாக கூறுகிறார்? பெற்றோர் பொய் சொன்னால் குழந்தையும் பொய் சொல்லும்
என்கிறார். அப்படி என்றால் குழந்தைகளை ஆசிரமங்களில் வளர்க்க வேண்டுமா? இப்படியான
முரண்பாடு எழுவதற்கு காரணம் சிந்தனை தெளிவின்றி அவர் ஏதோ ஒரு அரசியலை இறுக்க
பற்றுவது தான். மேலும் நடராஜன் சொல்வது உளவியல் ரீதியாய்
சரியும் அல்ல. மோசமான பெற்றோருக்கு மோசமான பிள்ளைகள் அமையும் என்பது ஒரு
பொதுப்புத்தி மட்டுமே."
நான் கேணி கூட்டத்திற்கு வரவும் இல்லை; இரா.
நடராசன் என்ன சொன்னார் என்றும் முற்றிலும் தெரியாது.
இருப்பினும், உங்கள் பதிவைப் படித்தவுடன், திரு. நடராசன் சொல்வதை - வெறும் ஒழுக்க
வாதம் என்று முற்றிலும் ஒதுக்கி விட முடியாது எனப் பட்டது. இது
வரை மரபணுக்களின் மாற்றங்களின் மூலமாக மட்டுமே குணாதிசயங்கள் ஒரு சந்ததியில்
இருந்து இன்னொரு சந்ததிக்கு போகும் என்று கருதி வந்தனர்.
அனால், அண்மைக் கால ஆய்வில், மரபணுக்கள் மாறாமல் இருந்தாலும், ஒரு சில அனுபவங்கள்
அந்த மரபணுக்களின் வெளிப்பாடுகளை (genetic expression) மாற்றியமைக்கக் கூடும்
என்று நிரூபணம் செய்துள்ளார்கள். இந்தத் துறையை -
எபிஜெநிடிக்ஸ் (epigenetics) - என்றழைக்கிறார்கள்.
இதில் பல சுவாரஸ்யமான ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.
உதாரணமாக, எலிகளில் செய்த ஒரு ஆய்வைச் சொல்லலாம்.
ஆய்வாளர்கள், ஆண் எலிகளை வளர்த்தனர். இந்த எலிகளுக்கு எப்போதெல்லாம், ஒரு செர்ரிப்
பூவின் வாசனையை சுவாசிக்கும் போதெல்லாம், அதன் கால்களுக்கு ஒரு மெல்லிய மின்சார
அதிர்வையும் ( electric shock ) அளித்தார்கள். இந்த எலிகள், அந்த துரதிஷ்டிரமான அனுபவத்தில்
இருந்து, செர்ரிப் பூவின் வாசத்தை நுகர்ந்தாலே திடுக்கிட ஆரம்பித்தன.
இப்படி, நன்கு பழகிய பின்னர், இந்த எலிகளை தந்தையாரகக் கொண்ட அடுத்த தலைமுறை
எலிகளுக்கு செர்ரிப பூவின் வாசத்தை நுகரக் கொடுத்தால், அவையும் திடுக்கிட்டன.
ஆச்சர்யம் என்னவென்றால், இந்த எலிகள் தம் வாழ் நாளில் ஒருபோதும் செர்ரிப்பூவின்
வாசத்தை நுகர்ந்ததுமில்லை. அவர்களுக்கு, எப்போதும் மின்னதிர்வும்
கொடுக்கப்பட்டதும் இல்லை.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தகப்பன் எலியின் நுகர்தலுக்கான மரபணுவும் சரி, அதன் சந்ததியின் நுகர்தலுக்கான மரபணுவும் சரி, எந்த விதத்திலும் மாற்றமடையவில்லை என்பது தான். ஆனால், அந்த மரபணுவின் செயல்பாடை நிர்ணயிக்கும் சில குறிகள் தந்தையிடம் இருந்து, அடுத்த சந்ததிக்கு சென்றுள்ளது எனக் கண்டுள்ளார்கள். இந்தக் கண்டுபிடிப்புகள், எப்போதும் நிகழும் nature versus nurture வாதத்தில், வளர்ப்புச் சூழலின் முக்கியத்துவத்தை நிரூபணப்படுத்துகின்றன. (1)
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தகப்பன் எலியின் நுகர்தலுக்கான மரபணுவும் சரி, அதன் சந்ததியின் நுகர்தலுக்கான மரபணுவும் சரி, எந்த விதத்திலும் மாற்றமடையவில்லை என்பது தான். ஆனால், அந்த மரபணுவின் செயல்பாடை நிர்ணயிக்கும் சில குறிகள் தந்தையிடம் இருந்து, அடுத்த சந்ததிக்கு சென்றுள்ளது எனக் கண்டுள்ளார்கள். இந்தக் கண்டுபிடிப்புகள், எப்போதும் நிகழும் nature versus nurture வாதத்தில், வளர்ப்புச் சூழலின் முக்கியத்துவத்தை நிரூபணப்படுத்துகின்றன. (1)
நீங்கள் சொன்னபடி, உங்கள் தந்தையின் குணங்கள்
அப்படியே உங்களுக்கு வரும் என்பது நிச்சயமில்லை.
ஆனால், அந்த அனுபவங்கள் உங்கள் வளர்ச்சியை பாதிப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது
என்பதை - பொதுப் புத்தி, என முற்றிலும் ஒதுக்கி விட முடியாது.
குழந்தைகளின் கல்விப் பருவம், குறிப்பாக முதல் மூன்று/நான்கு வருடங்கள் மிக
முக்கியமானவை என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மற்றபடி, நீங்கள் சொன்னபடி எந்தச்
சிந்தனையாளனும், எந்த அரசியல் மீதும் ஒரு மெல்லிய அவ நம்பிக்கையுடன் இருப்பது
நல்லது தான்.
அன்புடன்,
ராஜா
அன்புள்ள ராஜா
இந்த விவாதம் முற்றுப்புள்ளி இல்லாதது. நேரடி வாழ்க்கையில் இதற்கு சாதக பாதகமான பல ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டிருக்கும். ஆனால் என் ஆழமான நம்பிக்கை இது. மனித குணம் நீர் போல. அதை எதில் ஊற்றி வைக்கிறோமோ அதன் வடிவை எடுக்கும். முக்கியமாக அது மாறிக் கொண்டே இருக்கும். அது பிளாஸ்டிக்காக டைனமிக்காக இருக்கும். மாறிக் கொண்டே இருப்போம். போன நொடி நல்லவனாக இருந்தால் அடுத்த நொடி கெட்டவனாக இருப்போம். உதாரணமாய் நான் இப்போது ஒரு தொண்டு செய்து கொண்டிருப்பேன். அடுத்த நாள் யாரையோ அழிப்பதற்கான வேலையை செய்து கொண்டிருப்பேன். இப்போது என்னை எப்படி வரையறுப்பார்கள்? இந்த குறிப்பிட்ட பின்னணியினால் அல்லது பெற்றோரினால் நான் கெட்டது செய்தேன் என்றா நல்லது செய்தேன் என்றா? இதை இப்படித் தான் என வரையறுக்க முடியாது. நாம் வரையறுக்க மறுநொடி அது மாறி இருக்கும்.
பொய் சொல்வதும் ஆபாசமாய் இருப்பதும் வாழ்வில் சில நேரம் தேவைப்படும். சிலநேரம் இராது. அதை மறைக்க கற்பவர்கள் தப்பிக்கிறார்கள். குழந்தைகளை நான் இப்படித் தான் புரிந்து கொள்கிறேன். சில குழந்தைகளுக்கு சாமர்த்தியமாய் பொய்யை மறைக்க வரும். சில குழந்தைகளுக்கு வராது. அவர்கள் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் எல்லா குழந்தைகளும் பொய் சொல்லும். ஏன் பொய் சொல்வது ஏமாற்றுவது ஒரு முக்கியமான கலை தனே! அதை குழந்தைகள் சின்ன வயதில் பயில்கின்றன. அது வளர்ந்த பின் உதவுகிறது. மேலும் ஒருவரது தனிமனித அடையாளம் பொய் சொல்வதன் அடிப்படையில் தான் ஏற்படுகிறது. அது இல்லை என்றால் தனிமனிதனே இல்லை. பொய் சொல்லுவது முக்கியம். ஆனால் சாமர்த்தியமாய் அழகாய் சொல்ல வேண்டும். இதை கற்பிப்பதில் என்ன தவறு? இப்படி நாம் ஒழுக்கக் கேட்டாய் நினைக்கிற பல விசயங்கள் தேவையானவை தான். கராத்தே கூட வன்முறை கலை தானே! குழந்தைகளை ஏன் சண்டை போடாதே என வளர்க்க வேண்டும்? சண்டை போட்டு அதை அழகாய் நுணுக்கமாய் செய்ய கற்றுக் கொள்ளட்டுமே!
மேலும் குணத்தை வரையறுப்பதில் வேறொரு சிக்கல் உள்ளது. உதாரணமாய் மேற்கில் இயற்கை-இயல்பு விவாதத்தில் அவர்கள் குற்றவாளிகளின் பின்னணியை ஆராய்கிறார்கள். பல குற்றவாளிகள் சரியான கல்வியறிவு இல்லாத ஏழைப் பின்னணியை கொண்டவர்கள் என்கிறார்கள். இது சரியாகவும் தோன்றுகிறது. ஆனால் பொருளாதாரக் குற்றங்களை எடுத்துக் கொண்டால் நேர்மாறாக இருக்கிறது. இன்று உலகம் முழுக்க மிக மோசமான பொருளாதார போர்க்குற்றங்களை புரிபவர்கள் மிக நல்ல வளமான சூழலில் இருந்து நல்ல கல்விப் பின்புலத்தில் இருந்து வருகிறார்கள்? இதை எப்படி புரிந்து கொள்ள? அம்பானிகளையும் கனிமொழிகளையும் வங்கி அதிகாரிகளையும் சிதம்பரங்களையும் எப்படி புரிந்து கொள்ள?
பல சமயங்கள் epigenetics போன்ற துறைகளை குறிப்பிட்ட வகை மக்களை ஒடுக்க மட்டும் பயன்படுகின்றன என்பதே என் கவலை.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்
அன்புள்ள அபிலாஷ்:
நான் ஒழுக்கவாதி இல்லை. உங்கள் வரிகளைப் படிக்கும் போது, ஒழுக்கத்தைப் பற்றிய உங்களுடைய நிலைப்பாடும் எனது நிலைப்படும் ஏறத்தாழ ஒன்றாகத் தான் இருக்கும் என நம்புகிறேன். நம் கருத்துப் பரிமாற்றம் கொஞ்சம் தடம் மாறி விட்டதோ என எனக்குப் படுகிறது.
முதலில், பொய் சொல்வதோ, சண்டை போடுவதோ தன்னளவில் நல்லது/கேட்டது என்று பிரிக்க முடியாது என்பது உண்மையே. அது, நீங்கள் சொல்வது போல், உபயோகமானதாகக்/தேவையானாதாகக் கூட இருக்கலாம். அதுவல்ல, பிரச்னை. அப்பா இன்னது செய்தால், அவர் குழந்தைகளும் அதைச் செய்வார்கள் என்ற ரீதியில் தான் திரு. நடராசன் கேணி கூட்டத்தில் சொல்லி இருந்தால் என்றால், அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இரா. நடராஜனின், கல்வி பற்றிய எழுத்துக்கள், கல்விச் சிந்தனையாளர் ஜான் ஹோல்ட் போன்றவர்களின் கருத்துக்களை ஒட்டித் தான் இருந்தன என்பது என் நினைவு. அதனால் தான் எழுதினேன். பெற்றோர்களின் நடத்தை நல்லதா/கெட்டதா என்பதை விட, பெற்றோர்களின் நடத்தை குழந்தைகளின் நடத்தையை பிற்காலத்தில் பாதிக்கும் சாத்தியக்கூறு உள்ளதா என்பதைப் பற்றித் தான் எழுதினேன். எப்படி இருந்தாலும், இந்த விவாதத்தை நீங்கள் இன்னொரு சுவாரஸ்யமான தளத்திற்கு எடுத்து சென்று விட்டீர்கள்.
சரி, இந்த விவாதத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கலாம்.
குழந்தைகளின் வளர்ப்புச் சூழல் அவர்களது பிற்கால நடவடிக்கையைப் பாதிக்கும் என்பது - உளவியல் ரீதியாக பல ஒப்புக்கொள்ளப் பட்ட ஒன்று. உலகெங்கும் நிரம்பியிருக்கும் ஏராளமான மனோதத்துவ நிபுணர்கள், மனதைச் சார்ந்த பிரச்னைகளை அணுகும் போது, குழந்தையாய் இருக்கும் போது நிகழ்ந்த பாதிப்புகளை, மன நோயின் ஒரு முக்கிய காரணியாகக் கருதுகிறார்கள். சைகோ-அனலிசிஸ் (அக-ஆய்வியல்?) என்ற துறையின் ஒரு அடிப்படைக் கூறு - குழந்தைகால அனுபவங்கள் தாம். இது வரை, இந்த மாதிரியான மென் துறைகளுக்கு, எந்த ஆதாரமும் இருந்ததில்லை. அதனாலேயே, சைகோ-அனலிசிஸ் போன்ற முறைகள் - மென்-அறிவியல் - என ஓரளவு இலக்காராமாக அழைக்கப் பட்டு வந்தன. முதல் முறையாக, எபிஜெநிடிக்ஸ் போன்ற துறைகள், அந்த உளவியல் ரீதியான புரிதலுக்கு, ஒரு உயிரியல் ரீதியான விளக்கத்தை முன் வைக்கின்றனர். அதற்கான ஆதாரத்தையும் அவர்களால் இப்போது முன் வைக்க முடிகிறது. அவ்வளவே.
புற்று நோய் வருவதற்கான மரபணு மாற்றங்கள் உள்ள சிலருக்கு, புற்று நோய் வருவதில்லை. அது முற்றிலும் இல்லாத ஒருவருக்கு புற்று நோய் வருகிறது. புற்று நோய்க்கு கொடுக்கும் மருந்து ஒரு சிலருக்கு மிக நன்றாக வேலை செய்கிறது. அதே மரபணுக்கள் உள்ள இன்னொரு புற்று நோயாளிக்கு அதே மருந்து வேலை செய்வதில்லை. உயிரியல் ரீதியாக இந்த வேறுபாடுகளுக்கு என்ன காரணம்? அந்த வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளச் செய்யும் இத்தகைய ஆய்வுகள் மிகவும் வித்தியாசமானவை. இவற்றைச் சந்தேகக் கண்ணொடு பார்க்க வேண்டியதில்லை.
இன்னும் கொஞ்சம் இதை விரித்துப் பார்த்தால், அறிவியல் நிபுணர்கள் அனைவரும் ஒப்புக் கொள்வது பரிணாம கோட்பாடு. எந்த உயிரனத்தை எடுத்துக் கொண்டாலும், அதன் மரபணுக்களில் ஒரு சில வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கின்றன. இந்த வேறுபாடுகள், இயற்கையின் ஒரு குணாதிசயமாக இருக்கலாம்; அல்லது, பெருமளவில் உயிரனங்கள் தம் சூழலுடன் போராடுவதில் சில மரபணு மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்ற (due to environmental insults). இந்த மாற்றங்களில் ஒரு சில மாற்றங்கள், அந்த உயிரினத்திற்கு, அந்தச் சூழலில் வாழ ஏதாவது ஒரு அனுகூலத்தை (குறிப்பாக - சந்ததியனரை உருவாக்கும் அனுகூலத்தை) கொடுக்கேமேயானால், அந்த மரபணுக் கூறுகள், பல தலைமுறைகளில் வலுப் பெற்று விடும் என்பது தான் ('Natural
Selection') . மரபணு மாற்றங்கள் நிகழ பல தலைமுறைகள் ஆகும். அனால், எப்படி இந்த அனுகூலம் ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குச் செல்கிறது? என்ற கேள்வி இருக்கத் தான் இருக்கிறது. எபிஜெநேடிக்ஸ் போன்ற ஆய்வுகள் இந்தக் கேள்விக்கு ஒரு விடையளிக்க முயல்கின்றன. மரபணு மாற்றம் நிகழ்வதற்கு முன்னரே, மரபணுவின் செயல்பாட்டை மட்டுப் படுத்தும் சில மாற்றங்கள் வெகு விரைவிலேயே நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள், ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு செல்லும் சாத்தியம் உண்டு என்பதைத் தான் இந்த ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன. ஆக, இந்த எபிஜெனிடிக்ஸ் (மரபனுசார் ஆய்வு?) போன்ற ஆய்வுத்துறைகளை பரிணாமக் கோட்பாட்டின் இயல்பான ஒரு கூறாகக் கூட பார்க்கலாம்.
ஒரு வகையில் பார்த்தால், நீங்கள் சொன்னதையே நான் உதாரணம் காட்ட முடியும். நம்முடைய அனுபவங்கள், நம்மை மன அளவில் மட்டுமல்ல, உயிரியல் ரீதியாகவும் பாதிக்கின்றன என்பதைத் தான் இந்த ஆய்வுகள் சுட்டுகின்றன. ஆக, அனுபவங்கள் மாறுபட, மாறுபட, உங்கள் செயல்பாடும் மாறும். அம்பானிகளும், கனிமொழிகளும், சிதம்பரங்களும், தம் பெற்றோர்களின் அனுபவத்தில் இருந்து கண்டு கொண்டது, தவறு செய்தால் நாம் தப்பித்து விடலாம் என்ற பாடமே. அந்தப் பாடம், வெறும் மனதளவிலான பாடம் மட்டும் இல்ல. சாதாரண மனிதனிற்கு ஒரு தவறு செய்யும் போது சமூகம் அளிக்கும் தண்டனையைக் குறித்த அச்சம், உயிரியல் ரீதியாக ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் (மின்னதிர்வு கொடுக்கப்பட்ட எலிகளைப் போல) இவர்களிடம் இருப்பதில்லை. மாறாக, இவர்களிடம், இத்தகைய காரியங்களைச் செய்யும் போது ஒரு பெரும் சாகசத்தைச் செய்ததற்கான நேர்மறை விளைவுகள் ( reward mechanisms - secretion of dopamine, endorphin etc.) கூட இருக்கலாம்.
இத்தகைய ஆய்வு முடிவுகளைக் கொண்டு, சமுதாய ஏற்றத் தாழ்வுகளுக்கு ஒழுக்கரீதியான ஒரு விளக்கத்தைக் கொடுக்க நிச்சயம் சிலர்முயல்வார்கள் ((நாசிக்கள் (eugenics) செய்தது போல). அந்த விளக்கங்களுக்கு அறிவியல் முலாம் பூச இத்தகைய ஆய்வுகள் உதவகூடும் என்ற உங்கள் கவலை புரிகிறது. ஆனால், அந்த முயற்சிகள் நிச்சயம் பலனளிக்காது. வாழ்க்கையில் ஒருவனுக்கு நிகழும் சம்பவங்கள் முற்றிலும் அவன் கையில் இல்லை. நீங்கள் நன்றாகக் கார் ஓட்டினாலும், இன்னொருவன் வந்து உங்கள் காரின் மேல் இடிக்கலாம். நாம் ஒவ்வொருவரும், ஒரு சுழற்ச்சியில் இருக்கிறோம். இதில் யார் பாதையில் யார் வந்து விழக் கூடும், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. பெரும் பணக்காரர்கள்/அரசியல் வாதிகள், தம் பண பலத்தால்/அரசியல் பலத்தால், தம்முடைய வட்டத்தின் எல்லைகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலையற்ற தன்மை தான் ஓரளவிற்கு சமுதாயத்தில் அனைவரையும் சமமாக்குவது!
இது நீண்டு விட்டது. இதைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். உங்கள் கட்டுரைகள் தொடர்ந்து ஆழமாகவும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் உள்ளன. மிக்க நன்றி.
அன்புடன்,
ராஜா
